Published:Updated:

மகளைப் பார்க்க வந்தாரா?

மகன் அனுப்பி வந்தாரா?

மகளைப் பார்க்க வந்தாரா?

மகன் அனுப்பி வந்தாரா?

Published:Updated:
மகளைப் பார்க்க வந்தாரா?

'கழுகார் வருவாரா...’ என யோசனையுடன் காத்துக்கொண்டு இருந்தபோது, சிறகின் படபடப்பு ஓசை.

''வழக்கம் போல் திங்கள் கிழமைதானே நம்மைத் தேடுவார்கள் என்று இருந்துவிடுவீரோ என நினைத்தோம்... நல்லவேளை வந்துவிட்டீர்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அட்டகாசமான சிரிப்புடன் ஆரம்பித்தார் கச்​சேரியை...

மகளைப் பார்க்க வந்தாரா?

''உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வந்த நாளில் தமிழ​கத்தின் முக்கியத் தலைவர்கள் இருவருமே தமிழகத்தில் இல்லை. வெற்றிச் செய்தி வரும்போது பெங்களூரூ சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் 'யெஸ்...’, 'நோ...’ என்று பதில் சொல்லிக்கொண்டு இருந்தார் ஜெயலலிதா. வெற்றியைக் கொண்டாடும் மனநிலையில் அவர் இல்லை. விரக்திதான் அவரது முகத்தில் அதிகம் தெரிந்தது. இந்த லைவ் ரிப்போர்ட்டை உமது நிருபர் பெங்களூரூவில் இருந்து கொடுப்பார். எனவே, நான் டெல்லித் தகவல்களைச் சொல்கிறேன்!''

''ம்!''

''கருணாநிதியை, திகார் நோக்கி நகர்த்தியதில் உமது நிருபருக்கும் முக்கியப் பங்கு உண்டு என்கிறது அரசி​யல் வட்டாரம். குறிப்பாக, சில தி.மு.க. பிரமுகர்கள்!

##~##

'திகாரில் இருந்து ஜூ.வி.’ என்று உமது நிருபர் எழுதிய கட்டுரை, கனிமொழி ஆதரவாளர்கள் மற்றும் கருணாநிதியின் நலம் விரும்பிகள் மத்தியில் கனத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் படித்துக் கண் கலங்கியதாகச் சொல்கிறார்கள். 'சிறை வைக்கப்பட்ட கனிமொழியை ஆரம்பத்தில் எல்லாரும் வந்து பார்த்தாங்க. ஆனா, இப்ப யாருமே வருவது இல்லை...’ என்ற வரிகள் கருணாநிதியைக் கலக்கிவிட்டதாம். கட்டுரை வெளியான அன்று சென்னையில் இருந்தார் ராஜாத்தி அம்மாள். கதறிவிட்டாராம். 'நீங்க அடிக்கடி வந்து பார்த்திருந்தா, இந்த மாதிரி எல்லாம் சொல்லுவாங்களா?’ என்றாராம் ராஜாத்தி. கனிமொழியை, கருணாநிதி போய்ப் பார்த்து 100 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டன. 'சொந்த மகளைப் பார்க்காமல் இத்தனை நாட்கள் யாராவது இருப்பாங்களா?’ என்று கனிமொழி ஆதரவாளர்கள் மத்தியிலும் வெளிப்படையாக வருத்தக் குரல்கள் எழ ஆரம்பித்தன. இவை அவருக்கே நேரடியாக வர ஆரம்பித்ததும்தான் டெல்லிக்கு உடனடியாகக் கிளம்பினார் கருணாநிதி!''

''இதற்கு ஸ்டாலின் ஆட்களின் ரியாக்ஷன்?''

''அதைத்தான் அடுத்துச் சொல்ல வருகிறேன்! 'கருணாநிதி அடிக்கடி டெல்லி சென்று கனிமொழியைப் பார்த்தால், பொதுமக்களுக்கு இந்த விஷயத்தை நாமே நினைவுபடுத்துவது மாதிரி இருக்கும்’ என்று ஸ்டாலின் தரப்பு நினைத்தது. அதனால்தான் கருணாநிதி டெல்லி செல்லத் திட்டமிடும்போதெல்லாம், இவர்கள் தடுத்ததாகவும் சொல்வார்கள். ராஜாத்தி அம்மாள் டெல்லியில் உட்கார்ந்துகொண்டு கனிமொழியைப் பார்க்க வரச் சொல்ல... இவர்கள் இங்கே தடை போட... இரண்டுக்கும் மத்தியில் முடிவெடுக்க முடியாமல் தவித்து வந்தார் கருணாநிதி. ஆனால், இந்தத் தடவை கருணாநிதி உடனடியாக டெல்லிக்குச் செல்ல வேண்டும் என்று அனுப்பியதே ஸ்டாலின்தான் என்று தகவல்!''

''ஏனாம்?''

''உள்ளே இருக்கும் கனிமொழி, மனரீதியாக அதிக வருத்தத்தில் இருப்பது ஸ்டாலின் மீதுதான். '20 சதவிகித ஷேர் வெச்சிருக்கும் எனக்கு தண்டனை என்றால், 60 சதவிகிதம் வைத்திருக்கும் தயாளு அம்மாள் தப்பித்தது எப்படி? அவரைக் காப்பாற்ற முடிந்தவர்களால் என்னை மட்டும் ஏன் காப்பாற்ற முடியவில்லை? சி.பி.ஐ-யிடமோ வெளியிலோ இதை நான் சொல்லாமல் இருந்ததற்கு, அப்பா மீதான பாசம்தான் காரணம். அண்ணன்களுக்கு இது புரிந்து இருந்தால், என்னை இப்படி அநாதையா விட்டிருக்க மாட்டார்களே...’ என்பது கனிமொழியின் வருத்தம். 'கனிமொழி இந்த மாதிரி பேச ஆரம்பித்தால், அது நல்லது அல்ல!’ என்று நினைத்துத்தான் கருணாநிதியை டெல்லிக்குச் சென்று சந்திக்கக் கட்டாயப்படுத்தியதாகச் சொல்கிறார்கள். ஷாகித் பால்வா நிறுவனத்தில் இருந்து கலைஞர் டி.வி-க்கு பணம் வந்தது அல்லவா? அதை கலைஞர் டி.வி. சார்பில் யார் வாங்கியது, அதற்கான சம்மதத்தை யார் கொடுத்தது என்ற ரீதியில் விசாரித்தால், வேறு சிலருக்கும் சிக்கல் வரலாம். இதை எல்லாம் வைத்துத்தான் திகார் செல்லத் திட்டமிட்டார் கருணாநிதி.''

''நேராக சோனியா வீட்டுக்குப் போயிருக்கிறாரே? 'இந்த வழக்கு முடியும் வரை சோனியாவை சந்திக்க மாட்டேன்!’ என்று சொல்லி இருந்தாரே கருணாநிதி?''

''வெள்ளிக்கிழமை டெல்லி வந்த கருணாநிதி இரவு அங்கேயே தங்கினார். மறுநாள் காலையில் சோனியாவைப் பார்க்க அனுமதி வாங்கப்பட்டது. 'வெளிநாட்டுக்குச் சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பி இருக்கும் சோனியாவை சந்தித்து நலம் விசாரிப்​பதற்கான சந்திப்பாகத்தான் இது சொல்லப்பட்டது. 'சோனியாவை சந்தித்தால், இந்த வழக்குக்காகத்தான் இருக்கும் என்று சொல்லிவிடுவார்கள். அதனால் சந்திக்க மாட்டேன்’ என்று முன்பு சொன்னவர்தான் கருணாநிதி. ஆனால், சோனியாவின் உடல் நலம், கனிமொழி மற்றும் ராஜாத்தியின் மன நலம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு சந்திக்க முயற்சிகள் எடுத்தார் கருணாநிதி. பரஸ்பர நட்பு விசாரிப்புகளுக்குப் பிறகு, 'நடப்பது அனைத்தும் உங்களுக்குத் தெரியும். உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டு வந்தாராம்!''

''ஓஹோ!''

மகளைப் பார்க்க வந்தாரா?

''அங்கே இருந்து அவரது கார், பாட்டியாலா கோர்ட்டுக்குச் சென்றது. கனிமொழியை சந்திக்க திகார் சிறையில்தான் அனுமதி வாங்கப்பட்டு இருந்தது. பாட்டியாலா கோர்ட்டிலேயே போய் பார்க்கப்போகிறாரோ என்று பலரும் நினைத்தார்கள். ஆனால், கருணாநிதியின் காரில் வந்த ராஜாத்தி அம்மாள் மட்டும் அங்கு இறங்கிக்கொண்டார். கருணாநிதி நேராகத் தான் தங்கி இருந்த ஹோட்டலுக்குச் சென்றுவிட்டார். மாலையில் கருணாநிதி, ராஜாத்தி, டி.ஆர்.பாலு ஆகிய மூவரும் சிறைக்குச் சென்றார்கள். அன்றைய தினம்தான் பாட்டியாலா கோர்ட்டில், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவர் மீதும் குற்றச் சதி, நம்பிக்கைத் துரோகம், மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டை நீதிபதி ஷைனி பதிவு செய்தார். இதைப் படிக்கும்போதே, ஏதோ தீர்ப்பே வந்தது மாதிரி இருந்தது!''

''அப்படியா?''

''நீதிபதியின் வார்த்தைகளில் தீர்க்கமான பல சொற்கள் இருக்கின்றன! 'குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா மற்றும் சித்தார்த்த பெகுரா ஆகிய இருவரும் மோசடியான முறையில் விலைமதிப்பற்ற ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஒதுக்கீடு செய்ததில் கூட்டுச் சதி செய்துள்ளீர்கள். நம்பிக்கைத் துரோகம் செய்துள்ளீர்கள்...’ என்று ராசாவைப் பார்த்துச் சொல்லி இருக்கிறார். கனிமொழியைப் பார்த்து, 'கலைஞர் டி.வி. சேனல் தொடங்குவது மற்றும் ஆ.ராசாவுடன் தொடர்ந்து நீங்கள் தொடர்பில் இருந்துள்ளீர்கள். கலைஞர் டி.வி-யின் ஆரம்ப கட்ட இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறீர்கள். அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளின் பின்னணியில் துடிப்பான மூளையாகவும் செயல்பட்டு இருக்கிறீர்கள். டைனமிக்ஸ் ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டி.வி.

மகளைப் பார்க்க வந்தாரா?

200 கோடியைப் பெற்றது முறையான பணப் பரிவர்த்தனை கிடையாது. உரிமம் வழங்கப்பட்டதற்கு பிரதிபலனாக சட்ட விரோதக் கைமாறு பெற்றுள்ளீர்கள்’ என்று சொன்னார். இவை அனைத்தும் கருணாநிதி டெல்லி சென்ற அன்றா நடக்க வேண்டும்? கனிமொழி, சரத்குமார், ஆ.ராசா ஆகிய மூவரும் அதிக சோகமாக இருந்த நாளில் கருணாநிதி போனதால், இந்த சந்திப்பு மிக உருக்கமாக இருந்திருக்கிறது. மூவருக்கும் நம்பிக்கையான வார்த்தைகளைச் சொல்லி இருக்கிறார் கருணாநிதி!''

''கனிமொழியிடம் என்ன சொன்னாராம்?''

''மகளுக்கு தைரியம் கொடுக்கும் சில வார்த்தை​களைச் சொன்ன கருணாநிதி, 'உன்னோட வருத்​தங்கள்... கவலைகள் எல்லாமே நமக்குள் இருக்கட்டும். யாரிடமும் இதைப்பற்றி பேசாதே. மிக மிக முக்கிய​மானவங்க தவிர மற்ற யாரையும் சந்திப்பதையே தவிர்த்து​விடு’ என்று சொன்னாராம்.''

''இனி ஜாமீன் கிடைக்கும் என்கிறார்களே?''

''குற்றச்சாட்டு பதிவு செய்ததும் ஜாமீனை சி.பி.ஐ. கோர்ட்டில் கேட்கலாம் என்று ஏற்கெனவே சுப்ரீம் கோர்ட், கனிமொழி விஷயத்தில் சொல்லி இருக்கிறது. இப்போது குற்றச்சாட்டு பதிவு முடிந்துவிட்டதால் உடனடியாக அந்த மனுக்களை நீதிபதி எடுக்கலாம். ஆனால், அதற்கும் சி.பி.ஐ. தனது எதிர்வாதங்களை வைக்கும். கனிமொழி தரப்பும் வாதிடும். இந்த சம்ப​வங்களுக்கு எத்தனை நாள் ஆகும் எனத் தெரிய​வில்​லை​யே!'' என்ற கழுகார் கிளம்பத் தயார் ஆனார்.

மறக்காமல் சொல்லிச் சொன்றார்..

''அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!''

மகளைப் பார்க்க வந்தாரா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism