Published:Updated:

சென்னையில் ஜெய் லலிதா...

ப.திருமாவேலன்

சென்னையில் ஜெய் லலிதா...

ப.திருமாவேலன்

Published:Updated:
##~##

''என்னுடைய நம்பிக்கை மெய்ப் பிக்கப்பட்டு இருக்கிறது!'' - சோகம் நிறைந்த நாளாகக் கழிந்த அக்டோபர் 21-ம் தேதி இரவில் பெங்களூரில் இருந்து வந்ததும் ஜெயலலிதா எழுத ஆரம்பித்த அறிக்கை யின் முதல் வரி!

 திருச்சி இடைத்தேர்தலில் கடந்த முறையைவிட இரண்டு மடங்கு கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் வென்றதுமே, ஜெயலலிதா நினைத்ததுதான் உள்ளாட்சித் தேர்தல் முடிவிலும் தெரிந்தது. ''இதே மாதிரியான ரிசல்ட்தான் உள்ளாட்சித் தேர்தலிலும் வரும்'' என்று அவர் அதிகாரிகளிடம் சொல்லி இருக்கிறார். அந்த நம்பிக்கை பலித்தது. ''உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெறுவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை'' என்று சொல்லிவிட்டு டெல்லி போனார் கருணாநிதி. அவரிடம் இரண்டாம் கட்டத் தலைவர் ஒருவர், ''லோக்கல் பாடி தேர்தல்ல தலைவரே...'' என்று எதையோ ஆரம்பிக்க, ''கனிமொழி வெளியே வந்தாத்தான் இந்த பாடிக்கு நிம்மதி'' என்று மட்டுமே கருணாநிதி சொன்னாராம். அந்த அளவுக்கு அவர் இந்தத் தேர்தலில் ஆர்வமே இல்லாமல் இருந்தார். அவரைவிட, தி.மு.க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னையில் ஜெய் லலிதா...

பிரமுகர்கள் இன்னும் அலட்சியமாகவே இருந்தார்கள். உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் ஜெய லலிதாவின் நம்பிக்கை மட்டும் அல்ல... தி.மு.க-வின் விரக்தியும் வெளிப்பட்டது.

முதன்முதலாக தமிழ்நாட்டில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு செல்வாக்கு என்பதை யும், மொத்த வாக்காளர்களைக் கட்சிரீதியாகக் கணக்கிடுவதையும் இந்த உள்ளாட் சித் தேர்தல் சாத்தியப்படுத்திவிட்டது.

ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் கூட்டணிக் கட்சியினர் அனைவரையும் முழுமையாக, வேண்டும் என்றே கழற்றிவிட்டார் ஜெயலலிதா. உள்ளாட்சித் தேர்தலைச் சந்தித்தார். வழக்கம் போல் கருணாநிதியும் வைகோவும் மட்டுமே ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசுவார்கள் என்று நினைத்த நேரத்தில், விஜயகாந்த், தா.பாண்டியன், ஜி.ராமகிருஷ்ணன், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரும் ஜெயலலிதாவை எதிர்த்து கச்சை கட்டி நின்றார்கள். எந்தப் பக்கமும் இல்லாமல் இருந்த டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோரும் ஜெ. மீது விமர்சன அம்புகள் பாய்ச்சினார் கள். மொத்தத்தில் பார்த்தால், அனைத்துக் கட்சித் தலைவர்களும் எதிர்த்தார்கள். இவை அனைத்தையும் நிராகரித்துவிட்டார்கள் மக்கள். ஜெயலலிதா மீது நாங்கள் வைத்த நம்பிக்கை கரைந்துபோகவில்லை என்பதை மக்கள் நிரூபித்துவிட்டார்கள் என்ற வகையில் ஜெயலலிதா உண்மையில் பெருமைப்படலாம். அதனால், அவருக்குப் பொறுப்பும் கூடி இருக்கிறது.

சென்னையில் ஜெய் லலிதா...

தமிழகத்தில் அதிக செல்வாக்கும் வாக்கு வங்கியும் உள்ள கட்சியாகச் சொல்லப்படுவது அ.தி.மு.க. அது இந்தத் தேர்தலின் மூலமாக மீண்டும் நிரூபணம் ஆகி இருக்கிறது.

''உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியின் வெற்றி ஒன்றும் ஆச்சர்யமும் அல்ல... புதுமை யும் அல்ல. கடந்த காலத்தில் தி.மு.க. ஆளும் பொறுப்பை ஏற்றபோது, உடனடியாக உள் ளாட்சித் தேர்தலை நடத்தி, பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி இருக்கிறோம்!'' என்று இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து கருணாநிதி கருத்துச் சொல்லி இருக்கிறார். தமிழ்நாட்டில் இருக்கிற 10 மாநகராட்சிகளில் ஒன்றைக்கூட தி.மு.க-வால் கைப்பற்ற முடியவில்லை. 125 நகராட்சிகளில் 23 இடங்களை மட்டுமே தி.மு.க-வால் கைப்பற்ற முடிந் துள்ளது. ஜெயலலிதா 88 இடங்களை அள்ளியுள்ளார். சென்னையைப் பொறுத்தவரையில் சுமார் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளரை சைதை துரைசாமி சரித்துள்ளார். இவையும் 'ஆச்சர்யமும் அல்ல... புதுமையும் அல்ல’  என்று சொல்வாரா கருணாநிதி? கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாங்கிய வாக்குகளைவிட இன்னும் கொஞ்சம் சறுக்கல்களைத்தான் அந்தக் கட்சி சம்பாதித்து உள்ளது. நில மோசடி வழக்குகளில் முன்னாள் அமைச்சர்கள் வரை முக்கியப் புள்ளிகள் கைதானது இதற்குக் காரணமாக இருக்கலாம். அழகிரியின் கோட்டையாக உருவகப்படுத்தப்பட்ட மதுரை மாநகரில், 100-க்கு மொத்தம் 12 வார்டுகளை மட்டும்தான் கைப்பற்றி உள்ளது தி.மு.க. இவை அனைத்துமே நல்லதற்கான அடையாளம் அல்ல. தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள தலைமைப் பஞ்சத்தை யும் போர்க் குணம் இன்மையையும் தான் இந்த முடிவுகள் எதிரொலிக்கின்றன. வயது முதிர்ந்த நிலையில் கருணாநிதியால் பிரசாரத்துக்குச் செல்ல முடியாது. ஆனால், அவருக் குப் பதிலாகச் சென்ற ஸ்டாலினால்,  பொதுமக்களை முழுமையாக ஈர்க்க முடியாதது சோகம்தான். அவரது தூண்டுதலால் தொண்டர்கள் மத்தியில் உற்சாகமும் பிறக்கவில்லை. உண்மையான தி.மு.க. தொண்டர்கள் வெறும்

சென்னையில் ஜெய் லலிதா...

பார்வையாளர்களாக மட்டுமே இந்தத் தேர்தலில் இருந்தார்கள். பசப்புச் சமாதானங்களை விடுத்து, ஆக்கபூர்வமான காரியங்களை கருணாநிதி செய்தாக வேண்டும்!

விஜயகாந்த் சாயம் அநியாயத்துக்கு வெளுத்துவிட்டது இதில்! அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைப்பதற்கு முன்பு வரைக்கும் சுமார் எட்டு சதவிகித வாக்கு வங்கியை வைத்திருந்தவர் விஜயகாந்த். அவரால் எந்த மாநகராட்சியையும் கைப்பற்ற முடியவில்லை. நகராட்சியும் இரண்டு மட்டுமே சாத்தியமானது. அவரோடு கூட்டணி அமைத்த மார்க்சிஸ்ட் இரண்டு இடங்களைக் கைப்பற்றி உள்ளது. இதுவும்கூட, விஜயகாந்த் தனித்து நின்று இருந்தால் சாத்தியம் ஆகி இருக்குமா எனத் தெரியவில்லை. தி.மு.க., அ.தி.மு.க. பிடிக்காதவர்களின் வாக்குகளை இதுவரை விஜயகாந்த் பெற்றிருந்தார். அ.தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்ததால், அது குறைந்தது. மேலும், இந்த நான்கு மாதங்கள் அவரிடம் எந்த பெர்ஃபாமென்ஸும் இல்லை. இது அவரைப் பற்றிய எந்த பிம்பத்தையும் மக்கள் மனதில் கொடுக்கவில்லை.யாரோடாவது இணங்கிச் சென்று சாதிப்பது அல்லது யாரையாவது எதிர்த்துச் சண்டை போடுவது என்ற இரண்டு வழிமுறைகளும் இல்லாமல் இருந்த ஊசலாட்ட அரசியல்தான் விஜயகாந்த்துக்கு வாக்குகளைக் குறைத்துள்ளது. அனைவருமே தனித்து நிற்கும்போது இவர் மார்க்சிஸ்ட்டுகளை இணைத்துக்கொண்டார். அதையும் கழித் தால், மிஞ்சுவது சொற்பமானதாகவே இருக்கும்!

சென்னையில் ஜெய் லலிதா...

''எதிர்கால வெற்றிக்கு நம்பிக்கை அளிக்கிறது'' என்று வைகோ சொல்லி இருக்கிறார். அதற்கு வசதியாகவே, ம.தி.மு.க. கணிசமான வாக்குகளை வாங்கிக் காட்டிஉள்ளது.  திருச்சி, தூத்துக்குடி மாநகராட்சிகளில் மூன்றாவது இடமும் மற்ற மாநகராட்சிகளில் நான்காவது இடமும் பிடித்த அந்தக் கட்சி, குளித்தலை நகராட்சியைக் கைப்பற்றி உள்ளது. பேரூராட்சித் தலைவர்களில் ஏழு பேர் வென்றுள்ளார்கள். நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் கணிசமானவை கிடைத்துள்ளன. இதுவரை எதுவும் இல்லாத கட்சி மீது இப்போது கொஞ்சம் மழை பெய்துள்ளது.

பாரதிய ஜனதா இரண்டு நகராட்சிகளைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு நகராட்சிகள் கிடைக்கவில்லை என்றாலும், 24 பேரூராட்சித் தலைவர் பதவிகளைப் பிடித்தது பெருமைப்படத்தக்கதே. பிரபலமான தலைவர்கள், அடிப்படையான கட்டமைப்பு, பரபரப்பான பிரசாரம் ஆகியவை இல்லாவிட்டாலும், தேசியக் கட்சி களுக்கான இடம் இன்னமும் தமிழகத்தில் மிச்சம் இருக் கிறது என்பதைக் காட்டுவதாக இது இருக்கிறது.

சென்னையில் ஜெய் லலிதா...

அ.தி.மு.க-வும், தி.மு.க-வும், தே.மு.தி.க-வும், ம.தி.மு.க-வும், காங்கிரஸும் பி.ஜே.பி-யும் ஆன ஆறு கட்சிகளும் தமிழக மக்களின் எண்ணங்களில் நிரந்தரமாகத் தங்கி நிற்கும் கட்சிகளாகப் பார்க்க, இந்தத் தேர்தல் முடிவுகள் ஆதாரமாக இருக்கின்றன. அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் இவற்றை மையப்படுத்தியதாக அமையும். அநேகமாக அ.தி.மு.க, பி.ஜே.பி, ம.தி.மு.க. ஓர் அணியாகவும்... தி.மு.க, காங்கிரஸ், தே.மு.தி.க. ஆகிய மூன்றும் ஓர் அணியாகவும் நின்று தேர்தலைச் சந்திக்கலாம். தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகள் இதை நோக்கியதாகவே அமையும் எனத் தெரிகிறது.

இது சிலருக்கு முன்கூட்டியே சொன்னதாகத் தெரியலாம். ஆனால், முன்யோசனையுடன் சொல்வது என்பதைத் தலைவர்கள் உணர்வார்கள்!