Published:Updated:

வருது 50/50 வருது... - உள்ளாட்சியில் இனி பெண்ணாட்சி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வருது 50/50 வருது... - உள்ளாட்சியில் இனி பெண்ணாட்சி!
வருது 50/50 வருது... - உள்ளாட்சியில் இனி பெண்ணாட்சி!

ஜோதிமணி

பிரீமியம் ஸ்டோரி
வருது 50/50 வருது... - உள்ளாட்சியில் இனி பெண்ணாட்சி!

`உள்ளாட்சி அமைப்புகளில் நடை முறையில் இருக்கும் பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு, தமிழ்நாட்டில் 50 சதவிகிதமாக உயர்த்தப்படும்' என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முன்னெடுப்பு இது. எனினும், இது சர்ச்சைகளைக் கிளப்பவும் தவறவில்லை.

இது தேவை இல்லை என்பவர்கள் முன்வைக்கும் வாதம், `பெண்களால் சிறப்பாகச் செயல்பட முடியாது. அவர்களுக்கு அரசியல், நிர்வாக அறிவு குறைவு. 33 சதவிகித இடஒதுக்கீட்டிலேயே பெரும்பாலும் பெண்கள், ஆண் தலைவர்களுக்குப் பினாமிகளாகவும், கையெழுத்து மட்டுமே போடும் தலையாட்டிப் பொம்மைகளாகவும்தான் இருக்கிறார்கள்' என்பதுதான்.

சுதந்திரம் அடைந்து ஏறக்குறைய 46 ஆண்டுகள் வரையிலும், மக்கள்தொகையில் சரிபாதியாக உள்ள பெண்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய வர்களே அரசியல் அதிகாரத்தில் அமர முடிந்திருக்கிறது. 100 கோடி மக்களை சில ஆயிரம் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குப் பெயர்தான் உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் என நாம் நம்பியிருந்த காலம் அது. அதற்கான நியாயங்களும் இருந்தன.

அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும்.

அது ஒரு குறிப்பிட்டப் பிரிவினரிடம் மட்டுமே தொடர்ந்து தக்கவைக்கப்பட்டிருக்காமல், சாமானியரும் தலைமை இடத்துக்கு முன்னேறி தங்கள் பிரச்னைகளுக்கான தீர்வுகளைப் பெற வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப் பட்டதுதான் பஞ்சாயத்ராஜ்.

பஞ்சாயத்ராஜ் சட்டத்தை அறிமுகப்படுத்தும் போதே தலித்கள், மலைவாழ் மக்களுக்கான கட்டாய இடஒதுக்கீட்டோடு அறிமுகப்படுத் தினார் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி. கூடவே அதில் பெண்களுக்கான 30 சதவிகித இடஒதுக்கீடும் உறுதிசெய்யப்பட்டது. அவரின் மரணத்துக்குப் பிறகு, 1993-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் நாள் அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ் 73, 74-வது சட்டத்திருத்தத்தின் மூலம் 33 சதவிகித இடஒதுக்கீடாக ராஜீவ் காந்தியின் முயற்சியை சாத்தியப்படுத்தினார். இந்தச் சட்டத்தை நிறைவேற்றிய பிறகு, நரசிம்மராவ் ஆற்றிய உரை மிக முக்கியமானது.

`இந்தியாவின் மக்கள்தொகையில் பெண்கள், சரிபாதி உள்ளனர். ஒட்டுமொத்த ஊரகப் பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பு ஆண்களின் பங்களிப்பைவிட அதிகம். ஆனால், அவர்களின் கைவசம் உள்ள சொத்துக்கள், வருமானம் மிகவும் சொற்பம். மேலும், கிராமப்புறங்களில் வீடுகளின் நிதி நிர்வாகம் பெண்கள் வசமே உள்ளது. பெண்களின் தொலை நோக்கு, சிக்கனம், நிதி நிர்வாகம் ஆகியவை சிறப்பாக உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இவை அவசியமான பண்புகள்.

பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் கூடுதல் பிரதிநிதித்துவம் தருவதன் மூலம், அவர்களுக்கான இடங்கள் மட்டும் அதிகரிப்பது இல்லை; இந்த அமைப்புகளைச் செயல்திறன் மிக்கதாக, நேர்மையானதாக, கட்டுக்கோப் பானதாக,கூடுதல் பொறுப்புமிக்கதாகவும் மாற்றும்.

அறப்பண்பின் வலிமையை பெண்கள் உள்ளாட்சி அமைப்புக்கும் ஊட்டுவார்கள். அவர்களை வரவேற்போம்' எனக் குறிப்பிட்டார்.

எப்போதும் கருத்து கேட்டு அறியாத, அவர்களுக்கும் ஒரு கருத்து இருக்கும் என்றுகூட நினைத்துப்பார்க்காமல் ஒடுக்கப்பட்ட மக்களின் கையில் அதிகாரம் வந்துசேர்ந்தது. ஒரு சட்டத் திருத்தத்தின் மூலம் 10 லட்சம் பெண்கள் அதிகாரம் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.

ஆனால், ஒரே நாளில் 10 லட்சம் பெண்களுக்கு எங்கே போவது? வேறு எங்கே... அடுப்படிக்குத்தான். `அதிகாரம் போச்சே!' என நொந்துபோய் இருந்த ஆண்கள், ஒரே இரவில் புரட்சிக்காரர்களாக உருவெடுத்தார்கள். உடனடியாக தங்கள் மனைவியை, மகளை, சகோதரியை அரசியல் களத்துக்கு அழைத்துவந்தார்கள். அதற்கு அவர்கள் சம்மதத்தை எல்லாம் கேட்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இந்தப் பிரமாண்டத் தேடலில், ஆண் தலைவர்களை எதிர்த்து நிற்கக்கூடிய, தனக்கான உரிமைக்காகப் போராடும் பெண்களும் களத்தில் கணிசமாக இறங்கினர். இப்படித்தான் இங்கே பெண்களுக்கான அரசியல், அதிகாரப் புரட்சியும் பரவலும் நிகழ்ந்தன.

இந்தச் சட்டம் இயற்றப்பட்டு, 1996-ம் ஆண்டில் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட 1,16,488 பேரில், 39,364 பேர் பெண்கள். மிகப் பெரிய மாற்றத்தின் முதல்படி. ஆனால், அவர்களுக்கான போராட்டங்களும் சவால்களும் இதற்குப் பிறகுதான் தொடங்கின. அவர்களை, தலைவர்களாக அல்ல... மனுஷிகளாகக்கூட அதிகாரிகள் மதிக்கவில்லை. அரசியலின் உள்ளாட்சி நிர்வாகத்தின் நுட்பங்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் சுயமரியாதைக்கு எப்போதும்போலவே சோதனை மேல் சோதனை வந்தது. `தலைவர் வரலீங்களா?’ என எந்த நேரமும் கணவர்களையே விளித்தனர். `அப்ப நான்?’ என பல பெண் தலைவர்கள் குழம்பி நின்றனர்.

காசோலையில் கையெழுத்துப் போடுவதற்கு மட்டும் போதும் என்ற நிலைதான் நீடித்தது. (அந்தக் கையெழுத்தையே, தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, போட்டுப் பழகிய பெண்கள் பலர்!) ஆனால், இது எதுவும் அவர்களைப் பாதிக்கவில்லை.

விருதுநகர் மாவட்டத்தில் சுவாரஸ்யமான ஒரு சம்பவம். பெண் தலைவர்களும் ஆண் தலைவர்களும் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்கச் சென்றனர். பெண் தலைவர்கள் தங்களுக்கான பிரத்யேகப் பிரச்னைகளையும் பேச வேண்டும் என வந்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் அறையில் முதல் மூன்று வரிசையில் ஆண்கள் அமர்ந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மட்டும் பேசிக்கொண்டிருந்தார். சந்திப்பு முடிந்தது. பெண்கள் தங்கள் பிரச்னைகளை வலியுறுத்த முனைந்தபோது, ஆண்கள் `அதை வெளியில் பேசிக்கொள்ளலாம்' எனச் சொல்லிவிட்டனர்.

இந்த நிலை மாறுவதற்கான அறிகுறியே இல்லை. உடனடியாக பெண் தலைவர்கள் தங்களுக்கு என ஓர் அமைப்பு வேண்டும் என உணர்ந்தனர். இப்படியாகத்தான் காந்தி கிராமப் பல்கலைக்கழக உதவியோடு தமிழகத்தில் `பெண் ஊராட்சித் தலைவர் கூட்டமைப்பு’ உருவானது. பிறகு, தமிழகம் முழுவதும் நிறையக் கூட்டமைப்புகள் உருவாகின. மிகத் தீவிரமாக, உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய போராட்டங்களை உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் நடத்தியபோது, இந்தக் கூட்டமைப்புகள் அவர்களுக்குத் துணைநின்றன.

சோறாக்கிக்கொண்டிருந்த பெண்கள், சும்மா இருக்கவில்லை. நேர்மையோடும் நிர்வாகத் திறமையோடும் இருந்த பெண்களில் பலர், அந்தக் கம்பசூத்திரத்தை விரைவில் கற்றுத் தேர்ந்தனர். அவர்களில் கணிசமானவர்கள், கல்வி அறிவு அற்றவர்கள், வர்க்க, சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்கள், வீதிகளில் செருப்புகளுடன் நடக்க அனுமதிக்கப் படாதவர்கள், வறுமையின் நிழலில் இளைப்பாறப் பழகியவர்கள், அந்நிய ஆண்களைக் கண்டால் அவசர அவசரமாக முக்காட்டை இழுத்து முகத்தை மூடிக் கொள்பவர்கள். ஆனால், அவர்கள் அத்தனை பேரும் அனுபவம் நிறைந்தவர்கள், அசாதாரணமான தைரியம் கைவரப்பெற்றவர்கள். நிர்வாகத்தில் கைதேர்ந்தவர்கள் (கணவன் தரும் சொற்பக் காசில் குடும்ப நிர்வாகம் செய்து பழக்கப்பட்டவர்கள் இல்லையா!) ஆண்களின் ஆதரவோடும் தன்னிச்சையாகவும் செயல்படத் தொடங்கினர். ஆண்களின் சொல்படி நடப்பதில் இருந்து பலர் விடுபட்டனர்.

ஆனாலும் இந்த உலகம் ஒட்டுமொத்தமாக அவர்களை ‘பினாமிகள்’ எனப் பெயர் சொல்லி அழைப்பதில் மகிழ்ச்சி அடைந்தது. ஆண்டு ஆண்டுகாலமாக அடுப்படியிலும் விளைநிலங்களிலும் தொழிற்சாலைகளிலும் தங்களை மெழுகுவத்தியாக உருக்கிக்கொண்டு, வெளியுலகத்தைப் பற்றி கவலைப்படக்கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்த பெண்களை ஒரு வாய்ப்பு கிடைத்ததும் நீச்சல் தெரியாதவர்களைக் கிணற்றில் தள்ளிவிடுவதுபோல தள்ளிவிட்டு, அவர்கள் ஏன் தங்கப்பதக்கம் வாங்கவில்லை என அலறுகிற சமூகம்தானே நம்முடையது!

ஆனால் இதே சமூகம், சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் எழுந்து ஒரு வார்த்தைகூட பேசியிராத ஆண்களைப் பற்றி என்றாவது விமர்சித்திருக்கிறதா? தொகுதிக்குள் எட்டிக்கூடப் பார்த்திராத மக்கள் பிரதிநிதிகளை ஒதுக்கி வைத்திருக்கிறதா? பெரும்பாலான ஆண் பிரதிநிகள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்பதற்காக ஆண்கள் அரசியலுக்கு லாயக்கற்றவர்கள் என்ற முடிவுக்குதான் வந்திருக்கிறதா?

ஆண்டாண்டு காலமாக அதிகாரத்தின் நிழலில் இளைப்பாறிவரும் ஆண்களின் திறமையைக் கேள்வி கேட்காத சமூகம், இப்போதுதான் உள்ளே நுழைந்திருக்கும் பெண்களை `பினாமிகள்', `தலையாட்டி பொம்மைகள்' என அழைப்பதை எப்படி ஏற்க முடியும்? ஆனால், இதைப் பற்றி எல்லாம் பெண் தலைவர்கள் கவலைப்படுவது இல்லை. மணல் கொள்ளையர்கள், தண்ணீர் மாஃபியாக்கள், நில ஆக்கிரமிப்பாளர்கள், நேர்மையற்ற அதிகாரிகள், சாராய வியாபாரிகள் என பலருக்கும் சிம்மசொப்பனமாக பல பெண்கள் இன்றளவும் திகழ்கிறார்கள்.

குடிதண்ணீர், கல்வி, சுகாதாரம், சுயஉதவிக் குழுக்கள் என அடிப்படைத் தேவைகளை உணர்ந்து, அதை எல்லாம் மாற்றி, தாய்மையின் தடம் பதித்தார்கள். குடிதண்ணீர், மாஃபியாவை எதிர்த்துப் போராடி படுகொலை செய்யப்பட்ட மதுரை லீலாவதியே இதற்கான ஆகச் சிறந்த உதாரணம். மிகச் சிறந்த பஞ்சாயத்துத் தலைவருக்கான குடியரசுத் தலைவர் விருது பெற்று, உலக வங்கி வரை சென்று உரையாற்றிய ராமநாதபுரம் மைக்கேல்பட்டினம் ஜெஸிமேரியின் திறமையை மறந்துவிட முடியுமா?

சாயப்பட்டறை கழிவுகள், தன் ஊராட்சி நிலத்தடி நீரை மாசுபடுத்தாமல் தடுத்து நிறுத்திய கரூர் அப்பிபாளையம் ஈஸ்வரி... தேவிப்பட்டினம் கடலுக்குள் அமைந்துள்ள புகழ்பெற்ற நவக்கிரகங்களைத் தரிசிக்க, புனித யாத்திரை மேற்கொள்ளும் இந்துக்களுக்காகப் பாலம் அமைத்த ஜம்ரத்பீபி... காலம் காலமாகக் கொத்தடிமையாகக் கொடுந்துயரை அனுபவித்தக் குடும்பத்தில் இருந்துவந்து துணிச்சலோடு தனது ஊராட்சியில் மதுக்கடைகளை மூடிய சத்தீஸ்கர் ராதிகா... செருப்புக்கால்களோடு வீதியில் நடக்க அனுமதிக்காத சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக, செருப்பு அணிந்து நடக்கும் போராட்டத்தை நிகழ்த்திய தனது கணவரை வறுமைக்கும் நோய்க்கும் பறிகொடுத்த உத்தரப்பிரதேசம் ஜான்சியின் வர்ஷா... செல்வாக்குமிகுந்தவர்களின் மாட்டுத்தீவனச் சேமிப்புக் கிடங்காக செயல்பட்டுவந்த பள்ளிக் கட்டடத்தை மீண்டும் குழந்தைகள் படிக்கும் பள்ளியாக மாற்றிக்காட்டிய ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சோனியா கோல்... என உதாரணங்கள் ஏராளம்.

சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பும் தியாகமும் எப்படி அங்கீகரிக்கப்பட வில்லையோ, அதேபோல உள்ளாட்சி அமைப்பு களில் உக்கிரமாக இன்றும் நடந்து கொண்டிருக்கும் போராட்ட வரலாற்றையும் இந்தச் சமூகம் போதுமான அளவுக்குப் புரிந்துகொள்ளவில்லை. ஆண் தலைமைக்கும் பெண் தலைமைக்கும் உள்ள வேறுபாட்டை கள ஆய்வுகள் சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் நிரூபித்தன. ஆண்கள் பாலங்கள், சாலைகள், கட்டடங்கள் என தங்கள் பெயர் எழுதும் செயல்பாடுகளில் கவனம் செலுத்தும்போது, பெண்கள் கல்வி, சுகாதாரம், குடிநீர், கழிவறை, முதியோர் உதவித்தொகை, மதுவிலக்கு ஆக்கிரமிப்பு களை அகற்றுவது, இயற்கைவளங் களைக் காப்பது என உண்மையான மக்கள் தேவைகளில் கவனம் செலுத்தினர். அதற்கான போராட்டங்களைத் துணிச்சலோடு எதிர்கொண்டனர். லட்சக் கணக்கான பெண்கள் இந்தச் சமூகத்தின் கடைக் கோடியில் இருக்கும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திவருகிறார்கள். அதற்கான அங்கீகாரத்தைக்கூட யாரும் எதிர்பார்ப்பது இல்லை.

உள்ளாட்சியில் வெறும் 30 சதவிகித இடஒதுக்கீடு கோரியபோது ‘பெண்களுக்கு எதுக்குப்பா இதெல்லாம்?’ எனப் பேசிய வாய்களை, தங்களுடைய செயல்பாடுகளின் மூலம் மூட வைத்தது பெண்களின் நேர்மையும் நிர்வாகத்திறனும் தான். அதுதான் இப்போது 50 சதவிகித ஒதுக்கீட்டுக்கான தேவையை உருவாக்கியிருக்கிறது.

ஆனால், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் நிரூபிக்கப்பட்ட திறமைகளை இந்தச் சமூகம் திறந்த மனதோடு அணுக வேண்டும். சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டின் நியாயத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். அந்த இடத்தையும் பெண்கள் போராடிப் பெறவேண்டும். அந்தக் காலமும் களமும் விரைவில் சாத்தியம் ஆகும்!

வருது 50/50 வருது... - உள்ளாட்சியில் இனி பெண்ணாட்சி!

பாலபாரதி

``உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு என்பது பெரிதும் வரவேற்கத்தக்க விஷயம். ஏற்கெனவே 33 சதவிகித இடஒதுக்கீடு இருக்கும் நிலையில், இது பெண்களுக்கு அரசியல் களத்தில் கிடைத்துள்ள ஒரு சிறந்த முன்னோட்டம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெண்களின் வாக்கு சதவிகிதம்தான் அதிகம். அதனால், உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட, பெண்கள் நிச்சயம் முன்வருவார்கள். அதுவும் சதவிகித அடிப்படையில் ஏற்பட்டுள்ள உயர்வால் பெண்களிடையே ஓர் உத்வேகம் ஏற்படும். எனினும், சாதி மற்றும் பணம் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ள கட்சிகளின் நிலைப்பாட்டால், வசதி படைத்த, அரசியல் பின்புலம்கொண்ட பெண்களைவிட, எளிமையான குடும்பப் பின்னணிகொண்ட பெண்களுக்கு, இந்த இடஒதுக்கீடு சாத்தியப்படுவது சற்றுக் கடினம்தான்.''

வருது 50/50 வருது... - உள்ளாட்சியில் இனி பெண்ணாட்சி!

விஜயதரணி

``50 சதவிகித இடஒதுக்கீடு, பல்வேறு மாநிலங்களில் கடந்த உள்ளாட்சித் தேர்தலிலேயே நடைமுறைப்படுத்தப் பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் மட்டும் ஐந்து ஆண்டுகால தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும் இந்த உள்ளாட்சித் தேர்தலிலாவது இடஒதுக்கீடு அமலுக்கு வர இருப்பது மகிழ்ச்சியான விஷயம். இதனால் பெண்கள் அதிக அளவில் பயனடைவார்கள். பெண்கள், முதலில் குடும்பம் சார்ந்து வந்தாலும், ஒருகட்டத்தில் சுயமாகச் செயல்பட ஆரம்பித்துவிடுகின்றனர். பதவியில் அமரும் பெண்கள், தங்களுக்கான சட்டத்திட்டங்கள், கணக்குவழக்குகள், பதவிக்கான சாத்தியக்கூறுகளைத் தெரிந்துகொண்டு, தவறுகளை முடிந்தவரையில் தவிர்க்க முயற்சிக்க வேண்டும். இதுபோன்ற இடஒதுக்கீடு சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் வந்தால் இந்திய ஜனநாயகம் உயர்ந்த நிலைக்குச் சென்றுவிடும்!''

வருது 50/50 வருது... - உள்ளாட்சியில் இனி பெண்ணாட்சி!

தமிழிசை செளந்தரராஜன்

``இந்த 50 சதவிகித இடஒதுக்கீடு சாத்தியமாக வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. ஆனால், `இன்றைய அரசியல் சூழலில், குடும்பம் சார்ந்த பினாமிகள் இல்லாமல் பெண்கள் பதவியில் அமர்த்தப்படுவார்களா?' என்பதுதான் கேள்வி. பெரும்பான்மையான உள்ளாட்சி அமைப்புகளில் இன்னாருடைய மனைவி என்கிற அடையாளத்துடன்தான் பெண்களின் வெற்றியை அமைக்கிறார்கள். மேலும், தைரியமாக வெளிவரும் பெண்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. எனினும், இதுபோன்ற குறைபாடுகளைக்கூட களைந்து முன்னேறியுள்ள பெண் அரசியலாளர்களும் அதிகம்தான். எல்லா துறைகளிலும் பெண்களுக்கான தனி அடையாளம் இருப்பதுபோல, அரசியலிலும் பெண்களுக்கான தனி அடையாளம் இருக்க வேண்டும். குடும்பத்தை, சரியாக நிர்வகிப்பதால்தான் குடும்பத்தலைவி என்னும் தலைமைப் பண்பு சார்ந்த பெயரைக் கொடுத் திருக்கிறோம். அத்தகைய ஆளுமைப் பண்பைக் கொண்ட பெண்கள், பின்புல எதிர்ப்புகளைத் தாண்டி இந்த இடஒதுக்கீட்டில் ஜெயிக்க வேண்டும்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு