Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

Published:Updated:
கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

எஸ்.பி.விவேக், தாதம்பட்டி.
தே.மு.தி.க-வின் எதிர்காலம் எப்படி இருக்கும்?


வெற்றி பெறுகிறாரோ, இல்லையோ பயம் காட்டும் அளவுக்காவது தே.மு.தி.க இருந்தது. தனக்கு எட்டு சதவிகித வாக்குகள் இருக்கிறது என்று பி.ஜே.பி தலைமையை மிரட்டி 14 நாடாளுமன்றத் தொகுதிகளை விஜயகாந்த் வாங்கினார். தனது செல்வாக்கு தக்க வைக்கப்பட்டு உள்ளதாகக் காட்டி மக்கள் நலக் கூட்டணியில் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வாங்கினார் விஜயகாந்த். ஆனால், இனி இது சாத்தியம் இல்லை. இந்தச் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க அவருக்கு 50 தொகுதிகளைத் தரத் தயாராக இருந்தது. ஒருவேளை, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு விஜயகாந்த் போக நினைத்தால் அவருக்கான இடங்கள் இரண்டு அல்லது மூன்று என்றுதான் தி.மு.க-வே சொல்லும். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் யார் அவரை நம்பிச் சேருவார்கள்? கூடுதல் வாக்குகளை மட்டுமல்ல, சொந்த வாக்கு வங்கியைக்கூட தே.மு.தி.க இழந்துவிட்டதைத்தான் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இதைவைத்து கணித்துக் கொள்ளுங்கள் தே.மு.தி.க-வின் எதிர்காலத்தை!

கழுகார் பதில்கள்

சம்பத்குமாரி, பொன்மலை.
ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆனதைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்த மத்தியப்பிரதேச ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு அந்த மாநில அரசு நோட்டீஸ் கொடுத்துள்ளதே?


பாராட்டிய அதிகாரிக்கு நோட்டீஸ் கொடுத்தால், இங்கு பல ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் தேர்தல் வேலையே பார்த்தார்களே! ஆளும் கட்சியின் அறிவிக்கப்படாத மாவட்டச் செயலாளர்களாக மாறி யாரை வேட்பாளர்களாகப் போடலாம், எப்படி பணத்தை அனுப்பலாம் என்றெல்லாம் ஆலோசனை சொன்ன அதிகாரிகளை வைத்துக்கொண்டு நேர்மையான, நிர்வாகத்தை எப்படி உருவாக்க முடியும்?

டி.சி.இமானுவேல், மயிலாடுதுறை.
ப.சிதம்பரத்துக்கு மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவி, ப.சிதம்பரத்தின் ஆதரவாளரான காரைக்குடி கே.ஆர்.ராமசாமிக்கு சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவி, விஜயதரணிக்கு கொறடா... இவற்றை எல்லாம் பார்க்கும்போது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதவி ஆட்டம் கண்டுவிட்டது என்று சொல்லலாமா?


இளங்கோவன் தனக்கான எதிர்குரலாக இதனை எடுத்துக்கொண்டு மற்றவர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்ல இனியாவது பழக வேண்டும். அரசியலில், அதுவும் காங்கிரஸில், அதுவும் மாநிலத் தலைவராக இருக்கும்போது, அதுவும் மனதில் பட்டதை பேசுபவராக இருக்கும்போது இளங்கோவனுக்கு எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும். அந்தக் கோபங்களை பொதுமேடைகளில் காட்டக் கூடாது. அரவணைத்துச் செல்வதன் மூலமாகத்தான் அவர் அரசியலில் வெல்ல முடியும்.

அதேநேரத்தில் இவர்களுக்கு பதவிகள் தருவதன் மூலமாக இளங்கோவனை டெல்லித் தலைமை தூக்கப் போகிறது என்று சொல்ல முடியாது.

பி.ஜே.பி ஆட்சிக்கு எதிரான குரலை மாநிலங்கள் அவையில் வைக்க ப.சிதம்பரம் அவர்களுக்குத் தேவைப்படுகிறார். இங்கு சட்டமன்றத்தில் காரைக்குடி ராமசாமிதான் மூத்த உறுப்பினர். விஜயதரணிக்கு ஏதாவது பதவி கொடுத்தாக வேண்டிய நிர்பந்தம். இவைதான் அந்த நியமனங்களுக்குக் காரணம். இளங்கோவனைத் தூக்க டெல்லித் தலைமை நினைத்தால் அதனை இவ்வளவு சுற்றிவளைத்துச் செய்யாது. ஒரே நாளில்செய்து முடித்துவிடும்.

எஸ்.பூவேந்தரசு, சின்னதாராபுரம்.

ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆவதை வைகோ தன் வாழ்நாளில் ஒருநாள் காணும் வாய்ப்பு எதிர்காலத்தில் அமையுமா?


நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஸ்டாலின் முதல்வர் ஆவதைத் தடுப்பதற்காகத்தான் கட்சி நடத்துகிறாரா வைகோ?!

எம்.எஸ்.விஸ்வநாதன், துறையூர்.
அதிக பலத்துடன் இருக்கும் எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலினை, முதல்வர் ஜெயலலிதா எப்படி எதிர்கொள்வார்?


சகோதர பாசத்துடன் எதிர்கொள்வார் என்றே இப்போதைக்குச் சொல்ல முடியும்!

எஸ்.கிருஷ்ணராஜ், அதிகாரட்டி.

இடைத்தேர்தலாவது நியாயமாக நடக்குமா?


அதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. இரண்டு தரப்புமே பணம் கொடுக்கிறது. இரண்டு தரப்புமே அடுத்த தரப்பு பணம் கொடுப்பதைத் தடுப்பது இல்லை. கூட்டுத் தவறுகளுக்குக் கைகோக்கும்போது நியாயத்தை யாரால் நிலைநாட்ட முடியும்?

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.
புதுச்சேரி கவர்னர் கிரண் பேடியின் செயல்பாடுகள் பற்றி?


அனைத்து அரசு ஊழியர்களும் காலை 9 மணிக்கு அலுவலகம் வந்துவிடவேண்டும், மாலை 6 மணிவரை இருந்து மக்கள் குறைகளைக் கேட்க வேண்டும், சமூக விரோதச் செயல்கள் குறித்து 1031  என்ற எண்ணில் தகவல் தரலாம், புகார் தருபவர்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும், கொடுத்த தகவல் உண்மையாக இருந்தால் சன்மானம் தரப்படும், மக்கள் வாங்கும் அனைத்துப் பொருட்களுக்கும் ரசீது தரவேண்டும், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள், எந்த வி.ஐ.பி-க்காகவும் போக்குவரத்து நிறுத்தப்படாது, அவர்களது வாகனத்தில் சைரன் இருக்காது, ஆளுநர் மாளிகைக்கு வந்து தினமும் மாலை 5 மணிக்கு பொதுமக்கள் புகார் தரலாம் ... இப்படி பல்வேறு கட்டளைகளை கிரண் பேடி வெளியிட்டுள்ளார். புதுச்சேரி ‘புதுமைச்சேரி’யாக மாறலாம்.

எம்.சண்முகம், கொங்கணாபுரம்.

மக்கள் நலக் கூட்டணியின் அடுத்த திட்டம் என்ன?

கூட்டில் இருந்து பறவைகள் பறந்துவிடாமல் பார்த்துக்கொள்வதுதான்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002

kalugu@vikatan.comஎன்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!