”நியமன எம்.எல்.ஏக்களை சட்டப்பேரவைக்குள் அனுமதிக்காமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்” என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு மாநில அரசின் பரிந்துரையின்றி பா.ஜ.கவைச் சேர்ந்த சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோரை எம்.எல்.ஏக்களாக நியமித்தது மத்திய அரசு. இதை எதிர்த்து காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணனன் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசின் நியமனம் செல்லும் என்று தீர்ப்பளித்தது சென்னை உயர்நீதிமன்றம். ஆனால் தனது கருத்தைக் கேட்காமல் வழங்கப்பட்ட தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த சபாநாயகர், நியமன எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்குள் நுழையத் தடை விதித்தார். அதன்படி இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வந்த மூன்று பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏக்களையும் சட்டப்பேரவைக்குள் நுழைய விடாமல் பேரவைக் காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
பேரவையில் ஆளுநர் உரைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, “நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை பிறப்பித்துள்ளது. நியமன உறுப்பினர்களை சட்டப்பேரவை வளாகத்தினுள் நுழைய விடாமல் தடுத்தது யார் என தலைமைச் செயலாளரிடமும், காவல்துறையிடமும் அறிக்கை கேட்டுள்ளேன். தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன். அவர்களது விளக்கத்துக்குப் பின்னர், இதுதொடர்பாக மத்திய அரசு, மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்புவேன்” என்றார்.
