Published:Updated:

`நாஞ்சில் சம்பத் இப்படிச் செய்யலாமா?’ - தகிக்கும் தினகரன் ஆதரவாளர்கள்

`நாஞ்சில் சம்பத் இப்படிச் செய்யலாமா?’ - தகிக்கும் தினகரன் ஆதரவாளர்கள்
`நாஞ்சில் சம்பத் இப்படிச் செய்யலாமா?’ - தகிக்கும் தினகரன் ஆதரவாளர்கள்

`நாஞ்சில் சம்பத் இப்படிச் செய்யலாமா?’ - தகிக்கும் தினகரன் ஆதரவாளர்கள்

`நாஞ்சில் சம்பத்தின்  தமிழுக்காக அவரை தீவிரமாகப் பின்தொடர்ந்த நாங்கள், தற்போது அவரைப் பின் தொடர முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்’ என்று வருந்துகின்றனர் தினகரன் ஆதரவாளர்கள்.

மதுரை மேலூரில் கடந்த 15-ம் தேதி, `அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்றை அறிவித்தார் டி.டி.வி.தினகரன். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மீட்டெடுக்கும் வரையில், அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் இயக்கமாக நாம் தொடர்ந்து பயணிக்கவே இந்த இயக்கம்’ என்று விளக்கம் கொடுத்தார் தினகரன். 

இந்நிலையில் தினகரனின் புதிய கட்சித் தொடக்கவிழாவைப் புறக்கணித்த நாஞ்சில் சம்பத் தற்போது தினகரன் அணியிலிருந்தே விலகுவதாக அறிவித்துள்ளார். இன்று காலை மணக்காவிளையில் தனது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த நாஞ்சில் சம்பத், ``தினகரனின் செயல்பாடுகள் திராவிடக் கொள்கைக்கு எதிராக இருக்கின்றன. திராவிடத்தை அழிக்கும் விதமாகத் தினகரன் செயல்படுகிறார். திராவிடம் இல்லாத தமிழகம் என்ற திட்டத்துடன் இயங்கும் வகுப்புவாத சக்திகளுக்கு தினகரன் அடிபணிந்துவிட்டார் என்ற சந்தேகம் இருக்கிறது. இனி நான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை. ஒரு தலைவன் ஒரு கொடிக்கு கீழே இருக்க விரும்பவில்லை. அதனால், தினகரன் அணியிலிருந்து விலகிக்கொள்கிறேன். இனி, இலக்கிய மேடைகளில் பேச இருக்கிறேன். இளைஞர்களுக்காகத் தமிழ் பயிற்சிப் பட்டறை தொடங்கப்போகிறேன்’’ என்றார். 


 

நாஞ்சில் சம்பத்தின் இந்த முடிவு, தினகரன் அணியில் இருக்கும் அவரின் நெருங்கிய நண்பர்களுக்கு அதிருப்தியளித்துள்ளது. இதுகுறித்து தினகரன் ஆதரவாளரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பேச்சாளருமான வழக்கறிஞர் காசிநாத பாரதி நம்மிடம் பேசுகையில், ``தற்போது தொடங்கப்பட்ட அமைப்பு தனிப்பட்ட இயக்கம் என்பது நாஞ்சில் சம்பத்துக்குத் தெரியும். டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஆணையின் அடிப்படையில்தான் நாம் புதிய அமைப்பு என்பதை தொடங்குகிறோம். ஒருவேளை புதிய கட்சியைத் தொடங்குவதாக இருந்தால் நேரடியாகத் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்திருந்தாலே போதுமானது. நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை. ஏதோ ஒரு காரணத்துக்காகத் தமிழகத்தில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் இருக்கும் 50 லட்சம் இளைஞர்களும் தினகரனுக்குப் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள். இது வெளிப்படையான உண்மை.

ஒரு மாநாட்டுக்காக மூன்று நாள்களுக்குள் ஏறக்குறைய மூன்று லட்சம் தொண்டர்களைக் கூட்டியிருப்பது தினகரனின் வல்லமையைக் காட்டுக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினே தினகரனைப் பார்த்து பயந்து எடப்பாடி பழனிசாமியைச் சென்று சந்தித்தார்.  ஒட்டுமொத்த திராவிட கட்சியும் டி.டி.வி.தினகரன் பின்னால் அணிவகுத்து நிற்கிறது. இப்படி ஒரு நல்ல நேரத்தில் நாஞ்சில் சம்பத் இயக்கத்தைவிட்டு விலகுவது வருத்தம் அளிக்கிறது. அவருக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், கொடுக்கப்படவில்லை என்று அவர் கருதுகிறார். அவரின் முடிவை அவர் மறுபரீசீலனை செய்ய வேண்டும். அமைப்பு செயலாளர் நாமக்கல் ரவிக்குமார் உட்பட நாங்கள் அனைவரும் நாஞ்சில் சம்பத்தின் தமிழுக்காக அவரை பின் தொடர்ந்தோம். இனி பின் தொடர முடியாத சூழல் உருவாகிவிட்டது. மேலும், கண்டிப்பாக டி.டி.வி.தினகரன் திராவிட இயக்கத்தின் தலைவராகவும் தமிழக முதல்வராகவும் வருவார் என்று நம்பிக்கை இருக்கிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை எதிர்க்கும் தலைமையாகத் தினகரன் திகழ்வார். 

இது ஒரு இடைகால அமைப்பு என்பதால் திராவிடம் என்ற பெயரைச் சேர்க்கவில்லை. திராவிடம் என்று பெயர் வைத்துவிட்டால் இது ஒரு தனிக் கட்சியாகத் தெரியும். இதன்மூலமாக உள்ளாட்சி தேர்தலில் இடங்களைப் பிடிக்கும்போது  அ.தி.மு.க-வும் இரட்டை இலைச் சின்னமும் நம் கையில் கிடைக்கும். டெல்லி உயர் நீதிமன்றத்தில் நாம் தொடுத்திருக்கும் வழக்கின் சாரம்சமும் இதுதான். நாஞ்சில் சம்பத் வேறு எந்த அரசியல் இயக்கத்துக்கும் போக மாட்டார். அவரின் நோக்கம் அது இல்லை என்று நம்புகிறேன். புகழேந்தி உள்ளிட்டோர் நேற்று மாலை நாஞ்சில் சம்பத்தின் வீட்டுக்குச் சென்று அவரது முடிவை மறுபரிசீலனை செய்ய சொன்னோம். ஆனால், அவர் முடிவில் மாற்றமில்லை என்று கூறிவிட்டார்’’ என்றனர். 

அடுத்த கட்டுரைக்கு