Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
தலையங்கம்

டந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பத்துக்குப் பத்து மார்க் வாங்கி அமோகமாகத் தேறி இருக்கிறது ஆளும் கட்சி. திருச்சி இடைத்தேர்தலிலும் வெற்றி ஆளும் கட்சிக்கே! நாற்பதாவது ஆண்டு விழா கொண்டாடும் ஒரு கட்சிக்கு இதைவிட பெரிய பரிசு வேறு இருக்க முடியாது. அதிலும், சட்டமன்றத் தேர்தலின்போது கூட்டணியாக இருந்த கட்சிகளின் துணைகூட இல்லாமலே கிடைத்துள்ள வெற்றி இது!

 மாநில அரசையும் உள்ளாட்சி அமைப்புகளையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஒரே கட்சியிடம் அளித்தால், எந்த அரசியல் மோதல்களும் இல்லாமல் தங்களுக்கான நலத் திட்டங்கள் செவ்வனே நிறைவேறும் என்ற நம்பிக்கையில் மக்கள் இந்தத்  தீர்ப்பை வழங்கியிருக்கக் கூடும். தட்டிக்கேட்கப் பலமான எதிர்க் கட்சிகள் இல்லை என்ற துணிச்சலில் அ.தி.மு.க-வினர் தவறுகளில் இறங்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் சேர்த்தே இதில் எதிரொலித்துள்ளது. இதனால் தங்கள் பொறுப்பு பன்மடங்கு கூடியிருப்பதை ஆளும் கட்சி புரிந்துகொள்வது அவசியம்.

கடந்த ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்களைத் தொடர்ந்து நீடிக்க அனுமதித்தால், அது உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க-வுக்கு ஆதரவாக எதிரொலிக்குமோ என்ற அச்சம் முதல்வருக்கு இருந்திருக்கலாம். அதனால்கூட, நல்ல சில திட்டங்களைக் காலி செய்திருக்கலாம். இனி, அந்தக் கண்ணோட்டத்தைக் கைவிட வேண்டும்.

முக்கியமாக, ஆட்சியில் அமர்ந்த இந்த நான்கு மாதங்களில் தாங்கள் செய்துவிட்ட எந்தச் சாதனைக்காகவும் உள்ளாட்சி வெற்றியை மக்கள் தரவில்லை என்பதை ஆளும்கட்சி புரிந்துகொள்ள வேண்டும். அதேசமயம், இதற்கு முன் ஆளும் கட்சியாக இருந்தவர்கள் மீது இதுவரை எடுத்த நடவடிக்கைகளை மக்கள் வரவேற்று இருக்கிறார்கள் என்பதையும்தான் இந்த முடிவுகள் காட்டுகின்றன.

அதாவது... தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் என்பதே மக்களின் எண்ணம். அப்படிப் பார்க்கையில்...

உள்ளாட்சித் தேர்தல் என்பது ஆளும் கட்சிக்குப் பரிசு மட்டும் அல்ல... மறக்கக் கூடாத படிப்பினையும்கூட!