Published:Updated:

“ஜெயலலிதாவுக்கு நல்ல பெயர் கிடைக்கும்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“ஜெயலலிதாவுக்கு நல்ல பெயர் கிடைக்கும்!”
“ஜெயலலிதாவுக்கு நல்ல பெயர் கிடைக்கும்!”

கார்க்கிபவா, நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: சொ.பாலசுப்ரமணியன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

“ஜெயலலிதாவுக்கு நல்ல பெயர் கிடைக்கும்!”

மிழக அரசியல்வாதிகளை தனது கிடுக்குப்பிடி கேள்விகளால் தடுமாற வைப்பவர் ரங்கராஜ் பாண்டே. தமிழகத்தின் காட்சி ஊடகங்களில்  தவிர்க்க முடியாதவர்.

``2016-ம் ஆண்டு தேர்தல் முடிவுகளை ஓர் ஊடகவியலாளராக நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?”

``ஜெயலலிதாவுக்கு இந்தத் தேர்தலில் இரண்டு ஆசைகள் இருந்திருக்க வேண்டும் என்பது என் ஊகம். ஒன்று, எம்.ஜி.ஆருக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சிக்கு வரவேண்டும் என்பது. இரண்டு, 1971-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க பெற்ற 184 ஸீட்டுகளைவிட அதிகம் பெற வேண்டும் என்பது. இந்த இரண்டு காரணங்களால்தான் அவர் தனியே நின்றார். எதிர் முகாமில் தி.மு.க-வைச் சுமந்து சென்றது ஸ்டாலின்தான். அவர்களும் விடுதலைச் சிறுத்தைகள்போல சில கட்சிகளை கூட்டணிக்குள் அழைத்துவந்திருக்கலாம். அவர்களால் அதைச் செய்திருக்க முடியும். ஆனால், ஜெயலலிதா தனியே நின்றவுடன் இவர்களும் பெரிய கூட்டணியை விரும்பவில்லை. அந்தக் கணக்கில்தான் வெற்றி வாய்ப்பை இழந்திருப்பார்கள் என நினைக்கிறேன். மாற்றுக் கட்சிகள் இன்னும் நம்பிக்கை அளிக்கக்கூடியவையாக இருக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அன்புமணி, சீமான், பா.ஜ.க., மக்கள் நலக் கூட்டணி ஆகிய அனைவரிடமுமே சில நல்ல விஷயங்கள் இருந்தன. ஆனால், நம்பகத்தன்மையில்தான் பிரச்னை. `தேர்தலுக்குப் பின்னர், மீண்டும் பெரிய கட்சிகளுக்கு ஆதரவளிக்க மாட்டார்கள் என என்ன நிச்சயம் இருக்கிறது?’ என்ற கேள்வி மக்கள் மனதில் முன்வந்திருக்கும். அதனால்தான் ஆறு முனைப் போட்டி, மெள்ள சுருங்கி இரண்டு முனைப் போட்டியானது. அ.தி.மு.க எளிதில் வென்றது. மக்கள் மனதில் ஒப்பீடு மட்டும்தான் இருந்திருக்கிறது. அதன் அடிப்படையில் வாக்களித்திருக்கிறார்கள். மதுவிலக்கு ஒரு தேர்தல் பிரச்னையாக இருக்கவில்லை. அது நிச்சயம் ஒரு சமூகப் பிரச்னை என்பது வேறு.''

``நீங்கள் அ.தி.மு.க சார்புகொண்டவர் என உங்களைப் பற்றி விமர்சனங்கள் வருக்கின்றனவே..?''

``நான் ஓர் ஊடகவியலாளன். என் வேலையை நான் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறேன். எங்கள் டி.வி-யின் கருத்துக்கணிப்பு அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக இருந்ததாகத்தான், இப்படி ஒரு குற்றச்சாட்டை என் மீது வைத்தார்கள். இறுதியாக நாங்கள் சொன்னதுதானே பலித்தது. 100 லைக் விழுந்தால், அதில் 10 டிஸ்லைக்கும் உண்டு என்பதை உணர்ந்தவன் நான். அதனால் என் மீதான விமர்சனங்களை வரவேற்கிறேன்.''

“கருணாநிதி, ஜெயலலிதாவிடம் பிடிக்காதது என்ன?”

“பிடிக்காதது எனச் சொல்ல மாட்டேன். ஜெயலலிதா, தான் செய்யும் சில விஷயங்களுக்கான காரணங்களை வெளிப்படை யாகச் சொன்னால், இன்னும் அவருக்கு நல்ல பெயர் கிடைக்கும். கருணாநிதி, இன்னும் நல்ல முறையில் கட்சியை அடுத்த தளத்துக்குக் கொண்டுபோய் இருக்கலாம். அதற்கான வாய்ப்புகள் அவருக்கு இருந்தன. அதை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என நினைக்கிறேன்.”

“காட்சி ஊடகத்தில் உங்களை பலரும் சர்ச்சையான மனிதராகப் பார்க்கிறார்களே..?”

“சில விஷயங்கள் என்னுடைய பாடிலாங்வேஜ் பார்த்து உருவாகிவிட்டன. பேட்டியின்போது நான் கேட்க நினைக்கும் கேள்விகளை எல்லாம் கேட்க வேண்டும். அவர்கள் சொல்லும் பதிலில் இருந்தும் கேள்விகளை எடுக்க வேண்டும். அதனால்தான் என்னுடைய பேச்சில் வேகம் இருக்கும். சர்ச்சையை உருவாக்க வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல.”

“உங்களுக்கு இணக்கமானவர்களிடம் மட்டும் வேறு மாதிரி நடந்துகொள்வதாகச் சொல்கிறார்களே... அது உண்மையா?”

“என் மனநிலையையும் விருந்தினர்களின் மனநிலையையும் பொறுத்தே பேட்டி அமையும். அது அந்தச் சூழ்நிலையைப் பொறுத்தது. விருந்தினர்களிடம் நான் பாரபட்சம் காட்டினால், அவர்கள் மீண்டும் எங்கள் நிகழ்ச்சிக்கு வர மாட்டார்கள். மு.க.ஸ்டாலின் வந்திருக்கிறார். துரைமுருகன் மூன்று முறை வந்திருக்கிறார். டி.கே.எஸ்.இளங்கோவன் மூன்று முறை, அன்புமணி நான்கு முறை என எல்லோரும் தொடர்ந்து வரத் தயாராக இருக்கிறார்கள். சிலரிடம் மட்டும் இணக்கமாக நடந்துகொண்டால், எப்படி எல்லோரும் என்னுடான பேட்டியை விரும்புவார்கள்?”

``எந்தப் பேட்டியிலாவது அவசரத்தில் வார்த்தைகளைக் கொட்டிவிட்டோம் என நினைத்திருக்கிறீர்களா?”

``நேரலை என்பதால், நாங்கள் முன்னரே சொற்களைக் கட்டமைப்பது இல்லை. சில சமயம் `அ.தி.மு.க பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா’ என்றால், ‘பார்த்தியா... எவ்ளோ பில்டப் கொடுக்கிறான்’ எனச் சிலர் சொல்வார்கள். நான் ஒருபோதும் வெறும் `கருணாநிதி’ எனச் சொன்னது கிடையாது. `தி.மு.க தலைவர் கருணாநிதி' என்றோ, `திரு.கருணாநிதி' என்றோதான் சொல்வேன். யாரையும் குறையாகச் சொல்வது இல்லை.''

``நீங்கள் ஆர்.எஸ்.எஸ்-ஸில் உறுப்பினராக இருந்திருக்கிறீர்கள் என்ற சர்ச்சை ஒரு புறம் இருக்கட்டும். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

``ஆர்.எஸ்.எஸ் விழாவுக்கோ, கூட்டத்துகோ ஒருநாளும் சென்றது கிடையாது. அந்த இயக்கம், இந்தியாவில் பழைமையான இயக்கங்களில் ஒன்று. எல்லா இயக்கங்கள் மீதும் விமர்சனம் வைக்கப்படுவதைப்போல அதன் மீதும் விமர்சனங்கள் உண்டு. எனக்கு எல்லா இயக்கங்களைப் பற்றியும் ஒரு கருத்து இருக்கிறது. ஆனால், அதைச் சொன்னால், நான் வேலைசெய்யும் நிறுவனத்தின் கருத்தாக அது பார்க்கப்படலாம். தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு இருக்கிறதோ... அதே தொடர்புதான் ஆர்.எஸ்.எஸ்-ஸுக்கும் எனக்கும்.”

``வட இந்திய நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்போல் ஏன் உடை அணிகிறீர்கள்?''

`` `ஏன் பிளேசர் அணிகிறார்கள்?’ என யாரையும் நாம் கேட்பது இல்லை. அது நம் நாட்டு உடை அல்ல. நான் அணிவது, இப்போது `மோடி கோட்' எனப்படும் ஓர் உடை. இதை அணிய ஆரம்பித்ததற்குக் காரணம் என் சோம்பேறித்தனம்தான். எனக்கு டை கட்டுவது சிரமம். அது அதிக நேரமும் எடுத்தது. இந்த கோட் எனக்கு ஈஸியாக இருந்தது. முதலில் சர்வர் போல இருக்கிறது என கிண்டல் செய்தார்கள். ஆனால், இது எனக்கு எளிமையாக இருந்ததால், நான் என் முடிவில் திடமாக இருந்தேன். மேலைநாட்டு பிளேசரைவிட, கொஞ்சம் இந்தியத்தன்மை இருக்கும் இந்த உடை தேவலாம் என்பதுதான் என் பதில்.”

``விவாத நிகழ்ச்சிகள்கூட, சில ரியாலிட்டி ஷோ போல சுவாரஸ்யத்துக்காக நாடகமாகிவருகிறதா?”

``நிச்சயம் இல்லை. எங்கள் ஷோக்களில் `ஆயுத எழுத்து'ம், `மக்கள் மன்ற'மும் நேரலை. அதில் நாடகம் செய்தால், மக்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். `கேள்விக்கென்ன பதில்?' நிகழ்ச்சியில் பல தலைவர்கள் ஒரு முறைக்கு மேல் வந்திருக்கிறார்கள். அதில் நாங்கள் ஏமாற்றுவேலை செய்தால், அவர்கள் இரண்டாவது முறை வருவார்களா? பேட்டிக்கு முன்னர் அவர்களுக்கு கேள்விகள்கூட சொல்லப்படுவது இல்லை. எந்த எந்த ஏரியாக்களில் பேசப்போகிறோம் என்பதை மட்டும்தான் விருந்தினர்களிடம் சொல்வோம். இதில் எங்குமே நாடகத்துக்கு வேலை இல்லை. மற்ற தொலைக்காட்சியின் விவாதங்களும் இப்படி நடப்பதாகத்தான் நான் நினைக்கிறேன்.”

``தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளின் அடுத்த கட்டம் எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?”

``முன்பெல்லாம் மேடைப் பேச்சுகள் பல மணி நேரங்கள் நீடிக்கும். ஒருவரே ஒரு மணி நேரம் பேசுவார். இப்போது ஒரு மணி நேர நிகழ்ச்சியில் விளம்பரங்கள், தொகுப்பாளர் பேசுவது போக ஒருவருக்கு ஐந்து நிமிடங்கள்தான் அதிகபட்சம் கிடைக்கிறது. அடுத்த கட்டமாக, தலைவர்கள் அவர்களுக்கென இருக்கும் சமூக வலைதளக் கணக்குகளோடு சுருங்கிவிடலாம். அவர்களது ட்விட்டரிலோ, யூடியூபிலோ சொல்ல வேண்டியதைச் சொல்லிவிடுவார்கள். வேண்டியவர்கள் அங்கே பார்த்துக்கொள்ளலாம். ஆனால், எதன் பொருட்டு அந்த விமர்சனம் செய்யப்பட்டது என்பது பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள். இதில் பெரிய ஆபத்து இருப்பதாகக் கருதுகிறேன். இதனால் ஆழமான பார்வையோ, ஆழமான அறிவோ இல்லாமல் போகலாம்.”

“ஜெயலலிதாவுக்கு நல்ல பெயர் கிடைக்கும்!”

``நீங்கள் சந்தித்த தலைவர்களில் சொல்லவருவதை ஷார்ப்பாகவும் பொறுமையாகவும் சொன்ன தலைவர்கள் யார், யார்?”

``ப.சிதம்பரம், நரேந்திர மோடி, குஷ்பு. சொல்லப்போனால், எல்லாரிடமும் இந்த ஷார்ப்னெஸ் இருக்கிறது.”

``சினிமா பார்ப்பீர்களா? உங்களுக்குப் பிடித்த நடிகர்-நடிகை யார்?''

“ஒரு மனிதனாக ரஜினியைப் பிடிக்கும். கமலை ஒரு கலைஞனாகப் பிடிக்கும். பிடித்த நடிகை சமந்தா. ஆனால், அவர் ரொம்ப ஸ்லிம்மாக இருக்கிறார். ஹன்சிகா, குஷ்புவை அதிகமாக  இமிடேட் செய்கிறார்.  குஷ்பு, சிம்ரன் ரொம்பப் பிடிக்கும்.”

“உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்?”

“என் மனைவி பெயர் கவிதா.  செம ஜாலி டைப். எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். பெரியவங்க பெயர் ஆதித்யஸ்ரீ... ப்ளஸ் ஒன் படிக்கிறாங்க. சின்னவங்க ஆத்ரேயா, மூணாவது படிக்கிறாங்க. எளிய குடும்பம்... அமைதியான குடும்பம். என் மனைவி என்னைவிட திறமைசாலி. எனக்காக தன்னை சுருக்கிக்கொண்ட ஓர் குடும்பத்தலைவி. அவர் வெளியே வந்தால் `ஆயுதம்'தான் இருக்கும். `எழுத்து' இருக்காது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு