Published:Updated:

மிஸ்டர் கழுகு: உச்சத்தில் ராம மோகன ராவ்!

மிஸ்டர் கழுகு: உச்சத்தில் ராம மோகன ராவ்!
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: உச்சத்தில் ராம மோகன ராவ்!

மிஸ்டர் கழுகு: உச்சத்தில் ராம மோகன ராவ்!

மிஸ்டர் கழுகு: உச்சத்தில் ராம மோகன ராவ்!

மிஸ்டர் கழுகு: உச்சத்தில் ராம மோகன ராவ்!

Published:Updated:
மிஸ்டர் கழுகு: உச்சத்தில் ராம மோகன ராவ்!
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: உச்சத்தில் ராம மோகன ராவ்!

‘‘ஆட்சியிலும், கட்சியிலும் அதிரடி மாற்றங்களைச் செய்து பரபரப்பாய் இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா” என்றபடி நம்முன் லேண்ட் ஆனார் கழுகார்.

‘‘தலைமைச் செயலாளர் பதவியில் இருந்த ஞானதேசிகன், டிட்கோ சேர்மனாக போய்விட்டார். முதலமைச்சரின் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் புதிய தலைமைச் செயலாளர் ஆக்கப்பட்டு உள்ளார். நத்தம் விசுவநாதனுக்கு அடிமேல் அடிகொடுக்கப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வமும் இந்தத் தாக்குதலில் இருந்து தப்பவில்லை. அவரது மகனிடம் இருந்து பதவி பறிக்கப்பட்டு உள்ளது. ‘அம்மாவுக்கு இப்போதுதான் பல உண்மைகள் தெரிய ஆரம்பிக்கின்றன’ என்று தோட்டத்தின் உள்விவகாரங்​களை அறிந்தவர்கள் சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள்.”

மிஸ்டர் கழுகு: உச்சத்தில் ராம மோகன ராவ்!

‘‘வரிசையாகச் சொல்லும்!”

‘‘ஆட்சியில் மீண்டும் அமர்ந்த பிறகு கட்சியிலும், நிர்வாகத்திலும் ஒரே நேரத்தில் ஜெயலலிதா கைவைத்தது அனைவருக்கும் அதிர்ச்சிதான். புதன்கிழமை காலை வெளியான மாற்றம் செய்யப்பட்ட கட்சி நிர்வாகிகள் பட்டியலில் கடந்த ஆட்சியில் கோலோச்சிய நத்தம் விசுவநாதனின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு இருந்தது. அன்று மாலை நிர்வாக ரீதியான மாற்றத்தில் நத்தம் விசுவநாதனுக்கு நெருக்கமாக இருந்த ஞானதேசிகன் பதவி பறிக்கப்பட்டுள்ளது.”

‘‘இரண்டுக்கும் தொடர்பு உண்டா?”

‘‘ஞானதேசிகன் கடந்த அ.தி.மு.க ஆட்சியின் இறுதியில்தான் தலைமைச் செயலாளர் பதவிக்கு வந்தவர். அதற்கு முன் பல ஆண்டுகள் தமிழக மின்வாரியத்தின் தலைவராகக் கோலோச்சியவர். அந்தத் துறையின் அமைச்சராக இருந்த நத்தம் விசுவநாதன் தயவில்தான் கார்டன் குட் புக் லிஸ்ட்டில் இடம்பிடித்து தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கும் வந்தார். தமிழக மின்வாரியத்துக்குத் தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கியது முதல் அதானி குடும்பம் தமிழகத்தில் மின் தொழிற்சாலை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதுவரை அனைத்திலும், நத்தம் விசுவநாதனுக்குப் பின்புலமாக இருந்துள்ளார் ஞானதேசிகன் என்கிறார்கள்.

‘அ.தி.மு.க-வில் உள்ளவர்களுக்கு சீட் வாங்கி தருவதாகக்  கட்சிக்காரர்களிடம் வசூலில் ஈடுபட்டதாகக் கூறி நத்தம் மீது அ.தி.மு.க தலைமை கடும் கோபத்தில் இருந்தது. அதனால்தான் ஆத்தூரில் நிறுத்தப்பட்டு ஆட்டம் காட்டப்பட்டார் நத்தம் விசுவநாதன்’ என்றும் சொல்கிறார்கள். மேலே இருந்தவர்கள் நினைத்த மாதிரியே நத்தம் தோற்றுப் போனார். தன்னை திருப்பரங்குன்றத்தில் நிறுத்துவார் என்று நத்தம் நம்பினார். ஆனால், அவருக்கு எதிரியான திண்டுக்கல் சீனிவாசனுக்கு அமைச்சர் பதவியை ஜெயலலிதா கொடுத்தார். நத்தத்திடம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவியை பறித்தார்.”

‘‘இவ்வளவு கோபத்துக்கு என்ன காரணம்?”

மிஸ்டர் கழுகு: உச்சத்தில் ராம மோகன ராவ்!

‘‘மாவட்டச் செயலாளர் பதவி பறிப்புக்கான காரணம் குறித்து திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க-வினர் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? ‘ உண்மையான அ.தி.மு.க-காரங்களுக்கு அம்மாவோட அதிரடி நடவடிக்கை மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கு. எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் தப்பு செஞ்சா, தண்டனை உண்டுங்கிற நம்பிக்கையை அம்மா மீண்டும் நிரூபிச்சுட்டாங்க. 10 வருஷமா வெளிய சொல்ல முடியாம கட்சிக்காரங்க புழுங்கிக் கிடந்தாங்க. இப்பத்தான் எல்லா முகத்திலயும் சந்தோஷம் தெரியுது. 1994-ம் வருஷம் வரைக்கும் கடன் வாங்கி, தீபாவளி, பொங்கலுக்கு கிளைச் செயலாளருக்கு 200 ரூபாய் பணம் கொடுப்பதை வழக்கமா வெச்சிருந்தாரு விசுவநாதன். ஆனா, இப்ப, இத்தனை கோடி பணம் இருந்தும் கட்சிக்காரனுக்கு ஒரு ரூபாய் கொடுக்க மனசு வரலை. இந்த 5 வருஷத்துல விசுவநாதனுக்கு நெருக்கமான ஒரு சிலரைத் தவிர, கட்சிக்காரங்க யாரும் ஒரு ரூபாய் சம்பாதிக்கலை. எதை எடுத்தாலும் காசுதான். கட்சிக்காரனா இருந்தாலும் கமிஷன் கொடுத்தாத்தான் காரியம் நடக்கும். வயர்மேன் வேலைக்கு டிரான்ஸ்ஃபர் கேட்டு மனு எழுதிக்கொடுத்தாலே, ‘வேக்கன்சி’ இருக்கறதைப் பொருத்து டிரான்ஸ்ஃபர் போட்டுடுவாங்க. ஆனா, அதுக்குக்கூட காசு வாங்கிட்டுத்தான் செஞ்சாங்க. திண்டுக்கல் மாவட்டத்தோட அதிகார மையமா வேம்பார்பட்டி மாறிப்போச்சு. ரேஷன் கடை வேலைக்கு ஆள் எடுத்தப்ப, வீட்டுல கவுன்டர் போட்டு பணத்தை வசூல் செஞ்சாங்க. அந்த அளவுக்குப் பணம் பணம்னு அலைஞ்சாங்க. விசுவநாதன் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமே தொண்டர்களை மதிக்காததுதான்’ என்றார்கள்.’’

‘‘ஓஹோ!”

‘‘திண்டுக்கல் வட்டாரத்தில் என்ன சொல்கிறார்கள் என்றால், ‘எம்.ஜி.ஆர் காலத்துல இருந்து கட்சியில இருக்கிற சீனியர்களை எல்லாம் ஒதுக்கிட்டு, தனக்கு விசுவாசமான ஆளுங்களுக்குப் பொறுப்புகளை வாங்கிக் கொடுத்தாரு. போன முறை (2001-2006) போக்குவரத்து மந்திரியா இருந்தப்ப அடக்கி வாசிச்ச, அவரோட மருமகன் கண்ணன், இந்த முறை (2011 - 2016) ரொம்ப ஆட்டம் ஆடிட்டாரு. விசுவநாதனோட வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமே கண்ணன்தான். தமிழ்நாட்டுக்கு விசுவநாதன் மந்திரின்னா, திண்டுக்கல் மாவட்டத்துக்கு கண்ணன் மந்திரி. மாவட்டத்துல இருக்கிற அத்தனை அதிகாரிகளும் கண்ணன் சொல்றதைத்தான் கேட்கணும்ங்கிறது எழுதப்படாத சட்டம். 40 லட்ச ரூபாய்க்கு மேல மதிப்புள்ள டெண்டர்கள், கண்ணன் சொல்ற ஆளுங்களுக்குத்தான் கிடைக்கும். கக்கூஸ் கட்டுறதுல இருந்து, பெரிய பெரிய கட்டடம் கட்டுறது வரைக்கும் அத்தனையிலும் அவங்க ஆளுங்கதான். அதே போல, அனுமதி இல்லாத பார்களுக்கு கணக்கே இல்லை. இதெல்லாம்தான் விசுவநாதனுக்கு வினையா முடிஞ்சுப்போச்சு. விசுவநாதனோட பையன் அமர்நாத், பக்காவா முதலீடு பண்ற வேலையை கச்சிதமா செய்ய ஆரம்பிச்சாரு. சமீபத்துல அமர்நாத்தோட அதிகப்படியான வெளிநாட்டுப் பயணங்கள்தான், விசுவநாதன் அம்மாகிட்ட மாட்டுனதுக்கு அடிப்படை காரணம். ராமநாதபுரத்துல அதானி குழுமத்துக்கு இடம் வாங்கிக்கொடுத்தது, சிங்கப்பூர்ல ரியல் எஸ்டேட் துறையில முதலீடுன்னு தோண்டத்தோண்ட வந்துகிட்டே இருக்குனு அதிகாரிகளே ஆச்சர்யப்படுறாங்க. கரூர் அன்புநாதன் மாதிரியே வெளியே தெரியாத குட்டி குட்டி பினாமிங்க பலபேர் இருக்காங்க. நத்தத்துல இருக்கிற மூன்றெழுத்து கல்லூரி டிரஸ்ட் மூலமா நடக்குறதா சொல்லிக்குவாங்க. ஆனா, அது யாரோடதுன்னு உலகத்துக்கே தெரியும். காலேஜுக்குப் பின்னால அரசுக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலத்தை அபகரிச்சுட்டாங்க என்றும் சொல்கிறார்கள்!”

‘‘ராம மோகன ராவ் தலைமைச் செயலாளர் ஆகிவிட்டாரே?”

மிஸ்டர் கழுகு: உச்சத்தில் ராம மோகன ராவ்!

‘‘ராம மோகன ராவ் கடந்த ஐந்து ஆண்டுகளாக முதல்வரின் இரண்டாவது செயலாளராக இருந்தார். கடந்த ஜூன் 1-ம் தேதி முதல்வரின் முதன்மைச் செயலாளராக மாற்றப்பட்டவர், அடுத்த ஒரு வாரத்தில் மீண்டும் தலைமைச் செயலாளர் என்ற அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்​டுள்ளார். முதல்வர் கோட்டைக்கு அடிக்கடி வரமுடியாத நிலை இருப்பதால் பல்வேறு ஃபைல்கள் தேக்கம் கண்டுள்ளன. அதைத் தடுக்கவும், தனக்கு நம்பிக்கையானவரை முக்கியப் பொறுப்பில் வைக்கவேண்டும் என்று கருதியே இந்தப் பொறுப்புக்கு ராம மோகன ராவை டிக் செய்துள்ளார் முதல்வர். ராம மோகன ராவ் இன்னும் ஒரு ஆண்டு மூன்று மாதங்களில் ஓய்வுபெற உள்ளார்.”

‘‘டாக்டர் ராமதாஸ் கொடுத்துள்ள அறிக்கை​யைப் பார்த்தீரா?”

‘‘பார்த்தேன். பல்வேறு பாயின்ட்களைவைத்து வாதாடி உள்ளார் ராமதாஸ். ‘ஜெயலலிதா ஆட்சியில் தகுதிக்கும், திறமைக்கும் மரியாதை இல்லை. ஊழலுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளுக்கும், அதிகாரத் தரகர்களாக இருக்கும் அதிகாரி​களுக்கும்​தான் மரியாதை என்பதற்கு புதிய தலைமைச் செயலாளராக ராம மோகன ராவ் நியமிக்கப்பட்டி​ருப்பதுதான் உதாரணம்’ என்று சொல்லும் ராமதாஸ், ‘தலைமைச் செய​லாளர் நிலையில் இருக்கும் அதிகாரி​களில் மூத்தவரை தலைமைச் செயலாள​ராக நியமிப்பதுதான் இதுவரை கடைப்பிடிக்கப்​பட்டு வந்த மரபு. ஆனால், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் இந்த மரபு காற்றில் பறக்கவிடப்பட்டது. தமிழ்நாடு பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் 24 பேர் தலைமைச் செயலாளர் நிலையில் உள்ளனர். இவர்களில் ராம மோகன ராவ் 23-வது இடத்தில் உள்ளார். தலைமைச் செயலாளர் நிலையில் உள்ள அதிகாரிகளில் மத்திய அரசுப் பணிகளில் இருப்பவர்களை விலக்கிவிட்டுப் பார்த்தால், 13 பேர் தமிழக அரசுப் பணிகளில் உள்ளனர். அவர்களில்  ராம மோகன ராவ் 12-வது நிலையில் உள்ளார். ராம மோகன ராவைவிட தகுதியும், திறமையும் உள்ள அதிகாரிகள் 22 பேர் இருக்கும் நிலையில் ராம மோகன ராவுக்கு தலைமைச் செயலாளர் பதவியை முதல்வர் ஜெயலலிதா வழங்கியிருக்கிறார். இவ்வளவு பேரை விலக்கிவிட்டு ராம மோகன ராவை தலைமைச் செயலராக நியமிக்கும் அளவுக்கு அவருக்கு சிறப்புத் தகுதி ஏதேனும் உள்ளதா?’ என்றும் கேள்வியை எழுப்பி உள்ளார்.”

மிஸ்டர் கழுகு: உச்சத்தில் ராம மோகன ராவ்!

‘‘ம்!”

‘‘அடுத்துச் சொல்லி இருக்கும் வார்த்தைகள்தான் முக்கியமானவை. ‘ மூத்த அதிகாரிகளுக்கு இல்லாத சில சிறப்புத் தகுதிகள் ராம மோகன ராவுக்கு உள்ளன. ஆட்சியாளர்களின் ஊழல்களுக்கு உதவியாக இருப்பார், அதிகாரத் தரகராக இருப்பார், அமைச்சர்கள் எந்தெந்த பணிகளுக்காக யாரிடம் பேரம் பேசுகின்றனர், அதற்காக எவ்வளவு தொகை கைமாறுகிறது என்பன உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தெரிவிப்பதுதான் அவருக்கு உள்ள தகுதிகளாகும். கடந்த 5 ஆண்டுகள் முதலமைச்சரின் செயலாளராகப் பணியாற்றியபோது தமது திறமைகளை அவர் சிறப்பாக வெளிப்படுத்தியதற் கான பரிசுதான் இந்தப் பதவி என்று கூறப்படுகிறது’ என்று குற்றம்சாட்டி உள்ளார் ராமதாஸ்.”

‘‘இதை எல்லாம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம்தான் கேட்க வேண்டும்!”

‘‘அவர்கள் எப்படிக் கேட்பார்கள்? முதலமைச்சர் அலுவலகத்தில் சிறப்புப் பணி அதிகாரியாக சாந்தா ஷீலா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். 6 ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றவருக்கு மீண்டும் பதவி தரப்பட்டு உள்ளது. ஓய்வுபெற்ற ஷீலா பாலகிருஷ்ணன் அரசு ஆலோசகராகவும், ஓய்வு பெற்ற வெங்கட்ரமணன் முதலமைச்சரின் முதலாவது செயலாளராகவும் இருக்கிறார்கள். அத்தோடு இன்னொரு ஓய்வுபெற்ற அதிகாரி!”

‘‘என்ன ஆனார் அன்புநாதன்?”

‘‘கரூர் மாவட்டம் அய்யம்பாளையம் அன்புநாதன் வீட்டில் தேர்தல் சமயத்தில் கைப்பற்றப்பட்டது கோடிக்கணக்கான பணம். அவர் மீது மத்திய அரசின் எம்பளம் மற்றும் பெயர் ஆகியவற்றைத் தவறாகப் பயன்படுத்துதல், வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க பதுக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வேலாயுதம்பாளையம் போலீஸார் இரண்டு வழக்குகள் பதிவுசெய்தனர். முதல் வழக்கில் கடந்த மே மாதம் 4-ம் தேதி ஜாமீன் வாங்கிவிட்ட அன்புநாதன்,  கீழ் நீதிமன்றத்தில் ஆஜராகி, கரூர் வேலாயுதம்பாளையத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி கையெழுத்து இடவேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், ஒருநாள்கூட கையெழுத்திடாமல், தலைமறைவாக இருந்தார்.”

மிஸ்டர் கழுகு: உச்சத்தில் ராம மோகன ராவ்!

‘‘ஆமாம்!”

‘‘கடந்த 5-ம் தேதி, கருணாநிதி இதைக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டார். சரண் அடைய அவகாசம் கேட்டு கோர்ட்டுக்குப் போனார் அன்புநாதன். மறுஉத்தரவு பிறப்பிக்கும்வரை தினமும் காலை, மாலை  இரண்டுவேளையும் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றார்கள். இதனை அடுத்து, அன்புநாதன் கரூர் குற்றவியல் நீதிபதி ரேவதி முன்பு ஆஜாரானார்.”

‘‘என்ன சொன்னாராம் அன்புநாதன்?”

‘‘அன்புநாதன், ‘இதெல்லாம் எனக்கு சாதாரண விஷயம், நான் இதிலிருந்து ஈஸியாக வந்துடுவேன், ஒருநாள்கூட உள்ள இருக்க முடியாது என்பதில் தெளிவாக இருந்து வேலை செய்தார். அப்படியே ஜாமீனும் வாங்கிய அன்புநாதன், சமீபத்தில் நண்பர்களிடம், ‘என்னையே செந்தில்பாலாஜி போட்டுப் பார்க்கிறார். மாவட்டச் செயலாளரும் போச்சு, மந்திரியும் போச்சு. பணம் கொடுத்த விவகாரத்தில் வேட்பாளரையே மாற்றினாலும் மாற்றலாம். சொல்வதற்கில்லை. எனக்கு ஒன்றும் இல்லை. செந்தில்பாலாஜிக்கு இது சோதனைக் காலம்தான். ஒரு கை பார்க்கிறேன். எப்படி ஜெயிப்பார்ன்னு பார்த்துருவோம்’ என்றாராம்” என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார், ‘‘இவரது பணத்துக்கும் நத்தம் விசுவநாதனுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று மேலிடம் விசாரணை நடத்தி வருகிறது” என்றபடி பறந்தார்.