Published:Updated:

"ரத யாத்திரைக்கான ஆதரவு, திராவிடக் கட்சிகளின் முடிவைக் காட்டுகிறது" - ஹெச். ராஜா பதிலடி!

"ரத யாத்திரைக்கான ஆதரவு, திராவிடக் கட்சிகளின் முடிவைக் காட்டுகிறது" - ஹெச். ராஜா பதிலடி!
"ரத யாத்திரைக்கான ஆதரவு, திராவிடக் கட்சிகளின் முடிவைக் காட்டுகிறது" - ஹெச். ராஜா பதிலடி!

"ரத யாத்திரைக்கான ஆதரவு, திராவிடக் கட்சிகளின் முடிவைக் காட்டுகிறது" - ஹெச். ராஜா பதிலடி!

2016-ம் ஆண்டு செப்டம்பர் மாத கடைசியிலிருந்தே, தமிழக அரசியல் களம் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களைக் கண்டுவருகிறது. அப்போது தொடங்கிய அரசியல் அனலின் தாக்கம் இன்னமும் கனன்று கொண்டேதான் இருக்கிறது.

உடல்நலக் குறைவால் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் தொடங்கி, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியது வரையிலும், சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவிட்டு, எடப்பாடி - ஓ.பி.எஸ். இணைப்பு ஏற்பட்டது முதல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ-வாகப் வெற்றிபெற்றது வரை அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்கள் அவ்வப்போது நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. நீட் உள்ளிட்ட தமிழகத்தைப் பாதிக்கக்கூடிய பல்வேறு பிரச்னைகளில் மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் வாய்மூடி மௌனியாக தமிழக அரசு இருப்பது ஏற்படுத்தக்கூடிய விமர்சனங்களை எல்லாம் பொருட்படுத்தாமல், புரட்சித்தலைவி `அம்மா' வழியில்(?!) ஆட்சி நடைபெறுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தெரிவிக்கிறார்கள். கடந்த இரண்டாண்டுகளில் அரங்கேறிய அரசியல் நிகழ்வுகளின் தொடர்ச்சியாக இப்போது தமிழகத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பிலான ரத யாத்திரை மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

`` `ராம ராஜ்யத்தை' வலியுறுத்தும் இந்த யாத்திரையை தமிழகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது" என்று தி.மு.க. உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளும், இஸ்லாமிய அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ரத யாத்திரை தொடர்பான பிரச்னை தமிழக சட்டசபையிலும் எதிரொலித்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, இதர பிரச்னைகளைப் போன்றே இந்த ரத யாத்திரையிலும் மத்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து அனுமதித்தது. 
பன்முகத்தன்மையுடன் கூடிய ஜனநாயக நாட்டில் ரத யாத்திரையைத் தடுக்க முடியாது என்று தமிழக அரசு அதற்கு விளக்கமளித்த போதிலும் அரசின் நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

``ராம ராஜ்யம் என்றால் நமக்கென்ன; ராவண ராஜ்யம் என்றால் யாருக்கென்ன?" என்ற கூற்றுக்கேற்ப, தமிழக ஆட்சியாளர்கள் எப்போதும்போல் தங்களின் பதவிற்கு ஆபத்து ஏற்படாவண்ணம் இப்பிரச்னையிலும் மத்திய அரசுக்கு ஆதரவாக சிக்ஸர் அடித்து தங்களின் விசுவாசத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர். இந்த ரத யாத்திரைக்கு மற்ற மாநிலங்களில் அனுமதி வழங்கப்பட்டதற்கும், ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழ்நாட்டில் இதற்கு எடப்பாடி அரசு அனுமதி வழங்கியிருப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாகக் கூறுகிறார்கள் அரசியல் தலைவர்கள்.

அத்வானி தலைமையிலான யாத்திரை...

கடந்த 1990-ம் ஆண்டில் பி.ஜே.பி. சார்பில், குஜராத்திலிருந்து அயோத்தி நோக்கி நடத்தப்பட்ட ``ஜன் சேத்னா' என்ற பெயரிலான ரத யாத்திரையே, பின்னர் பி.ஜே.பி. ஆட்சிக்கு வருவதற்கு வித்திட்டது. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி அத்வானி மேற்கொண்ட இந்த ரத யாத்திரை, பீகார் மாநிலத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது. அத்வானி அப்போது கைது செய்யப்பட்டார். அந்த யாத்திரையின்போது, பல்வேறு மாநிலங்களிலும் கலவரங்கள் வெடித்தன. ஏராளமானோர் உயிரிழந்ததும் நினைவிருக்கலாம்.

மீண்டும் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அதே அத்வானி தலைமையில் ரத யாத்திரை நடைபெற்றது. ஆனால், முந்தைய யாத்திரைக்குக் கிடைத்த வரவேற்பு இரண்டாவது முறை கிடைக்கவில்லை எனலாம்.

``மக்கள் மத்தியில் ஊழல் பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதுதான் மீண்டும் நடத்தப்பட்ட யாத்திரையின் நோக்கம்" என்று அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் கூறிக் கொண்டாலும், பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்களே அதனை ஆதரிக்கவில்லை. இந்த யாத்திரை மக்களிடம் பெரிய அளவில் எடுபடாமல் போனது. 18 மாநிலங்களில் அடங்கிய 100 மாவட்டங்கள் வழியாக, சுமார் 7,600 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பயணித்த யாத்திரைக்குப் பிறகும், அத்வானியால் மீண்டும் வெற்றிபெற்று, பிரதமராக முடியாமல் போனது. 

இந்தச் சூழலில்தான், `ராம ராஜ்யத்தை' வலியுறுத்தி தற்போது மற்றுமொரு ரத யாத்திரை விஷ்வ இந்து பரிஷத் சார்பில் தொடங்கி நடைபெற்று வருகிறது. `அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டுவது, ராம ராஜ்யத்தை மீண்டும் அமைத்தல், மாணவர்களின் பாடத்திட்டத்தில் ராமாயணத்தை சேர்ப்பது, உலக இந்து தினம் கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. 

ராம ராஜ்ய ரத யாத்திரை தமிழகத்திற்குள் நுழைந்ததற்கு இஸ்லாமிய அமைப்புகளும், விடுதலைச் சிறுத்தைகள், தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீஸாரால் பலர் கைது செய்யப்பட்டனர். பிப்ரவரி 13-ம் தேதி அயோத்தியில் தொடங்கிய இந்த யாத்திரை உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா வழியாக தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தை சென்றடைந்துள்ளது. வரும் 25-ம் தேதியன்று திருவனந்தபுரத்தில் பொதுக்கூட்டத்துடன் நிறைவடைகிறது.

தமிழக எல்லையான புளியரை பகுதிக்கு ரத யாத்திரை வந்ததுமே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பதற்றம் பற்றிக் கொண்டது. மற்ற மாநிலங்களில் எதிர்ப்பு இல்லாத சூழலில், தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு உருவானதற்குக் காரணம் ஆளும் அ.தி.மு.க-வைத் தவிர, மற்ற அனைத்துக் கட்சிகளுமே பி.ஜே.பி-க்கு எதிராக ஒருமித்தக் குரல் எழுப்பியதுதான். இதனால், கடந்த இரு தினங்களாக தென் மாவட்டங்களில் பதற்றமான சூழல் நிலவியது. தமிழ்நாட்டில் நீடித்துவரும் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கக்கூடும் என்பதால், இந்த ரத யாத்திரையைத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், ரத யாத்திரைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். 

தமிழகத்தில் ராம ராஜ்ய யாத்திரையின் இரண்டாம் நாளன்று, மதுரை ராமகிருஷ்ண மடத்தில் யாத்திரையை பி.ஜே.பி. தேசியச் செயலாளர் ஹெச். ராஜா தொடங்கி வைத்தார். ரத யாத்திரைக்கு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு பற்றியும், யாத்திரையின் நோக்கம் குறித்தும் ஹெச். ராஜாவிடம் பேசினோம்.

``மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்"

``இந்த யாத்திரை ராமேஸ்வரத்திலிருந்து, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் சென்று, வரும் 25-ம் தேதியன்று அங்கு பிரமாண்ட பொதுக்கூட்டத்துடன் நிறைவடைகிறது. தமிழ்நாட்டில் ரத யாத்திரைக்கு அனுமதியளித்ததைக் கண்டிக்கும் கட்சிகள் அனைத்தும், இந்துக்கள் ஒன்றுபட மாட்டார்கள். அதன்காரணமாக, சிறுபான்மையின மக்களின் வாக்குவங்கியைப் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றன. இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதன் காரணமாக, ஓட்டுகளை வாங்கிவிடலாம் என்று கருதுகிறார்கள். தமிழகச் சட்டசபையில் ஒரு முஸ்லிம் எம்.எல்.ஏ. அருவருக்கத்தக்க வகையில் அந்த ஆட்டம் ஆடுகிறார். அதனை இந்துக்கள் இப்போது புரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டாங்க. இதேபோல், இந்துக்களுக்கு ஆதரவா, இந்து எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் சட்டமன்றத்தில் ஆட ஆரம்பித்தால் என்னவாகும்? ஆகவே, இந்துக்களுக்கு எதிரான ஒரு மனோநிலையை திராவிட இயக்கங்கள் தொடர்ந்து செய்து வருகின்றன. ஆனால், இந்த விஷயத்தில் தமிழக அரசு ஒரு சரியான முடிவெடுத்திருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும்பாலான இந்துக்கள் மத்தியிலேயே `ராம ராஜ்யம்' என்றால் என்ன; அதன் முக்கியத்துவம் என்ன என்று தெரியாத நிலை உள்ளது. இந்த யாத்திரை மூலம் இந்துக்களிடையே ஒற்றுமை அவசியம் என்ற உணர்வு உருவாகியிருக்கிறது. மக்கள் அதை உணரத் தொடங்கியிருக்கிறார்கள். 

நாங்கள் தேர்தலுக்காக இந்த யாத்திரையை நடத்தவில்லை. தேர்தல் மாத்திரமே இங்கு ஒரு பிரச்னையல்ல. மத மாற்றங்களின் மூலமாக, இந்துக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தி, இந்துக்களுக்கு எதிரான சூழல் உருவாவதை நாம் மாற்றியாக வேண்டும். இந்துக்களை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அதுபோன்ற ஓர் எண்ணம் உருவாக வேண்டும். இந்த யாத்திரையில், ஒவ்வோர் இடத்திலும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். டூ-வீலர்களிலும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் யாத்திரையைப் பின்தொடர்ந்து வந்தனர். போலி மதச்சார்பற்றவாதிகள், இந்துக்களைக் காயப்படுத்துவோர் யார் என்பது தற்போது மக்களுக்குப் புரியத் தொடங்கியுள்ளது. ஆகவே, யாத்திரைக்குக் கிடைத்துள்ள வரவேற்பு, திராவிட இயக்கங்கள் முடிவுக்கு வருவதற்கான ஓர் ஆரம்பமாகக்கூட அமையலாம். யாத்திரைக்கு எதிர்ப்பு என்பது அருவருக்கத்தக்க ஒரு விஷயம். மக்கள் அதை உணர்ந்து, எதிர்காலத்தில் அவர்களின் நிலைப்பாட்டை எடுப்பார்கள். தேர்தலை கருத்தில் கொண்டு இதை நான் சொல்லவில்லை. இந்த யாத்திரை என்பது மக்களுடைய விழிப்புஉணர்வுக்காகவும், ராம ராஜ்யம் அமைக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவுமே நடத்தப்பட்டுள்ளது. நேர்மையான, ஒழுக்கமான, தூய்மையான ஓர் ஆட்சி, அதுவே ராம ராஜ்யம், அத்தகைய ஆட்சி அமைய வேண்டும் என்று மகாத்மா காந்தியே சொல்லியிருக்கிறார். 

உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தொல்லியல் துறை வரலாற்றின் அடிப்படையில் ராமர் கோயிலை இடித்துத்தான் அயோத்தியில் மசூதி கட்டப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது தொடர்பான மேல்முறையீடு வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திராவிட இயக்கங்கள் எது பேசினாலும், அது விவாதத்திற்கு அப்பாற்பட்டது,  அதுவே, இந்து இயக்கங்கள் எது பேசினாலும், அது விவாதிக்கப்பட வேண்டியது என்று அர்த்தமாகாது. மத நல்லிணக்கம் என்று அவர்கள் சொல்வதற்கு, இந்துக்களை அடிமையாக்கி, கொச்சைப்படுத்தி பேசுவது என்பதுதான் அர்த்தமா?" என்று கேள்வி எழுப்பினார். 

``இந்து ஒற்றுமை என்பது போலிப் பேச்சு"

ரத யாத்திரை தொடர்பாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறுகையில், ``கேரளாவைப் பொறுத்தவரை, சட்டமன்றத்திற்கு முன்னால் பொதுவாக எந்த அமைப்பானாலும் ஆர்ப்பாட்டம், முற்றுகை நடக்கும். அமைச்சர்கள் எல்லாம் வெளியே வரமுடியாமல் உள்ளே இருப்பாங்க. அதிகாரிகள் உள்ளே போக முடியாத நிலையெல்லாம் அங்கு சாதாரணமாக நடக்கக்கூடியது. ஆனால், இதுபோன்று ஓர் இயக்கம், போராட்டம், முற்றுகை போன்றவற்றுக்கெல்லாம் தமிழ்நாட்டில்தான் அனுமதி அல்லது அனுமதி மறுப்பு போன்ற பெரிய பிரச்னை இருந்து வருகிறது.  தமிழ்நாட்டில் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் அல்லது ஊர்வலம் போன்ற போராட்டங்களை நடத்துவதற்குக்கூட அனுமதி கொடுக்க மாட்றாங்க. அப்படி இருக்கையில், ரத யாத்திரைக்கு மட்டும் எப்படி அனுமதி கொடுத்தார்கள் என்பதுதான் கேள்வி. அப்படியே ரத யாத்திரைக்கு அனுமதி கொடுக்கும் அரசு, அதை எதிர்ப்பவர்களுக்கும் அனுமதி கொடுத்து விட்டுப் போக வேண்டியதுதானே. 

கோட்டைக்கு முன் போராட்டம் என்று சொன்னால், புறப்படும் இடத்திலேயே போலீஸார் கைது செய்திடுறாங்க. கடந்த 25 ஆண்டுகளில் கோட்டைக்கு முன் ஒரு சின்ன ஆர்ப்பாட்டம்கூட நடந்ததில்லை. மெரினாவில் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது; பொதுக்கூட்டம் நடத்தக் கூடாதுன்னு சொல்றாங்க. பொதுக்கூட்டம் நடத்துவதற்குக்கூட இங்கு கோர்ட்டுக்குச் சென்றே அனுமதி வாங்க வேண்டிய நிலைதான் உள்ளது. எனவே,  மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரை, குறிப்பா கேரளாவில் ஏதாவது சட்டம்-ஒழுங்கு பிரச்னையைக் கிளப்பினால் நடவடிக்கை எடுப்பார்களே தவிர, இதுபோன்ற ஆர்ப்பாட்டம், ஊர்வலம், ரத யாத்திரையெல்லாம் வரும்போது, முறைப்படுத்துவார்கள்; ஆனால், அனுமதி மறுக்க மாட்டார்கள். தேவையான பாதுகாப்பைக் கொடுப்பது வழக்கம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஓர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வாங்குவதே பெரிய வேலையாக உள்ளது. அதிலும், இந்த ரத யாத்திரையைப் பொறுத்தவரை ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி, இந்து அமைப்புகள் என்று வரும்போது, அவர்களுக்கு என்ன கண்டிஷன் போட்டார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. அப்படி, அதுபோன்ற யாத்திரைக்கு அரசு அனுமதியளிக்கும்பட்சத்தில், அதற்கு எதிராகப் போராட்டம் நடத்துவோருக்கும் அனுமதியளியுங்கள். எதிர்ப்பாளர்களுக்கு ஏன் அனுமதி மறுக்கிறீர்கள்? தடை உத்தரவெல்லாம் வேறு போடுகிறார்கள். திருமாவளவன் போன்ற தலைவர்களை எல்லாம் கைது செய்கிறார்கள். எனவே, தமிழ்நாடு அரசாங்கத்தின் பாரபட்சமான அணுகுமுறைதான் இங்கே கேள்வியாக எழுப்பப்படுகிறதே தவிர, மற்ற மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியதில்லை. கேரளாவில் ரத யாத்திரைக்கு அனுமதி என்று கூறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள இதர நடைமுறைகளையும் தமிழ்நாட்டில் பின்பற்றினால் பரவாயில்லை. மத மோதல்களை உருவாக்கும் என்று அரசு கருதுமேயானால், அதனை ரெகுலேட் பண்ணட்டும். அதை விடுத்து எதிர்ப்பைக் காட்டவே கூடாது என்று சொன்னால் அது என்ன நியாயம்? மற்ற மாநிலங்களை உதாரணமாகக் காட்டும்போது, அந்த மாநிலங்கள் மற்ற விஷயங்களில் கடைப்பிடிக்கும் நடைமுறைகளை இங்கேயும் பின்பற்ற வேண்டும். ரத யாத்திரையை எதிர்ப்பவர்களின் போராட்டத்திற்கு அனுமதி மறுத்தால், யாத்திரைக்கும் அனுமதியை மறுக்க வேண்டியதுதானே?  

இந்துக்களின் ஒற்றுமையை வலியுறுத்தியே யாத்திரை நடத்தப்படுவதாகவும், இந்த ஒற்றுமையைச் சீர்குலைக்கவே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றும் பி.ஜே.பி. கூறுவது வெறும் போலியான பேச்சு. முதலில் இந்து என்றால், அதிலும் தமிழ்நாட்டில் உள்ள எவ்வளவு பேர், ராமரையும், கிருஷ்ணரையும் வழிபடக்கூடியவர்கள். அப்படியிருக்கும்போது, இதில் எங்கிருந்து இந்துக்கள் ஒற்றுமை என்ற பிரச்னை வருகிறது என்று தெரியவில்லை. மேலும், தற்போது இந்துக்களுக்கு அப்படி என்ன ஆபத்து வந்து விட்டது. அதுபோன்று சொல்வார்களேயானால், அவர்களால்தான் பாதிப்பு வரக்கூடுமே தவிர, வேறு வழிகளில் இருக்க வாய்ப்பில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, குறிப்பாக தென் மாவட்டங்களில் வைணவர்களைக் காட்டிலும், சிவனை வழிபடும் சைவர்களே அதிகம் உள்ளனர். அப்படியிருக்கும்போது, இவர்கள், சைவர்களை ஏற்றுக் கொள்வார்களா? தமிழகத்தில் உள்ள இந்துக்கள் அனைவரும் ராமரை ஏற்றுக் கொள்வார்களா? ராமர் கோயில் கட்டுவதால், எப்படி இந்துக்கள் ஒற்றுமை ஏற்படும் என்று கூறுகிறார்கள். தமிழகத்தில் `தென்னாடுடைய சிவனே போற்றி' என்றுதானே பாடியுள்ளனர். ராம ராஜ்யம் என்று கூறி இந்து மதத்தை ஒற்றுமைப்படுத்திவிட முடியும் என்று சொல்வார்களேயானால், அது இட்டுக்கட்டி பேசக்கூடிய வார்த்தை. தவிர, ராமர் கோயில் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு வேறு நிலுவையில் உள்ளது. அது தனியானதொரு சர்ச்சை. 

இந்துக்களை ஒற்றுமைப்படுத்துவதற்குத்தான் இந்த ரத யாத்திரை என்று சொன்னால், அதை இந்துக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? இந்துக்களிலேயே பல்வேறு வழிபாட்டு முறைகளும், ஆகம விதிகளும் உள்ளன. எனவே, ராமர் கோயில் கட்டுவது, இந்து என்று சொல்வதெல்லாம் அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கான ஒரு படிக்கல் என்பதுதான் உண்மை. இன்னும் சொல்லப்போனால் இவர்களால்தான் மத மோதல்கள், வன்முறைச் சம்பவங்கள் ஏற்படுகின்றன. உதாரணத்திற்கு, அண்மையில் மதுரையில் சர்ச்சுக்குள் புகுந்த பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்த பைபிளைக் கொளுத்துகிறார்கள். பின்னர் எப்படி இந்துக்களை ஒன்றுபடுத்தப் போகிறார்கள்? எனவே, இவர்கள் சொல்வதெல்லாம் ஏமாத்து வேலை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு