Published:Updated:

"முதலமைச்சருக்குத்தான் அதிகாரம் உண்டு!”

"முதலமைச்சருக்குத்தான் அதிகாரம் உண்டு!”
பிரீமியம் ஸ்டோரி
"முதலமைச்சருக்குத்தான் அதிகாரம் உண்டு!”

ம.கா.செந்தில்குமார், ஜெ.முருகன்படம்: அ.குரூஸ்தனம், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

"முதலமைச்சருக்குத்தான் அதிகாரம் உண்டு!”

ம.கா.செந்தில்குமார், ஜெ.முருகன்படம்: அ.குரூஸ்தனம், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
"முதலமைச்சருக்குத்தான் அதிகாரம் உண்டு!”
பிரீமியம் ஸ்டோரி
"முதலமைச்சருக்குத்தான் அதிகாரம் உண்டு!”
"முதலமைச்சருக்குத்தான் அதிகாரம் உண்டு!”

‘கடவுள் இல்லைனு சொன்னது யாரு, நம்பர் 5, எல்லையம்மன் கோயில் தெருவில் வந்து பாரு’, ‘நிரந்தர முதல்வர் என்றுமே நம்ம அய்யாதான்’ என தெரு முழுக்க ஃப்ளெக்ஸ்கள் பளபளக்க, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் வீடு புதுப்பொலிவு பெற்றிருக்கிறது. வீடு முழுக்க வெள்ளை வேட்டி- சட்டையில் கதர் கட்சியினர் வலம்வர, ‘யப்பா... எல்லாருக்கும் லெமன் டீ கொடுப்பா...’ என அனைவரையும் உபசரிக்கிறார் நாராயணசாமி. ஒருபுறம் சால்வைகள் மலைபோல் குவிந்திருக்க, மறுபுறம் பழத்தட்டு ப்ளஸ் அழைப்பிதழ்களுடன் கூட்டம் அள்ளுகிறது. வீடு பரபரவென இருந்தாலும், எப்போதும்போல சிரித்த முகத்துடன்  பேசுகிறார் நாராயணசாமி.

‘‘புதுவை யூனியன் பிரதேசம், நேரடியாக மத்திய அரசு ஆளுகையின் கீழ் வருகிறது. மத்தியில் பா.ஜ.க ஆட்சி. இங்கே காங்கிரஸ் அரசு. உங்களால் சுதந்திரமாகச் செயல்பட முடியும் என நினைக்கிறீர்களா?’’

‘‘இந்தியாவில் டெல்லி, புதுச்சேரி ஆகிய இரண்டே மாநிலங்கள்தான் சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசங்கள். புதுவைக்கு உள்ள எல்லா அதிகாரங்களும் டெல்லி யூனியன் பிரதேசத்துக்கும் உண்டு; நிலம், சட்டம்-ஒழுங்கு தவிர. டெல்லியில் இவை இரண்டும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வருகின்றன. ஆனால், புதுவையில் எல்லா அதிகாரங்களும் மாநில அரசுக்கும் மாநிலச் சட்டமன்றத்துக்கும் உண்டு. `துணைநிலை ஆளுநர், மாநில முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் அறிவுரையின்படி செயல்பட வேண்டும்' என்றுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது.  முதலமைச்சருக்குத்தான் அதிகாரம் உண்டு. யூனியன் பிரதேசத்தைப் பொறுத்தவரை துணைநிலை ஆளுநரும் நாங்களும் இணைந்துசெயல்பட வேண்டும். அவ்வளவுதான்.’’

‘‘ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தொடங்கி,  சட்டம்-ஒழுங்கு, மக்கள் குறை கேட்பு என அனைத்திலும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தன்னிச்சையாகச் செயல்படுகிறார் என்கிறார்களே?’’

‘‘பலகை, ஃப்ளெக்ஸ் என பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை. ஆனால், சுமார் ஐந்து ஆயிரம் குடும்பங்கள் தொடர்ந்து 40 ஆண்டுகளாக நடைபாதை ஓரங்களில் கடை வைத்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம், ஜீவாதாரம் அதில்தான் இருக்கிறது. நகராட்சி நிர்வாகம், அவர்களிடம் தொடர்ந்து வரிவசூல் செய்துவருகிறது. அவர்களுக்கு லைசென்ஸ் தந்திருக்கிறது. அவர்களை திடீரெனக் காலிபண்ணச் சொல்லும்போது எதிர்ப்பு கிளம்புகிறது. அவர்களுக்கு காலக்கெடு கொடுத்து, மாற்று இடம் ஏற்பாடு செய்த பிறகு பண்ணினால், அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்காது. இது தொடர்பாக எங்கள் அமைச்சர் நமச்சிவாயம் அவர்களும் நானும் துணைநிலை ஆளுநரைச் சந்தித்துப் பேசினோம். எங்கள் கருத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். கிரண்பேடி அம்மையாரைப் பொறுத்தவரை புதிதாக வந்திருக்கிறார்; நாங்களும் புதிதாக வந்திருக்கிறோம். இருவரும் இணைந்து செயல்படுவோம். எங்களுக்குள் மற்றவர்கள் சண்டையை உருவாக்காமல் இருந்தால் சரிதான்.’’

‘‘எதிர்க்கட்சியான ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ், உங்களின் பதவியேற்பு விழாவைக்கூட புறக்கணித்திருக்கிறார்களே?’’

‘‘2011-ம் ஆண்டில் மரியாதைக்குரிய ரங்கசாமி, முதலமைச்சராகப் பதவியேற்ற போது நாங்கள் நேரில் போய் அவருக்கு வாழ்த்து தெரிவித்தோம். அதுதான் நாகரிகம்; சம்பிரதாயம். அவர்களின் செயல்பாடுகளை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்னர் ரங்கசாமி காங்கிரஸ் கட்சி சார்பில் முதலமைச்சராக இருந்தபோது, நான் புதுச்சேரி காங்கிரஸ் கட்சிக்குத் தலைவர். அவரைப் பொறுத்தவரை அவர் சொல்வது நடக்கவேண்டும் என நினைப்பார்; அது சாத்தியம் ஆகாது.’’

‘‘ `தேர்தலைச் சந்திக்காமலேயே குறுக்குவழியில் முதலமைச்சராக வந்துவிட்டீர்கள்’ என உங்கள் மீது விமர்சனம் வைக்கப்படுகிறதே?’’

‘‘தேர்தலில் நிற்காமல் முதலமைச்சராவது புதிது அல்ல. எங்கள் கட்சியின் மாநிலத் தலைவர், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எனப் பலரும் தேர்தலில் நிற்பதால், கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்கும் வேலையை கட்சித் தலைமை என்னிடம் கொடுத்தது. நான் ஒருங்கிணைத்தேன். இதன்மூலம் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. அதனால்தான் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள், நான் சட்டமன்ற உறுப்பினராக இல்லாத நிலையிலும் எனக்கு ஆதரவு தெரிவித்தனர். அன்னை சோனியாவும் தலைவர் ராகுலும் என்னை முதலமைச்சராக அறிவித்தனர்.’’

‘‘ஆனால், நீங்கள் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டதும், நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம், கடையடைப்பு... என எதிர்ப்புத் தெரிவித்தார்களே?’’

‘‘தேர்தல் சமயத்தில் அது இருக்கத்தான் செய்யும். போட்டி என வரும்போது அவர்களின் ஆதரவாளர்கள் அதைச் செய்வார்கள். அதைப் பெரிதுபடுத்தவேண்டிய அவசியம் இல்லை.’’

‘‘ஆறு மாதங்களில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வேண்டும். எந்தத் தொகுதி என முடிவுசெய்துவிட்டீர்களா?’’

‘‘எந்தத் தொகுதி என முடிவுசெய்த பிறகு சொல்கிறேன். அதற்குள் அதுபற்றி இப்போது பேசுவானேன்?’’

‘‘ காங்கிரஸ் `தமிழ்நாட்டில் டாஸ்மாக்கை மூடவேண்டும்’ என்கிறது. புதுச்சேரியில் நீங்கள் `சாராயக் கடை நடத்துவோம்’ என்கிறீர்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?’’

‘‘புதுவையில் பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள். பிரெஞ்சு குடியுரிமை பெற்று அங்கு வேலை செய்துவிட்டு, இங்கு வந்து ஓய்வூதியம் பெறுபவர்
களும் இருக்கிறார்கள். அது மாதிரியான சூழலில் இங்கு மதுவிலக்குக் கொண்டுவருவது சாத்தியம் இல்லை. அதனால்தான் அப்படிச் சொன்னேன். தவிர, இந்தக் கொள்கை மாநிலத்துக்கு மாநிலம் மாறும். எது நடைமுறைப்படுத்த முடியும்; முடியாது என முடிவு பண்ணவேண்டியது அந்த மாநில மக்கள்தான். தேர்தல் சமயத்தில் ‘புதுவையில் மதுவிலக்கு சாத்தியம் இல்லை’ என்றேன். அதை ஏற்றுக்கொண்டு புதுவை மக்கள் எங்களுக்கு வாக்களித்துத் தேர்வுசெய்துள்ளனர். அதனால் புதுவை மக்களின் அங்கீகாரம் எங்களுக்கு உள்ளது.’’

‘‘தமிழகத்தில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி தோல்விக்கான காரணமாக எதை நினைக்கிறீர்கள்?’’

‘‘ஏகப்பட்ட அணிகள், பலமான போட்டி... என இது முற்றிலும் புதிய தேர்தல். ஆனாலும் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என நம்பினோம். மக்கள் மத்தியிலும் அந்த எதிர்பார்ப்பு இருந்தது. கலைஞரின் தலைமையில் மரியாதைக்குரிய மு.க.ஸ்டாலின் ஐயா அவர்களின் சயின்டிஃபிக்கான பிரசாரம்போல் வேறு யாரும் பிரசாரம் செய்யவில்லை. அவர் அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்தார். எங்கள் கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்காவிட்டாலும், 98 இடங்களைப் பிடித்து, பலமான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. இதை `தோல்வி' எனச் சொல்ல முடியாது.’’

‘‘ `ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்க வேண்டும்’ என்ற பேச்சு, பரவலாக எழுந்துள்ளது. அவர் தலைவர் பதவிக்குத் தகுதியானவர் என நினைக்கிறீர்களா?’’

‘‘நான் கட்சியின் பொறுப்பாளராக  இருக்கும்போது தலைவர் ராகுலுடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். அவர் நாட்டு முன்னேற்றத்தில், வளர்ச்சியில் அக்கறை உள்ளவர். அதற்கான ஆழமான பல கருத்துக்கள்கொண்டவர். அப்படிப்பட்டவர் பிரதமராக வரும்போதுதான் இந்த நாடு பெரிய அளவில் வளரும்.

ஒருமுறை ராகுல் காந்தியுடன் நானும் கட்சிக்காரர்கள் ஐந்து பேரும் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு விமானத்தில் போனோம். குருவா என்ற இடத்தில் இரும்பு உருக்காலையில் விமானம் போய் இறங்க வேண்டும். ஆனால், விமானம் தரை இறங்கும் நேரத்தில் நல்ல மழை, இடி, புயல். இருமுறை விமானத்தைத் தரை இறக்க விமானி முயன்றார்; முடியவில்லை. ‘எப்பவோ போகப்போற உயிர் இப்ப போகட்டுமே’ என நான் நினைத்தேன். மற்ற நால்வரும் கடவுளை வேண்டிக்கொண்டிருந்தனர். தலைவர் ராகுல் காந்தி செம ஜாலியாக எப்போதும்போல என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். கடைசியில் ஒருவழியாக பைலட் விமானத்தைத் தரை இறக்கினார். அந்தச் சமயத்திலும் ராகுலிடம் இருந்த பதறாத அந்தப் பக்குவம் என்னை ஆச்சர்யப்படுத்தியது.’’

‘‘‘15 நாள்ல கூடங்குளம் அணுமின் நிலையம் திறந்துடும்... 15 நாள்ல மின்சாரம் உற்பத்தி தொடங்கிடும்’ - இப்படியான உங்களின் ஏர்போர்ட் பேட்டிகள் இப்போதும் சமூக வலைதளங்களில் வைரல். உங்களைக் கலாய்ப்பதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?’’

‘‘கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமான வேலைகள் ஆரம்பித்து 99 சதவிகிதம் முடிந்திருந்தது. அந்தச் சமயத்தில்தான் அதைத் திறக்கக் கூடாது என மனித உரிமை அமைப்புகள் போராட்டம் நடத்தின. அப்போது பிரதமர் என்னை அழைத்து, ‘அணுஉலை திறக்கும் வரை நீங்க பொறுப்பா இருந்து பார்த்துக்கணும்’ என உத்தரவு போட்டார். அப்போது தமிழக அமைச்சர்களே கூடங்குளம் போக முடியாத சூழலில், நான் அங்கு போனேன். அன்று  அணுஉலை திறக்கப்படவில்லை என்றால், இன்று அதன்மூலம் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வரும் சூழ்நிலை நமக்கு அமைந்திருக்காது. அந்த இக்கட்டான சூழலில் அப்படி பாசிடிவ்வாகத்தான் சொல்ல முடியும். ஆனால்,  இறுதியில் நான் சொன்னதுதானே நடந்தது. `போற்றுவார் போற்றட்டும்... தூற்றுவார் தூற்றட்டும்... நம் கடமையைச் செய்வோம்' எனப் போய்க்கொண்டே இருப்பேன்.’’

‘‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு தமிழர்களை, மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கலாம் என நீங்கள் நினைப்பது உண்டா?’’

‘‘ஒரு மாபெரும் அரசியல் தலைவரை, உலகத் தலைவரை நாங்கள் இழந்திருக்கிறோம். இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல், பிரியங்கா என அந்தக் குடும்பமே மறப்போம் மன்னிப்போம் மனப்பான்மை உடையவர்கள். பிரியங்காகூட நளினியை சிறையில் சந்தித்தாரே! ஆனால், இந்த விஷயத்தில் அரசியலாகவோ, மனிதாபிமான அடிப்படையிலோ நான் எதுவும் சொல்ல முடியாது. ஏனெனில், பாதிக்கப்பட்டது அவர்கள். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம்.’’

"முதலமைச்சருக்குத்தான் அதிகாரம் உண்டு!”

‘‘சில மாதங்களுக்கு முன்னர் உங்கள் மனைவி இறந்துவிட்டார்கள். நீங்கள் இப்போது முதலமைச்சராகி இருக்கும் நிலையில் அவர் இல்லையே என நினைப்பது உண்டா?’’

‘‘என் அரசியல் வாழ்க்கையில் என் மனைவியின் பங்கு மிக அதிகம். (குரல் கம்முகிறது) அரசியலில் நான் படிப்படியாக முன்னேறி வருவதற்கு அவரின் தியாகம் முக்கியமானது. நான் கட்சிப் பணிகளுக்காக பல மாநிலங்களுக்குப் போகும்போது, புதுச்சேரிக்கு மாதக்கணக்கில் வராமல் இருந்தது உண்டு. அந்தச் சமயத்தில் அவர் இங்கு மக்களைச் சந்திப்பார். அவரின் எண்ணங்கள் முழுவதும் அடித்தட்டு மக்களைப் பற்றியே இருக்கும். இந்தச் சமயத்தில் அவர் இருந்திருந்தால் நான் சந்தோஷப்பட்டிருப்பேன். அவர் இல்லாதது எனக்குப் பேரிழப்பு.’’

"முதலமைச்சருக்குத்தான் அதிகாரம் உண்டு!”

•   நாராயணசாமிக்கு வயது 69. மகன் சோமசுந்தரம், அரசியலில் அப்பாவுக்குத் துணை. மகள் விஜயகுமாரி.

  15 ஆண்டுகளுக்கு முன்னர் வரை அசைவப் பிரியர். இப்போது சைவத்துக்கு மாறிவிட்டார்.

•   அரசியல் சம்பந்தமான தலைவர்களின் வாழ்க்கை வரலாறு பிடிக்கும். அதுவும் ராஜீவ் காந்தியின் வாழ்க்கை வரலாறு மனசுக்கு நெருக்கமானது.

•   பொழுதுபோக்கு என எதுவும் கிடையாது.

டி.வி-யில் செய்தி சேனல்களை மட்டுமே பார்ப்பார். தியேட்டருக்குச் சென்று சினிமா பார்த்து 15 வருடங்கள் ஆகிறதாம்!

•   பழைய பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டரைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறார்.

•   எவ்வளவு வேலைகள் இருந்தாலும், வாரம் ஒருமுறை பூர்ணாங்குப்பம் கிராமத்துக்குச் சென்று தன் அம்மாவைப் பார்த்துப் பேசிவிடுவார்.

•   அரசியல் குரு, இந்திரா காந்தி!