Published:Updated:

காட்டுப்பள்ளி: 1,600 மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு!

காட்டுப்பள்ளி: 1,600 மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு!
காட்டுப்பள்ளி: 1,600 மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு!
காட்டுப்பள்ளி: 1,600 மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு!

சென்னை: திருவள்ளூர் மாவட்டம்,காட்டுப்பள்ளி கிராமத்தில் துவங்கப்பட்டுள்ள  கப்பல் கட்டும் தளத்தினால் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளான சுமார் 1,600 மீனவர்களுக்கு  வேலை வாய்ப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவள்ளூர் மாவட்டம்,காட்டுப்பள்ளி கிராமத்தில் தமிழ்நாடு தொழில் முன்னேற்றக் கழகத்தின் மூன்று விழுக்காடு மூலதனப் பங்கீட்டுடன்,4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எல் அண்டு டி நிறுவனத்தால் துவங்கப்பட்ட கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகப் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன.

இந்தக் கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகத்திற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே,தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தெரிவித்து, அப்பகுதி மீனவ மக்கள் கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கைளை வைத்து வந்தனர். இதன் அடிப்படையில்,காட்டுப்பள்ளிக் குப்பம்,காட்டுப்பள்ளி காலனி காட்டுப்பள்ளி கிராமம் ஆகிய பகுதிகளில் இந்த கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகத்தால் நேரடியாக பாதிப்புக்கு உள்ளான 220 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது.

எனினும், இந்த திட்டத்தாலும், மீஞ்சூரில் அமைந்துள்ள “கடல் நீரை குடி நீராக்கும்” திட்டத்தினாலும், பழவேற்காடு பகுதியை சுற்றியுள்ள 15 கிராமங்களில் உள்ள மீனவர்களின் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சி காலத்தில் 28.7.2010 அன்று, மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இதன்படி, 850 நபர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு வழங்கவும், மேலும் 900 நபர்களுக்கு ஒரு வருட காலத்திற்குள் வேலை வாய்ப்பு வழங்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.எனினும், முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சி முடியும் வரை இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு,நான் மூன்றாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், இந்தப் பிரச்னையில் தனிக் கவனம் செலுத்தினேன்.

இதன் காரணமாக முதற்கட்டமாக,இப்பகுதியில் வாழும் 131 நபர்களுக்கு எல் அண்டு டி நிறுவனத்தால் சென்ற ஆண்டு பிப்ரவரி மற்றும் ஜூலை மாதங்களில் வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டது.

##~~##
இதன் தொடர்ச்சியாக,எனது உத்தரவின் பேரில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர், தொழில்கள் துறை அமைச்சர், வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர்,அரசு தலைமைச் செயலாளர்,தொழில் துறை முதன்மைச் செயலாளர்,வளர்ச்சி ஆணையர் மற்றும் உள்துறை முதன்மைச் செயலாளர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் மீனவ சமுதாய பிரதிநிதிகளுடனும்,எல் அண்டு டி நிறுவனப் பிரதிநிதிகளுடனும் தலைமைச் செயலகத்தில் 1.1.2013 மற்றும் 2.1.2013 ஆகிய இரு நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில்,மீனவ மக்கள் நலன் காக்கும் வகையில் பின் வரும் நடவடிக்கைகள் எடுத்திட நான் உத்தரவிட்டுள்ளேன்.
எல் அண்டு டி நிறுவனத்தால் அளிக்கப்பட்ட அனைத்து உறுதிமொழிகளும் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில்,எல் அண்டு டி நிறுவனத்திற்கும்,மீனவர்களுக்கும் இடையே பாலமாக டிட்கோ நிறுவனம் செயல்படும்.
எல் அண்டு டி நிறுவனம் உடனடியாக மேலும் 120 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும்.இந்த 120 நபர்களில்,60 நபர்கள் எல் அண்ட் டி நிறுவனத்தில் நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள்.
மீதமுள்ள 60 நபர்கள், எல் அண்டு டி நிறுவனத்தில் மூன்று மாத கால பயிற்சி பெற்ற பின்னர்,முறையாக பணியமர்த்தப்படுவார்கள்.பயிற்சி பெறும் 60 நபர்களுக்கும், பயிற்சிக் காலத்தில், பயிற்சித் தொகையாக 6,000 ரூபாய் மாதாமாதம் வழங்கப்படும்.
இந்த 6,000 ரூபாயில்,1,500 ரூபாயை எல் அண்டு டி நிறுவனமும், 4,500 ரூபாயை தமிழக அரசும் வழங்கும். இதனால், அரசுக்கு சுமார்8 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
மூன்று மாதங்களில்,காட்டுப்பள்ளியில் பயிற்சி வசதியினை ஏற்படுத்த எல் அண்டு டி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.இந்தப் பயிற்சி மையத்தில்,எல் அண்டு டி நிறுவனத்தில் வேலை வாய்ப்பினை பெறும் வகையில், மேலும் 600 மீனவர்களுக்கு, குழு குழுவாக பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெறும் தொழிலாளர்களுக்கான உதவித் தொகையில் நான்கில் மூன்று பங்கினை தமிழக அரசு ஏற்றுக்கொள்வதால், எனது தலைமையிலான அரசுக்கு 63 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.
எல் அண்டு டி நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 206 ரூபாய் தினக்கூலியை, நாளொன்றுக்கு 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பழவேற்காட்டிலிருந்து பாரிமுனை வரை செல்வதற்கு பேருந்து வசதி உடனடியாக செய்து தரப்படும்.
காட்டுப்பள்ளி பகுதியில் கண்டறியப்பட்டுள்ள எஞ்சிய 900 மீனவர்களுக்கு மீனளம், சுற்றுலா ஆகிய துறைகளைச்சேர்ந்த அரசு பயிற்சி நிலையங்களில் பயிற்சி அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மீனவர்களின் கல்வித் தகுதி மற்றும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி ஆகியவற்றின் அடிப்படையில், அவர்களுக்கு பழவேற்காடு ஏரியில் சுற்றுலா தொடர்பான பணிகள் வழங்கப்படும். மீனளத் துறையிலும் பணியமர்த்தப்படுவர்.தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையில் பணியமர்த்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம், பழவேற்காடு பகுதியிலுள்ள மீனவ மக்களின் வாழ்வாதாரம் நிச்சயம் மேம்படுவதோடு, அந்தப் பகுதியில் துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் தளம் இயங்குவதன் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையவும் வழிவகை ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.