Published:Updated:

தலைவர்களின் பவர் பேங்க்!

தலைவர்களின் பவர் பேங்க்!

கே.புவனேஸ்வரி

தலைவர்களின் பவர் பேங்க்!

கே.புவனேஸ்வரி

Published:Updated:
தலைவர்களின் பவர் பேங்க்!

லைவர்களின் சூறாவளிப் பிரசாரங்கள் ஓய்ந்துவிட்டன. அவர்களின் சீக்ரெட் ஆஃப் எனர்ஜிக்கு என்ன காரணம்? இரண்டு மாதங்களாக அவர்களுக்கு பவர் பேங்காக இருந்து எனர்ஜி கொடுத்தது அவர்களின் திருமதிகள்தான். அவர்களையே விசாரித்தோம்...

முதல் விமர்சகர்! 

தலைவர்களின் பவர் பேங்க்!

பிரசாரம் தொடங்கிய நாள் முதல் கடைசி நாள் வரை, தி.மு.க தலைவர் கருணாநிதியுடன் கூடவே இருந்தார் ராசாத்தி அம்மாள். கருணாநிதி ஒவ்வொரு கூட்டத்தில் பேசி முடித்து களைப்பாக வேனில் ஏறியதும், ராசாத்தி அம்மாளிடம் தண்ணீர்கூடக் கேட்க மாட்டார். அவர் கேட்கும் முதல் கேள்வி... ‘எப்படி இருந்தது கூட்டம்?’ என்பதுதான். ராசாத்தி அம்மாளிடம் இருந்து பாசிட்டிவ் ரிப்ளை வந்த பிறகுதான், கருணாநிதிக்கு காபி, டிபன், ஹார்லிக்ஸ் எல்லாமே! கருணாநிதிக்காக, ராசாத்தி அம்மாளே மருத்துவர்களோடு கலந்து ஆலோசித்து ஒரு மெனுவைத் தயார்செய்திருந்தார். காலையில் இரண்டு இட்லி, ஒரு மணி நேரம் கழித்து ஒரு காபி, மதியம் தயிர் சாதம் அல்லது சாம்பார் சாதம் உடன் ஒரு கூட்டு, மாலையில் ஒரு காபி, இரவு எளிதாகச் செரிமானம் ஆகக்கூடிய ஏதேனும் ஓர் உணவு... இதுதான் கருணாநிதியின் டயட். அவர் என்ன சாப்பிடுகிறாரோ அதுதான் ராசாத்தி அம்மாளுக்கும்!

மீன் அப்டேட்ஸ்!

பா.ம.க இளைஞர் அணிச் செயலாளர் அன்புமணியின் மனைவி சௌமியா, படபடவெனப் பேசினார்... ``அவருக்கு உடம்பு வெயிட் போடுதுனு காலையில சாப்பிடுறதையே விட்டுட்டார். பெரிய டம்ளரில் ஹார்லிக்ஸ் குடிப்பார். அதுதான் அவரோட காலை டிபன். ஹார்லிக்ஸ் ரெடி பண்ணித் தர்றது ரொம்ப சிம்பிள். நானே போட்டுத் தந்துடுவேன். அவங்க அம்மாவின் சமையல் தான் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். மீன் விரும்பிச் சாப்பிடுவார். அந்தந்த ஊர்ல என்ன ஸ்பெஷல் மீனோ, அதை கட்சிக்காரங்களே செஞ்சு கொண்டுவந்திடுவாங்க. அவர் சாப்பிட்டப் பிறகு, ‘இன்னார் வீட்டுல இருந்து இன்னைக்கு இந்த மீன் செஞ்சு கொண்டு வந்தாங்க’னு எங்க ஃபேமிலி வாட்ஸ்அப் குரூப்ல சொல்லிடுவார். தேர்தல் பிஸியில போன் பண்ணா எடுக்க மாட்டார்.   ஆனா, வாட்ஸ்அப்ல சுலபமா பிடிச்சுடலாம். எனக்கு கால் பண்ணார்னா எதை எல்லாம் பேசணும்னு கையில எழுதி வெச்சிருப்பேன். அதை எல்லாத்தையும் சொல்லிடு வேன். பொண்ணுங்கதான் அப்பாவை மிஸ் பண்ணினாங்க. அவருக்கும் அப்படித்தான்.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தலைவர்களின் பவர் பேங்க்!

‘நாங்களும் உங்களுக்காக பென்னாகரத்துல பிரசாரம் செய்றோம்’ என சௌமியா சொன்னதும், அவரை உற்சாகப்படுத்தி. `திராவிடக் கட்சிகளைப் பற்றி எடுத்துச் சொல்லுங்க. டாஸ்மாக், மக்களை எந்த அளவுக்குச் சீரழிச்சிருக்குனு பேசி வாக்கு கேளுங்க' என டிப்ஸ் கொடுத்திருக்கிறார் அன்புமணி!

`நல்லா பேசியிருக்கீங்க!'

தலைவர்களின் பவர் பேங்க்!

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பேச்சுக்கு முதல் ரசிகை அவர் மனைவி ரேணுகாதான். மாநாடுகள் என்றால், மறக்காமல் முதல் வரிசையில் அமர்ந்திருப்பார். தேர்தல் பிரசாரத்திலும் திருச்சி, மாமண்டூர், மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்ற கூட்டணிக் கட்சிகளின் மாநாடுகளில் முதல் வரிசையில் இருந்தார். செய்தித்தாள், செய்தி சேனல்... என வைகோவின் பேச்சு, பிரசாரம் பற்றிய எந்தச் செய்தியையும் விடாமல் தொடர்வது ரேணுகாவின் வழக்கம். இந்தத் தேர்தலிலும் செய்திகளை எல்லாம் ஒன்றுவிடாமல் படித்துவிட்டு அப்டேட் செய்துகொண்டிருந்தார். கூட்டங்களுக்குச் செல்ல முடியவில்லை என்றால், தன் கணவரை போனில் அழைத்து, ‘நல்லா பேசியிருக்கீங்க. இந்த விஷயத்தை அப்படிப் பேசியிருக்கலாம்’ என உடனே லைக் போட்டு டிப்ஸ் கொடுப்பார். கணவரின் உடல்நலனில் அதீத அக்கறையோடு இருப்பார். குறிப்பாக, வைகோவுக்கு மூன்று வேளையும் சாப்பாட்டில் சப்பாத்தி அவசியம் இருக்க வேண்டும். காய்கறிகள், கீரைகள் நிறைய இருக்க வேண்டும். கணவருடன் பிரசாரத்துக்குச் சென்றால், இவற்றை எல்லாம் ரேணுகாவே தயாரித்துக் கொடுப்பார். வெளியூர் என்றால் உரிய ஏற்பாடுகளை முதலில் நின்று கவனித்து தயார்செய்வது ரேணுகாதான்.

டபுள் டியூட்டி!

தலைவர்களின் பவர் பேங்க்!

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கு இந்தத் தேர்தலில் டபுள் டியூட்டி. விஜயகாந்துக்கு இணையாக அவரும் பிரசாரத்தில் இருந்தார். தன் கணவர் எந்த ஊருக்குப் பிரசாரம் சென்றாலும் சரியான நேரத்துக்கு உணவும் மாத்திரையும் சாப்பிட்டாரா என்பதை, பிரசாரக் களத்தில் இருந்தாலும் மறக்காமல் அழைத்து விசாரித்துக்கொண்டே இருந்தார் பிரேமலதா. விஜயகாந்தின் பிரசாரத் திட்டம் ஒருநாள் முன்னரே பிரேமலதாவுக்கு வந்துவிடும். மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியனோடு தினமும் இரவில் நேரம் கிடைக்கும்போது பேசிவிடுவார். மகன்களும் சோஷியல் மீடியாவின்  டிரெண்ட் போன்றவற்றை அம்மாவிடம் சொல்லி விடுவார்கள். ஒவ்வொரு நாளும் இரவு, பிரேமலதா தான் பேசிய கூட்டத்தில் நடந்த விஷயங்களை விஜயகாந்திடம் தெரிவித்துவிடுவார். கேப்டன் நியூஸில் விஜயகாந்த் பேசுவதைக் கேட்ட பிறகு, தன் கமென்டையும், என்னென்ன விஷயங்கள் பேச வேண்டும், இப்படிப் பேசியிருக்கலாம், இதைச் சொல்லியிருக்கலாம் எனச் சின்னச்சின்ன டிப்ஸ்களையும் விஜயகாந்துக்குக் கொடுத்தார் பிரேமலதா!

சாய்பாபா துணை!

தலைவர்களின் பவர் பேங்க்!

தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் கட்சிக்காக தமிழ்நாடு முழுவதும் வலம்வந்தபோது, அவர் மனைவி துர்கா, கணவரின் வெற்றிக்காக கொளத்தூரைச் சுற்றிவந்தார். அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்போர் நலச் சங்கம், தேவாலயக் கூட்டங்கள் போன்ற இடங்களுக்கும் வீடு வீடாகவும் சென்று, கணவருக்காக வாக்கு சேகரித்தார். அப்போது தொகுதிக்கு தன் கணவர் செய்த நன்மைகள், அ.தி.மு.க அரசால் முடக்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்களை, பட்டியல் போட்டுப் பேசியதற்கு தாய்க்குலங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. சென்னை, வெளியூர் என ஸ்டாலினின் பெரும்பாலான பிரசாரக் கூட்டங்களில் துர்காவும் உடன் இருந்தார். ஸ்டாலின் சென்னையில் பிரசாரம் செய்தால் அவருக்கு வீட்டில் இருந்து சாப்பாடு கொடுத்து அனுப்பிவிடுவார். வெளியூரில் இருந்தால், அவருக்கு யார் வீட்டில் இருந்து சாப்பாடு போகிறது என்பதை போனில் கேட்டுத் தெரிந்துகொள்வார். அவர்களிடம் உடனே பேசி கணவருக்கான மெனுவைச் சொல்லி அதை மட்டும்தான் கொடுக்கணும் எனக் கண்டிப்பாகச் சொல்லிவிடுவார். வெயிலில் நிற்கிறாரா, தொண்டை கரகரப்பு இருக்கிறதா... என அக்கறையாக போன்செய்து கேட்டுக்கொண்டே இருப்பார். ஷீரடி சாய்பாபாவின் தீவிர பக்தையான துர்கா, கணவருடன் வெளியூர் செல்லும்போதும் சரி, கொளத்தூரில் கணவருக்காகப் பிரசாரம் செய்தபோதும் சரி... அந்தப் பகுதிகளில் உள்ள சாய்பாபா கோயில்களில் தி.மு.க வெற்றிக்காகப் பிரார்த்தனை செய்தார்!

`நோட்ஸ் எடுத்துக்கம்மா!'

தலைவர்களின் பவர் பேங்க்!

மார்க்ஸிஸ்ட் கட்சி மாநிலப் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணனின் மனைவி ரீட்டா, ஓய்வுபெற்ற நூலகர். ராமகிருஷ்ணன், தொழிற்சங்கத் தலைவராக இருந்த காலத்தில் இருந்தே அவருக்காகக் களத்தில் இறங்கி வேலைபார்த்தவர். இந்தத் தேர்தலில் வழக்கத்தைவிட ரொம்ப பிஸியாகிவிட்டார் ராமகிருஷ்ணன். செய்தித்தாள், புத்தகங்கள் போன்றவற்றைப் படிக்க அவருக்கு நேரம் இல்லாததால், தன் மனைவி ரீட்டாவிடம் அவற்றைக் கொடுத்து, படித்து நோட்ஸ் எடுத்துத் தரச் சொல்லிவிட்டாராம். `` `இன்னைக்கு எங்கே பிரசாரத்துக்குப் போறீங்க, எப்போ வீட்டுக்கு வருவீங்கனு எல்லாத்தையும் என்கிட்ட சொல்லணும்’னு சொல்வேன். அதனால நான் போன் பண்ணினதும், `இந்த இடத்தில் இருக்கேன்'னு அவராவே அப்டேட் பண்ணிடுவார்’’ எனச் சிரிக்கிறார் ரீட்டா!

`நேரத்துக்குச் சாப்பிடும்மா!'

தலைவர்களின் பவர் பேங்க்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் முத்தரசனின் மனைவி பங்கஜம், கணவர் தேர்தலில் பிஸி என்பதால் முழுக் குடும்பத்தையும் தனியாகக் கவனித்துக்கொள்கிறார். ``குடும்பத்துல என்ன நடக்குதுனு அவருக்குத் தெரியவே தெரியாது. நான் சொன்னால் `அப்படியா?'னு கேட்டுப்பார். நானா அவருக்கு போன் போட்டுத் தொந்தரவு செய்ய மாட்டேன். அவரே கூப்பிடும்போது பேசுவேன். அவர் பத்திரிகையாளர் சந்திப்புல, பிரசாரத்துல பேசுறதை டி.வி-யில பார்த்துட்டு என் கருத்தைச் சொல்வேன். அதை எல்லாம் ரொம்ப ஆர்வமாகக் கேட்பார். ஒவ்வொரு முறையும், ‘நீ சாப்பிட்டியா?’னு அக்கறையா விசாரிப்பார். `இன்னும் சாப்பிடலை’னு சொன்னா, ‘என்னம்மா... வீட்ல இருக்க நீங்க நேரத்துக்குச் சாப்பிட வேணாமா... நல்லா சாப்பிடுங்க'னு வருத்தப்படுவார். தேர்தல் பிஸியில அவரால வீட்டு நிகழ்ச்சிகள்ல கலந்துக்க முடியலை. அந்தச் சமயங்கள்ல மட்டும் கொஞ்சம் வருத்தமா இருக்கும். ‘அவர் பொதுவாழ்வில் இருக்கார். இதை எல்லாம் நாம எதிர்பார்க்கக் கூடாது’னு எனக்கு நானே ஆறுதல் சொல்லிப்பேன்!''

``வாட்ஸ்அப்ல வருவார்!''

தலைவர்களின் பவர் பேங்க்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர், சீமானின் மனைவி கயல்விழி ஆர்வமாகப் பேசுகிறார். ``தேர்தல் பிரசாரத்துக்கு அவர் போனதும் அவரை நான் ரொம்ப மிஸ் பண்ணினேன். அவர்தான் அப்பப்ப வாட்ஸ்அப்ல மெசேஜ் பண்ணிட்டே இருப்பார். நானும் என்ன முக்கியமான செய்தியோ அதை அவருக்கு அப்டேட் பண்ணிட்டே இருப்பேன். கடந்த ஒரு மாசமா அவர் கால் படாத மாவட்டமே இல்லைனு சொல்லலாம். அதனால `பேசுங்க... பேசுங்க'னு ரொம்பத் தொந்தரவு செய்யக் கூடாதுனு நினைப்பேன். நிறையப் பேர் பேசுற மைக்ல பேசுவதால் அவருக்குத் தொண்டை கட்டிக்கும். அதனால மிளகு-பனங்கற்கண்டை மிக்ஸ் பண்ணி, ஒரு டப்பாவுல போட்டுக் கொடுத்தேன். ஒவ்வொரு முறை பேசி முடிச்சதும், அதை ஒரு கை அள்ளி வாயில போட்டுக்குவார். அதனால நோய் கிருமி எதுவும் தொண்டையைத் தாக்காது. அதேபோல எலுமிச்சைச் சாறு குடிக்கச் சொன்னேன். வெயில்ல அலைவதால் உடம்புல உள்ள தண்ணீர் வற்றாமல் இருக்கும். கடலூர் பிரசாரத்துக்கு நானும் அவர்கூடப் போயிருந்தேன். அப்ப மட்டும் அவருக்குப் பிடிக்குமேனு பார்த்துப் பார்த்து அயிரை மீன் குழம்பு வெச்சுக் கொடுத்தேன். `ரொம்ப நல்லா இருக்கு’னு பாராட்டிட்டே சாப்பிட்டார்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism