Published:Updated:

``காவிரியில், மோடி செய்ததும் செய்யத் தவறியதும்..!'' #WeWantCMB

``காவிரியில், மோடி செய்ததும் செய்யத் தவறியதும்..!'' #WeWantCMB
``காவிரியில், மோடி செய்ததும் செய்யத் தவறியதும்..!'' #WeWantCMB

``காவிரியில், மோடி செய்ததும் செய்யத் தவறியதும்..!'' #WeWantCMB

2007 - ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்தாமல், மத்திய காங்கிரஸ் அரசு 6 வருடம் இழுத்தடித்தது. 2013 ம் ஆண்டு உச்சநீதிமன்றம் குறிப்பிட்டு உத்தரவிட்ட பிறகும், மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் அரசிதழில் வெளியிடுவதோடு நிறுத்திக்கொண்டது மத்திய அரசு. 2014 ம் ஆண்டு பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பிறகும், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. 2016 ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டது. அதை அமல்படுத்தும் நடவடிக்கை எந்த நிலையில் உள்ளது என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த மத்திய அரசின் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ``காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது'' என்று பதில் அளித்தார். இந்த விசாரணை முடிவில் நீதிபதிகள், ``காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4 ம் தேதிக்குள் அல்லது அதற்கு முன்பாக அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வாரியத்தின் உறுப்பினர்களின் பெயர்களை தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் வரும் சனிக்கிழமை மாலை 4 மணிக்குள் அளிக்க வேண்டும். அதைத்தொடர்ந்து அமைக்கப்படும் காவிரி மேலாண்மை வாரியத்தின் உறுப்பினர்கள், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளைப் பார்வையிட்டு நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டனர். 

இதனைத் தொடந்து தமிழகம், கேரளா, புதுவை அரசுகள் தங்கள் பிரதிநிதிகள் பெயரைப் பரிந்துரைத்தன. ஆனால், கர்நாடகமோ `காவிரி மேலாண்மை வாரியத்தை ஏற்க முடியாது. வாரியத்துக்குக் கர்நாடகம் சார்பில் யாரையும் தேர்வு செய்து கொடுக்கமாட்டோம்' என்று தனது எதிர்ப்பு நிலையில் உறுதியாக இருந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தை மதிக்காத கர்நாடக அரசைக் கண்டிக்க வேண்டிய மத்திய அரசு, திடீரென்று தனது நிலைப்பாட்டில் பல்டி அடித்தது. இந்நிலையில், 2016 ம் ஆண்டு அக்டோபர் 3 ம் தேதி, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பி.ஜே.பி அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, ``இவ்விஷயத்தில் மத்திய அரசுக்கு உத்தரவிடும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு இல்லை. ஏற்கெனவே, பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில் தேவையான திருத்தம் செய்ய வேண்டும். உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது'' என்று அதிர்ச்சியளிக்கும் வகையில் வாதாடினார். அதை, உச்சநீதிமன்றம் பெஞ்ச் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 16 ம் தேதி உச்சநீதிமன்றம், தனது இறுதித் தீர்ப்பை அளித்தது. தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவை மட்டும் ஆண்டுக்கு 14.75 டி.எம்.சி குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மற்ற அம்சங்களில் காவரி நடுவர் மன்றம் இறுதி உத்தரவில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

காவிரி நடுவர் மன்றம் இறுதி உத்தரவை அமல்படுத்தும் `ஸ்கீம்' உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. காவிரி மேலாண்மை வாரியம்தான் என்று தமிழ்நாடும், இல்லவே இல்லை என்று கர்நாடகமும் பிடிவாதம் பிடித்தன. மத்திய அரசு, கர்நாடகம் பக்கம் சேர்ந்துகொண்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மார்ச் 29 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மார்ச் 15 ஆம் தேதி தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக எம்.பி-க்கள் அனைவரும் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும், டெல்லி மனம் இறங்கவில்லை. இந்நிலையில், நேற்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியைத் தமிழக பி.ஜே.பி-யினர் சந்தித்தனர். இல.கணேசன், கருப்பு முருகானந்தம், பொன்.விஜயராகவன் ஆகியோரைக் கொண்ட அந்தக் குழு, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்றே தமிழக மக்களின் ஒட்டுமொத்தக் கோரிக்கை என்பதைச் சொல்லிவிட்டனர். ஆனால், நிதின் கட்கரி இதுபற்றி உறுதியான காலக்கெடுவுடன் எதையும் சொல்லவில்லை.

இந்நிலையில், சட்டப் பஞ்சாயத்து இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `இந்திரா காந்தி முதல் மோடி வரை வந்த பிரதமர்களில் ஒருவர் கூட தங்கள் வாக்குவங்கியைப் பற்றிக் கவலைப்படாமல், நியாயத்தின் பக்கம் நிற்கவில்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காமல் செயல்படும் கர்நாடக மற்றும் மத்திய அரசுகள் மேல் நடவடிக்கை எடுக்கும் துணிவு நீதிமன்றத்துக்கும் இல்லை. இந்நிலையில், தமிழக அரசும் எம்.பி-க்களும் மத்திய அரசுக்குக் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்சபட்ச அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தெளிவானத் தீர்ப்புகளைப் புறந்தள்ளி, தேர்தல் ஆதாயம் அடைய நினைக்கிறது மத்திய அரசு. அதாவது, கர்நாடகாவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே அம்மாநில விருப்பப்படி, மேலாண்மை வாரியத்தின் கட்டமைப்பை மாற்ற மத்திய அரசு திட்டமிடுகிறது. மேலாண்மை வாரியத்தை பக்ரா-பியாஸ் மாதிரி அல்லது அதைவிடச் சிறப்பானத் திட்டத்தில் அமைக்காவிட்டால் மேலாண்மை வாரியம் அமைத்தும் தமிழகத்துக்கு உபயோகம் இல்லாமல் போகும்' என்று எச்சரித்துள்ளது.
 

அடுத்த கட்டுரைக்கு