Published:Updated:

ஜெ. கேபினெட் - அமைச்சர்களின் அப்டேட்

ஜெ. கேபினெட் - அமைச்சர்களின் அப்டேட்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெ. கேபினெட் - அமைச்சர்களின் அப்டேட்

விகடன் டீம்

ஜெ. கேபினெட் - அமைச்சர்களின் அப்டேட்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் முகத்தில் அத்தனை மலர்ச்சி. தேர்தல் பிரசாரக் களைப்புகள் எல்லாம் பறந்துபோய், ஃப்ரெஷ்ஷாக அடுத்த சுற்றுக்கு ரெடியாகிவிட்டார். முதலமைச்சராகப் பதவியேற்ற அன்றே பள்ளிக் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி, விவசாயக் கடன் ரத்து, டாஸ்மாக் நேரம் குறைப்பு... என சிக்ஸர்களை விளாசியிருக்கிறார். ஜெயலலிதாவோடு சேர்ந்து பதவி ஏற்றிருக்கும் 29 அமைச்சர்களில் 16 பேர் சீனியர்ஸ். 13 பேர் புதியவர்கள். ஜெ-வின் தொடரும் இரண்டாவது இன்னிங்ஸில் புதிதாகக் களமிறங்கியிருக்கும் அமைச்சர்களைப் பற்றிய டீஸர் இங்கே...

திண்டுக்கல் சி.சீனிவாசன்

வனத் துறை

ஜெ. கேபினெட் - அமைச்சர்களின் அப்டேட்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

1973-ம் ஆண்டில் அ.தி.மு.க ஆரம்பிக்கப்பட்டு, முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்ட தொகுதி திண்டுக்கல். போட்டியிட்டவர் மாயத் தேவர். அவருக்கு அசிஸ்டென்டாக கட்சிக்குள் வந்தவர்தான் திண்டுக்கல் சி.சீனிவாசன். கருத்துவேறுபாடு காரணமாக மாயத் தேவர் அ.தி.மு.க-வில் இருந்து விலகிச் சென்றபோது... திண்டுக்கல் சீனிவாசன் மட்டும் அ.தி.மு.க-வைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். அந்த விசுவாசத்துக்கு அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள் மிக மிக அதிகம். 1989-ம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பைப் பெற்றவர். அதன் பிறகு 1991, 1998, 1999... என அடுத்தடுத்து, திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். நத்தம் விசுவநாதனைக் கட்சிக்குள் அழைத்துவந்தவரே இவர்தான். ஒரு கட்டத்தில் நத்தம் விசுவநாதன் இவரையே ஓவர் டேக்செய்து கட்சியில் முன்னேறி, யாரும் நினைத்துப்பார்க்கமுடியாத வளர்ச்சியை அடைந்தார். ஆனாலும், தனக்கான நேரம் வரும் என அமைதியாகக் காத்திருந்தவருக்குக் கிடைத்திருக்கும் பரிசுதான் வனத் துறை அமைச்சர் பதவி!

டாக்டர் வி.சரோஜா

சமூக நலத் துறை

ஜெ. கேபினெட் - அமைச்சர்களின் அப்டேட்

சேலம் அருகே சங்ககிரி பக்கம் ஊஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வி.சரோஜா. மருத்துவம் படித்தவர். முதன்முதலில் 1991-ம் ஆண்டு சங்ககிரி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. தொடர்ந்து 2004, 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் ராசிபுரம் தொகுதியில் வென்று, இரு முறை எம்.பி-யாக இருந்தவர். ஜெயலலிதாவுடன் நெருங்கிய தொடர்பு உடையவர். யாருடைய சிபாரிசும் இல்லாமல் ஜெயலலிதாவே நேரடியாக இவருக்கு ஸீட் கொடுக்கும் அளவுக்கு, சரோஜா செல்வாக்கானவர்!

கே.சி.கருப்பண்ணன்

சுற்றுச்சூழல் துறை

ஜெ. கேபினெட் - அமைச்சர்களின் அப்டேட்

பழநிக்குப் பக்கத்தில் காட்டுவலசு கிராமத்தைச் சேர்ந்தவர் கே.சி.கருப்பண்ணன். விவசாயக் குடும்பம்.

1972-ம் ஆண்டு முதலே கட்சியில் இருந்தாலும், 2001-ம் ஆண்டில் பவானி தொகுதியில் போட்டியிட ஸீட் கிடைத்தது. அதில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார். 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைய 2011-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட ஸீட் வழங்கப்படவில்லை. இருந்தாலும், 2011-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, பவானி நகர்மன்றத் தலைவர் ஆனார். முருக பக்தரான இவர், நேரம் கிடைக்கும்போது எல்லாம் பழநிக்குக் கிளம்பிவிடுவார். ஒரு கல்வியியல் கல்லூரிக்கும் ஒரு பொறியியல் கல்லூரிக்கும் கருப்பண்ணன் அதிபர்!


ஓ.எஸ்.மணியன்

கைத்தறி மற்றும் ஜவுளித் துறை

ஜெ. கேபினெட் - அமைச்சர்களின் அப்டேட்

அ.தி.மு.க தொடங்கப்பட்ட நாள் முதல் கட்சியில் இருக்கும் மிக  மூத்தத் தொண்டர். எம்.ஜி.ஆரிடம் இவர்காட்டிய விசுவாசத்தால் கட்சியில் பல பதவிகள் கிடைத்தன. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அதே விசுவாசத்தை ஜெயலலிதாவிடம் காட்டினார். அதற்குப் பரிசாக 1995-ம் ஆண்டில் ராஜ்ய சபா எம்.பி பதவி கிடைத்தது. அதற்குப் பிறகு 2006-ம் ஆண்டு வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் தோற்றவர், 2009-ம் ஆண்டு மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் வென்று எம்.பி ஆனார். மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவருக்கு, 2016-ம் ஆண்டு வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்க, அதில் வென்று முதல்முறையாக அமைச்சராகி இருக்கிறார்!

உடுமலை ராதாகிருஷ்ணன்

வீட்டு வசதித் துறை

ஜெ. கேபினெட் - அமைச்சர்களின் அப்டேட்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், உடுமலை ராதாகிருஷ்ணனை, உடுமலை அ.தி.மு.க-வினரில் பலருக்கும் தெரியாது. சாதாரண கேபிள் ஆபரேட்டராக இருந்தவரை, அந்தத் தகுதியே கட்சிக்குள் அவரை முக்கியமாக்கிவிட்டது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஜெ., அரசு கேபிளைத் தொடங்கியபோது அதை நிர்வகிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராதாகிருஷ்ணன். அ.தி.மு.க-வின் சீனியர்களில் ஒருவர் பொள்ளாச்சி ஜெயராமன், அவரது சிட்டிங் தொகுதி உடுமலை. அவரது தொகுதியையே மாற்றி, உடுமலையில் போட்டியிடும் அளவுக்குச் செல்வாக்கு பெற்று, இப்போது வீட்டு வசதித் துறை அமைச்சராகவும் முன்னேறியிருக்கிறார் உடுமலை ராதாகிருஷ்ணன்!

ஆர்.துரைக்கண்ணு

வேளாண் துறை

ஜெ. கேபினெட் - அமைச்சர்களின் அப்டேட்

தஞ்சாவூர் சரபோஜி கல்லூரியில் பி.ஏ படிக்கும்போதே எம்.ஜி.ஆர் மீதான ஈர்ப்பில் அரசியலுக்கு வந்தவர். 2006-ம் ஆண்டில் இருந்து பாபநாசம் தொகுதியில் தொடர்ந்து மூன்றுமுறை வென்றவர். மிகவும் அமைதியான, அதிர்ந்துபேசாத, இதுவரை கட்சிக்குள் பெரிய செல்வாக்கு இல்லாத வெறும் எம்.எல்.ஏ-வாக மட்டுமே இருந்த துரைக்கண்ணுவை, அமைச்சர் நாற்காலியில் உட்காரவைத்திருக்கிறார் ஜெயலலிதா.  இது துரைக்கண்ணுவே எதிர்பாராத ட்விஸ்ட்!


பி.பெஞ்சமின்

பள்ளிக்கல்வித் துறை

ஜெ. கேபினெட் - அமைச்சர்களின் அப்டேட்

30 ஆண்டுகளாக கட்சியில் இருந்தாலும் இவருடைய வளர்ச்சி என்பது ஸ்லோ அண்டு ஸ்டெடிதான். 2011-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் வென்ற, சென்னை மாநகராட்சியின் துணை மேயர்.  கடந்த ஆட்சியின்போது சென்னை வானகரத்தில் இவர் நடத்திக்காட்டிய பிரமாண்ட அ.தி.மு.க செயற்குழு கூட்டம், மேலிடத்தின் கருணைப் பார்வையைப் பெற்றுத்தர... இப்போது அமைச்சராகிவிட்டார். கட்சி சார்பில் எந்தப் போராட்டம் நடந்தாலும் முதல் ஆளாக முஷ்டி உயர்த்துவார். கால்பந்தாட்ட ப்ரியர். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் பிறந்த நாட்களில் உள்ளூர் இளைஞர்களைத் திரட்டி பிரமாண்ட கால் பந்தாட்டப் போட்டிக்கு ஏற்பாடுசெய்வது இவரது ஸ்டைல்!

கடம்பூர் ராஜு

செய்தி மற்றும் விளம்பரத் துறை

ஜெ. கேபினெட் - அமைச்சர்களின் அப்டேட்

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர், பரம்புகோட்டையைச் சேர்ந்தவர் ராஜு.  2011-ம் ஆண்டு கோவில்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. அப்போது `கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும்’ என அமைச்சரிடம் கோரிக்கைவைத்தார். அமைச்சரோ, ‘ஏற்கெனவே பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டை இருக்கிறது’ என மறுக்க, அது முதல்வர் ஜெயலலிதா கவனத்துக்கு வந்தது.

‘வீரனுக்கு வீரம் விதைத்த இடம்தான் பெருமை அம்மா. கட்டபொம்மனுக்கு கயத்தாறில் மண்டபம் அமைப்பதே சரி’ எனத் துணிச்சலாகப் பேசினார் ராஜு. உடனே `ஏற்பாடு செய்யுங்க' என முதல்வரும் உத்தரவுபோட, கடந்த பிப்ரவரி மாதம் மணிமண்டபத் திறப்பு விழாவும் நடந்து முடிந்தது. இப்போது மீண்டும் அதே கோவில்பட்டியில் வென்று முதல்முறையாக அமைச்சராகியிருக்கிறார் கடம்பூர் ராஜு!

வெல்லமண்டி என்.நடராஜன்

சுற்றுலாத் துறை

ஜெ. கேபினெட் - அமைச்சர்களின் அப்டேட்

திருச்சி காந்தி மார்க்கெட் வெல்லமண்டி ஒன்றில் வேலை பார்த்தவர் என்.நடராஜன். எளிய பின்னணியில் வளர்ந்தவர். எல்லோரிடமும் இனிமையாகப் பழகுபவர். கடந்த ஆட்சியில் சட்டமன்றக் கொறடா மனோகரனின் சட்டமன்ற அலுவலகப் பொறுப்பாளர் இந்த நடராஜன்தான். இந்தத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் தமிழரசி மீது போலி டாக்டர் சர்ச்சை கிளம்ப, வெல்லமண்டி நடராஜன் கடைசி நேரத்தில் வேட்பாளர் ஆனார்.

20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். நடராஜனின் அரசியல் குரு மனோகரன், தி.மு.க வேட்பாளர் கே.என்.நேருவிடம் தோற்றுப்போக, வெல்லமண்டி என்.நடராஜன் அமைச்சராகிவிட்டார்!

எஸ்.வளர்மதி

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை

ஜெ. கேபினெட் - அமைச்சர்களின் அப்டேட்

எம்.ஏ., எம்ஃபில்., பி.எட்., பி.எல்... என ஏகப்பட்ட டிகிரிகளை ஏராளமாக வைத்திருப்பவர் அமைச்சர் வளர்மதி.  திருவரங்கம் இடைத் தேர்தலில் முதன்முதலாகக் களமிறங்கி எம்.எல்.ஏ ஆனார். யாரையும் எதிர்த்து நிற்கிற துணிச்சலும், வாதம்புரிவதில் வல்லமையும், தேர்ந்த வாசிப்பும்... இவரது மிகப் பெரிய பலம். ஜெயலலிதா போட்டியிட்ட திருவரங்கத்தில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்தபோது, அதைக் கச்சிதமாகக் கைப்பற்றி தன் தலைவிக்கு வெற்றியைப் பரிசளித்தார். அதற்கு பரிசாக இப்போது முதல்முறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டிருக்கிறது!


வி.எம்.ராஜலட்சுமி

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்

ஜெ. கேபினெட் - அமைச்சர்களின் அப்டேட்

எம்.எஸ்சி., பி.எட் பட்டதாரியான வி.எம்.ராஜலட்சுமிக்கு ஆசிரியராகப் பணிபுரிய வேண்டும் என்பதே கனவு. ஆனால், காலம் இவரை அரசியலுக்கு இழுத்துவந்தது. இவரது கணவர் முருகனின் தந்தை வேலுச்சாமி அ.தி.மு.க-வின் நீண்டகால விசுவாசி. அவரது முயற்சியால்தான் நகர் மன்றத் தலைவர் ஆனார் வி.எம்.ராஜலட்சுமி. மக்களுடன் இவர் காட்டிய நெருக்கமும் பாசமும் இவரைக் கட்சிக்குள் முன்னேற்றியது. முதன்முறையாக 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள 30 வயதேயான ராஜலட்சுமி, தமிழக அமைச்சரவையின் இளம் அமைச்சர்!

டாக்டர் எம்.மணிகண்டன்

தகவல் தொழில்நுட்பத் துறை

ஜெ. கேபினெட் - அமைச்சர்களின் அப்டேட்

ராமநாதபுரம் தொகுதியில் பத்தாண்டுகளுக்குப் பிறகு அ.தி.மு.க-வுக்கு வெற்றிவாய்ப்பைப் பெற்றுத்தந்திருக்கிறார் மருத்துவர்  எம்.மணிகண்டன். இவரது அப்பா முருகேசன் அ.தி.மு.க-வில் பல பொறுப்புகள் வகித்தவர் என்பதால், இளம் வயதிலேயே கட்சிக்குள் வந்துவிட்டார். இவருடைய தந்தை 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். ஆனால், தந்தையால் முடியாததை இப்போது மகன் சாதித்திருக்கிறார். சசிகலாவின் உறவினர் டாக்டர் வெங்கடேஷுக்கு மணிகண்டன் மிகவும் நெருக்கமானவர். கட்சிக்காரர்கள் உடல்நலம் குன்றும்போது, அருகில் இருந்து மருத்துவம் பார்ப்பது மணிகண்டன் ஸ்டைல் ஆஃப் பாலிட்டிக்ஸ்!

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

போக்குவரத்துத் துறை

ஜெ. கேபினெட் - அமைச்சர்களின் அப்டேட்

கரூர் முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கரூரை அடுத்துள்ள ஆண்டான்கோயில்புதூர் சொந்த ஊர். ரெயின்போ என்கிற பெயரில் தொழிற்சாலைகள் வைத்திருந்ததால், ரெயின்போ பாஸ்கர் ஆனார். நியூமராலஜி நம்பிக்கையினாலும் ஜெயலலிதா மீதான அன்பினாலும் தன் பெயரை மீண்டும் விஜய பாஸ்கர் என மாற்றிக்கொண்டார். அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சரவையில் உச்சத்தில் இருந்த செந்தில் பாலாஜி திடீரென சறுக்க, விஜயபாஸ்கர் கரூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தலில்கூட 441 வாக்குகள் வித்தியாசத்தில் மயிரிழையில்தான் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார். சென்ற ஆட்சியில் செந்தில் பாலாஜியிடம் இருந்த போக்குவரத்துத் துறை இப்போது விஜயபாஸ்கர் கையில்!