Published:Updated:

பெயர் வைக்கும் பேறு - மகுடேசுவரன்

பெயர் வைக்கும் பேறு - மகுடேசுவரன்
பிரீமியம் ஸ்டோரி
பெயர் வைக்கும் பேறு - மகுடேசுவரன்

பெயர் வைக்கும் பேறு - மகுடேசுவரன்

பெயர் வைக்கும் பேறு - மகுடேசுவரன்

பெயர் வைக்கும் பேறு - மகுடேசுவரன்

Published:Updated:
பெயர் வைக்கும் பேறு - மகுடேசுவரன்
பிரீமியம் ஸ்டோரி
பெயர் வைக்கும் பேறு - மகுடேசுவரன்
பெயர் வைக்கும் பேறு - மகுடேசுவரன்

மிழ் மொழியை பல்லாயிரமாண்டுகள் மூத்த மொழி என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதில் ஐயமில்லை. மூத்த மொழியின் பெருமை மூப்போடு நின்றுவிடுவதன்று. இளமைக்கு இளமையாய்ப் புதிதாகிக்கொண்டே செல்லும் அதன் சொல்லாட்சித்  திறத்தோடும் தொடர்புடையது. இடைக்காலத்தில் தமிழுக்குள் நுழைந்த வடமொழிச் சொற்கள் மிகுதியினும் மிகுதியாகி, மலையாளம் என்றொரு மொழியைத் தோற்றுவித்ததை அறிவோம்.

வரலாறு முழுக்கவே பண்பாட்டுப் படையெடுப்புகளும் குடியேற்றங்களும் நிகழ்ந்துகொண்டேயிருந்த நிலம் தமிழ் நிலம், சீரான இடைவெளியில் கடலினை நோக்கி வரையப்பட்ட வரிக்கோடுகளாய்த் தொடர்ச்சியான ஆறுகள் பாயும் தென்னாடு, சிந்து, கங்கைச் சமவெளியைவிடவும் உயிர்ப்பான வாழ்நிலம் என்பதை நம் வரலாற்றாசிரியர்களே கூற மறந்துவிட்டனர். எல்லாப் படையெடுப்புகளும் குடியேற்றங்களும் ஏற்பட்ட பின்னர் நின்று நிதானமாக நிகழ்த்தப்படும் அயல் மகரந்தச் சேர்க்கைகளில் ஒன்று மொழிக் கலப்பாகும்.

தொன்றுதொட்டு பரந்த நிலப்பரப்பில் வழங்கிவரும் வழக்காற்று மொழியை எந்தப் பேரரசாலும் மாற்றிவிட முடியாது என்றாலும் ஒரு மொழி தன் மக்களோடு கொண்டிருக்கும் நாத்தொடர்பைக் கொஞ்சம் கொஞ்சமாக மொழிக்கலப்பு என்ற பெயரால் நெடுநாட்கள் முயன்றால் அறுத்தெறிந்துவிடவும் முடியும். அந்த நோயரிப்பு தமிழில் எப்போதும் நிகழ்ந்துகொண்டேதான் இருந்தது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழியில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் வடமொழிச் சொற்கள் காணப்பட்டன. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழுக்குள் வடமொழிச் சொற்கலப்பு நன்றாக வேர்பிடித்துவிட்டது. பெருவழுதி, பல்யானைச் செல்கெழு குட்டுவன், செங்கண்மாத்துவேள் நன்னன், முடத்திருமாறன், நெடுஞ்செழியன், செங்குட்டுவன் என்று பழங்காலத் தமிழ்வேந்தர்கள் பெயரிருக்க, ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய மன்னர்கள் இராஜராஜன், இராஜேந்திரன், விஜயாலயன், ஆதித்தன், சுந்தரபாண்டியன் என்றானார்கள்.

மொழிக்கலப்பை முழுமையாய் ஆராய்ந்ததில் நான் கண்டறிந்த உண்மை என்னவென்றால், பெயர்ச்சொற்கள்தாம் தமிழுக்குள் கலந்தனவேயன்றி வினைச்சொற்களில் அவ்வளவாய்க் கலப்பேற்படவேயில்லை என்பதுதான். `வாசித்தான்’, `பிரகாசித்தது’, `ஜெயித்தான்’ என்று சிற்சில வினைச்சொற்கலப்புகளைக் காண முடிகிறது. ஆனால், பெயர்ச்சொற்களின் கலப்பு ‘களைபெருகிக் காடழிக்குமோ’ என்னுமளவுக்கு இருக்கிறது.

மொழிக்கலப்பு ஏற்பட்டதிலிருந்து இன்று வரை பெயர்ச்சொற்களில் புகழ்ச்சிப் பொருள்களை

பெயர் வைக்கும் பேறு - மகுடேசுவரன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏற்றியதால்தான் அவற்றை நாம் சூட்டிக்கொண்டோமோ என்று ஐயுறுகிறேன். `இராஜாக்களுக்கெல்லாம் இராஜன்’, `இராஜாக்களின் இந்திரன்’ என்று புகழ்விளியாய் அமைந்த பெயர்ச்சொற்களை மறுக்க மனம் வருமா? அவ்வாறிருக்கையில் தமிழில் இடப்படும் பெயர்ச்சொற்கள் இயற்கை விளியாய் அமைந்திருந்தன. கரிகாலன், கூன்பாண்டியன் என்று மன்னர் பெயர்களே அவர்களின் இயற்கையை உள்ளபடி கூறுவதாய்த்தாம் உள்ளன. இந்தப் பெயர்க்கலப்பின் தற்கால விளைவு என்னவென்றால், தமிழகத்தில் நூற்றுக்குத் தொண்ணூற்றைவர்க்குப் பிறமொழிப் பெயர்களே வழங்குகின்றன. இப்படியொரு சீர்கேடு உலகில் எம்மொழி யினர்க்கும் நேர்ந்திருக்காது. நமக்கு நேர்ந்திருக்கிறது.

என் தாயாருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஐம்பதாண்டுகளுக்கு முந்திய தலைமுறையின் வளமான எடுத்துக்காட்டு அவர். ஒருநாள் பக்கத்துவீட்டுக் குழந்தையை மடியில் வைத்துக் கொஞ்சிக்கொண்டிருந்தார். ‘கிசுர் கிசுர்’ என்று குழந்தையை அழைத்தார். குழந்தையைப் புதுவித மாய்க் கொஞ்சுகிறாரே என்று `அதென்னம்மா கிசுர்?’ என்று கேட்டேன். ‘அதுதான் குழந்தை பேரு’ என்றார். கிசுர் என்றா பெயர் வைக்கிறார்கள்? இத்தனைக்கும் அக்குழந்தையின் பெற்றோர் தென்மாவட்டத்தின் எளிய தமிழ்க்குடியினர். பிழைப்பின்பொருட்டு இவ்வூருக்கு வந்திருக்கிறார்கள். மாலையில் அக்குழந்தையின் தந்தையிடமே கேட்டுவிட்டேன். ‘என்ன குழந்தைக்குக் கிசுர்னா பேரு வெச்சிருக்கீங்க?’ அவர் சிரித்துக்கொண்டே ‘அது கிசுர் இல்லீங்க. கிஷோர்’ என்றார்.

தென்மாவட்டத் தமிழர் ஒருவர் தம் பிள்ளைக்கு கிஷோர் என்று பெயர் வைக்கிறார். அப்பெயர்க்கு என்ன பொருள் என்று அவருக்கும் தெரியாது, அழைக்கின்றவருக்கும் தெரியாது.  இதை எழுதுகின்ற இந்நொடி வரை எனக்கும் அந்தப் பெயரின் பொருள் தெரியாது. இதுதான் இன்றைய நிலை. அதுமட்டுமில்லை, கிசுர் என்று பெயர்வைக்க இயலாது என்பதில் உறுதியாய் இருக்கும் நான், கிஷோர் என்றும் பெயர்வைக்க இயலாது என்பதில் உறுதியாய் இல்லை. ‘ஓ. கிஷோரா… நல்ல பேரு’ என்று சொல்லவேண்டிய நிலையில் இருக்கிறோம்.

இணையத்தில் என்னோடு உரையாடும் நண்பர்கள் தம் குழந்தைக்குச் சூட்ட நல்ல தமிழ்ப்பெயராகக் கூறும்படி என்னிடம்  வேண்டுகோள் வைப்பார்கள். ‘பரவாயில்லையே… ஒரு குழந்தைக்குப் பெயர்சூட்டும் நிலையில் இருக்கின்றோம்… நம்மை நம்பி எத்தனை பெரிய உதவி யைக் கோருகிறார்கள்..!’ என்று மகிழ்வேன். நன்கு ஆராய்ந்து ஐந்தாறு தமிழ்ப் பெயராகக் கூறுவேன். ‘இல்லை ஐயா… `ப’, `யே’, இல்லாவிட்டால் `வூ’ ஆகிய எழுத்துகளில் தொடங்கும் பெயராக வேண்டும்’ என்பார்கள்.

‘அடடா… இதை முதலிலேயே கூறக் கூடாதா…’ என்றபடி மேலும் தேடுவேன். `ப’-வில் தொடங்கும் பெயர்களைக் கண்டுபிடித்துவிடலாம். `யே’-வில் தொடங்கும் பெயருக்கு நான் எங்கே போவேன்? பிறகுதான் எனக்கே தோன்றும், `யே’ அல்லது `வூ’ என்னும் எழுத்துகள் சொல் முதலெழுத்தாகத் தோன்ற மாட்டா என்பது.  என்னிடம் பெயர் சூட்டக் கோரிய நண்பர்க்கு இதை விளக்குவேன்.

‘என்னங்க இப்படிச் சொல்றீங்க… யேசுதாஸ்னு பெரிய பாடகர் இருக்கா ருல்ல…’ என்று என்னை உள்பெட்டி வழியாகவே மேலும் கீழும் பார்ப்பார்.

‘அது தமிழ்ப்பெயர் இல்லைங்க… யேசு, தாஸ் இரண்டுமே வெவ்வேறு மொழிங்க…’ என்பேன். பாரதிதாசன், கண்ணதாசன் என அவர் அடுத்த பெயர் களுக்குத் தாவினால் என்னிடம் விடையில்லை என்பதால் பயந்தபடியே இருப்பேன். நல்ல வேளையாக, தாஸ், தாசன் இரண்டுக்கும் உள்ள ஒற்றுமையை அந்நண்பர் அறிந்திருக்க மாட்டார்.

‘சரி, `ப’-வில் தொடங்கும் பெயர்களையே சொல்லுங்க…’ என்பார். நான் சில பெயர்களைச் சொல்வேன். அவருக்கு நிறைவில்லாமல், `நீயா நானா’ கோபிநாத்போல் ‘வேற… வேற…’ என்பார். `ப’-வில் தொடங்கும் தமிழ்ப் பெயர்கள் அனைத்தையுமே ஏறத்தாழச் சொல்லி முடித்திருப்பேன். இப்படியே நீளும் உரையாடல் ஒரு கட்டத்தில் ‘சரிங்க… வேற ஏதாச்சும் இன்னும் நல்ல பெயராகத் தோன்றினால் சொல்லுங்க…’ என்பதாய் முடியும். நான் எழுந்து சென்று தண்ணீர் குடிப்பேன். பின்னொரு வாய்ப்பில் அந்நண்பரைக் காண நேர்ந்தால் நானே சென்று வலிந்து கேட்பதுண்டு. ‘பாப்பாவுக்கு என்ன பேரு வெச்சீங்க?’

அவர் ‘பரிபிக்‌ஷிதான்னு வெச்சுட்டோம்’ என்பார்.

தமிழ்ப்பெயர்களின் பட்டியல் ஒன்றைப் போட்டுப் பார்த்தோமெனில் ஆணுக்கு ஆயிரம் பெயர்கள், பெண்ணுக்கு ஆயிரம் பெயர்கள் தேறுவதே குதிரைக் கொம்புதான். நண்பர் கேட்டவாறு `ப’ என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ்ப் பெண் பெயர்கள் சிலவற்றைக் கூறுங்கள் பார்ப்போம்.

பனிமலர், பண்ணரசி, பசுங்கிளி, பட்டத்தரசி, பட்டம்மா. அதற்கு மேல் பெரிதாக ஒன்றுமில்லை. பத்மா, பாவனா, பவித்ரா, பரிமளா ஆகியன வடமொழிப்பெயர்கள் என்பதே பலருக்குத் தெரியவில்லை. ‘என்னது… கருணாநிதி என்பது தமிழ்ப்பெயரில்லையா?’ என்றுதான் கேட்கிறார்கள். ஆயிரம் பெயர்கள்கூட தேறாதபடி, எட்டுக்கோடி எண்ணிக்கையில், மொழியின் பெயரால் அறியப்படும் ஓர் இனத்தின் ஆட்பெயர்ச் சொற்கள் அருகியிருக்கின்றன என்பதைச் சொல்ல விரும்புகிறேன்.

இதற்கு என்னதான் காரணமாக இருக்க முடியும்? ஆண்பால், பெண்பால் தமிழ்ப் பெயர்கள் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, வடமொழிப் பெயர்களையே பிள்ளைகளுக்குச் சூட்டும் போக்கு பல நூற்றாண்டுகளாக நம்மிடையே நிலவி வந்திருக்கிறது. கீழ்த்தட்டுப் பிரிவினரிடையே மாடன், காடன், குப்பன், கறுப்பன் என முன்சொன்னவாறு இயற்கை விளியாய் அமைந்த பெயர்கள் இடப்பட்டன. அப்பெயர்களோடும் சாமி சேர்த்து மாடசாமி, குப்புசாமி, கறுப்புசாமி என்றாக்கினர். பெயரில் என்ன இருக்கிறது என்பதை நானும் ஏற்றுக்கொள்வேன். ஆனால், நம்மொழியில் ஆட்பெயரிடும் வழக்கு ஏனில்லை என்று கேட்பேன். கிஷோர் என்றோ பரிபிக்‌ஷிதா என்றோ தமிழ்ப்பிள்ளைகளுக்கு ஏன் பெயர் வைக்க வேண்டும்? நம்மை அவ்வாறு இயக்குவது தீராத மோகமா, அறியாமையா, அடிமை யுணர்ச்சியா? சுப்ரமணி என்பதைத் தமிழில் வெண்மணி என்று ஏன் வைக்கவில்லை? பூங்கொடி இருக்க புஷ்பலதா என்றது ஏன்? அடியார் இருக்க தாசர்கள் தோன்றியது எவ்வாறு?

இவற்றுக்கெல்லாம் என்ன தீர்வு என்று ஆழ்ந்து சிந்தித்தால், விடை மிக எளிதான ஒன்றாக இருக்கிறது. நம்

பெயர் வைக்கும் பேறு - மகுடேசுவரன்

மக்களுக்குச் சொல்லறிவு அறவே புகட்டப்படவில்லை என்பதுதான் அது. ஒரு சொல்லுக்கு ஒரு பொருள் இருக்கும்தானே, அது நமக்குப் பெரும்பாலும் தெரிவதில்லை. ‘எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே.’   எப்பொருளேனும் ஒருபொருள் விளங்கச் செப்பி நிற்பது பெயர்ச்சொல் ஆகும். இடுகுறிப் பெயரை வழங்கும் வழக்குடையோராயிற்றே, எல்லாப் பெயர்களையும் அவ்வாறே கண்மூடித்தனமாய் வழங்கிப் பழகிவிட்டோம். ஒரு சொல்லை எங்கு கண்டாலும் அதற்கு என்ன பொருள் என்று தேடிப் பழகவேண்டும். சுசீலா என்றால் என்ன பொருள் என்பதைத் தேடியறிய வேண்டும். சுசீலாவுக்கு என்ன பொருள் என்று சுசீலாவுக்கே தெரிவதில்லை. சீலம் என்றால் ஒழுக்கம். சு என்பது நல்ல, தூய என்ற பொருளில் பயிலும் வடமொழி முன்னொட்டாகும். நல்லொழுக்கமுடையவள் சுசீலா. சுமதி என்றால் நல்லறிவு. சுகுமாரன் என்பவன் நன்மகன்.

தமிழில் பிறமொழிச் சொற்கலப்பு மிகுந்துவிட்டது என்ற நிலையில் நூறாண்டுகளுக்கு முன்பு, மறைமலை அடிகளாரால் தனித்தமிழ் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. முந்நூறாயிரம் சொற்களுக்கும் மேற்பட்ட சொல்வளமுடைய தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்கலப்பு என்னும் நோய் பீடிப்பதா... என்ற கவலையில் தோன்றிய இயக்கம் அது.

தனித்தமிழ் இயக்கத்தவர்கள் முதலில் தத்தம் பெயரைத் தமிழில் மாற்றிக்கொண்டார்கள். சுவாமி வேதாசலம் மறைமலை அடிகளானார். சூரிய நாராயண சாஸ்திரியார், பரிதிமாற்கலைஞர் ஆனார். மறைமலை அடிகளாரின் மக்கள் திருஞானசம்பந்தன், அறிவுத்தொடர்ப னென்றும், மாணிக்கவாசகம், மணிமொழி யென்றும், சுந்தரமூர்த்தி, அழகுருவென்றும் பெயர்மாற்றம் பெற்றனர்.

மறைமலை அடிகளாரின் புதல்வியாரும் சென்னை நார்த்விக் மகளிர் கல்லூரித் தமிழாசிரியராய் இருந்த வருமான தி.நீலாம்பிகை அம்மையார் ‘வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம்’ என்றொரு சிறுநூலை வெளியிட்டுள்ளார். வடசொற்கலப்பின்றி தமிழ் பேசவும் கற்பிக்கவும் உதவும் கையேடு அது. அவர்தம் பட்டியல்படி ஏறத்தாழ ஆயிரத்து இருநூறு வடமொழிச்சொற்கள் தமிழில் கலந்துள்ளன. அதற்கு நேரான தமிழ்ச்சொல்லையும் அம்மையார் ஆக்கியும் தொகுத்தும் வழங்கியுள்ளார். மகிழத்தக்க செய்தி என்ன வெனில் அச்சொற்களில் பெரும்பான்மையானவை தமிழ்ச்சொற்களாகத் தற்காலத்தில் வழக்குக்கும் வந்துவிட்டன. அவசியம், கட்டாயம் என்றும் பிரசங்கம், சொற்பொழிவென்றும் இலஞ்சம், கையூட்டு என்றும் பிரசாரம், பரப்புரையென்றும் சேமம்,  நலமென்றும் ஆகியிருக்கின்றன. உலோகம் என்பதற்கு ‘பொன், வெள்ளி, செம்பு முதலியன’ என்றுதான் அம்மையார் விளக்குகிறார். பின்வந்த தமிழறிஞர்கள் உலோகம் என்பதைக் கனிமம் என்றனர். நான் சுவாரஸ்யம் என்பதைக் ‘களிநயம்’ என்று வழங்கினேன். இன்றுள்ள ஊடகப் பெரும் பாய்ச்சலைக் கருதினால், தனித்தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி வழக்குக்குக் கொண்டுவரும் பொறுப்பு அத்துறை யினர்க்கே மிகுதியாய் இருக்கிறது.

பிறமொழிச் சொற்கலப்பு என்னும் களையை நீலாம்பிகை அம்மையாரின் தொகுதியைக் கைவிளக்காகக் கொண்டு யார்வேண்டு மானாலும் தூய தமிழ் நடையில் பேசவும் எழுதவும் பயின்றுவிடலாம். இனி நம் பிள்ளைகளுக்குத் தமிழி லேயே பெயர்வைத்தல் என்ற முடிவை எடுத்தால்,  எங்கும் தமிழ்ப்பெயர்களே என்னும் நிலையைத் தோற்றுவித்துவிடலாம். ஆனால், ஆட்பெயர்ச் சொற்கள் மதத்தில் வேர்கொண்டு வழங்கு மிடத்தில்  மொழிப் பற்றாளர்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இதுவரை நாம் உரையாடியவை கடந்த நூற்றாண்டு தொட்டு நிகழ்ந்துவரும் பழங்கதை. தற்காலத்தில் நாம் எதிர்கொள்கின்ற மொழிப் பேரிடர் என்னவென்றால் நாள்தோறும் புதிய புதிய தொழில்நுட்பச் சொற்கள் ஆங்கிலத்திலிருந்து நேரடியாகத் தமிழில் புகுந்து நிலைத்துவிடுவதுதான். என்ன சொல் என்ன பொருளில் இங்கே வந்து பயில்கிறது என்று உணர்வதற்குள்ளாக அச்சொல் வெகுமக்களிடம் நன்கு பரவிவிடுகிறது. இன்றுள்ள நுகர்வுமயச் சூழலில் என்னென்னவோ பொருள்கள் புதிது புதிதாய்த் தோன்றி சந்தைக்குள் இறங்கி விளையாடுகின்றன. அந்தப் பொருளையும் அதன் உட்கூறுகளையும் புரிந்துகொள்வதற்குள் அந்த அலை ஓய்ந்துவிடுகிறது. ஆங்கிலத்திலிருந்து இறக்குமதியாகும் அந்தச் சாதனமேகூட துறைசார் அறிவுடையோர்க்கே விளங்குகின்ற ஒன்று. மக்களுக்குப் பெரும்பாலும் புரியாது. அந்தக் கருவியின் பெயரைத் தமிழ்ச்சொல்லாக்கித் தருவது கண்விழிப் பிதுங்கும் செயல்தான். ஆங்கிலத்திலேயே அச்சொல் அப்போதுதான் தோன்றியிருக்கும். அந்த அலை இங்கும் அடிக்கையில் அதே வேகத்தில் நம்மையும் சேர்த்து இழுத்துச் செல்கிறது. என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிடுகிறது.
தொலைபேசியின் அடுத்த முன்னேற்றமான ‘பேஜர்’ என்னும் கருவி சந்தைக்கு வந்தது. தமிழார்வலர்கள் சிலர் அதை ‘அகவி’ என்றனர். அச்சொல்லை ஆக்கிய நாளில் அக்கருவி சந்தையிலிருந்து வெளியேறிவிட்டது.

கைப்பேசி மக்கள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியது.  தமிழாக்கம் எல்லோருக்கும் தேவைப்பட்டது. கைப்பேசி, அலைபேசி, செல்பேசி என எல்லாரும் பயன்படுத்துகின்றனர். அலைபேசி, செல்பேசி என்னும் சொற்றொடர்கள் அலைகின்ற பேசி / செல்கின்ற பேசி (Mobile Phone) என்று வினைத்தொகையாகி விரிந்த பொருள் தருவது. கைப்பேசி என்பது ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை. ‘கையில் இருக்கின்ற பேசி’ என ‘இல் என்னும் ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும்’ விரியும். மேற்கண்ட சொற்களை ஆக்கிய தமிழறிஞர்களை நாம் என்றைக்கும் மறக்கலாகாது.

கைப்பேசியைத் தமிழாக்கினோம். சிம்கார்டு என்பதைத் தமிழில் எவ்வாறு அழைப்பது என்றார்கள். தமிழ்ச் சொல்லாக்கம் என்ற என் நெடும்பயணத்தின் முதல் அடி வைப்பு, இந்தச் சொல்லிலிருந்துதான் தொடங்கியது என்று நினைக்கிறேன். ‘அழைதகடு’ என்னும் வினைத்தொகையை ஆக்கித் தந்தேன். கைப்பேசி இருந்தால் போதாது, அதற்குள் அழைதகடு பொருத்தினால்தான் அழைக்க முடியும். அழைப்பைப் பெற முடியும். Subscriber Indentity Module என்ற தொடரிலுள்ள சொற்களின் முதல் மூன்றெழுத்துகளைத் தொகுத்து SIM Card என்கிறது ஆங்கிலம். வணிகச் சமுதாயம் அந்தத் தகட்டைப் பணம் செலுத்துகிறவன் கழுத்தில் மாட்டிய அட்டையாகத் தான் பெயரிட்டு வைத்திருக்கிறது. தமிழ் மரபின்படி, அதன் பயன்பாட்டையே முதற்பொருளாகக்கொண்டு ‘அழைதகடு’ என்னும் வினைத்தொகையை நாம் பயன்படுத்தலாம்.

கைப்பேசியில் தன்னைத் தானே படம் பிடித்து அதற்கு செல்ஃபி (Selfie) என்னும் புதுச்சொல் உருவாக்கு கிறார்கள். இந்தச் சொல்லால் ஆட்டுவிக்கப்படாதவர்களே இல்லை என்னுமளவுக்கு இச்சொல்லும் செயலும் எல்லாரையும் கவர்ந்தது. `செல்ஃபிக்குத் தமிழில் என்ன சொல்வீர்கள்?’ என்று கேட்டார்கள். அப்போது சுயமி என்ற சொல்லை ஆக்கிப் பயன்படுத்திக்கொண்டிருந்தனர். சுயமி என்பது செல்ஃபிக்குரிய வடமொழிச்சொல்லாக இருக்கலாம். அது எப்படித் தமிழாகும்? நான் ‘தற்படம்’ என்றேன். அடுத்து, குழுவாக கும்பலாக நின்று தற்படம் பிடித்து அதைக் `குரூப்பி (Groupie)’ என்றனர். அதைத் தமிழில் என்னென்பது? தம்படம். தனியொருவன் பிடிப்பது தற்படம். தம்மோடு தம்மில் பலர் நின்று பிடிப்பது தம்படம். இந்தச் செயலைச் செய்வதற்குச் செல்ஃபி ஸ்டிக் (Selfie Stick) என்னும் பொருள் சந்தைக்கு வந்தது. அது தற்படக்கோல்.

இயர்போனுக்கு, காதணிபாடி. சார்ஜருக்கு மின்னேற்றி. பவர் பேங்குக்கு மின்தேக்கி. புரொஜக்டர் என்பதை ஒளிபெருக்கி என்றேன். இப்போது நாமிருக்குமிடத்தை அறியப் பயன்படும் GPS (Global Positioning System) என்னும் முறையை ‘புவிநில்லிட அறிமுறை’ எனலாம். புவியில் நாம் நிற்கின்ற இடத்தினை அறிவதற்குப் பயன்படும் முறை’ என்று அத்தொடரை விரித்துப் பொருள் காண வேண்டும். 

ட்விட்டரைக் கீச்சர் என்றும் தமிழாக்கினர். ஐந்தாறாண்டுகளுக்கு முன்பு, நான் முகநூலுக்கு வந்தபோது பலரும் அதை ‘வதனப்புத்தகம்’ என்றே வழங்கினர். வதனம் வடமொழி என்பர். என் போன்றோர் தொடர்ந்து எழுதி அதை ‘முகநூல்’ ஆக்கினோம். முகம் என்பது முகைதல் என்பதை வேராகக் கொண்ட தமிழ்ச்சொல்தான்.

அடுத்து வாட்ஸ்அப் வந்தது. யாரோ ஒரு தமிழார்வலர் அதை ‘கட்செவி அஞ்சல்’ என்றார். Whatsup என்ற நலவிசாரணைக் கேள்வியை முன்வைத்து Whatsapp என்று செயலியைக் குறிக்கும் சொல்லைப் பின்னொட்டாக்கிய சொல்விளையாட்டுப் பெயர் அது. ‘என்னம்மா கண்ணு?’ என்பதைப்போன்ற முதல் வினவல். அதைப் பொருள் மாறாமல் ‘என்வினவி’ என்று தமிழாக்கினேன். என்வினவியில் உள்ள என் என்ற பகுதிக்கு எனது என்றும் பொருள். என்ன என்றும் பொருள். வினவி என்பது வினவும் செயலைக் குறிக்கும் விகுதிபெற்ற தொழிற்பெயர். என்ன என்று வினவும் செயலி. சிலர் இதைப் ‘பகிரி’ என்ற சொல்லால் வழங்கினர். பகிர் என்னும் வினைவேருடன் இ என்னும் தொழிற்பெயர் விகுதி சேர்த்து இச்சொல்லை ஆக்கியுள்ளனர். பகிரப்படும் எல்லாமே பகிரிதான். மதியச் சோற்றை நால்வரோடு பகிர்ந்து உண்டாலும் நீங்கள் பகிரிதான். முகநூலும் கீச்சருமேகூட பகிரிச் செயலிகள்தாம். அதனால் அச்சொல்லின் பொருத்தப் பாடு மறு ஆய்வுக்குரியது.

அறிவியல் தொழில்நுட்பச் சொற்கள் மட்டுமே தமிழாக் கத்தில் தேங்கிவிடவில்லை. பிற பொருளில் வழங்கும் அன்றாட வழக்காற்றுச் சொற்களும் உரிய வகையில் தமிழாக்கப்படவில்லை. பயன்பாட்டுக்கு வரும்படி பரப்பப்படவில்லை. ஈகோ (Ego) என்றொரு சொல் இருக்கிறது. இதைத் தமிழில் என்னென்பது? தன்வெறி, தன்வெறியாடல் என்று ஆக்கினேன். இன்றைய இளைஞர்கள் தவறாமல் பயன்படுத்தும் சொற் றொடரில் ஒன்றாக ‘I miss you’ இருக்கிறது. ‘ஐ லவ் யூ’ சொன்னவர்கள் அடுத்து எதைச் சொல்வார்கள் என்றால் இதைத்தான். இதற்குத் தமிழில் என்ன என்று கேட்டார்கள். `உன் இன்மையை உணர்கிறேன்’ என்று சினிமாப் பாடலாசிரியர் ஒருவர் எழுதியுள்ளாராம். அது ‘I feel your absence’ என்னும் தொடருக்குத்தான் பொருந்தும். ‘ஐ மிஸ் யூ’ என்பதற்கு தமிழில் மரபுத்தொடராகவே ஒரு சொற்றொடர் இருக்கிறது. ‘பிரிவுழல்கிறேன்’ என்பதுதான் அது. உழல்வது என்பதற்கு ‘நிலைகெடுவது, சுற்றிச் சுற்றி வருவது, அசைவது, அலைபாய்வது, சுழலில் சிக்கியது போலாவது’ என எண்ணற்ற பொருள்கள். அன்புத் துணையின் பிரிவால் நேர்வது அதுதான். `உன் பிரிவால் உழல்கிறேன்’ என்று விரித்துச் சொல்லலாம். தமிழ் மரபில் உள்ள வளத்தை நாம்தான் எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.  

அறிவியல், தொழில்நுட்பவியல்களில் நாள்தோறும் எண்ணற்ற சொற்கள் தோன்றிக்கொண்டே

பெயர் வைக்கும் பேறு - மகுடேசுவரன்

இருக்கின்றன. அவற்றைத் தமிழாக்கிப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நம் மொழியில் மொழியறிஞர் குழுவொன்று இடையறாது பணியாற்ற வேண்டும். தமிழ்ப்புலமையும் படைப்பூக்கமும் வாய்க்கப்பெற்ற ஆற்றலாளர்கள் இச்செயலைச் செய்ய வேண்டும். ‘நாள் தவறாமல் ஒரு புதுச்சொல்’ என்ற எளிய அளவிலேனும் நம்மை இம்முயற்சியில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். புதுச்சொல்லை ஆக்குவது, ஆக்க இயலாதவர் என்றால் அத்தகைய புதுச்சொல்லைத் தேடி அறிந்து பயன்படுத்துவது. இதைச் செய்யத் தவறினால் புதிய தொழில்நுட்ப வெள்ளம் தமிழின் பெயர்ச் சொல்லுலகை வேர் வரை அசைத்துவிடக்கூடும்.

பாமரர் பேச்சுவழக்குகளில்கூட பற்பல ஆங்கிலச் சொற்கள் கலந்துவிட்டன. தமிழ்நாடெங்கும் ஆங்கிலவழிப் பள்ளிக்கூடங்கள் புற்றீசலாய்ப் பெருகியிருக்கின்றன. தனியார் பள்ளிகள் பலவற்றில் தமிழ்த்தாய் வாழ்த்துகூட பாடப்படுவதில்லை. ஒரு மொழி வாழ்வது ஓலைச்சுவடிகளிலோ, சேகரமாய்ச் சேர்ந்திருக்கும் புத்தக அடுக்குகளிலோ, ஓராயிரம் பேரால் எழுதப்படும் கவிதை, கதைகளாலோ அல்ல. அன்றாடப் பயன்பாட்டில் வாய்மொழியாய் வழங்கப்படும் சொற்களில்தான் அது உயிரோடு இருக்கிறது. செத்த மொழிகள் என்று அறியப்படுபவை மக்கள் நாவிலிருந்து வெளியேறிய தன்மையால்தான். மக்கள் வாய்மொழியில் தமிழ்ச்சொற்கள் பெற்றிருக்கும் இடம் மெல்ல மெல்ல ஆங்கிலச் சொல்லொன்றால் மாற்றீடு செய்யப்பட்டு வருகிறது. மக்கள் நினைவில் வாழவேண்டிய சொற்கள் திட்டமிட்டே மறக்கடிக்கப்பட்டு வருகின்றன. ஆங்கிலச் சொல் தெரிந்த அளவுக்கு அதற்குரிய தமிழ்ச் சொல் தெரியவில்லை. கடைசி விதையையும் இழந்துவிட்டால் அந்தப் பயிரை உருவாக்க முடியாது. இனியும் காலந்தாழ்த்த வேண்டுவதில்லை. நாம்தாம் தமிழைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பில் உள்ள கடைசித் தலைமுறையினர் என்று தோன்றுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism