Published:Updated:

``ரத யாத்திரை விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை ஜனநாயகப் படுகொலை" ! அரசியல் தலைவர்கள் ஆவேசம்

``ரத யாத்திரை விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை ஜனநாயகப் படுகொலை" ! அரசியல் தலைவர்கள் ஆவேசம்
``ரத யாத்திரை விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை ஜனநாயகப் படுகொலை" ! அரசியல் தலைவர்கள் ஆவேசம்

பெரியார் சிலை உடைப்பு... ரத யாத்திரையை எதிர்த்துப் போராடிய தலைவர்கள் கைது... சட்டப்பேரவையில் அமளி என ரத யாத்திரையால் தமிழக அரசியல் களம் அனல் வீசிக்கொண்டிருக்கிறது. சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றபோதிலும், அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நடத்திய இந்த ரதயாத்திரை. 

ராம ராஜ்ஜிய ரதயாத்திரை என்ற பெயரில், அயோத்தியின் கரசேவக் புரம் பகுதியில் கடந்த 14-ம் தேதி தொடங்கப்பட்டது இந்த யாத்திரை. ராமர் கோயிலைக் கட்டுவது, ராம ராஜ்ஜியத்தை நிறுவுவது, ராமாயணத்தை பாடமாக வைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ரதயாத்திரையை நடத்துகிறது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இந்த ரதயாத்திரை கடந்து வருகிறது. அதன்படி, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து தமிழகத்திற்குள் இந்த யாத்திரை வந்துள்ளது. இந்தநிலையில் ரதயாத்திரை, தமிழகத்திற்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை இரவோடு இரவாக கைது செய்தது தமிழகக் காவல்துறை.

தமிழக அரசியல் களத்தில் அனல் வீசும் யாத்திரை குறித்து, அதனை எதிர்க்கக் கூடியவர்கள் என்ன சொல்கிறார்கள் சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் சிலரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பேசுகையில், "விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நடத்தி வரும் இந்த ரதயாத்திரை சட்ட விரோதமானது. ராமர் கோயில் கட்டுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டும் மாதிரி வடிவமைப்பை வெளியிட்டுள்ளனர். அடுத்த 11 மாதங்களில் கோயிலைக் கட்டப்போவதாக அறிவித்துள்ளனர். ராமர் கோயில் கட்டுவதை எதிர்த்துத் தொடர்ப்பட்ட வழக்கு அடுத்தகட்டமாக, இந்திய அரசியல் சாசனப் பெஞ்சுக்கு மாற்றப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு, அந்த வழக்கு மாற்றப்பட்டால் வழக்கின் தீர்ப்பு வருவதற்கு காலதாமதமாகும். இந்தச் சூழலில் இதுபோன்ற ரத யாத்திரையைத் தொடங்கியுள்ளனர். 

இதனை எதிர்த்தும், ரதயாத்திரைக்கு அனுமதி அளிக்கக் கூடாது எனவும், தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநரைச் சந்தித்து ஏற்கெனவே மனு கொடுத்துள்ளோம். ஆனால், அதையல்லாம் மீறி இந்த ரத யாத்திரையை அனுமதித்துள்ளனர். இதனைக் கண்டித்து, ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்த அனுமதி கோரியிருந்தோம். இந்த நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் ரதயாத்திரைக்கு அனுமதி அளித்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள அனுமதி உத்தரவில் சட்ட ரீதியாக அனுமதித்தாகத் தெரிவித்துள்ளார். யார் இந்த ரத யாத்திரைக்கு அனுமதி கொடுத்தது; தமிழக அரசா அல்லது மத்திய அரசா என்ற கேள்வி எழுகிறது. ஊரடங்கு உத்தரவு என்பது அனைவருக்கும் பொதுவான விதிமுறை. இந்த நிலையில் ரத யாத்திரையை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களைக் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இங்கு சட்டமும், ஜனநாயகமும் எவ்வாறு வளைக்கப்பட்டு, எந்த அளவுக்கு நேர்மையாகச் செயல்படுகிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. 

இதில் வேடிக்கை என்னவென்றால், சட்டப்பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் ரதயாத்திரை குறித்து விளக்கமளித்துள்ளார். அதில்

'இந்தியா முழுவதும் ரதயாத்திரைக்கு அனுமதி கொடுத்துள்ளனர். இந்தியா மதச் சார்பற்ற நாடு என்பதால் இங்கு ரதயாத்திரைக்கு அனுமதி மறுக்க முடியாது' என்று தெரிவித்துள்ளார். அ.தி.மு.க-வின் முக்கியத் தலைவர்களான ஒ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் பெரியாரைப் பற்றி பெருமையாகப் பேசியது எல்லாம் வெறும் கண்துடைப்பு நாடகம் என்பது தமிழக அரசின்  நடவடிக்கை மூலம் தெளிவாகிறது" என்றார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கூறுகையில், "ஜனநாயகத்தில் வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளுக்கும் நேர் எதிராக, பாசிச வெறியோடு, மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் இந்த ரதயாத்திரையைத் தொடங்கியுள்ளனர். மதச்சார்பற்ற நாட்டில் இந்த ரத யாத்திரைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு மனு கொடுத்திருந்தோம். எங்களுடைய மனு மீது தமிழக அரசு உரிய  நடவடிக்கை எடுத்திருந்தால், தமிழகம் தற்போது பதற்றமான சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்காது. எனவே, தமிழக அரசு என்பது மத்திய அரசின் கைப்பாவையாக இல்லை. பி.ஜே.பி-யின் நேரடியான அரசாகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன் எதிரொலியாகவே ரத யாத்திரையைத் தடுக்காமல், அதனை எதிர்த்துப் போராடியவர்களை மாநில அரசு கைது செய்துள்ளது. இப்படி மதவாதத்திற்குத் துணைபோகும் தமிழக அரசின் இந்த நடவடிக்கை ஜனநாயகப் படுகொலை என தமிழக அரசுக்கு என் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்' என்றார்.