Published:Updated:

மாணவப் பருவம் - போராடும் காலம் - அ.முத்துக்கிருஷ்ணன்

மாணவப் பருவம் - போராடும் காலம் - அ.முத்துக்கிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
மாணவப் பருவம் - போராடும் காலம் - அ.முத்துக்கிருஷ்ணன்

கட்டுரை

மாணவப் பருவம் - போராடும் காலம் - அ.முத்துக்கிருஷ்ணன்

கட்டுரை

Published:Updated:
மாணவப் பருவம் - போராடும் காலம் - அ.முத்துக்கிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
மாணவப் பருவம் - போராடும் காலம் - அ.முத்துக்கிருஷ்ணன்
மாணவப் பருவம் - போராடும் காலம் - அ.முத்துக்கிருஷ்ணன்

லகம் முழுவதும் மாணவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். `கல்விக் கட்டணத்தைக் குறையுங்கள்; அரசுப் பள்ளிகளுக்குப் போதிய நிதி ஒதுக்குங்கள்’ என்கிற முழக்கங் களோடு அரசுக்கு எதிரான வாசகங்களைக்கொண்ட  பதாகைகளை ஏந்திப்பிடிக்கின்றனர். இந்த மாணவர்களுக்கு, ஒரே நேரத்தில் அப்படி என்ன நெருக்கடி?

உலகமயத்தின் விளைவு இது. உலக நாடுகளில் உள்ள அரசுகளுக்கு ஒரு நெருக்கடியை, உலக முதலாளிகள் கொடுத்துவருகிறார்கள். அவர்கள் தரும் நெருக்கடி, கல்வியை ஒரு வர்த்தகப்பொருளாக அறிவிக்க வேண்டும் என்பதே. பல்கலைக்கழகங்களை, உயர் ஆய்வு நிறுவனங்களை லாபம் ஈட்டும் இடங்களாக, கல்வியை ஒரு தொழிலாக மாற்ற முயல்கிறார்கள். கல்வியைக் கடைச்சரக்காகப் பார்க்க இயலுமா? கல்வி என்பது எல்லா குடிமக்களுக்குமான அடிப்படை உரிமை அல்லவா? ஒரு நாட்டின் குடிமக்களுக்கு நல்ல கல்வி கிடைத்தால்தானே, அவர்கள் உற்பத்தியில் ஈடுபடும் ஓர் ஆரோக்கியமான மனிதவளமாக உருவெடுப்பார்கள்; ஒரு நாட்டின் பொறுப்புமிக்க பிரஜைகளாக மலர்ந்து எழுவார்கள்?

சுதந்திரம் பெற்ற பல நாடுகளில் ஜனநாயக அரசுகளின் லட்சியங்களில் ஒன்று, கல்வியைக் கடைக்கோடி மனிதரிடமும் கொண்டு சேர்ப்பதாகத்தான் இருந்தது. ஆனால்,  இன்று கல்வியின் முகம் அப்படி இல்லை. அது சாமானியர்களுக்கு எட்டாகனியாக மாறிவிட்டது. எல்லாம் இருக்கட்டும், இந்தியாவின் நிலை என்ன?

சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவில் 73 சதவிகித மக்கள் மட்டுமே கல்வியறிவு உடையவர்களாக இருக்கிறார்கள். அதிலும் ஏழைகளில் ஏழு சதவிகிதம் பேர்தான் பள்ளிப்படிப்பை முடிக்கிறார்கள். 93 சதவிகித ஏழை மாணவர்கள் வகுப்பறையை எட்டிப்பார்த்து விடுபட்டவர்களாக (Dropouts) வெளியேறி விடுகிறார்கள். இதில், இந்தியாவில் கல்வியை மொத்தச் சமூகத்துக்கும் கொண்டு சேர்ப்பதில் பெரும் தடையாக இருப்பது, சாதி. இடைநிற்றல் மாணவர்களில் பெரும் பகுதியாக இருப்பவர்கள் தலித்துகளாக, பழங்குடிகளாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

கல்விக்குப் போதிய நிதியை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்காமல், மெள்ள மெள்ள தங்கள் கடமைகளில் இருந்து விடுவித்துக் கொள்ளத் தொடங்கியிருப்பதே, இதற்கு அடிப்படைக் காரணம். நிதிப் பற்றாக்குறையை ஒரு காரணமாகக் காட்டுவது இன்றுதான் தொடங்கியதா?

ராஜாஜி முதலமைச்சராக இருந்த காலத்திலேயே நிதிப் பற்றாக்குறையைக் காரணமாகவைத்து அரசுப் பள்ளிகளை மூடுவதாக அறிவித்தார். மாணவர்கள் அரை நாள் பள்ளிக்கு வந்தால் போதும்; அரை நாள் வேலைக்குப் போகட்டும்; அவர்களது பெற்றோரின் சாதித் தொழிலைச் செய்யட்டும் என்கிற ஓர் இழிவான யோசனையை முன்வைத்தார். குலக்கல்விக் கொள்கையை எதிர்த்து தந்தை பெரியார் அன்று சட்டசபைக்கு முன்பு பெரும் போராட்டம் நடத்தினார்.

1937-ம் ஆண்டு ஏப்ரலில் இந்தியைக் கட்டாயப் பாடமாக அறிவித்தார்கள். அன்று தந்தை பெரியார், தமிழறிஞர் சோமசுந்தர பாரதியார், தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் போன்றவர்களின் தலைமையில் இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழகம் எங்கும் பெரும் போராட்டம் வெடித்தது. போராட்டத்தின் வலிமையைப் பார்த்த ராஜகோபாலாச்சாரி, இந்தித் திணிப்பு உத்தரவுகள் அனைத்தையும் ரத்துசெய்தார்.

மீண்டும், 1965 ஜனவரி 26, குடியரசு தினத்தன்று இந்தியை ஆட்சிமொழியாக அறிவிக்க முடிவு செய்தார்கள். இந்த அறிவிப்பு மீண்டும் தமிழகத்தில் ஒரு பெரும் மாணவர் எழுச்சியை ஏற்படுத்தியது. 55 நாட்கள் நடைபெற்ற மொழிப் போரின் நீட்சியாகவே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு முடிவுகட்டப்பட்டது. அன்று மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டார்கள்; தங்களின் கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுத்தார்கள், போராடினார்கள். அப்படிப் போராடியவர்களில் பலர் பின்னாட்களில் பொது வாழ்க்கையில் அடி எடுத்துவைத்தார்கள்.

உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய தொடர் போராட்டம்தான் தெலங்கானா தனி மாநிலமாக உருவாக ஒரு திடமான களத்தை ஏற்படுத்தியது. 2013-ம் ஆண்டில் ஈழத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும், இங்கே அதே நேரம் தமிழக மாணவர்களும் தெருக்களில் இறங்கிப் போராடினார்கள். மாணவப் பருவம்தான் ஒருவரின் வாழ்க்கைக்கான அரசியல் பாதையை, பொது விஷயங்கள் சார்ந்த புரிதலை ஏற்படுத்துகிறது.

மாணவப் பருவம் - போராடும் காலம் - அ.முத்துக்கிருஷ்ணன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சமீபத்தில், ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்திலும், புது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் நடைபெற்ற போராட்டங்கள், மீண்டும் தேசம் முழுவதும் ஒரு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஹைதராபாத் மத்தியப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் அப்பாராவுக்கு பா.ஜ.க-வின் எம்.பி தத்தாத்ரேயாவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியும் கொடுத்த நெருக்கடியின் பெயரில், ரோஹித் வெமுலாவும் அவரது தோழர்களும் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டார்கள்; பல்கலைக்கழகத்தின் விடுதியில் இருந்தும் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் பல்கலைக்கழகத்தின் கேன்டீனுக்குச் செல்ல முடியாது, நிர்வாகக் கட்டடப் பகுதிக்குச் செல்லக் கூடாது என கொடுத்த தொடர் மனஅழுத்தத்தினால், ரோஹித் வெமுலா தற்கொலை செய்துகொண்டார். இந்தத் தற்கொலை, இந்திய தேசம் எங்கும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது; இந்தியாவெங்கும் மாணவர்கள் கிளர்ந்து எழுந்தார்கள். இந்த நிகழ்வு ஒரு பெரும் ஆக்கப்பூர்வமான விவாதத்துக்கு வழிவகுத்தது.

இதனை அடுத்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் பெரும் போராட்டம் வெடித்தது. ஜே.என்.யு மாணவர்கள் நடத்திய அப்சல்குரு நினைவுக் கூட்டத்தில், `பாகிஸ்தான்... ஜிந்தாபாத்!’ என கோஷமிட்டதாக ஒரு தனியார் தொலைக்காட்சி, செய்தி வெளியிட்டது.  இந்த மாணவர்களை தேசத் துரோகிகளாகச் சித்தரித்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களைக் கைதுசெய்ய காவல் துறை முனைந்தது. முதன்முறையாக இந்த வளாகத்துக்குள் இரவு நேரங்களில் விடுதியின் அறைகளில் காவல் துறை சோதனையிட்டது. `இந்த மாணவர்கள் அனைவரும் தீவிரவாதத் தொடர்பு உள்ளவர்கள்’ என்று அர்னாப் கோஸ்வாமி தினமும் ஒரு மணி நேரம் தொலைக்காட்சியில் தீர்ப்பு வழங்கத் தொடங்கினார். பெரும் ஊடகங்களின் இந்த ஒருதலைப்பட்சப் பிரசாரம் மிக வேகமாக வைரஸ் கிருமிபோல் பரப்பப்பட்டது.

கன்னையா குமார் மற்றும் அவரது தோழர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். அவர்களை பாட்டியாலா நீதிமன்றத்துக்கு காவல் துறை அழைத்துவந்த நேரம், மாணவர்களையும் பத்திரிகையாளர்கள் சிலரையும் இந்துத்துவ அமைப்பினர் கடுமையாகத் தாக்கினார்கள். நிலைமையின் தீவிரம் அறிந்து மாணவர் போராட்டத்துக்கு ஆதரவாக ஜே.என்.யு ஆசிரியர் சங்கமும் களமிறங்கியது.

தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட செய்தியும் காணொளியும் ஜோடிக்கப்பட்ட ஒன்று என்றும் அந்தக் குற்றஉணர்ச்சியின் உந்துதலில், தான் ராஜினாமா செய்வதாகவும் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய விஷ்வா தீபக் அறிவித்தார். மொத்த இணையத்திலும் தேச மக்கள் மத்தியிலும் சுற்றுக்குவிடப்பட்ட காணொளி போலியானது என்பது தெரியவந்தது.

இந்தக் காலகட்டத்தில் கன்னையா குமார் அங்குள்ள மாணவர்களுக்கு ஆதரவாகப் பேசினாலே, `நீ ஒரு தீவிரவாதி. அதை முதலில் ஒப்புக்கொள்’ என்கிற ரீதியில் தேசபக்தர்கள் கொந்தளிக்கத் தொடங்கினார்கள். உலகம் முழுவதும் அடிப்படைவாதிகள் சகிப்புத்தன்மையை இழந்துதான் இருப்பார்கள். அது நம் நாட்டிலும் துலக்கமாகத் தெரிந்தது.

உத்திரப்பிரதேச மாநிலத்தின் தாத்ரி என்ற இடத்தில் பசு இறைச்சி வைத்திருந்ததாகச் சொல்லி ஓர் இஸ்லாமியரை அடித்துக் கொன்றார்கள் மதவெறியர்கள். சில வாரங்கள் கழித்து ‘அது மாட்டிறைச்சி அல்ல, ஆட்டிறைச்சி’ என விளக்கின ஆய்வுகள். இதே கதைதான் ஜே.என்.யு காணொளி விஷயத்திலும் நடந்தது. எதையும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அணுகுவதைத் தவிர்த்து தெளிவுடன், ஆதாரப்பூர்வமாகவே அணுக வேண்டும்.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு என்கிற ஒற்றைப்படையில் ஒரு தேசத்தை உருவாக்குவது எத்தனை ஆபத்தானது என்பதை இன்றைய மாணவர்களிடத்தில் விவாதிக்க வேண்டும். பல தேசிய இனங்கள், மொழி, பண்பாடு கொண்ட நாட்டில் இவற்றை எல்லாம் அழித்து எல்லாவற்றையும் ஒற்றைப்படையாக மாற்றுவதன் ஆபத்துகளை மாணவர் சமூகமும் பொதுமக்களும் உணர வேண்டும்.

`படிக்கிற காலத்தில், படிப்பில் கவனம் செலுத்தாமல் அரசியலில் ஈடுபடுவது சரியல்ல’ என்பது அபத்தமான வாதம். அரசியல் அமைப்புச் சட்டம், 18 வயதுக்கு மேற்பட்ட ஒருவருக்கு வாக்குரிமையை வழங்குகிறபோதே அரசியலில் ஈடுபடுகிற உரிமையையும் இணைத்துத்தான் வழங்குகிறது என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஜனநாயகம் அதன் பிரஜைகளுக்கு கருத்துச் சுதந்திரத்தை உறுதிசெய்கிறது. ஜனநாயகம் இயங்க வேண்டும் என்றால், அதில் பல தரப்பட்ட கருத்துக்களும் எதிர்க் கருத்துக்களும் இருக்க வேண்டும் என்கிற அடிப்படையைக்கூட விளங்கிக் கொள்ளாதவர்கள், மொத்த பிரஜைகளையும் ஆட்டு மந்தைகளைப்போல் மாற்ற முயல்கிறார்கள். எதிர்க்கருத்து வைத்திருப்பதையே தேசத் துரோகம்போல் சித்தரிக்க முயல்கிறார்கள்.

இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல். அப்படியாக நாம் ஏட்டளவில் இல்லாமல் ஒரு செயல்படும் ஜனநாயகத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்பினால், அடிப்படை உரிமைகளை மாணவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும். அதனை அவர்கள் எவ்வாறு பாவிக்கிறார்கள் என்பதை நெருக்கமாகப் பார்த்து மேலதிகப் பயிற்சி அளிக்க வேண்டும். முதலில் நம் வகுப்பறைகளில் ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும். மேலை நாடுகளில் ஆசிரியர் வகுப்பு எடுக்கும்போது அது தனக்கு புரியவில்லை எனில், `எனக்கு நீங்கள் சொல்வது புரியவில்லை, கொஞ்சம் வேறு முறையில் எனக்குக் கற்பியுங்கள்’ என்று முறையிடலாம்; வகுப்பின்போதே குறுக்கிடலாம். இந்த நிலை இந்திய வகுப்பறைகளில் எப்போது சாத்தியப்படும்?

வகுப்பறையில் கேள்வி கேட்கும் பண்புதான் ஒரு மாணவனை கல்வியில் ஈடுபாடுடையவனாக மாற்றும். இந்த ஈடுபாடுதான் அவனை இன்னும் நுட்பமான வாசிப்பை நோக்கி, ஓர் ஆய்வு மனநிலையை நோக்கி அழைத்துச் செல்லும். இந்த நாற்றங்காலில் இருந்துதான் ஒரு சிந்தனையாளர், ஓர் எழுத்தாளர், ஒரு பேச்சாளர், ஒரு விஞ்ஞானி அரும்புவதற்கான  வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படி ஒரு சுதந்திரத்தை அனுபவிக்காதபோது செய்த வேலையை மீண்டும் மீண்டும் செய்கிற, மனித இயந்திரங்களைத்தான் உருவாக்க இயலும்.

உலகம் முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், உயர் ஆய்வு நிறுவனங்களில் மாணவர் சங்கங்கள் இருக்கின்றன. அதற்குத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. எல்லா முடிவுகளிலும் மாணவர்களைக் கலந்தாலோசிப்பது ஒரு நடைமுறை. மாணவர் பிரதிநிதிகள் ஒரு கல்வி வளாகத்தின் மதிப்புமிக்க பங்காளிகளாகத் திகழ்வர். அப்படியான ஓர் அந்தஸ்தை நாம் இங்கு மாணவர்களுக்கு வழங்கியிருக்கிறோமா?

மாணவப் பருவத்தில் தங்களின் கோரிக்கைகளுக்காகப் போராடுவது, கல்விப் புலம்சார் அபிவிருத்தியில் பங்குகொள்வது என்பதுதான் ஒருவரை ஜனநாயகவாதியாக மாற்றும். இந்த அடிப்படை ஜனநாயகக் கல்விதான் ஒரு தேசத்தின்பால் நேசத்தை, ஒரு நல்ல குடிமகனை உருவாக்கும்.
ஆனால், இங்கு வீடியோ கேம்களிலும் மால்களிலும் மூழ்கிக்கிடக்கிறது ஒரு தலைமுறை. தங்களின் விருப்ப நடிகருக்கு பால் அபிஷேகம் செய்ய வரிசையில் காத்துக்கிடக்கிறது இளம் பட்டாளம். இந்த அரசியலற்ற தலைமுறையை நினைத்தால், நாட்டின் எதிர்காலம் குறித்து பெரும் அச்சம் மனதைக் கவ்வுகிறது.

இந்தப் பூமியில் வாழும் மனிதகுலத்தில் பெரும்பகுதியானவர்கள் தங்களின் வாழ்க்கைத் தேவைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில், மாணவர்களும் போராடித்தானே ஆக வேண்டும்? சாமானியர்களின் கல்வி உரிமைகள் பறிக்கப்பட்டு, கல்வி அவர்களுக்கு எட்டா கனியாக மாற்றப்படும்போது, அதனை அடைவதற்குப் போராட்டம் ஒன்றே வழி. ஒரு சமூகத்தின் எஞ்சிய மனசாட்சியாகத் திகழும் மாணவர்கள் போராடித்தான் நாட்டின் எதிர்காலத்தைக் காக்க வேண்டும்; காப்பார்கள்!