பேருந்து கட்டணத்தை உயர்த்தலாம்...ரயில் கட்டணத்தை உயர்த்தக்கூடாதா?: கருணாநிதி


சென்னை: தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தலாம், மத்திய அரசு மட்டும் ரயில் கட்டணத்தை உயர்த்தக் கூடாதா? என்று கேள்வி எழுப்பி உள்ள திமுக தலைவர் கருணாநிதி, தமிழ்நாட்டில் உள்ள பேருந்து கட்டணத்தைவிட ரயில் கட்டணம் குறைவுதான் என்று கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கருணாநிதி இது தொடர்பாக கூறியதாவது:
ரயில் கட்டணம் உயர்த்தியதற்கு தமிழக முதல் அமைச்சர் கடுமையாகக் கண்டனம் தெரிவித்திருக்கிறாரே?
தமிழகத்திலே பேருந்து கட்டணத்தை அதிக அளவிற்கு இந்த அரசினர் உயர்த்தியிருக்கிறார்களே, அதைத் திரும்பப் பெறச்சொல்லுங்கள். அதற்குப் பிறகு மத்திய அரசு உயர்த்தியதைப் பற்றி இவர்கள் பேசட்டும்.
மத்திய அரசு உயர்த்தியிருப்பது “வெந்தப் புண்ணில் வேலைச் சொறுகியது போல்” இருப்பதாக ஜெயலலிதா கூறுகிறாரே?
இதற்கு நான் நேற்றே பதில் சொல்லி விட்டேன்.
<
##~~## |
மத்திய அரசு தொடர்ந்து மக்கள் விரோதப் போக்காகச் செயல்படுகிறதே, உதாரணமாக சமையல் சிலிண்டர் விலை, டீசல் விலை, தற்போது ரெயில் கட்டண உயர்வு என்றெல்லாம் நடுத்தர மக்களைப் பாதிக்கின்ற செயலில் ஈடுபடுகிறதே, இதை எதிர்த்து திமுக போராட்டம் நடத்துமா?
மத்திய அரசின் இத்தகைய செயல்களைக் கண்டித்து அறிக்கை கொடுக்கிறோம், கண்டித்து கடிதம் எழுதுகிறோம், திரும்பப் பெறச் சொல்லிக் கேட்கிறோம்.
காவிரி பிரச்னையில் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்று நேற்றைய தினம் சொல்லி விட்டார்களே?
காவிரி பிரச்சினை பற்றி கர்நாடக அரசின் சார்பில் அவர்களுடைய நிலைமைகளை விளக்கியிருக்கிறார்கள். அவர்களிடமும் தண்ணீர் இல்லை என்று சொல்கிறார்கள். அது உண்மையா அல்லவா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டிய வேலை, மத்திய அரசுக்கு இருக்கிறது. அவர்கள் அதைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோருகிறேன்.
டாக்டர் ராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளவில்லை. கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அதை நல்ல முறையில் கவனித்தார் என்று உங்களுக்கு ஆதரவாக அறிக்கை விடுத்திருக்கிறாரே?
“நோ கமெண்ட்ஸ்”
இவ்வாறு கருணாநிதி கூறினார்.