Published:Updated:

ஜெ 2.0 - நம்பர் கேம் டேட்டா

ஜெ 2.0 - நம்பர் கேம் டேட்டா
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெ 2.0 - நம்பர் கேம் டேட்டா

ஆர்.முத்துக்குமார், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

ஜெ 2.0 - நம்பர் கேம் டேட்டா

தேர்தல் களத்தில் ஆயிரம் கோஷங்கள் எழுப்பினாலும், ஆயிரம் வாக்குறுதிகள் தரப் பட்டாலும் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பது என்னவோ எண்கள்தான். அந்த வகையில் 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை, சில குறிப்பிட்ட எண்களின் வழியே பார்க்கும்போது பல புதிய புரிதல்கள் கிடைக்கின்றன.

134 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது அ.தி.மு.க. ஐந்து ஆண்டு கால ஆட்சி மீதான அதிருப்தி, சொத்துக்குவிப்பு வழக்கு, ஊழல் புகார்கள், குடும்ப அரசியல், டிசம்பர் பெருவெள்ளம், கடன் சுமை, மத்திய அமைச்சர்களின் புகார்கள், எதிர்க்கட்சிகளின் ஏகோபித்த எதிர்ப் பிரசாரம் என்பதை எல்லாம் தாண்டி, அ.தி.மு.க பெற்றிருக்கும் முக்கிய வெற்றி இது. கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலைவிட 16 இடங்கள் குறைவு. பெரிய கூட்டணிக் கட்சிகள் எதுவும் இல்லாததால் 232 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தினார் ஜெயலலிதா.

ஒரு வகையில் அந்த முடிவே அ.தி.மு.க-வின் வெற்றிக்கு அடித்தளம். மற்றபடி, தி.மு.க-வின் பலவீனம், பலமுனைப் போட்டி என்பவை எல்லாம் அதன் பிறகுதான். `எம்.ஜி.ஆருக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சியைப் பிடித்த தலைவர் ஜெயலலிதா’ என்று பெருமிதம்கொள்கிறார்கள்.  உண்மைதான்... என்ன ஒன்று, இந்தச் சாதனையை 50-களில் காமராஜரும் 70-களில் கருணாநிதியும் செய்திருக்கிறார்கள். அவர்களின் அடியொற்றி எம்.ஜி.ஆர்., இப்போது ஜெயலலிதா.

முழுக்கவே பெண்களைக் கவரும் தேர்தல் அறிக்கையால் வென்றதா அ.தி.மு.க.?

மொத்த வாக்காளர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகம். ஆகவே, ஆட்சியாளரைத் தீர்மானிப்பதில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக இருந்தது. தவிரவும், முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு பெண். தனி ஒரு நபராக அரசியல் களத்தில் இருக்கிறார். அவரை அனைத்து ஆண் தலைவர்களும் சுற்றிவளைத்து விமர்சனம் செய்கிறார்கள். ஆகவே, அவருக்கு அனுசரணையாக நாம் இருக்கவேண்டும் என்ற எண்ணம்கொண்ட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை, இந்தத் தேர்தலில் அதிகமாகி யிருப்பது நிரூபணமாகியிருக்கிறது.

இன்னும் கொஞ்சம் உடைத்துச் சொன்னால்... சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்றதையோ, அல்லது மேல்முறையீட்டில் அவர் சிறைக்குச் செல்லக்கூடிய வாய்ப்பையோ பெண்கள் பலரும் உள்ளார்ந்து விரும்பவில்லை. அது அ.தி.மு.க-வின் ஆகப்பெரிய பலம். இன்றைய வெற்றிக்கான முக்கியக் காரணி.

பெண்களின் ஏகோபித்த கோரிக்கைகளுள் ஒன்றான மதுவிலக்கைச் சாத்தியமாக்கக்கூடிய வகையில், `படிப்படியான மதுவிலக்கு’ என்று அறிவித்தது அவருக்கான ஆதரவுத்தளத்தை விரிவுபடுத்தியிருக்கலாம். தனக்கு என சொந்த வாகனம் என்பது பெண்களின் கனவுப்பட்டியலில் ஒன்று. `50 சதவிகித மானிய விலையில் இருசக்கர வாகனம்’ அறிவிப்பு, வாகனக் கனவில் வாழும் பல பெண்களை ஜெயலலிதாவின் பக்கம் நகர்த்தியிருக்கலாம். மின்கட்டணச் சுமையை மறைமுகமாகச் சுமக்கும் பெண்களுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற வாக்குறுதி, `அப்பாடா, கொஞ்சம் சமாளிச்சுடலாம்’ என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. முக்கியமாக, பேறுகால உதவித்தொகை பெற்றோரின் நிதிச்சுமையைக் குறைக்கக்கூடிய ஒன்று.

இவை எல்லாம் சேர்ந்து, பெண் வாக்காளர்களை ஜெயலலிதாவின் பக்கம் வலுவாகத் திருப்பியிருக்கிறது.

ஜெ 2.0 - நம்பர் கேம் டேட்டா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

89 இடங்களைப் பிடித்து பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்திருக்கிறது தி.மு.க. ஆளும் கட்சி மீதான அதிருப்தி, நமக்கு நாமே நடைபயணம், கணிசமான வாக்கு வங்கியைக்கொண்ட காங்கிரஸ் மற்றும் பிரதான இஸ்லாமியக் கட்சிகளுடனான கூட்டணி, வாக்குவங்கி ரீதியாக வலுவற்ற மாற்று அணிகள்... ஆகியவையே தி.மு.க-வுக்குச் சாதகமான அம்சங்கள். என்றாலும், இரண்டாம் இடம்தான். ஆனால், தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஆகப்பெரிய எதிர்க்கட்சியாக தி.மு.க உருவெடுத்திருக்கிறது. முன்னதாக, 1984-ம் ஆண்டில் அ.தி.மு.க-வின் கூட்டணிக் கட்சி காங்கிரஸ் 61 இடங்களுடன் பெரிய எதிர்க்கட்சியாக அமர்ந்தது. 2006-ம் ஆண்டில் 61 இடங்களைப் பெற்ற அ.தி.மு.க வலுவான எதிர்க்கட்சியாக விளங்கியது. சற்று நுணுக்கமாகப் பார்த்தால், தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆளும் கட்சி (1971 –ம் ஆண்டில் 184 இடங்கள்) தி.மு.க. மிகப் பெரிய எதிர்க்கட்சியும் (2016-ம் ஆண்டில் 89 இடங்கள்) தி.மு.க-வே.

அ.தி.மு.க-வும் வேண்டாம், தி.மு.க-வும் வேண்டாம் என்ற கோஷம் பெரிய அளவில் எழுந்த நிலையில், இந்த இரண்டு கட்சிகளையும் மக்கள் மீண்டும் சட்டமன்றத்துக்கு ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் அனுப்பியிருக்கிறார்கள். இது மக்களின் ஏமாளித்தனம் அல்ல... அந்தக் கட்சிகள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை.

ஸ்டாலின் `முதலமைச்சர் வேட்பாளர்’ என அறிவித்திருந்தால் முடிவு மாறியிருக்குமா?

தி.மு.க-வின் தலைவர் கருணாநிதி என்றாலும், யதார்த்தத்தில் அதன் செயல்தலைவர் ஸ்டாலின்தான். ஒருவேளை, தி.மு.க வென்றிருந்தால், கருணாநிதி, `ஆறாம் முறை முதலமைச்சர்’ என்ற சாதனைக்காக, சில மாதங்கள் அந்தப் பதவியில் இருந்துவிட்டு, ஸ்டாலினை முதலமைச்சராக்கிவிடுவார் என்பதே பெரும்பாலான தி.மு.க-வினர் எண்ணம். ஆகவே, ஸ்டாலின் முதலமைச்சர் வேட்பாளரா... இல்லையா என்பது அவர்களுக்குப் பெரிய பிரச்னை இல்லை. கருணாநிதி இருக்கும்போதே, ஸ்டாலினை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பது, சில பொதுவான வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் லேசான மனமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். அதன் காரணமாக வாக்குகள் கணிசமாக உயர்ந்திருக்கும். ஆனால், அது தி.மு.க-வின் வெற்றித் தொகுதிகளின் எண்ணிக்கையைக் கூட்டியிருக்குமா என்பது சந்தேகமே.

ஸ்டாலினை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்திருந்தால், அந்த நொடியில் இருந்து கருணாநிதியின் ஆளுமைத்திறன் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கும். `இனி தன்னை தமிழக மக்கள் ஏற்க மாட்டர்கள் என்பதை கருணாநிதி உணர்ந்து, அவர் பின்வாங்கிவிட்டதாக விமர்சனங்கள் எழும். அது தி.மு.க-வின் இமேஜைச் சீர்குலைக்கும். அதனால் கிடைக்கும் லாபத்தை அ.தி.மு.க முழுமையாகப் பெற்றிருக்கும். அதற்கு தி.மு.க இடம்கொடுக்கவில்லை.

1.1 சதவிகிதம்தான் இரு பெரும் கூட்டணி களுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம். ஆட்சியைப் பிடித்த அ.தி.மு.க அதன் கூட்டணிக் கட்சிகளோடு சேர்ந்து 40.8 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. தி.மு.க கூட்டணி 39.7 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. ஆட்சியின் மீதான அதிருப்தி என்பது 8 முதல் 12 சதவிகித வாக்குச்சரிவை ஆளும் கட்சிக்கு ஏற்படுத்தும் என்பது தமிழ்நாட்டுத் தேர்தல் வரலாறு. ஆனால், 2011-ம் ஆண்டு தேர்தலில் பெரிய கூட்டணியோடு 38.4 சதவிகிதம் வாக்குகளைப் பெற்ற அ.தி.மு.க., இந்த முறை சிறுகட்சிகளுடன் மட்டுமே சேர்ந்து 2.4 சதவிகிதம் வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றிருக்கிறது. அதேபோல, 2011-ம் ஆண்டு தேர்தலைவிட வலுகுறைந்த கூட்டணியை அமைத்து, 9  சதவிகிதம் வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றிருக்கிறது தி.மு.க. இறுதியில், 1.1 சதவிகிதம் வாக்குகள் வித்தியாசத்தில், தி.மு.க அணியைவிட 36 இடங்கள் அதிகமாகப் பெற்றிருக்கிறது அ.தி.மு.க. இது எப்படிச் சாத்தியம் என்பதை யோசிக்கும்போது மாற்று அணிகள் கவனம்பெறுகின்றன.

வி.சி.க-வைக் குறைத்து மதிப்பிட்டதா தி.மு.க.?

தேர்தல் களத்தில் எதிர்மறை வாக்குகள் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. தமிழ்நாட்டில் பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், பாரதிய ஜனதா உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்மறை வாக்குகளை உருவாக்கக்கூடியவை. இந்த எதிர்மறை வாக்குகளின் அடிப்படைப் பின்னணி, சாதி.

விடுதலைச் சிறுத்தைகள் தி.மு.க கூட்டணியில் இருந்தால், வன்னியர்கள், கவுண்டர்கள், தேவர்கள் உள்ளிட்ட இடைநிலைச் சாதியினர் தலித்துகளுக்கு எதிர்ப்புக் காட்டுவதாக எண்ணி, தி.மு.க அணியைப் புறக்கணித்து, அதற்கு எதிரான அணியை ஆதரிப்பார்கள். அதேபோல, அ.தி.மு.க அணியில் பா.ம.க இடம்பெற்றால், தலித் மக்களின் ஆதரவு பா.ம.க-வுக்கு எதிரான கூட்டணிக்குச் செல்லும். பா.ஜ.க-வுக்கும் இது பொருந்தும். சிறுபான்மையினரின் ஆதரவு பாஜகவுக்கு எதிரான அணிக்கு நகர்ந்துவிடும்.

அந்த வகையில், விடுதலைச் சிறுத்தைகள் தங்கள் அணியில் இருப்பது தி.மு.க செல்வாக்குடன் இருக்கும் வட மாவட்டங்களில் மட்டும் அல்லாது, கணிசமான செல்வாக்குடன் இருக்கும் தெற்கு, மேற்கு மாவட்டங்களில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பது, அதன் முன்னணி மாவட்டச் செயலாளர்கள் பலரின் கணிப்பு. அவர்கள் கொடுத்த அழுத்தம்தான் வி.சி.க-வை விட்டு தி.மு.க விலகி நின்றதன் உண்மைப் பின்னணி.

ஜெ 2.0 - நம்பர் கேம் டேட்டா

6 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கிறது தே.மு.தி.க – ம.ந.கூ – த.மா.கா அணி. ஆனால் குறைந்தது 15 சதவிகித வாக்குகளைப் பெற்று, வெற்றி தோல்வியை
அ.தி.மு.க, தி.மு.க இடையே மடைமாற்றும் காரியத்தைச் செய்வதோடு, பெரிய மாற்று சக்தியாக உருவெடுக்கும் என்றே எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அதைப் பொய்யாக்கியிருக்கிறது தேர்தல் முடிவுகள். நுணுக்கமாகப் பார்த்தால், மூன்றாம் இடத்தைப் பெற பா.ம.க.,

பா.ஜ.க-வுடன் ம.ந.கூ பெரும் போராட்டத்தை நடத்தியிருக்கிறது. பா.ம.க செல்வாக்குள்ள வட மாவட்டங்களில் பெரும்பாலும் அதற்கே மூன்றாம் இடம்... ம.ந.கூ-வினருக்கோ நான்காம் இடம்தான். அதேபோல, பா.ஜ.க செல்வாக்குள்ள கோவை, குமரி பகுதிகளில் அதற்கே மூன்றாம் இடம்... ம.ந.கூ-வுக்கு நான்காம் இடம்தான்.

இந்த இருகட்சிகளுக்கும் செல்வாக்கு இல்லாத எஞ்சிய பகுதிகளிலேயே பெரும்பாலும் ம.ந.கூ மூன்றாம் இடம் பெற்றுள்ளது.

விஜயகாந்த், தி.மு.க-வுடன் கூட்டணிவைத்திருந்தால் வித்தியாசமான முடிவுகிடைத்திருக்குமா?

தி.மு.க கூட்டணிக்கு தே.மு.தி.க வந்தால் வெற்றி நிச்சயம் என்பதைத் தாண்டி, தே.மு.தி.க வந்தால் மட்டுமே வெற்றி உறுதி என்ற பிம்பத்தை ஊடகங்கள் உருவாக்கின. தேர்தல் அரசியல் களத்தில் Perception War என்ற ஒன்று உண்டு. வாக்குவங்கியைத் தாண்டி, `இந்த அணிதான் வெல்லும்’ என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் உருவாக்கும் காரியம். அதற்கு தே.மு.தி.க தேவை என்பது தி.மு.க-வின் கணிப்பு. அதற்காகவே தே.மு.தி.க-வைக் கொண்டுவர பெரும்பாடுபட்டது தி.மு.க. அப்படி நடந்திருந்தால், மேலே சொன்ன Perception War-ல் தி.மு.க அணி வென்றிருக்க  வாய்ப்புகள் அதிகம். அது தேர்தல் முடிவுகளைத் திருப்பிப்போட்டிருக்குமா என்று கேட்டால், அது தே.மு.தி.க-வின் தொகுதி எண்ணிக் கையைப் பொறுத்தது.

ஜெ 2.0 - நம்பர் கேம் டேட்டா

69 தொகுதிகளில் மூன்றாம் இடத்தைப் பெற்றிருக்கிறது பா.ம.க. தனித்துப்போட்டி, சிறுகட்சிகளுடன் கூட்டணி, பெரிய கட்சி களுடன் கூட்டணி, சமபலம் கொண்ட கட்சி களுடன் கூட்டணி என்று தேர்தல் அரசியலின் அத்தனைச் சாத்தியங்களையும் முயற்சித்துப் பார்த்த கட்சி பா.ம.க. இந்த முறை இரண்டு இலக்குகளுடன் தேர்தலைச் சந்தித்தது. ஒன்று: பா.ம.க-வின் ஆரம்பகால வாக்குவங்கி இன்றும் இருக்கிறதா, இல்லையா என்பதைத் தங்களுக்கே நிரூபித்துக்கொள்வது. இரண்டு: அ.தி.மு.க - தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு மாற்று பா.ம.க என்பதை நிலைநாட்டுவது. 2006-ம் ஆண்டில் இருந்து தே.மு.தி.க-விடம் இழந்த சொந்த செல்வாக்கை மறுதிரட்டல் செய்ய வட மாவட்டங்களில் ராமதாஸ் பாணி திண்ணைப் பிரசாரம், புதிய வாக்காளர்களைக் கவர்ந்து, வட மாவட்டத்தைத் தாண்டியும் கட்சியை விரிவுபடுத்த அன்புமணி பாணி கார்ப்பரேட் பவர்பாய்ன்ட் பிரசாரம் என்ற இரண்டு உத்திகளைக் கையாண்டது பா.ம.க. சாதி ரீதியிலான அணிதிரட்டலைச் செய்கிறது என்ற தீவிர விமர்சனங்களுக்கு மத்தியில் மதுவிலக்கு, முதலமைச்சர் வேட்பாளர், வளர்ச்சி என்பன போன்ற முழக்கங்கள் வழியே கணிசமான வாக்குகளைப் பெற்று தமது பலத்தை நிரூபித்திருக்கிறது பா.ம.க. தமிழகம் முழுக்க விரவிக்கிடக்கும் ஆறு கட்சிகளின் கூட்டணி 6 சதவிகிதம் வாக்குகளை மட்டுமே பெற்றிருக்க, தனியொரு கட்சியாக 5.3 சதவிகிதத்தைப் பெற்றிருப்பதன் மூலம் பா.ம.க  உயிரோட்டத்துடன் இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

0.6 சதவிகித வாக்குவங்கி உயர்வைச் சந்தித்திருக்கிறது பா.ஜ.க. பிரதமர் மோடி தொடங்கி மத்திய அமைச்சர்கள் பலரும் தமிழகம் வந்து பிரசாரம் செய்தனர். ஆனாலும் அந்தக் கட்சிக்கு ஓர் இடம்கூட கிடைக்கவில்லை. ஓரிரு தொகுதிகளைத் தவிர அனைத்திலும் டெபாசிட் இழந்தது. முக்கியமாக, ஜனசங்கம் காலம் தொட்டு பலமாக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 சதவிகிதத் தோல்வியைச் சந்தித்திருக்கிறது பா.ஜ.க. ஒரே ஆறுதல், 0.6 சதவிகிதம் வாக்குவங்கி உயர்வு.

4.5 லட்சம் வாக்குகளைப் பெற்று ஏழாம் இடத்தைப் பெற்றிருக்கிறது நாம் தமிழர் கட்சி. சதவிகிதத்தில் வெறும் 1.1 சதவிகிதம் ஆதரவே கிட்டியிருக்கிறது. என்றாலும், கட்டமைப்பு ரீதியாகக் கட்சியைப் பலப்படுத்த இந்தத் தேர்தலும் அது கொடுத்த அனுபவமும் நாம் தமிழர் கட்சிக்கு உதவக்கூடும். இங்கே கவனிக்கவேண்டிய விஷயம், அ.தி.மு.க - தி.மு.க-வுக்கு மாற்றை முன்வைத்த நான்கு அணியின் தலைவர்களும் தோல்வியைத் தழுவியிருப்பது.

ஜெ 2.0 - நம்பர் கேம் டேட்டா

27 லட்சம் வாக்குகளின் உதவியுடன் எட்டு சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்று சட்டமன்றத்துக்குள் நுழைந்திருக்கிறது காங்கிரஸ். 2011-ம் ஆண்டில் 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், இடைப்பட்ட காலத்தில் பிளவுபட்டதால் 41 இடங்களில் போட்டியிட வேண்டிய நிலை. ஆனால் ஒரு கூட்டணிக் கட்சியாக காங்கிரஸ் தனது பங்களிப்பைச் சரிவரசெய்யவில்லை என்பது கள யதார்த்தம். குறிப்பாக, காங்கிரஸ் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் அ.தி.மு.க-வின் ஆதிக்கம் மிக அதிகம். மூன்று தொகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளையும் 9 தொகுதிகளில்
20 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளையும், 9 தொகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளையும் அதிகமாகப் பெற்று அநாயாசமாக காங்கிரஸை வீழ்த்தியிருக்கிறது. இந்த 21 தொகுதிகள் தி.மு.க கூட்டணியின் தலையெழுத்தைத் தலைகீழாக்கிவிட்டன.

காங்கிரஸுக்கு அதிகமான தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் தி.மு.க வெற்றிவாய்ப்பை இழந்ததா? 

தே.மு.தி.க-வே தி.மு.க-வின் பிரதான இலக்கு. அதை வழிக்குக் கொண்டுவரவே காங்கிரஸைக் கூட்டணிக்குக் கொண்டுவந்தது தி.மு.க. உண்மையில், கடந்த மக்களவைத் தேர்தலில் சட்டமன்றத் தொகுதிவாரியாக தி.மு.க பெற்ற வாக்குகளையும் காங்கிரஸ் தனித்துநின்று பெற்ற வாக்குகளையும் கூட்டித்தான், குறைந்தபட்சம் 50 தொகுதிகளில் தி.மு.க அணிக்கான வெற்றிவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டது. அதுதான் காங்கிரஸ் மீதான தி.மு.க-வின் ஈர்ப்புக்கு ஒரு காரணம்.

தவிரவும், த.மா.கா-வைக் காரணம் காட்டி, மேலும் சில தொகுதிகளை தி.மு.க குறைத்திருக்கும் பட்சத்தில், ஒன்று காங்கிரஸ் தனித்தும் போயிருக்கலாம், அல்லது பலத்த கசப்புகளோடு கூட்டணியில் தொடர்ந்து, கொடும்பாவி எரித்து, குழிப்பறிப்பு அரசியலைச் செய்து, ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியையும் சீர்குலைத்திருக்கலாம்.

உண்மையில், காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் அனைத்துமே அவர்கள் செல்வாக்குடன் திளைக்கும் தொகுதிகள் அல்ல. இன்னும் சொல்லப்போனால், தி.மு.க நின்றாலே தோற்கும் என்ற நிலையில் இருக்கும் ஐந்துக்கும் மேற்பட்ட தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டன என்பதைத் தி.மு.க-வே ஏற்றுக்கொள்ளும். வேண்டுமானால், காங்கிரஸ் தனது செல்வாக்குள்ள தொகுதிகளில் இன்னும் கூடுதலாகப் பங்களிப்பு செய்திருக்கலாம். மற்றபடி, காங்கிரஸுக்கு அதிகத் தொகுதிகளை ஒதுக்கியதுதான் தோல்விக்கான பிரதான காரணம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. 

104 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க அதன் ஆகப்பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கிறது.  எப்போது முடிவெடுப்பார், யாருடன் கூட்டுச் சேர்வார் என்ற எதிர்பார்ப்புகள் எகிறியிருந்த சமயத்தில், திடீரென மக்கள் நலக் கூட்டணியுடன் கைகுலுக்கினார் விஜயகாந்த். ஆனால், தேர்தல் களம் அவருக்கு அத்தனை எளிமையாக இல்லை. இருபெரும் கட்சிகளின் கட்டமைப்பு, வாக்குவங்கி, பணபலம், பிரசார பலம் ஆகியவற்றுக்கு முன்னால் விஜயகாந்த் தலைமையிலான அணி சுண்டைக்காயாகத் தோன்றியது. விளைவு, படுதோல்வி. முதலமைச்சர் வேட்பாளர் என்ற தற்காலிக மகுடம் உளுந்தூர்பேட்டையில் உருண்டு விழுந்தது.

2006-ம் ஆண்டு 8 சதவிகிதத்தில் தொடங்கிய தே.மு.தி.க-வின் இன்றைய வாக்குவங்கி 2.4 சதவிகிதம். தே.மு.தி.க பெற்ற வாக்குகளைப்போல சரிபாதி வாக்குகள் நோட்டாவின் வசம் விழுந்திருக்கிறது.

5.6 லட்சம் வாக்குகளைப் பெற்று பல கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது நோட்டா. ஆளும் கட்சி, ஆண்ட கட்சி, இடதுசாரி, வலதுசாரி, இனவாதக் கட்சி, மதவாதக் கட்சி, சாதி கட்சி, திராவிடக் கட்சி, தமிழ்த்தேசியக் கட்சி என்று எந்தவொரு கட்சி நிறுத்தும் வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை எனச் சொல்வோருக்குத் தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கும் வாய்ப்பு, நோட்டா. 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 1.4 சதவிகிதம் வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்தன. ஆனால் 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 0.1 சதவிகிதம் வாக்குகள் குறைவாக விழுந்துள்ளன.
சற்றேறக்குறைய 8 லட்சம் வாக்குகள் குறைவு. என்றாலும், இந்த நோட்டா வாக்குகள் பல தொகுதிகளில் தி.மு.க., அ.தி.மு.க-வின் வெற்றிதோல்வியில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. நோட்டா இவர்களுக்கு ஏற்படுத்திய பாதிப்பு ஒருபக்கம் இருக்கட்டும், அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் பரஸ்பரம் எப்படிப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன?

ஜெ 2.0 - நம்பர் கேம் டேட்டா

172 தொகுதிகளில் அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் பரஸ்பரம் மோதிக்கொண்டன. சமீபத்திய தேர்தல்களில் இருபெரும் கட்சிகளும் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் எதிரெதிராகக் களம் கண்டது இல்லை. 2006-ம் ஆண்டு மற்றும் 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்கியதால், தி.மு.க குறைவான எண்ணிக்கையில் போட்டியிட்டது. ஆகவே, அ.தி.மு.க-வை எதிர்த்து நிற்கும் தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தன. ஆனால் இந்த முறை கூட்டணியில் பெரிய கட்சிகள் இல்லாததால், அ.தி.மு.க-வை அதிகத் தொகுதிகளில் எதிர்கொண்டது தி.மு.க. இறுதியாக, தி.மு.க 89 தொகுதிகளிலும் அ.தி.மு.க 83 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.

ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் அ.தி.மு.க-வின் ஆதிக்கம் மிக அதிகம். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளைக் கைப்பற்றி யிருக்கிறது அ.தி.மு.க. வீரபாண்டி ஆறுமுகத்தின் மரணம் ஏற்படுத்திய வெற்றிடம் இது. தென் மாவட்டங்களில் தி.மு.க-வுக்குப் பெரிய அடி. வழக்கமாக, தி.மு.க-வுக்கு வட மாவட்டங்களும் காவிரி டெல்டா மாவட்டங்களும் பலத்த ஆதரவைக் கொடுக்கும். ஆனால், இந்த முறை அங்கே காத்திரமான வெற்றியைப் பெற்றிருக்கிறது அ.தி.மு.க.

குறிப்பாக, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் 13 தொகுதிகளை அ.தி.மு.க கைப்பற்றியிருக்கிறது. வன்னியர்கள் அடர்த்தியாக வசிக்கும் மேற்கண்ட வட மாவட்டங்கள் 1957-ம் ஆண்டு தொடங்கி தி.மு.க-வுக்குச் செல்வாக்கான பகுதிகள். அந்த ஆதரவுத் தளத்தில் அ.தி.மு.க ஏற்படுத்தியிருக்கும் விரிசல் தி.மு.க-வுக்குப் புதிய செய்திகளைக் கொடுத்திருக்கின்றன. ஆனால், சென்னை மாவட்டம் தி.மு.க-வுக்குப் புதிய தெம்பைக் கொடுத்திருக்கிறது.

4 மாவட்டங்கள்... 2015-ம் ஆண்டு டிசம்பர் பெருவெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப் பட்டன. அ.தி.மு.க ஆட்சியின் மீதான விமர்சனங்கள் கூர்மை அடைந்தது இதன் பிறகுதான். ஒருவேளை, அ.தி.மு.க அரசு தோற்றால், அதற்கு பெருவெள்ளமும் அவற்றை அரசு எதிர்கொண்ட விதமும்தான் பிரதான காரணங்களாக இருக்கும் என்பது பலரின் கணிப்பு அல்லது விருப்பு. ஆனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் மொத்தம் உள்ள 46 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றிபெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 20. டிசம்பர் மழைக்கு இணையாக இந்தத் தேர்தல் களத்தில் அதிகம் பேசப்பட்ட ஒன்று, வாக்குக்குப் பணம்.

இணையத்தில் தி.மு.க முந்தியதாக ஒரு தோற்றம் இருந்தது? ஆனால் ஏன் அது தேர்தலில் ஒலிக்கவில்லை? விர்ச்சுவல் உலகத்துக்கும் ரியாலிட்டிக்கும் என்ன வித்தியாசம்?

இணையத்தில் மட்டும் அல்ல, கருத்துக் கணிப்புகளிலும் தி.மு.க-வே முன்னணியில் இருப்பதுபோன்ற தோற்றம் இருந்தது. உண்மையில், கருத்துக்கணிப்புகள் தெரிந்தோ, தெரியாமலோ ஒரு காரியத்தைச் செய்து முடித்திருந்தது. அது, அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு மாற்று என்ற ஒன்று தமிழகத்தில் இல்லவே இல்லை என்ற தோற்றத்தை உருவாக்கியது.

அது, அ.தி.மு.க. - தி.மு.க என்ற இருதுருவ அரசியலை உறுதிசெய்தன.

உண்மையில், 10 ஆண்டுகளுக்கு முன்பே தி.மு.க-வினர் இணையத்துக்குள் நுழைந்து விட்டனர். வெற்று அரட்டை என்பதைத் தாண்டி, வாதம், பிரதிவாதம், எதிர்வாதம் என்று பழுத்த அனுபவஸ்தர்கள் ஆகிவிட்டனர். ஆனால், ஒப்பீட்டளவில் அ.தி.மு.க-வினரின் இணைய வருகை வெகு சமீபத்தில்தான் நடந்தது. அவர்களின் எண்ணிகை மெள்ள மெள்ள உயர்ந்தாலும், அது தி.மு.க-வினருக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு வரவில்லை. அதுதான் இணையத்தில் தி.மு.க ஆதிக்கம் செலுத்தியதற்கு முக்கியமான காரணம். ஆனால் கள யதார்த்தம் என்பது முற்றிலும் மாறானது. அது தேர்தல் முடிவுகளில் எதிரொலித்திருக்கிறது.

இளைஞர்கள் வாக்கு என்னாச்சு?

ஒரு கோடிக்கும் அதிகமான புதிய வாக்காளர்கள் உருவாகியிருக்கிறார்கள். அவர்கள்தான் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கப்போகிறார்கள். தவிரவும், அவர்களில் பெரும்பாலானோர்
அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு மாற்றைத் தேடும் மனநிலையில் இருக்கிறார்கள் என்கிற பேச்சைக் கேட்க முடிந்தது. அதைத்தான் அன்புமணியும் சீமானும் சொன்னார்கள்.

உண்மையில், ஒவ்வொரு தேர்தலின்போதும் புதிய வாக்காளர்கள் கணிசமான எண்ணிக்கையில் உருவாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இது காலங்காலமாக நடந்துவரும் இயல்பான விஷயம். இப்போது எண்ணிக்கை சற்று கூடுதல். அவ்வளவே. அதேபோல, இளைஞர்கள் அத்தனை பேருமே வானத்தில் இருந்து தனியாகக் குதித்து வாக்குச்சாவடிக்கு வந்துவிடவில்லை. இங்கே இருக்கும் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் தொடங்கி நேற்று உருவான நாம் தமிழர் வரை அனைத்துக் கட்சிகளில் இருக்கும் தொண்டர்களின் வீடுகளில் இருந்துதான் உருவாகிறார்கள். அவர்களுக்கு அந்தந்தக் கட்சிகளின் தாக்கம் இருக்கவே செய்யும். அதையும் தாண்டி புதிய மாற்றைத் தேடுவதும் சாத்தியமே. ஆனால் அது வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறுவது மிகவும் சிரமம்.

ஜெ 2.0 - நம்பர் கேம் டேட்டா

570 கோடி ரூபாய் பணத்தை ஏற்றிக்கொண்டு சென்ற கன்டெய்னர் லாரி பிடிபட்ட செய்தி 2016-ம் ஆண்டு தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்னமும்கூட அந்தப் பணம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த மர்மம் நீடிக்கிறது. உச்சபட்சமாக, பணப்பட்டுவாடா காரணமாக அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தல்கள், ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வேட்பாளர் மரணம், பலத்த வன்முறை போன்ற காரணங்களுக்காக தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டது உண்டு. ஆனால், வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா நடந்துள்ளது என்பதற்காக தேர்தல் ஒத்திவைக்கப் பட்டது தமிழகத் தேர்தல் களத்தின் மற்றும் ஒரு கருப்புமுகம். வாக்குக்குப் பணம் கொடுப்பதை முற்றிலுமாகத் தடுக்கவேண்டும் என்றால், அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவை, தேர்தல் ஆணையமே ஏற்கவேண்டும் என்ற யோசனையை முன்வைத்திருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்.

ஜெ 2.0 - நம்பர் கேம் டேட்டா

இந்த யோசனை 70-களில் இருந்தே விவாதத்தில் இருக்கிறது. ஜெகன்னாத ராவ் தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக்குழு, தார்குண்டே கமிஷன், தினேஷ் கோஸ்வாமி கமிஷன், இந்திரஜித் குப்தா கமிட்டி என்று பல்வேறு குழுக்களும் ஆணையங்களும் இதுகுறித்து விவாதித்து, பரிந்துரைகள் பலவற்றைச் செய்துள்ளன. ஆனால் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. கொள்கை, சித்தாந்தம், செயல்திட்டம், விழுமியம் ஆகியவற்றின் அடிப்படையில் நடைபெற வேண்டிய Content Politics இன்று Currency Politics ஆக மாறி, Container Politics ஆக உருமாறியிருப்பது அபாய அறிகுறி பணநாயகத்தின் பெரும்பாய்ச்சல் பேராபத்து!