Published:Updated:

"பெரியார் சிலை உடைப்பு... பூணூல் அறுப்பு... உச்ச நீதிமன்றம் செல்லும் வழக்கு!" - ராஜாவின் அட்மின் கவனத்துக்கு...

"பெரியார் சிலை உடைப்பு... பூணூல் அறுப்பு... உச்ச நீதிமன்றம் செல்லும் வழக்கு!" - ராஜாவின் அட்மின் கவனத்துக்கு...
"பெரியார் சிலை உடைப்பு... பூணூல் அறுப்பு... உச்ச நீதிமன்றம் செல்லும் வழக்கு!" - ராஜாவின் அட்மின் கவனத்துக்கு...

''லெனின் சிலை திரிபுராவில் உடைப்பு; தமிழகத்தில் பெரியார் சிலை உடைப்பு; பிராமணர்களை தாக்கி பூணூல் அறுப்பு.." என்று அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவங்கள் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பெரியார் சிலை உடைப்புக்கு கொடுத்த எதிர்ப்பு குரல்கள் பூணூல் அறுப்புக்கு  அடங்கிப்போனது ஏன்? அவர்களுக்கு பாதுகாப்பு வேண்டாமா? என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத்தொடங்கி இருக்கிறது. அதற்கான சட்டப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார் டெல்லி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர்.

திரிபுராவில், மார்க்சிஸ்ட் கட்சியை வீழ்த்தி, பா.ஜ.க ஆட்சியைப் பிடித்துள்ளது. வெற்றிக் கொண்டாட்டத்தில்  ஈடுபட்ட பா.ஜ.க மற்றும் அவர்களது ஆதரவாளர்கள், பேரணியாகச் சென்று லெனின் சிலையை புல்டோசர் மூலம் அகற்றினர்.  அதை வரவேற்று பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, தனது முகநூல் பக்கத்தில் லெனின் சிலை உடைப்பை படத்தை பதிவேற்றம் செய்து இருந்தார். மேலும், ''லெனின் யார்? அவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு? திரிபுராவில் லெனின் சிலை இன்று உடைக்கப்பட்டது. நாளை, தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வே. ராமசாமி சிலை" என்று குறிப்பிட்டிருந்தார்.  இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்ததோடு, அவரைக் கைதுசெய்ய வேண்டும் என்றார். வைகோவும் ஆவேசமடைந்தார். தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசையோ, அது ராஜாவின் தனிப்பட்டக் கருத்து என்று கூறி விலகிக் கொண்டார்.அவரது கருத்து கண்டனத்துக்குள்ளானதை அடுத்து அந்தப் பதிவு உடனடியாக அவரது முகநூலில் இருந்து நீக்கப்பட்டது.

இந்நிலையில் பிப்ரவரி 6 ஆம் தேதி இரவில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தந்தை பெரியார் சிலையை சிலர் கும்பலாக வந்து உடைத்தனர். இதையடுத்து அந்தப் பகுதியே பரபரப்பானது. பா.ஜ.க நிர்வாகி முத்துராமன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரை கட்சியில் இருந்து பா.ஜ.க மாநில தலைவர் டாக்டர் தமிழிசை டிஸ்மிஸ் செய்தார். இந்நிலையில், ஹெச்.ராஜா தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். முகநூல் பக்கத்தில் அந்த பதிவை போட்ட முகநூல் அட்மினையும் டிஸ்மிஸ் செய்தார். இதற்கிடையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு எதிர்வினையாகச் சென்னை திருவல்லிக்கேணி, ஶ்ரீரங்கம், ஶ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் பிராமணர்கள் சிலரின் பூணூல் அறுக்கப்பட்டது. சென்னையில் மூன்று இடங்களில் இத்தகைய நிகழ்வு நடந்தாலும் ஒரு இடத்தில் மட்டுமே புகார் கொடுக்கப்பட்டது. அந்த பிரச்னையில் போலீஸ் நிலையத்தில் சரண்டர் ஆன சிலரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 


இனிமேல் தமிழ்நாட்டில் பூணூல் அறுக்கும் செயலில் யாரும் ஈடுபடக்கூடாது என்றும் பிராமணர்களை மட்டுமல்ல இந்துக்களை அவமதிக்கும் அநாகரிக செயல்கள் எதுவும் நடக்க கூடாது என்று சட்டபாதுகாப்பு தேட உச்சநீதிமன்ற செல்கிறார் மதுரையை பூர்வீகமாக கொண்ட உச்சநீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் எஸ்.கே.சாமி. அவர் கூறுகையில், ''தமிழ்நாட்டில் 2007 ஆம் ஆண்டில் இருந்து பிராமணர் சமூகத்தை சில திராவிட அமைப்புகள் குறிவைத்து தாக்குகிறது.இந்த தாக்குதல்கள், திராவிட கட்சிகளின் அரசியல் ஆதாயத்துக்காகவே நடத்தப்படுகின்றன. குறிப்பாக, பிராமணர் சமூகத்தை சேர்ந்தவர்கள், வேறு சமூகத்தினரின் மத சடங்குகளை, கலாச்சார பழக்க வழக்கங்களை அவமதிப்பது இல்லை. அப்படிப்பட்ட பிராமணர்கள் கடைபிடிக்கும் பழக்க வழக்கங்களில் திராவிட அமைப்புகள் தாக்குதல் நடத்துவது, புனித நதியான கங்கையில் சாக்கடையை கலப்பது போல்  உள்ளது. 

தாழ்த்தப்பட்ட மக்களை, ஒடுக்கப்பட்ட மக்களை, பிற்படுத்தப்பட்ட மக்களை தூக்கிவிட வேண்டும் என்று பல சலுகைகளை மத்திய -மாநில அரசுகள் கொடுத்து வருகிறது. அந்தச் சலுகைகளை அச்சமூகத்தினர் தவறாக பயன்படுத்துகின்றனர் என்று அரசாங்கத்தின் புள்ளி விபரங்கள் ஆதாரப்பூர்வமாக இப்போது சொல்கின்றன. அதையெல்லாம் ஒழுங்குபடுத்த வேண்டிய நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. பிராமணர் சமூகம், பிராமணர் சமூகமாகவே உள்ளது. அவர்களுடைய சமூக பழக்க வழக்கங்கள், பண்பாடு, கலாசாரங்களை மற்ற சமூகத்தினர் ஏன் அவமரியாதை செய்ய வேண்டும். பூணூல் அறுத்து அவமரியாதை செய்வது ஏன்? இத்தகையை வன்முறை, அராஜகம் செய்வது நியாயம் தானா? மத பழக்க வழக்கங்களை கொச்சைப்படுத்த எந்தச் சட்டமும் அனுமதிக்கவில்லை. 

இதைச் சட்டப்பூர்வமாக அணுகி நிரந்தரமாக முடிவு கட்ட வேண்டும் என்ற முயற்சியில் சமூக ஆர்வலராகவும் வழக்கறிஞராகவும் திட்டமிட்டு இருக்கிறேன். மத நம்பிக்கை என்பது ஒருவரின் அடிப்படை உரிமை. அதை அவமானப்படுத்தவோ, நிந்தனை செய்யவோ யாருக்கும் உரிமை இல்லை. தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் மூன்று  இடங்களில்  பூணூலை அறுத்துள்ளனர். திருவல்லிக்கேணியில் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னையில் போலீஸ் நிலையத்தில் சரண்டர் ஆன சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்ற இரண்டு இடங்களில் பூணூல் அறுக்கபட்டவர்கள் அதை வெளியே சொன்னால் அவமானம் என்று புகார் கொடுக்கவில்லை. அங்கு யாரையும் இதுவரை போலீசார் கைது செய்யவில்லை. அங்கு போலீசாரே கட்டப் பஞ்சாயத்து செய்து இரண்டு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர். 

இனிமேல் இதுபோன்ற தாக்குதல்கள் தமிழகத்தில் நடக்க கூடாது. கிறிஸ்தவர், முஸ்லீம் உள்ளிட்டோரை சிறுபான்மையினர் என்று அவர்களுக்கு மத ரீதியாக பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. ஆனால், இந்துக்களுக்கு இந்தப் பாதுகாப்பு இல்லை. இந்துக்களின் நாட்டில் இந்துக்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகிவிட்டது. எனவே, இந்துக்களை பாதுகாக்க இதற்கென தனிச்சட்டதை உடனே கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் மட்டுமல்ல, கொல்கத்தா, வாரணாசி, மும்பையிலும் இந்துக்கள் மீது மத ரீதியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்றும் உரிய பாதுகாப்பு வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய இருக்கிறேன். பூணூல் அறுப்பு உள்பட, இந்து மத துவேஷம் குறித்த தகவல்களை, புள்ளி விபரங்களை திரட்டி வருகிறேன். அதன் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்படும். '' என்றார்.

ராஜாவின் அட்மினால் ஏற்பட்ட சிக்கல்... பெரியார் சிலை உடைப்பு, பூணூல் அறுப்பு என பிரச்னை உச்சநீதிமன்றம் வரை போகிறது.