Published:Updated:

நான் நல்ல நண்பன்... அதே சமயம் பயங்கரமான எதிரி..!

மிரட்டும் சந்திராசாமி!

நான் நல்ல நண்பன்... அதே சமயம் பயங்கரமான எதிரி..!

மிரட்டும் சந்திராசாமி!

Published:Updated:
நான் நல்ல நண்பன்... அதே சமயம் பயங்கரமான எதிரி..!

'வீக்லி’ தன்னைப்பற்றி எழுதப்​போகிறது என்று ஊகித்த சந்திராசாமி உஷாரானார். கட்டுரையைத் தயாரித்து​விட்டு, சாமியாரின் நேரடிப் பேட்டிக்காக அவருடன் தொடர்பு​கொண்​டார் வீக்லியின் ஆசிரியர் ப்ரிதிஷ் நந்தி. பேட்டி கொடுக்க மறுத்துவிட்டார் சாமியார். அதே சமயம், 'ஆன்லுக்கர்’ ஆசிரியர் ரஜத் சர்மாவுக்கு சாமியாரின் அப்பாயின்ட்மென்ட் கிடைத்தது. ரஜத் சர்மா தன் நண்பர் ப்ரிதிஷ் நந்தியையும் உடன் அழைத்துச் சென்று, வேறு பெயரில் சாமியாருக்கு அறிமுகம் செய்தார். அப்போது 'பலே சாமியார்’ அளித்த பேட்டி  இது.

''பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள சர்வதேச பேரங்களைச் சுலபமாக முடித்துக் கொடுக்கிறீர்களாமே?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

''இந்து மதத்தின் மீது பொறாமைகொண்ட அயல்​நாட்டு சக்திகள் பரப்புகிற வதந்தி இது. எனக்கு அவர்களைப்பற்றிக் கவலை இல்லை. எனக்கு இந்தியா மீதுதான் அக்கறை.''

''நீங்கள் என்ன இந்திய அரசின் பிரதிநிதியா?''

''இல்லை. ஓர் இயக்கம் நடத்துகிற சாது.''

''பணம் பண்ணும் இயக்கமா அது?''

''எனக்கும் பணத்துக்கும் சம்பந்தமே இல்லை. அயல்நாட்டுக்கு இந்தியாவை விற்​கிறேன், அவ்வளவுதான்!''

''என்ன விலைக்கு?''

''நீங்கள் என்னைப் புரிந்துகொள்ளவில்லை. அதாவது, இந்து மதக் கருத்துக்களை உலகம் முழுவதும் எடுத்துச் சொல்கிறேன். இது வரை 153 நாடுகளுக்குப் போயிருக்கிறேன்.''

''இதற்காகும் செலவுகளை யார் ஏற்றுக்​கொள்கிறார்கள்?''

''தெய்வீக சக்திதான். சாதுக்களுக்கு எதற்குப் பணம்?''

நான் நல்ல நண்பன்... அதே சமயம் பயங்கரமான எதிரி..!

''உங்கள் விமான டிக்கெட், ஆடம்பர ஹோட்டல் செலவுகள், பிரமாண்ட விருந்துகள்... இந்தச் செலவுகளைத் தெய்வீக சக்திதான் ஏற்றுக்​கொள்கிறதா?''

''எனக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் உண்டு. எனது தேவைகளை அவர்கள் கவனித்துக்கொள்வார்கள். நான் மிகவும் எளிமையானவன்.''

''உங்களைப் பார்த்தால் எளிமையாக இருப்பதாகத் தெரியவில்லையே? உங்கள் வாட்ச் ஸ்ட்ராப்பில் உள்ள வைரங்​களே பல லட்சம் பெறும்... வசிப்பது என்ன​வோ மாளி​கையில்..?!''

''தோற்றத்தைக் கண்டு ஏமாறக் கூடாது. இவை எல்லாம் உண்மையான சொத்து அல்ல. ஆன்மிகம்தான் பெரிய சொத்து. ரிச்சர்ட் நிக்ஸன், புரூனே சுல்தான், எலிசபெத் டெய்லர் இவர்கள் எல்லாம் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இதைக் கண்டு பொறாமைப்படுகிற பலர், எனக்கு எதிராகப் பல வதந்திகளைப் பரப்பு கிறார்கள்.''

''நீங்கள் எந்தெந்த நாடுகளுக்குப் போயிருக்கிறீர்கள்?''

''இந்திய சந்நியாசிகள் போகத் துணி​யாத நாடுகளுக்கு எல்லாம் போயிருக்​​​கிறேன். ஆப்பிரிக்கா, லத்தீன், அமெரிக்கா, ஐரோப்பா... மொத்தமாக 153 நாடுகளுக்குப் போயிருக்கிறேன். கம்யூனிஸ்ட் நாடுகளுக்குத்தான் போனது இல்லை.''

''பல நாட்டுத் தலைவர்கள் உங்கள் நண்பர்களாமே?''

''அது சாதாரண நட்பு அல்ல, மிகவும் நெருங்கிய சிநேகிதம்... பல வருடங்​களாக இந்த உறவு தொடர்கிறது. இதற்​குக் காரணம் இருக்கிறது. ஒரு சராசரி அயல்நாட்டுக் குடிமகன், இந்தி​யனைவிட பல மடங்கு அறிவாளி. அவர்கள் முன்னேறிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். நாம் ஏழைகள், முட்டாள்கள். ஒரு அயல்நாட்டவர் வந்தவுடன் என் பக்தராகிவிடுகிறார் என்றால், புத்திசாலிகள் என்னைத் தெய்வமாக மதிக்கிறார்கள் என்றால், என்னிடம் அபூர்வ சக்தி இருக்கிறது என்றுதானே அர்த்தம்? என் போட்டோ ஆல்பத்தைப் பாருங்கள், அதில் உலகப் புகழ்பெற்ற பெர்சனா​லிட்டிகளின் படங்கள் இருக்கும். எல்லாப் படங்களிலும் நான் இருப்பேன். இவர்களைத் தவிர, பல மன்னர்கள், பிரத​மர்கள், இளவரசர்கள், அராபிய ஷேக்குகள் எனக்குக் கட்டுப்​பட்டவர்கள். அவர்கள் என்னை விரும்புகிறார்கள். அவர்களில் சிலர் என்னைக் 'கடவுள்’ என்றே அழைக்கிறார்கள். சில முஸ்லிம்களும் கிறிஸ்தவர்​களும்கூட அப்படி நினைக்​கிறார்கள். ஓர் இந்தியனுக்கு இந்தப் பெருமை என்பதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. என்னுடைய புகழ் எங்கும் பரவி இருப்ப​தால், பொறாமைகொண்ட பலர், என் மீது பல குற்றச்சாட்டுகளை வாரி இறைக்கிறார்கள்.''

''என்ன குற்றச்சாட்டு?''

'' 'ஏமாற்றுக்காரன்’ என்கிறார்கள். இரண்டு நபர்களை ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்யப் பணம் வாங்குகிறேனாம். கோடி ரூபாய் பேரங்களை முடித்துக் கொடுக்கிறேனாம்!''

''அறிமுகம் செய்துவைக்க எப்படிப் பணம் வாங்க முடியும்?''

''உதாரணம் சொல்ல வேண்டுமானால், பெரிய பணக்காரரான புரூனேயின் சுல்தானுக்கு, எகிப்திய இளைஞர் அல்ஃபயாத்தை அறிமுகம் செய்துவைக்கப் பணம் வாங்கினேனாம்.''

''அப்படிச் செய்திருந்தாலும் அதில் என்ன தவறு?''

''(கோபத்துடன்) நான் இருவரையும் அறிமுகப்படுத்தவே இல்லை. அறிமுகம் செய்துவைக்கிற வேலை எல்லாம் என்னிடம் கிடையாது. நான் ஏன் அதைச் செய்ய வேண்டும்? அதில் எனக்கு என்ன லாபம்?''

''உங்களுக்கு சுல்தானைத் தெரியுமா?''

''நன்றாகவே தெரியும். மிக நெருங்கிய நண்பர். அவரிடம் 25 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) டாலர்களுக்கு மேல் சொத்துகள் இருக்கின்றன. அவர் ஒரு முஸ்லிம். இருந்தாலும் என்னைப் பூஜிக்கிறார். முஸ்லிம் பெண்கள் வெளி ஆட்களுடன் பேச மாட்டார்கள். ஆனால், சுல்தானின் மனைவி என்னிடம் வந்து ஆசி பெறுவார். அவர்களின் அந்தரங்கமான பிரச்னைகளுக்கும்கூட நான் ஆலோசனை சொல்வேன். சுல்தான் என்னை மிகவும் மதிக்கிறார். நீங்கள் இருவரும் ஏன் சுல்தானை லண்டனில் போய்ச் சந்திக்கக் கூடாது? சுல்தானிடம் சொல்லி உங்களுக்கு அழைப்பு அனுப்பச் சொல்கிறேன். போகிறீர்களா? உங்களுக்கு விமான டிக்கெட்டை அவரே அனுப்புவார். எல்லாச் செலவுகளையும் அவரே ஏற்றுக்கொள்வார்.''

''நாங்கள் சாதாரணப் பத்திரிகைக்காரர்கள். எங்களை ஏன் அவர் உபசரிக்க வேண்டும்?''

''எனக்காக உங்களை உபசரிப்பார். நான் சொல்வதை அவர் செய்வார்.''

''ப்ரிதிஷ் நந்தியும், கே.என்.மாலிக்கும், ஏன் உங்களுக்கு எதிராகச் செயல்பட வேண்டும்?’'

''பணம்தான். லண்டன் 'அப்சர்வர்’ பத்திரிகை முதலாளி ரோவ்லண்ட் 15,000 என்றும் 20,000 என்றும் பணம் கொடுத்து, இந்த இருவரையும் விலைக்கு வாங்கிவிட்டார். உலகம் முழுவதும் இருக்கும் என் ஆட்கள் இதை உறுதிப்​படுத்தி இருக்கிறார்கள்.''

'' 'இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’ ஆசிரியர் ப்ரிதிஷ் நந்தி உங்களுடன் தொடர்பு​கொண்டாரா?''

''என்னைப்பற்றி எழுதுவதாக அறிவித்​து​​விட்டு என்னை நேரில் சந்திக்கப் பயப்படுகிறார். நந்தி ஒரு கோழை, எனக்கு அவரைத் தெரியும். என்னைப்பற்றி எழுதினால், அதன் விளைவுகளை நந்தி சந்திக்க வேண்டியிருக்கும். உலகம் முழுவதும் என் ஆட்கள் இருக்கிறார்கள். நந்தி எங்கு போய்விடுவார்? என் செல்வாக்கு நந்திக்குத் தெரியாது. ராஜீவ் காந்தியைக்கூட எனக்குத் தெரியும். சஞ்சய் காந்தியும், பிரதமர் இந்திராவும் உயிரோடு இருந்தபோது நான் அந்தக் குடும்பத்தில் ஒருவனாக இருந்தேன்.''

''திரேந்திர பிரம்மசாரியைப் போலவா?’'

நான் நல்ல நண்பன்... அதே சமயம் பயங்கரமான எதிரி..!

''திரேந்திர பிரம்மசாரி சாது அல்ல. அவர் ஒரு பிசினஸ்மேன். நான் அப்படி இல்லை. என் சக்தியாலும், யாகத்தின் மூலமாகவும் இந்திரா காந்தியை நான் பல முறை சிக்கல்களில் இருந்து காப்பாற்றி இருக்கிறேன்.''

''நீங்கள் சொல்வதை நம்ப முடியவில்லையே?''

''(சிரிப்பு) அமெரிக்க நாடாளுமன்றத்​தின் இரண்டு சபைகளிலும், ராஜீவ் காந்தி பேசியது எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா? முதலில் ராஜீவுக்குப் பேச அனுமதி கிடைக்கவில்லை. இந்திய தூதர் வாஜ்பாய், பயந்தபடி என்னிடம் வந்தார். இந்தியாவின் மானத்தைக் காக்க, நான்தான் ஜிம் ரைட்டிடம் பேசி, அதற்கு ஏற்பாடு செய்தேன். நான் தலையிடாவிட்டால், இந்தியாவின் மானம் காற்றில் பறந்திருக்கும்.''

''யார் இந்த ஜிம் ரைட்?!''

''அமெரிக்க நாடாளுமன்றத்தில் மிகவும் செல்வாக்குள்ள நபர். இவர் சொன்னால்தான் ரீகன் கேட்பார். ரைட் என்னுடைய சிஷ்யர். அதனால்தான் ப்ரிதிஷ் நந்தியையும் கே.என்.மாலிக்கையும் ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லுங்கள். நான் நல்ல நண்பன்... அதே சமயம், பயங்கரமான எதிரி. அவர்களிடம் சொல்லுங்கள்.''

'' 'இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’​யில் உங்களைப்பற்றித்தான் எழுதப்​போகிறார்கள் என்று எப்படித் தெரியும்?''

''எனக்குத் தெரியும். என் சக்தியால் அறிந்து​கொண்டேன். வீக்லிக்கு அந்தக் கட்டுரையை வெளியிட வேண்டாம் என்று தந்தி கொடுத்​திருக்கிறேன். வீக்லி கட்டுரையை நிறுத்திவைக்க, இந்திப் பட நட்சத்திர தம்பதி ராஜ் பாபரையும் ஸ்மிதா பாட்டீலையும் அனுப்பி இருக்கிறேன். அவர்கள் எப்படியும் நிறுத்தி​விடுவார்கள். அமிதாப்பச்சனும் ரேகாவும் ஊரில் இல்லை. இருந்தால், நந்தியுடன் பேசிக் கட்டுரையை நிறுத்திவிடுவார்கள். இந்த நாட்டின் பெரிய மனிதரைக்கொண்டு, அந்தக் கட்டுரை வெளி​வராமல் தடுக்க என்னால் முடியும்.''

''அந்தப் பெரிய மனிதர் உங்களுக்கு உதவ முன் வருவாரா?''

''ஏன் வராமல்? அவருடைய குருவுக்கு ஒரு பிரச்னை என்றால் சிஷ்யர் சும்மா இருப்பாரா? எனக்காக நீங்கள் ஏன் நந்தியுடன் பேசக் கூடாது? அந்தக் கட்டுரையை நிறுத்தினால், உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் தருகிறேன். சுல்தானிடம் உங்களை அறிமுகப்படுத்துகிறேன். ஆயுத விற்பனையாளர் கஷோகியிடம் சொல்லி அவரது சொகுசுப் படகில் உங்களைத் தங்கவைக்கிறேன்.''

'' 'அறிமுகம் செய்து வைக்கிற வேலை எல்லாம் கிடையாது’ என்று சொன்னீர்களே?''

''என் நண்பர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்​பட்டால் மட்டும் அறிமுகம் செய்துவைப்பேன். எனக்கு உதவி செய்பவர்​களுக்காக என்ன வேண்டுமானலும் செய்வேன். சாம, தான, பேத, தண்டம் எல்லாவற்றையும் பிரயோகித்து வீக்லி கட்டுரையை நிறுத்துங்கள் ஆன்லுக்கரில் உண்மையை எழுதுங்கள். உலகம் சந்திராசாமியின் பெருமைகளைப் புரிந்துகொள்ளட்டும்!''

- பி.ஆர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism