Published:Updated:

இமாச்சலில் பி.கே.துமலை ரஜினி சந்தித்த பின்னணி?

இமாச்சலில் பி.கே.துமலை ரஜினி சந்தித்த பின்னணி?
இமாச்சலில் பி.கே.துமலை ரஜினி சந்தித்த பின்னணி?

டிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை வேலப்பன்சாவடியில் எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழக விழாவில் எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்து வைத்து அவர் பேசினார்.  எம்.ஜி.ஆர். ஆட்சியைக் கொண்டுவர இருப்பதாகவும், தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பவே அரசியலுக்கு வந்துள்ளதாகவும் அந்த விழாவில் ரஜினி பேசினார்.

திரைப்படங்களில் நடிப்பது ஒருபக்கம், தீவிர அரசியல் பிரவேசம் மற்றொரு பக்கம் என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாலும், ஆன்மிகப் பயணமாக இமயமலைக்குச் செல்வதையும் அவர் விட்டுவிடவில்லை. இரு தினங்களுக்கு முன் இமாச்சலப் பிரதேசத்தில் உள் கங்கரா நகர் சென்று, அங்கிருந்து  பாலம்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மகாவதார் பாபா ஆசிரமத்திற்குச் சென்றார் ரஜினி. பத்து நாள்கள்வரை இங்கு தங்கியிருப்பார் என்று தெரிகிறது. வெண்மை நிற உடையணிந்து, ரஜினி தியானம் செய்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

'ரஜினியின் இந்தப் பயணம் ஆன்மிகப் பயணம்தான்' என்று சொல்லப்பட்டபோதிலும், பி.ஜே.பி-யுடனும், அக்கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் தமிழ்நாட்டு அரசியல் குறித்தும், தான் தொடங்கவுள்ள அரசியல் இயக்கம் பற்றியும் ரகசியப் பேச்சு நடத்துவதற்காகவே அவர் இந்தப் பயணத்தை பயன்படுத்திக் கொண்டிருப்பதாக பரவலாகத் தகவல்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

பாபா ஆசிரமத்திற்குச் செல்லும் வழியில் ஏ.என்.ஐ.-க்கு ரஜினி அளித்த பேட்டியில், "ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளதால், அரசியல் பேச நான் விரும்பவில்லை. ஆன்மிக யாத்திரைக்காக இங்கு வந்துள்ளேன். வழக்கமான பணிகளில் இருந்து, சற்றே வித்தியாசமாக, புனிதப் பயணமாக இது அமைந்துள்ளது. இந்தப் பயணம் சிறப்பானதாக உள்ளது. எனவே, தயவுசெய்து அரசியல் வேண்டாம்" என்றார்.

என்றாலும், இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பி.ஜே.பி. மூத்த தலைவருமான பிரேம்குமார் துமலை ரஜினி சந்தித்துப் பேசியுள்ளார். இதிலிருந்து பி.ஜே.பி-யுடனான ரஜினியின் நெருக்கம் புலப்படுகிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

"தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சியை அளிப்பேன் என்று கூறும் நடிகர் ரஜினிகாந்த், மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசு மீது எந்த விமர்சனத்தையும் வைக்கவில்லை. அதேபோல், பி.ஜே.பி. தலைவர்களும் ரஜினி குறித்து விமர்சனம் செய்வதில்லை" என்கிறார்கள் அவர்கள்.

இமாச்சலப் பிரதேசத்தில் தங்கியிருக்கும் ரஜினி, பி.ஜே.பி-யைச் சேர்ந்த அம்மாநில முன்னாள் முதல்வர் பிரேம்குமார் துமலைச் சந்தித்து இருப்பது அரசியல்வட்டாரத்தில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ரஜினி - பி.கே. துமல் சந்திப்பின்போது பத்திரிகையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ரஜினி பற்றிய அரசியல் தலைவர்களின் கருத்துக்கு முன்பு, யார் இந்த பி.கே. துமல் என்பது பற்றிப் பார்ப்போம்.

பி.கே. துமல் யார்?

சட்டம் படித்துவிட்டு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக தன் வாழ்க்கையைத் தொடங்கியவர்தான் பிரேம்குமார் துமல். அவருக்கு ஷீலா என்ற மனைவியும், அருண் தாக்கூர், அனுராக் தாக்கூர் என்ற இரு மகன்களும் உள்ளனர். அனுராக் தாக்கூர் அரசியல்வாதியாக உள்ளார். தற்போது மக்களவை உறுப்பினராக உள்ள இவர், முந்தைய மக்களவையிலும் உறுப்பினராக இருந்தவர். 

இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருமுறை இருந்துள்ள பிரேம் குமார் துமல், கடந்த ஆண்டு நடைபெற்ற அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி-யின் முதல்வர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். என்றாலும், அந்தத் தேர்தலில் அவர் தோல்வியடைந்ததால், மீண்டும் முதல்வராக முடியாமல் போனது.

1982-ம் ஆண்டு பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா துணைத் தலைவராகவும், 1989 மற்றும் 1991-ம் ஆண்டுகளில் மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 1998-ல் பி.ஜே.பி மாநிலத் தலைவரானதுடன், முதல்வராகவும் பொறுப்பேற்றார். 2007-ல் ஹமிர்பூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார். மீண்டும் 2008-ம் ஆண்டில், இதே தொகுதியில் தன் மகன் அனுராக் தாக்கூரை களமிறக்கினார். பி.ஜே.பி-யில் முக்கியத் தலைவரான துமலை ரஜினிகாந்த் சந்தித்துப் பேசிய போதிலும், அதுபற்றிய விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

பி.ஜே.பி-யுடனான ரஜினியின் நெருக்கம் குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, "பொதுவா ஆன்மிக அரசியல்னு ரஜினி சொன்னது, பி.ஜே.பி. கூட்டணியில இருக்கிற ஏ.சி. சண்முகம் ஏற்பாடு செய்த விழாவில் எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்து வைத்தது... அந்த விழாவில் அவர் பேசியது.... இவையெல்லாம், பி.ஜே.பி. தலைவர்களுடன் ரஜினி இணக்கமான உறவுகளைக் கொண்டிருப்பதையே வெளிப்படுத்துகிறது. எம்.ஜி.ஆர். சிலைய ரஜினி வேறு எங்கேயாவது திறந்து வைத்திருக்கலாம். பி.ஜே.பி-யுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் ஏ.சி. சண்முகத்துடன் சேர்ந்து சிலையைத் திறக்கிறார் என்றால் என்ன அர்த்தம்? பி.ஜே.பி.யின் பக்கம் அவர் நெருக்கமாக இருக்கிறார் என்பதை மேலும் மேலும் உறுதிப்படுத்துவதாகவே அது உள்ளது. 

பகிரங்கமாக பி.ஜே.பி-யுடன் இணக்கம் என்று ரஜினி சொல்லாவிட்டாலும், அவரின் இதுபோன்ற நடவடிக்கைகள், பி.ஜே.பி-யைச் சேர்ந்த முன்னாள் முதல்வரைச் சந்தித்திருப்பது ஆகியன, பி.ஜே.பி. பக்கம் அவர் ஒரு சாய்மானம் கொண்டிருப்பதாக மக்கள் கருதுவதற்கு இடமளிப்பதாகவே உள்ளது. எதிர்காலத்தில் பி.ஜே.பி-யுடன் ரஜினி கூட்டணி வைப்பாரா என்பது தெரியவில்லை. வேறு கட்சிகளைச் சேர்ந்த எவரையும் ரஜினி சந்திக்கவில்லையே? ஆகவே, பி.ஜே.பி பக்கம் ரஜினி போவார் என்ற எதிர்பார்ப்பே மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. என்றாலும் தேர்தல் நேரத்தில் ரஜினி என்ன முடிவெடுப்பார் என்று இப்போதைக்கு எதுவும் சொல்லமுடியாது. 

2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது, நரேந்திர மோடி, ரஜினியை அவரின் வீட்டுக்கே சென்று பார்த்தார். அமித் ஷாவும் ரஜினியைச் சந்தித்தார்.தவிர, பி.ஜே.பி. தலைவர்கள் யாரும், ரஜினியைப் பற்றிக் குறைசொல்லவோ, பெரிய அளவில் விமர்சனம் செய்யவோ இல்லை. எனவே, ரஜினி பி.ஜே.பி. பக்கம் போவாரோ என்ற சந்தேகம் சாதாரண மக்களுக்கு எழுவதைத் தவிர்க்க முடியாது. அல்லது பி.ஜே.பி. இவரை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கலாம்" என்றார்.

ரஜினி - பி.கே. துமல் சந்திப்பு பற்றி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சி.மகேந்திரனிடம் கேட்டபோது, "ரஜினிக்கென்று கொள்கை எதுவும் கிடையாது. கொள்கைகள் என்ன என்பதுபற்றி ஒரு சித்தாந்தமோ, தெளிவோ அவரிடம் இல்லை. ஆன்மிக அரசியல் என்றால் என்ன என்பதை அவர்தான் விளக்க வேண்டும். எல்லாமே ஆன்மிக அரசியல்தான். மனசாட்சிப்படி மனிதன் நடந்துகொள்வதுதான் ஆன்மிக அரசியல் எனலாம். உணவு எல்லாருக்கும் கிடைக்கவேண்டும் என்பதைத்தான் எல்லா மதங்களும் சொல்கின்றன. உணவு பகிந்தளிக்கப்பட வேண்டும் என்பதுதான் எல்லா களவுளர்களின் கொள்கையாகும். ஒருவரின் உணவை இன்னொருவர் பறிக்கக்கூடாது என்பதுதான். அப்படிப்பார்த்தால், அதைச் சரியாகச் செய்து கொண்டிருப்பது கம்யூனிஸ்டுகள்தான்.  கடவுளின் பெயரால் ஒன்றை குவித்து வைத்திருப்பதை எதிர்ப்பதும் நாங்கள்தான். மக்களுக்கான மனசாட்சி அரசியல்தான் ஆன்மிக அரசியல் என்றால், அதன் முதல் விளக்கம் கம்யூனிஸ்டுகளே. துமலைச் சந்திப்பதால், ரஜினியைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் அவருக்குக் கவலை கிடையாது. 

இன்றைக்கு நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து தவறுகளுக்கும் காரணம் மத்திய அரசுதான். மாநில அரசு இங்குள்ளது என்றாலும், மத்திய அரசின் நோக்கங்களை நிறைவேற்றக்கூடிய கையாள் போன்று தமிழ்நாடு அரசு இருந்து கொண்டிருக்கிறது. எனவே, எம்.ஜி.ஆர். அரசியலை கொண்டுவருவேன் என்று ரஜினி சொல்வதெல்லாம் வெறும் பச்சைப் பொய். பி.ஜே.பி-யுடன் ரஜினி இணக்கமான போக்கிற்கான அறிகுறிதான் துமல் உடனான சந்திப்பு. ஆனால், பி.ஜே.பி-யுடன் இணக்கம் என்பதை ரஜினி தமிழ்நாட்டில் வெளிப்படையாகச் சொல்வதற்கு தயக்கம் உள்ளது போன்றே தெரிகிறது. அதற்கான தைரியம் அவருக்கு இல்லை" என்றார்.

ரஜினிகாந்த் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பது ஒருபுறம் இருக்கட்டும். தமிழ்நாட்டில் பி.ஜே.பி.-க்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என்பதை சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், மக்கள் அந்தக் கட்சிக்கு அளித்த வாக்குகளே சாட்சி. எனவே, தனக்கான அடையாளமாக பி.ஜே.பி.-யுடன் இணக்கம் என்பதை வெளிப்படையாக ரஜினி அறிவிப்பாரேயானால் அதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

பின் செல்ல