Published:Updated:

பதற்றத்தில் பிரேசில்!

பதற்றத்தில் பிரேசில்!
பிரீமியம் ஸ்டோரி
பதற்றத்தில் பிரேசில்!

மருதன்

பதற்றத்தில் பிரேசில்!

மருதன்

Published:Updated:
பதற்றத்தில் பிரேசில்!
பிரீமியம் ஸ்டோரி
பதற்றத்தில் பிரேசில்!
பதற்றத்தில் பிரேசில்!

லிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் இரண்டு மாதங்கள்கூட இல்லை. இருந்தும், கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது பிரேசில். நாடு தழுவிய உற்சாக அலையையோ, கொண்டாட்ட மனநிலையையோ காணமுடியவில்லை.

திடீரென ஏற்பட்டுள்ள மாற்றம் அல்ல இது. `பிரேசிலின் தலைநகரம் ரியோ டி ஜெனிரோவில் ஒலிம்பிக்ஸ் நடைபெறும்’ என்னும் அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளிவந்த நாளே பிரேசில் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டது. ஆங்காங்கே போராட்டங்களும் வெடிக்கத் தொடங்கின. இத்தனைக்கும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பல முன்னணி விளையாட்டு வீரர்களையும் விளையாட்டுக்களை உயிருக்கு உயிராக நேசிக்கும் பெரும்திரளான மக்களையும் கொண்ட நாடு. இருந்தும், பூரிப்புக்கும் பெருமைக்கும் உரிய ஒரு விஷயமாக ஒலிம்பிக்ஸை அவர்கள் வரவேற்காததற்குக் காரணம், அங்கு நிலவும் அசாதாரணமான அரசியல், சமூக மற்றும் பொருளாதாரச் சூழல்.

குழப்பமான அரசியல்

முதல் காரணம், பிரேசிலின் அரசியல் சூழல். பிரேசிலின் முதல் பெண் அதிபரும் பிரபலமான தலைவருமான டில்மா ரூஸெஃப், கடந்த மாதம் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் ஆறு மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். `பிரேசிலின் பொருளாதாரம் சீரும் சிறப்புமாக இருக்கிறது என உலகுக்குக் காட்டும் வகையில் அரசுக் கணக்குகளையும் புள்ளிவிவரங்களையும் மாற்றியமைத்தார்’ என்பதே இவர் மீதான பிரதான குற்றச்சாட்டு. அதற்காக அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கை விசாரிப்பதற்கு வசதியாகத்தான் இந்த இடைநீக்கம்.

டில்மாவுக்கு முன்னர் அதிபராக இருந்தவரும், தொழிலாளர் கட்சியைத் தோற்றுவித்தவருமான லூயிஸ் இனாசியோ லூலூ டா சில்வா என்பவரின் அரசியல் சீடராகக் கருதப்படுபவர் டில்மா. 2011-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றி பெற்று அதிபர் ஆனவர். 2018-ம் ஆண்டு இவருடைய இரண்டாவது பதவிக்காலம் முடிவடைகிறது. ஆனால், அதற்குள் சிக்கலில் சிக்கிக்கொண்டார்.

‘நான் மட்டும் அல்ல, எனக்கு முன்னதாக பதவியில் இருந்தவர்களும் இவ்வாறு புள்ளிவிவரங்களைத் திருத்தியிருக்கி றார்கள்’ என்கிறார் டில்மா.

ஒரே சமயத்தில் சர்ச்சைக்கு உரியவ ராகவும் மக்களிடையே பிரபலமானவ ராகவும் இருக்கிறார் டில்மா. `டில்மா ஒழிக’ என்று கோஷமிடும் ஒவ்வொருவருக்கும் `டில்மா வாழ்க’ என்று கோஷமிடும் இன்னொரு போட்டியாளர் இருப்பார். டில்மாவுக்கு மிகப் பெரிய ஆதரவு வட்டம் இருப்பதற்குக் காரணம், தன் குருநாதர் லூலூ வழியில் தொழிலாளர்கள், ஏழைகள் நலன் சார்ந்து அவர் மேற்கொண்டுவந்த நலத் திட்டங்கள்தான். இடது சாய்வு அல்லது சாயல்கொண்ட லூலூ மற்றும் டில்மாவின் அணுகுமுறையே பிரேசிலை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச்சென்றுள்ளது என்பதே, சர்வதேச ஊடகங்களின் பார்வையாகவும் உள்ளது.

`தற்காலிகமாக வந்து அமர்ந்திருக்கும் மற்றொரு கட்சியைச் சேர்ந்த புதிய அதிபர் மிஷெல் டெமரின் ஆட்சி எப்படி இருக்கப் போகிறது என்பதை அறிந்துகொள்ள, அவருடைய கேபினட் குழு ஒன்றே போதும்’ என்கிறார்கள் டில்மாவை ஆதரித்துவரும் தொழிலாளர்களும் அடித்தட்டு ஏழை மக்களும். புதிதாக நியமிக்கப் பட்ட எல்லோரும் ஆண்கள், எலலோரும் வெள்ளை நிறத்தவர். `அடித்தட்டு மக்களுக்கான நலத் திட்டங்களை இவர்கள் தொடர் வார்கள் என்றோ, அவர்களுடைய பிரச்னைகளில் கவனம் செலுத்து வார்கள் என்றோ இனி எதிர்பார்க்க முடியாது’ என்று கவலைப்படு கிறார்கள். அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடம், அந்த வெற்றிடத்தை நிரப்பப்போகிறவர் மீதான நம்பிக்கையின்மை இரண்டும் அவர்களை அலைக் கழிக்கின்றன.

தடுமாறும் பொருளாதாரம்

அரசியல் நிலைமை இப்படி என்றால், பொருளாதாரம் இன்னமும் மோசம். 1930-களுக்குப் பிறகு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவருகிறது பிரேசில். இன்றைய தேதியில் பிரேசிலின் கடன் 1 டிரில்லியன் டாலர். இது பொருளாதார மந்த நிலைமையை மேலும் சிக்கலாக்கி யிருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் 11 சதவிகிதத்தைத் தாண்டியுள்ளது.

இந்தப் பொருளாதாரச் சீர்கேட்டுக்கு முதன்மையான காரணம் அரசு அமைப்புகள், பெரும் நிறுவனங்கள் என்று பேதமின்றி எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் ஊழல். இதற்கு ஒரே ஓர் உதாரணம், பகுதி அளவில் அரசின் கட்டுப்பாட்டில் செயல் பட்டுவரும் பெட்ரோபிராஸ் என்னும் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனம். லாபத்தில் இயங்கிவந்த இந்த நிறுவனம் தற்சமயம் கிட்டத் தட்ட திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம் லஞ்சம், ஊழல், தில்லுமுல்லுகள். டில்மா தொடங்கி புதிய அதிபர் டெர்மர் வரை பலரும் இந்த நிறுவனத்துடன் சம்பந்தப்பட்டவர்கள். இதுபோக, பல அரசியல்வாதிகள், அமைச்சர்கள், பிரபலங்கள் பற்றிய ஊழல் செய்திகள் ஒவ்வொரு தினமும் புதிது புதிதாக வெளிவந்துகொண்டே இருக்கின்றன. சரியும் பொருளாதாரம், தடுமாறும் அரசியல் களம் எனப் பெரும் சோர்வுக்கும் குழப்பத்துக்கும் ஆட்பட்டிருக்கிறார்கள் மக்கள்.

பாதுகாப்பற்ற சமூகம்

கடந்த மாத இறுதியில் 16 வயது பள்ளி மாணவி ஒருவரை, 30 பேர் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அதை வீடியோவில் பதிவுசெய்து இணையத்திலும் வெளியிட்டுள்ளனர். ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள பகுதிக்கு அருகில் இந்தக் கொடூரம் நிகழ்ந்திருப்பது பெருத்த நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

பெண்கள் மீதான குற்றங்கள் தென்அமெரிக்கா முழுவதுமே பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன என்றாலும் பிரேசிலின் நிலைமை இன்னும் மோசம்.  2003-ம் ஆண்டு புள்ளிவிவரங்களை 2013-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது பாலியல் குற்றங்கள் பிரேசிலில் 171 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.

காவல் துறையினரின் அலட்சிய மனோபாவம் அதற்கு மிக முக்கியக் காரணம். மேற்படி 16 வயது மாணவியின் வழக்கை விசாரிக்கும்போது அவர்கள் கேட்ட முதல் இரு கேள்விகள் என்னென்ன தெரியுமா? சம்பவம் நடந்த அன்று `அந்தப் பெண் என்ன மாதிரியான ஆடை அணிந்திருந்தாள்?’, `அவளுடைய நடத்தை எப்படிப்பட்டது?’ இணையத்தில் வீடியோ பரவியதைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்து மக்கள் பரவலாகப் போராட்டங் களைத் தொடங்கிய பிறகே, அசட்டுத்தனமான கேள்விகளை ஒதுக்கிவிட்டு மும்முரமாக விசாரணையைத் தொடங்கி யிருக்கிறார்கள்.

உலக அளவில் புகழ்பெற்ற பாலியல் சுற்றுலா தளங்களில் ஒன்று பிரேசில். குறிப்பாக, பள்ளிக்கூட, கல்லூரிச் சிறுமிகள் அதிக அளவில் இதில் தள்ளப்பட்டிருப்பது பெரும்சோகம்.

பதற்றத்தில் பிரேசில்!

ஒரு குறிப்பின்படி ஒவ்வோர் ஆண்டும் 2,50,000 குழந்தைகள் அங்கே பாலியல் சீண்டலுக்கு ஆளாகிறார்கள். ஒலிம்பிக்ஸ் தொடங்குவதற்கு முன்னரே நாலாபுறத்தில் இருந்தும் சுற்றுலா பயணிகள் சூழ்ந்துவரும் நிலையில், அவர்களுக்கு ‘சேவை’ புரிவதற்காக, இந்தத் தொழில் மேலும் பலமடையும் என்று பலர் கவலை தெரிவித்துள்ளனர். தென்ஆப்பிரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றபோது, மற்றொருபக்கம் பாலியல் தொழிலும் வளர்ச்சி கண்டதை இத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

பிரேசில் மக்களின் பிரச்னை இதுவென்றால், சர்வதேச மீடியாவின் பிரச்னை, ஒலிம்பிக்ஸைக் கண்டுகளிக்கவரும் அயல்நாட்டுச் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு பிரேசில் அரசு என்ன செய்யப்போகிறது என்பதுதான்.

அச்சுறுத்தும் ஸிகா

பிரேசிலே எதிர்பார்க்காத  சிக்கல் ஸிகா வைரஸ் தாக்குதல். கொசுக்களின் மூலம் பரவக்கூடிய இந்த ஆபத்தான ஸிகா வைரஸ் கர்ப்பிணிகளைத் தாக்கக்கூடியது. கர்ப்பம் தரித்த பெண்களை ஸிகா வைரஸ் தாக்கினால், பிறக்கக்கூடிய குழந்தைகள் பிறவிக்குறைபாடுகளைக் கொண்டிருக்கும். குறிப்பாக தலை சிறியதாக இருக்கும், மூளை பகுதியில் பாதிப்பு இருக்கும். பிரேசிலில் இப்படி ஏறத்தாழ 4,074 குழந்தைகள் சிறிய தலைகளுடன் பிறந்துள்ளன. எதிர்பாராத இந்த வைரஸ் தாக்குதலுக்கு எதிராக அறிவிக்கப்படாத யுத்தம் ஒன்றை மேற்கொண்டுவருகிறது பிரேசில். கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஒலிம்பிக்ஸுக்காகத் திரண்டுவரவிருக்கும் நிலையில், ஸிகா அவர்களைத் தொற்றிக்கொண்டால் என்ன ஆகும்? அவர்கள் அத்தனை பேரும் ஸிகாவைத் தங்களோடு எடுத்துச்சென்று உலகம் முழுவதும் பரப்பிவிட்டால் என்னாகும்? இப்படிப்பட்ட பீதியை உலக மீடியா முனைப்புடன் பரப்பிவருவதால், இந்தப் பிரசாரத்தை எதிர்கொள்வதே பிரேசிலின் மிகப் பெரிய சவாலாக இருக்கிறது.


`யாரும் பயப்படவேண்டாம், நீங்கள் நினைக்கும் அளவுக்கு ஸிகா அபாயம் பெரியது அல்ல’ என்றுதான் தொடக்கத்தில் அறிவித்தது உலக சுகாதார மையம். ஆனால், சர்வதேச அழுத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து, `நிலைமையை மீண்டும் ஒருமுறை பரிசீலிக்கிறோம்’ என்று பின்வாங்கியிருக்கிறார்கள்.

ஆனால், `இத்தகைய பீதிகளைப் பொருட்படுத்த வேண்டாம்’ என்று அறிவுறுத்தி உள்ளது பிரேசில். `இப்படித்தான் 2014-ம் ஆண்டு உலகக் கோப்பையின்போது டெங்கு பீதி பரப்பப்பட்டது. இறுதியில் மூன்று பேரை மட்டுமே டெங்கு பாதித்தது. எனவே கவலை வேண்டாம்’ என்கிறார்கள் பிரேசில் மருத்துவர்கள். ‘சுற்றுலாப் பயணிகளைத் தடுத்து நிறுத்துவது தீர்வு அல்ல. அனைவரும் எச்சரிக்கை யுடனும் பாதுகாப்புடனும் இருக்கும்படி வலியுறுத்துவதுதான் இப்போதைய தேவை’ என்கிறார்கள்.

 தவிக்கும் பிரேசில்

சமீப காலம் வரை, பிரிக்ஸ் நாடுகளில் முதன்மை யானதாகக் கருதப்பட்டுவந்த ஒரு நாடு பிரேசில். `விரைவில் மாபெரும் உயரங்களை அடையும்’ என்று உலகப் பொருளாதார நிபுணர் களால் கணிக்கப்பட்ட ஒரு நாடும்கூட. இன்று பெரும் குழியொன்றில் இடறிவிழுந்து கிடக்கிறது. `இப்போதைக்கு எங்களுக்குத் தேவை மீட்சி, கொண்டாட்டம் அல்ல’ என்கிறார்கள் போராட்டத்தில் ஈடுபடும் எளிய மக்கள்.

அவர்களுடைய கோரிக்கைகளும்கூட எளிமையானவைதாம். மக்களின் அச்சங்களையும் அவநம்பிக்கையையும் அரசு போக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களையும் இன்னபிற கிரிமினல் குற்றங்களையும் தடுக்க வேண்டும். வேலையில்லாத் திண்டாட்டத்தைக் கட்டுப்படுத்தி பொருளாதாரத்தைச் சீராக்கவேண்டும். ஊழலை ஒழித்து, நல்லாட்சியை நிலைப்படுத்தவேண்டும்.

பதற்றத்தில் பிரேசில்!

‘அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆயிரம் ஆறுதல் வார்த்தைகளை இனிக்க இனிக்கச் சொல்லும் அரசு, எங்களைத் தொடர்ந்து புறக்கணிக் கிறது. பொருளாதாரமும் சமூகமும் அரசியலும் சீர்கெட்டிருக்கும் நிலையிலும் கொண்டாட் டங்களை நடத்தியே தீருவோம் என்றும் சொல்கிறது. இதை எப்படி எங்களுக்கான அரசாக நாங்கள் ஏற்க முடியும்? இதை எப்படி எங்களுக்கான கொண்டாட்டமாகப் பாவிக்க முடியும்?’ என்கிறார்கள்.

இந்தக் கேள்விக்கு என்ன பதில்?