Published:Updated:

"இந்த பாச்சா எல்லாம் இங்கு எடுபடாது" - கொந்தளிக்கும் ஸ்டாலின்!

"இந்த பாச்சா எல்லாம் இங்கு எடுபடாது" - கொந்தளிக்கும் ஸ்டாலின்!
"இந்த பாச்சா எல்லாம் இங்கு எடுபடாது" - கொந்தளிக்கும் ஸ்டாலின்!

"இந்த பாச்சா எல்லாம் இங்கு எடுபடாது" - கொந்தளிக்கும் ஸ்டாலின்!

ராமஜென்ம பூமியில் ராமர் கோயில், ராமராஜ்ஜியத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ரத யாத்திரை தொடங்கப்பட்டது. 

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த யாத்திரையைத் தொடங்கிவைத்தார். மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாகத் தமிழகம் வரும் ரத யாத்திரை, நாளை (20.3.2018) ராஜபாளையம் வருகிறது. அங்கிருந்து ஸ்ரீவில்லிப்புத்துார், கல்லுப்பட்டி, திருமங்கலம் வழியாக மதுரை சென்று, அதே நாளில் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. இறுதியாக, ராமேஸ்வரம் சென்று ரதயாத்திரை முடிவடைகிறது. இந்த ரதயாத்திரைமூலம் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அனுமதி வழங்கக் கூடாது என இன்று எம்.எல்.ஏ-க்கள் அபுபக்கர், கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுக்கவே, அவர்கள் வெளிநடப்புசெய்தனர். 

 இந்த யாத்திரைக்கு, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், " 'ராம் ராஜ்ய யாத்திரை' என்ற பெயரில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டுகிறோம் என்ற போர்வையில், தமிழ்நாட்டிற்குள் யாத்திரை நடத்துவதற்கும், அந்த யாத்திரை நடத்துவதற்கு அனுமதித்துள்ள அ.தி.மு.க அரசுக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் நிலவிவரும் மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் விஸ்வ ஹிந்து பரிஷத் முயற்சிப்பது, பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் திட்டமிட்ட நடவடிக்கையாகும். உச்ச நீதிமன்றத்தில் ராமர் கோயில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, இப்படி நாடு முழுவதும் ராமர் கோயில் கட்ட ஆதரவு திரட்டுவதற்காக யாத்திரை நடத்துவது, உச்சநீதிமன்ற அவமதிப்பாகும். 

சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர், போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் “மத பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று ஒப்புக்கு அறிவுரை வழங்கிய முதல்வர் பழனிசாமியோ, இந்த ரத யாத்திரையை தமிழ்நாட்டிற்குள் நாளைய தினம் நுழையவிட்டு, தன் முதலமைச்சர் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதிலேயே ஆர்வமாக இருக்கிறார். மத பயங்கரவாதத்தைக் கிளப்பிவிட்டு ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று பா.ஜ.க-வும் சரி, அதன் துணை அமைப்புகளும் தொடர்ந்து ஈடுபட்டுவருவது மிகுந்த கவலையளிக்கிறது. இந்த பாச்சா எல்லாம் தமிழ் மண்ணில் எடுபடாது. எனவே, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின்  யாத்திரையை தமிழ்நாட்டிற்குள் நுழையவிடாமல் உடனடியாக அ.தி.மு.க அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், மீறி நுழைந்தால், தமிழகத்தின் எல்லையிலேயே அவர்களைக் கைதுசெய்து, உத்தரப்பிரதேசத்திற்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும்  வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்த கட்டுரைக்கு