'பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் மோசடி செய்துவிட்டு, வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் நீரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி ஆகிய இருவரையும் நிச்சயம் இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவருவோம்' என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரின் மாமா மெஹுல் சோக்ஸி இருவரும் கூட்டாகச் சேர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,600 மோசடிசெய்துள்ளனர். இது தொடர்பாக, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். சமீபத்தில் முப்பையில், நீரவ் மோடிக்குச் சொந்தமான குடியிருப்பில், மூன்று நாள் தொடர் சோதனைக்குப் பிறகு ரூ.10 கோடி மதிப்பிலான வைர மோதிரம் ஒன்றை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் கைப்பற்றினர்.
இந்நிலையில், டைம்ஸ் நெட்வொர்க்ஸ் எகனாமிக் கான்லேவ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிர்மலா சீதாராமனிடம், வங்கி மோசடிகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்துப் பேசிய அவர், ''எங்கள் சிஸ்டம் கடுமையாக உள்ளது. இதில், எவ்வித ஓட்டையும் இல்லை. நீரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி ஆகியோர் எங்கும் வெளியேறவில்லை, அவர்கள் ஓடிவிட்டனர். நாங்கள் அவர்களை மீண்டும் இங்கு திருப்பிக் கொண்டுவருவோம்'' என்று உறுதிபடக் கூறினார்.