Published:Updated:

கழுகார் பதில்கள்

கேள்வி-பதில்

கழுகார் பதில்கள்

கேள்வி-பதில்

Published:Updated:

துரைப்பாண்டியன், ராஜபாளையம்

அழுவதா... சிரிப்பதா தெரியவில்லை என்கிறார்களே, அதற்கு என்ன அர்த்தம்?

இந்தப் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள போட்டோவைப் பாருங்கள். அதைப் பார்த்ததும் அழுவதா... சிரிப்பதா என எனக்குத் தெரியவில்லை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

சி.பி.ஐ. நடத்திய அதிகாரபூர்வ விழாவில் சிறப்பு விருந்தினராக நம்முடைய பிரதமரும் உள்துறை அமைச்சரும் கலந்துகொண்டனர். இருவரையும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி முதல் அத்தனை எதிர்க் கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளன. இந்த நேரத்தில் சி.பி.ஐ-யின் விழாவில் அதன் இயக்குநர் ஏ.பி.சிங் சிரித்த முகத்தோடு பரிசு கொடுக்க, அதை பிரதமர் மகிழ்வோடு பெற்றுக் கொள்கிறார். ப.சிதம்பரமோ கைதட்டி வரவேற்கிறார்.

இதற்குப் பிறகும் 'சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என்பதை நாம் நம்பத்தான் வேண்டி இருக்கிறது!

குமார. நரசிம்மன், கிருஷ்ணகிரி

##~##

'உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெறுவது வழக்கமானதுதான்’ என்கிறாரே கருணாநிதி?

அப்படியானால், தி.மு.க-வினரை எதற்குத் தேர்தலில் நிறுத்தினாராம்? போட்டியிடாமல் இருந்திருந்தால், கட்சிக்காரர்களுக்கு காசாவது மிச்சமாகி இருக்குமே!

கருணாநிதி கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்க வேண்டும். காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது தி.மு.க-தான். வென்ற கவுன்சிலர்கள் அத்தனை பேரையும் ரிப்பன் கட்டடத்துக்கு அழைத்துச் சென்று அதன் வாசலில் இருக்கும் வெள்ளுடை வேந்தர் சர்.பி.டி.தியாகராயர் சிலை முன்னால் நிறுத்தி சபதம் எடுக்கவைத்து அந்த மாளிகைக்குள் அழைத்துச் சென்றவர் நாவலர் நெடுஞ்செழியன். அவருக்கு அருகில் நின்றவர் கருணாநிதி. 'காங்கிரஸ் ஆதிக்கம் வீழ்ந்தது’ என்று அப்போதே கர்ஜித்தவர் கருணாநிதி.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மை நகராட்சிகளைக் கைப்பற்றியவர் கருணாநிதி. இவை கருணாநிதிக்கு மறந்திருக்காது. ஆனால், அவருக்குள் மறைந்திருக்கிறது!

சுப்புலட்சுமி, சாத்தூர்

உள்ளாட்சித் தேர்தல் வெற்றியைக்கூடக் கொண்டாட முடியாத அளவுக்கு பெங்களூரூ விசாரணையில் மாட்டிக்கொண்டாரே ஜெயலலிதா?

 கண்ணதாசனின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன. 'நதியினில் வெள்ளம்... கரையினில் நெருப்பு... இரண்டுக்கும் இடையினில் இறைவனின் சிரிப்பு!’

ஆர்.ராதா மைந்தன், பூதலூர்

'கூடங்குளம் பிரச்னையில் கிறிஸ்தவ பிஷப்புகள் அதிகம் ஆர்வம் காட்டுவது ஏன்?’ என்று சுப்பிரமணிய சுவாமி கேள்வி எழுப்பி உள்ளாரே?

எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கும் சுப்பிரமணிய சுவாமி, இந்தப் போராட்டத்தில் மட்டும் ஆர்வம் காட்டாதது ஏன்? அந்த ஊர் மக்கள் ஒரு பிரச்னைக்காகப் போராடும்போது, அதில் அந்த ஊர் கிறிஸ்தவ பிஷப்புகள் கைகோப்பதில் என்ன குறையைக் கண்டார் சுவாமி?

கழுகார் பதில்கள்

எஸ்.பவதாரிணி, ஆலத்தம்பாடி

ஒரு வாதத்துக்காகக் கேட்கிறேன்... சிறைத் தண்டனை அனுபவித்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் எல்லாம் தமிழகத்தின் முதல்வராகும்போது கனிமொழிக்கு அந்த வாய்ப்பு இருக்கிறதா?

முதல்வர் ஆவதற்கு முன்பே திருச்சி, பாளை சிறைகளைப் பார்த்தவர் கருணாநிதி. ஆனால் ஜெயலலிதா, முதல்வர் ஆன பிறகுதான் சிறைக்கே சென்றார். எனவே, இந்த ஒப்பீடு தவறானது!

சிறை அனுபவம்தான் முதல்வர் பதவிக்கு அளவுகோல் என்றால் தமிழகத்தில் லட்சக்கணக்கான 'முதலமைச்சர் வேட்பாளர்கள்’ இருக்கிறார்கள்!

பி.சூடாமணி, சென்னை.93

பெரும்பாலான முக்கியஸ்தர்களுக்கு சிறைக்குச் சென்றதும் நெஞ்சு வலி, உடல் கோளாறு வருவது எதனால்?

தன்னோடு இதுவரை இருந்தவர்கள் வெளியில் இருந்துகொண்டு தனக்கு எதிராக என்னென்ன கழுத்தறுப்புக் காரியங்களைப் பார்க்கிறார்களோ... என்பதை நினைக்கும்போது வந்துவிடுகிறது நெஞ்சு வலி. அதை நடிப்பு என்று தயவுசெய்து நினைக்க வேண்டாம்!

கோதை ஜெயராமன், மீஞ்சூர்

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய கருணாநிதி, 'கோழைகள் எல்லாம் ஓடுங்கள். வீரர்கள் எல்லாம் என் பின்னால் வாருங்கள்’ என்கிறாரே... யாரை?

ஒருவேளை தேர்தல் பிரசாரம் செய்யாத அழகிரியைச் சொல்கிறாரா?

நித்திலா செல்வராஜ், வில்லிவாக்கம்

தே.மு.தி.க-வும் காங்கிரஸும் இனிவரும் காலங்களில் கூட்டணியாக இணைந்து செயல்படலாம் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சொல்வது சாத்தியம் ஆகலாமா?

 இவர் தே.மு.தி.க. தலைவரும் அல்ல. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவரும் அல்ல. இளங்கோவனிடம் இப்போது இருப்பது, 'கருத்து கந்தசாமி’ என்ற பொறுப்பு மட்டும்தான். எனவே, இது ஒரு கருத்து. அதற்கு மேல் இல்லை சுரத்து!

மணி.சுதந்திரகுமார், சென்னை.112

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகின்றன?

கருணாநிதி மீதான கோபம், மக்களுக்குக் குறையவில்லை. ஜெயலலிதா மீதான நம்பிக்கையும் குறையவில்லை என்பதையே காட்டுகிறது.

கழுகார் பதில்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism