ரியல் மிஸ் இந்தியா!

ரொம்பவெல்லாம் கிடையாது, கொஞ்சம்தான் குண்டு. ஆனால் அதற்கே அவ்வளவு கேலியும் கிண்டலும். ஒவ்வொரு நாளும் வீடு போய்ச் சேர்வதற்குள் 15 வயது சின்னப்பெண் யாஷ்மினுக்கு உயிர்போய் உயிர்வரும். இந்தியச் சமூகத்தில் பெண்கள் என்றால் அலியா பட், நயன்தாரா மாதிரி சிக்ஸ்பேக்குடன் ஸ்லிம்மாக இருக்க வேண்டும் அல்லவா? நையாண்டிகளைத் தாங்க முடியாத யாஷ்மின், உடனே ஒரு முடிவெடுத்தார்.

‘இன்னும் மூணே மாசம்... உங்களை எல்லாம் எப்படி ஓடவிடுறேன்னு பாருங்கடா’ என வீராவேசத்துடன் ஜிம்மில் சேர்ந்துவிட கிளம்பினார். டெல்லி முழுக்க தெருத்தெருவாக அலைந்து திரிந்தார். எங்குமே பெண்களுக்காக ஒரு ஜிம்கூட இல்லை. ஆண்களுக்கான ஜிம் ஒன்றில் சேர்ந்தார். ஆனால், அங்கும் ஆண்களுடைய சீண்டல்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. அதற்காக யாஷ்மின் உடற்பயிற்சிகளை நிறுத்திவிடவில்லை. வீட்டிலேயே இருக்கும் பொருட்களைக்கொண்டு தம்பிள்ஸையும் வெயிட்டுகளையும் உருவாக்கி பயிற்சிகள் செய்ய ஆரம்பித்தார்.

20 ஆண்டுகள் ஓடிவிட்டன. யாஷ்மினுக்கு இப்போது வயது 37. இந்தியாவின் டாப் பெண் பாடிபில்டர். 2016-ம் ஆண்டுக்கான `மிஸ் இந்தியா' பட்டத்தையும் இரண்டு பிரிவுகளில் தங்கப்பதக்கங்களையும் வென்றுள்ளார். இது, ஸ்விம்சூட்,  டூ பீஸ் நளினமான அழகிப் போட்டி அல்ல; உடலை உறுதியாக்கி, தசைகளை முறுக்கிக் காட்டுகிற கடும் போட்டி; இந்திய பாடிபில்டர் சம்மேளமான IBBFF நடத்தும் போட்டி.

பாடிபில்டர் மட்டுமா... டெல்லியின் மோஸ்ட் வான்டட் ஜிம் ட்ரெய்னர் இவர்தான். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடத்துகிறார். ஆனால், இந்த உயரத்துக்கு யாஷ்மின் அத்தனை எளிதில் வந்துவிடவில்லை.

பெற்றோரால் தனித்துவிடப்பட்ட சிறுமியாக இரண்டு வயதில் இருந்து தாத்தாவுடன் வளர்ந்தவர் யாஷ்மின். எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் குணம் இயல்பிலேயே இருந்தது. ஏழாம் வகுப்புப் படிக்கும்போது வந்த டைபாய்டு, உடலை வெகுவாகப் பாதித்தது. அதற்காக எடுத்துக்கொண்ட தவறான சில மருந்துகளால், உடல் பருத்துவிட்டது. எடை குறையவே இல்லை.

ரியல் மிஸ் இந்தியா!

கல்லூரிப் பருவத்தில் முகம் முழுவதும் பருக்களும்  தடித்த உடலுமாக இருந்தவருக்கு, அவமானங்கள் தினம் தினம் தொடர்ந்தன. ‘`என் முகத்தை என்னால் எதுவும் செய்ய முடியாது. ஆனால், என் உடலை என்னால் மாற்ற முடியும் என்று நம்பினேன்’’ என்கிற யாஷ்மின், ஆரம்பத்தில் எடை குறைப்புக்காக காலை உணவைத் தவிர்ப்பது, சாப்பிட்ட உணவை வாந்தி எடுப்பது, டி.வி-யில் காட்டும்  மேஜிக் பெல்ட்டுகளை வாங்கி அணிவது என ஏதேதோ செய்திருக்கிறார். எதுவுமே பலன் தரவில்லை. அதன் பிறகுதான் ஜிம்மில் சேர்ந்தார்.

See Also: 


 
 `‘என்னைச் சுற்றி இருக்கும் பலர், குறிப்பாக ஆண்கள், `திருநங்கை போல இருக்கிறாய், ஓர் ஆணுக்குப் பெண் வேடமிட்டதுபோல இருக்கிறாய்' என என் முதுகுக்குப் பின்னால் பேசுவது உண்டு.  ஆனால், அவர்களில் யாருக்கும் என் முகத்துக்கு முன்னால் சொல்லும் தைரியம் இருக்காது. காரணம், என் உடல் பலம். நம் பெண்களுக்கு அது மிகவும் அவசியம்'’ என்கிற யாஷ்மினின் மந்திரம் என்ன தெரியுமா?

ரியல் மிஸ் இந்தியா!

``மற்றவர்களோடு போட்டிபோடுவதைவிட நம்மோடுதான் நாம் போட்டியிடவேண்டும். நம் பலவீனங்கள் என்னென்ன என்பதைப் பார்த்து அதைச் சரிசெய்துகொள்ள வேண்டும்.உடலும் மனமும் உறுதியாக இருந்தால், உற்சாகம் தானே வரும். பார்க்க மட்டும் பலம் வாய்ந்தவளாக இருந்தால் போதாது... அதைவிட வலிமையான விஷயங்களை இந்த உலகத்துக்கு முன்னால் செய்து சாதித்து காட்டவேண்டும். அதுதான் முக்கியம்!’' என்கிறார் இந்த இரும்பு மனுஷி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு