Published:Updated:

“ஜெயா சொன்னதும் பொய்யே... பொய்யே!”

  “ஜெயா சொன்னதும் பொய்யே... பொய்யே!”
பிரீமியம் ஸ்டோரி
News
“ஜெயா சொன்னதும் பொய்யே... பொய்யே!”

சார்லஸ், ம.கா.செந்தில்குமார், படங்கள்: கே.ராஜசேகரன்

  “ஜெயா சொன்னதும் பொய்யே... பொய்யே!”

மிழகம் முழுக்க `முடியட்டும்... விடியட்டும்!' என ஸ்டாலின் வாக்கிங் கிளம்பியபோது, அவர்தான் தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர் என அழகிரிகூட நினைத்துவிட்டார். ஆனால் நடை முடித்து வந்தபோது, `மீண்டும் நானே முதல்வர்' என கருணாநிதி கோபாலபுரத்தில் இருந்து பிரசாரத்துக்குக் கிளம்பியது அதிர்ச்சி. இந்தத் தடவையும் தளபதியாகவே கன்டினியூ ஆகிறோம் என்பதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பிரசாரத்தில் இறங்கினார் ஸ்டாலின். தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதிக்கு 27-ம் தேதி வந்தார். காலையிலும் மாலையிலும் பிரசாரம், மதியம் வேட்புமனுத் தாக்கல்... என ஒரே நாளில் செம பிஸியாக இருந்தவரை அப்படியே பின்தொடர்ந்தோம்...

• ஸ்டாலின் எப்போது தொகுதிக்கு வந்தாலும் தங்குவதற்காக அயனாவரத்தில் உள்ள எஸ்.ஆர்.பி காலனியில் வாடகைக்கு வீடு தயார். காலை 8 மணிக்கே கொளத்தூர் வந்துவிட்டார் ஸ்டாலின். சிவப்புச்சட்டையும் பீஜ் பேன்ட்டும்தான் காலை காஸ்ட்யூம். கொஞ்ச தூரம் நடை, பிறகு ஜீப் என உற்சாகமாக இருந்தது பிரசாரம்.

• பெரம்பூரில் ஒரு சர்ச் கேம்பஸுக்குள் நுழைந்தார். ஸ்டாலின் வருவதைப் பார்த்ததும் திமுதிமுவெனக் கூட்டம் சேர, அவர்களோடு சில நிமிடங்கள் ``சிறுபான்மைச் சமூகத்துக்காகத் தொடர்ந்து பாடுபடுகிற கட்சி தி.மு.க-தான்'' என்றபடி, கலகலப்பாகப் பேசுகிறார், கைகொடுக்கிறார். செல்ஃபிகளுக்கு போஸ் தருகிறார்.

• `மதியம் 12 மணி முதல் 1:30 மணி வரை ராகுகாலம் என்பதால், மதியம் 2 மணிக்குமேல்தான் வேட்புமனுத் தாக்கல் செய்ய வருவார்' எனத் தொண்டர்கள் பேசிக்கொண்டனர். அதேபோல மதியம் 2 மணிக்கு வந்தார் ஸ்டாலின். இப்போது காஸ்ட்யூமில் கம்ப்ளீட் சேஞ்ச். வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை.

  “ஜெயா சொன்னதும் பொய்யே... பொய்யே!”
  “ஜெயா சொன்னதும் பொய்யே... பொய்யே!”

• அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மிகச் சில நிமிடங்களில் வேட்புமனுத் தாக்கலை மின்னல்போல முடித்துவிட்டார். வாசலில் திரண்டிருந்த மக்கள் முன்னிலையில் மைக் பிடித்தார். ‘`தமிழகம் முழுவதும் ஆளும் கட்சியினரிடம் இருந்து 60 கோடி ரூபாய் வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை அவர்கள் பதுக்கிவைத்துள்ளனர். ஜனநாயகத்தைப் பணநாயகத்தால் வெல்லப்பார்க்கிறார்கள். அ.தி.மு.க-வினரின் இந்தத் திருவிளையாடல், தி.மு.க-வினரிடம் இந்த முறை பலிக்காது’' என்றார் சுரீரென!

See Also: 

• 3:30 மணிக்கு காசி விஸ்வநாதர் கோயில் அருகில் இருந்து பிரசாரத்தைத் தொடங்குவதாகத் திட்டம். ஆனால், வெயில் செம காட்டு காட்டியதால், 5 மணி வரைக்குமே பிரசாரம் ஆரம்பிக்கவில்லை. வாசலில் தொண்டர்களும் மக்களும் காத்திருக்க, 5:10 மணிக்கு வீட்டைவிட்டு வெளியே வந்தார் ஸ்டாலின். மீண்டும் உடைமாற்றம். அடர்நீலச் சட்டை, கறுப்பு பேன்ட், ஸ்போர்ட்ஸ் ஷூ. வீட்டு வாசலில் இருந்து காருக்குள் செல்லும் நேரத்தில் சிலரை அறிமுகப்படுத்தினார் சேகர்பாபு.

தே.மு.தி.க-வில் இருந்து வந்து தி.மு.க-வில் இணைந்த நியூ என்ட்ரி உடன்பிறப்புகள், ஆன் தி ஸ்பாட்டில் விறுவிறுவென சால்வைகள் போத்தப்பட்டு போட்டோ எடுத்துக்கொண்டனர்.

• `ஏய்... அண்ணனைப் பிடிச்சு இழுக்காத, நகரு... நகரு’ எனச் சத்தம் போட்டுக்கொண்டே ஸ்டாலினை அவரின் லேண்ட் க்ரூஸர் காருக்கு அழைத்துவந்தனர். ஜெயலலிதா - ஸ்டாலின் இருவருமே டொயோட்டா லேண்ட் க்ரூஸர் கார்களைப் பயன்படுத்துகிறார்கள்.

• முதல் பாயின்ட் காசி விஸ்வநாதர் கோயில். மஹிந்திரா ஜீப்புக்குத் தாவினார் ஸ்டாலின். பின்னாலேயே காரில் ஸ்டாலினின் மனைவி துர்கா.

•   ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டது சிறிய 4X4 ஜீப் என்பதால், அயனாவரம், பெரம்பூரின் அத்தனை சந்துபொந்துகளுக்குள்ளும் ஜீப் புகுந்து வெளியே வருகிறது. ஆனால், ஸ்டாலினுக்குப் பின்னால் வந்த கார்கள் அனைத்தும் பெரிய கார்கள் என்பதால், மெயின் ரோட்டிலேயே நின்றுவிட்டன. இந்த இடைவெளியில் அருகில் இருந்த ஷீரடி சாய்பாபா கோயிலுக்குள் நுழைந்தார் துர்கா ஸ்டாலின். அவரை வரவேற்று, பூஜை செய்யப்பட்ட கலசத்தைக் கொடுத்தனர்.

•   மிகவும் இடுக்கான சிறிய தெருக்கள், திறந்த ஜீப் என்பதால் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என எல்லோருமே ஸ்டாலினுடன் கைகுலுக்க கைகளை நீட்டுகிறார்கள். எப்படியும் ஆயிரம் பேருக்கு கைகொடுத்திருப்பார். பெண்கள் பலரும் ஆரத்தி எடுத்தார்கள். ஆரத்தித் தட்டைக் கையில் வாங்கி அதை வணங்கிவிட்டுக் கொடுத்தார் ஸ்டாலின். அந்தந்த இடங்களுக்கு ஏற்ப, அந்தப் பகுதியில் உள்ள லோக்கல் பிரச்னைகளைச் சேர்த்து அசத்தலாகப் பேச, கைதட்டல்கள்.

• ‘`இந்தத் தொகுதிக்கு நான் செய்திருக்கும் நற்பணிகளால், நான் வாக்கு கேட்டு தொகுதிக்கு வரவேண்டியதே இல்லை என்று தொகுதி மக்கள் என்னிடம் சொன்னார்கள். ஆனால், `ஊரெல்லாம் போறான் நம்ம பையன்; வீட்டுக்கு வராமப் போறானே!'னு நீங்க யாரும் நினைச்சுடக் கூடாது என்பதால்தான் எப்போது நேரம் கிடைத்தாலும் என் தொகுதிக்கு வந்துவிடுகிறேன்’’ என சென்டிமென்டாகப் பேசியதற்கு, தாய்க்குலங்கள் மத்தியில் தாறுமாறான வரவேற்பு.

• ‘`தொகுதி மேம்பாட்டு நிதி என வருடத்துக்கு 2 கோடி ரூபாய் வீதம் 10 கோடி ரூபாயை ஒரு எம்.எல்.ஏ-வுக்குத் தருவாங்க. அதுக்காக நீங்க `பத்து கோடி ரூபாயை என் கையில் தருவாங்க'னு நினைச்சுடாதீங்க. ஒரு எம்.எல்.ஏ பெயரில் நிதி ஒதுக்குவாங்க. இந்தத் திட்டத்தை முதன்முதலில் கொண்டுவந்தது தலைவர் கலைஞர்தான். அதன் பிறகுதான் எம்.பி நிதி எல்லாம் வந்தது. நான் இந்தக் கொளத்தூர் தொகுதிக்கு, 10 கோடி ரூபாய்க்கு என்னென்ன திட்டங்கள் நிறைவேற்ற வேண்டும் என எழுதிக் கொடுத்தேன். ஆனால், எனக்கு நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என 5 கோடி ரூபாய்க்கான திட்டங்களை அ.தி.மு.க அரசு முடக்கிவிட்டது. 5 கோடி ரூபாய்க்குத்தான் நலத்திட்டங்கள் செய்ய முடிஞ்சது. செய்ய முடியாமல்போன அத்தனை திட்டங்களையும் ஆளும் கட்சியாக வந்து நிறைவேற்றித் தருவேன்’’ என்று பாசிட்டிவாகப் பேசினார்.

  “ஜெயா சொன்னதும் பொய்யே... பொய்யே!”

•   ‘`என்னதான் ஸ்டார் ஹோட்டல்களுக்குப் போய், பிரியாணி சாப்பிட்டாலும், வீட்டுக்கு வந்து தயிர்சாதமும் ஊறுகாயும் சாப்பிடுகிற சுகமே தனி. அதுபோலத்தான் நான் தமிழகம் முழுவதும் சுற்றி வந்தாலும் கொளத்தூர் தொகுதிக்கு வருவது எனக்கு அத்தகைய உணர்வைத் தருகிறது’’ என எல்லா இடங்களிலும் தயிர்சாதத்தையும் ஊறுகாயையும் ஸ்டாலின் சொல்ல மறக்கவில்லை.

• ‘`ஜெயலலிதா எல்லா பிரசாரக் கூட்டங்களிலும் `சொன்னதையும் செய்தேன்... சொல்லாததையும் செய்தேன்' எனச் சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆமாம், அவர் சொல்லாததையும் செய்தார். `இவ்வளவு டாஸ்மாக் கடைகளைத் திறப்பேன்’ எனச் சொல்லவே இல்லை, செய்தார். `செம்பரம்பாக்கம் ஏரியைத் திறப்பேன்’ எனச் சொல்லவே இல்லை, செய்தார். பல கோடிகளுக்குத் திட்டங்கள் நிறைவேற்றியிருப்பதாகச் சொல்கிறார். அவர் சொல்வது எல்லாமே பொய்’’ எனச் சொல்லி நிறுத்தியவர், `‘பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே..., புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே...’’ எனப் பாடிவிட்டு ``எங்கே பாடுங்க’’ எனக் கூட்டத்தைப் பார்த்து ``புலவர் சொன்னதும்...’' என பாஸ் விடுகிறார். கூட்டத்தில் இருந்து ‘`பொய்யே பொய்யே...’’ என ஸ்ருதி குறைய, ``சத்தமாப் பாடுங்க...’’ என மீண்டும் பாட ஆரம்பித்தவர், ‘`ஜெயா சொன்னதும் பொய்யே பொய்யே...’’ என ரைமிங்கில் அடித்தார்.

• `` `பேசலாம் வாங்க' என்னும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தி, வார்டு வாரியாக எங்களின் குறைகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டார் ஸ்டாலின். அந்தக் குறைகளை நிவர்த்திசெய்வதாக இப்போது தேர்தல் பிரசாரத்தில் உறுதியளித்து வருகிறார். இதுதவிர, எப்போது நேரம் கிடைத்தாலும் கொளத்தூர் வந்து தொகுதிவாசிகளைச் சந்திப்பார். வெள்ள நேரத்தில் இங்கேயே தங்கி பணி செய்தார். ஆளும் கட்சி எம்.எல்.ஏ-வாக இல்லாவிட்டாலும் தொகுதியில் பல நல்ல விஷயங்களைச் செய்திருக்கிறார். தி.மு.க ஆட்சிக்கு வந்தால், கொளத்தூர் தொகுதிக்கு மிகப் பெரிய ஸ்டார் அந்தஸ்து கிடைக்கும். அதனால் ஸ்டாலினுக்குத்தான் என் ஓட்டு'' என்கிறார் சுரேஷ். இவர் ஜி.கே.எம் காலனியில் டீக்கடை நடத்திவருகிறார். இவரின் குரலையே கொளத்தூர் தொகுதியின் பல இடங்களில் கேட்க முடிந்தது.

  “ஜெயா சொன்னதும் பொய்யே... பொய்யே!”

கொளத்தூர் தொகுதியில், ஸ்டாலினுக்கும் அ.தி.மு.க வேட்பாளர் ஜே.சி.டி.பிரபாகரனுக்கும்தான் நேரடிப் போட்டி. இவர், கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகனைத் தோற்கடித்தவர். ஆனாலும் தே.மு.தி.க கட்சியின் மதிவாணன், பா.ம.க-வின் கோபால், பா.ஜ.க-வின் கே.டி.ராகவன் ஆகியோரும் நம்பிக்கையோடு களத்தில் உள்ளனர்.

அ.தி.மு.க வேட்பாளர் ஜே.சி.டி.பிரபாகரன், வெற்றிவாய்ப்பு குறித்து நம்மிடம் பேசினார். ``இந்தத் தேர்தலை, அம்மாவுக்கு நன்றி சொல்லும் தேர்தலாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். தொகுதியில் உள்ள எல்லா வீடுகளிலும் அம்மா கொடுத்த மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, லேப்டாப் என அனைத்தும் உள்ளன. பிரசாரத்தின்போது என் காரை வழிமறித்த ஒருவர், `நான் இரட்டை இலைக்கு இதுவரை வாக்களித்ததே இல்லை. ஆனால், இந்தமுறை நான் இரட்டை இலைக்குத்தான் வாக்களிப்பேன். என் தங்கையின் திருமணத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் தாலிக்குத் தங்கமும் அம்மா கொடுத்தார்கள்' என, கண்களில் நீர் தளும்பச் சொன்னார். தொகுதிக்குள் கடந்த ஐந்து மாதங்களாகத்தான் ஸ்டாலினின் வருகை அதிகமாகியுள்ளது. அவர் பயனாளிகள் எனச் சொல்லும் அத்தனைப் பேரும்  தி.மு.க-வினர்தான். பொதுமக்களுக்காக அவர் எதையும் செய்யவில்லை. கொளத்தூர் தொகுதியில் நிச்சயம் அ.தி.மு.க வெல்லும்'' என்கிறார் ஜே.சி.டி.பிரபாகரன்.