Published:Updated:

ஐடி உலகம்: நிஜமும் கற்பிதங்களும் - விநாயக முருகன்

ஐடி உலகம்: நிஜமும் கற்பிதங்களும் - விநாயக முருகன்
பிரீமியம் ஸ்டோரி
ஐடி உலகம்: நிஜமும் கற்பிதங்களும் - விநாயக முருகன்

ஐடி உலகம்: நிஜமும் கற்பிதங்களும் - விநாயக முருகன்

ஐடி உலகம்: நிஜமும் கற்பிதங்களும் - விநாயக முருகன்

ஐடி உலகம்: நிஜமும் கற்பிதங்களும் - விநாயக முருகன்

Published:Updated:
ஐடி உலகம்: நிஜமும் கற்பிதங்களும் - விநாயக முருகன்
பிரீமியம் ஸ்டோரி
ஐடி உலகம்: நிஜமும் கற்பிதங்களும் - விநாயக முருகன்
ஐடி உலகம்: நிஜமும் கற்பிதங்களும் - விநாயக முருகன்

முதன்முதலில் சினிமாவை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டபோது, திரையில் ரயில் வரும் காட்சியைப் பார்த்து மக்கள் பயந்துபோய் அரங்கைவிட்டு வெளியே ஓடினார்கள் என்று கேள்விப்பட்டுள்ளோம். அதுதான் கணிப்பொறித் துறை  இந்தியாவுக்கு வரும்போதும் நடந்தது. அந்தக் காலக்கட்டம் இப்போதும் நன்றாக நினைவில் உள்ளது.

80-களின் மத்தியில் அரசு வங்கி ஊழியர்கள் கணிப்பொறி வந்தால் தங்களுக்கு வேலை போய்விடும் என்று, அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம், தொடர்போராட்டம் நடத்தினார்கள். ஆனால், வரலாறு வேறுவிதமாக மாறியது. கணினிகள் ஒவ்வோர் அலுவலகத்திலும் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்தன.

கணிப்பொறித் துறை இந்தியாவுக்கு வந்தபோது பண்பாட்டு ரீதியாக ஏற்படுத்திய தாக்கங்களையும் குறிப்பிட வேண்டும். குறிப்பாக பி.பி.ஓ என்ற சேவை இந்தியாவுக்குள் வந்தபோது, கலாசாரக் காவலர்கள் அந்தத் துறை குறித்து உருவாக்கிய கற்பிதக் கதைகள் ஏராளம். ஐடி ஊழியர்கள் என்றாலே, `அவர்கள் கட்டற்றப் பாலியல் சுதந்திரம் கொண்டவர்கள், வார இறுதிநாட்களில் குடித்துவிட்டு அழகான இளம்பெண்களோடு ஆட்டம் போடுபவர்கள்’ என்று சாதாரண மக்களின் பொதுப்புத்தியில் பதியவைக்க முயன்றபடி இருந்தனர். தமிழ் சினிமாக்களிலும் ஐடி இளைஞர்களின் கதாபாத்திரங்களையும் அப்படி ஒழுக்கக்கேடாகத்தான் காட்டினார்கள் அல்லது அம்மாஞ்சியாகக் காட்டினார்கள்.  ஆனால், எல்லாத் துறைகளிலும் இருப்பதுபோலத்தான் ஐடி துறையிலும் சில விதிவிலக்குகள் உள்ளன என்பதை மக்கள் புரிந்துகொள்ளவே 20 ஆண்டுகள் தேவைப்பட்டன.

ஈழப் பிரச்னையில் இருந்து சமீபத்தில் சென்னையில் வந்த வெள்ளப்பெருக்கு வரை எத்தனையோ நாட்டு நடப்புகளில் இந்தத் துறையில் பணியாற்றும் இளைஞர்கள்தான் தோள்கொடுத்து நின்றார்கள். அதே நேரம் எந்தவித சமூகப் பொறுப்பற்றும் எந்தவித அரசியல் ஆர்வமும் இல்லாமல், தமிழகத்தில் எத்தனை தொகுதிகள் உள்ளன என்பது போன்ற சாதாரணத் தகவலைகூடத் தெரிந்துவைத்திராத இளைஞர்களும் இதே துறையில்தான் இருக்கிறார்கள். இது ஐடி துறைக்கு மாத்திரமே இருக்கிற பிரத்யேகக் குணம் அல்ல. இன்று எல்லா இளைஞர்களுக்குமே இருக்கிற பொதுவான சமூகக் குறைபாடு.

எந்தப் புதுத் தொழில் நுட்பமோ, வேலைவாய்ப்போ வரும்போது, அது சமூகத்தின் புறச்சூழலிலும், பண்பாட்டு ரீதியிலும் சில சாதகமான, பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். கிட்டத்தட்ட அதே கதைதான் ஐடி துறையிலும் நடக்கிறது. ஆனால், ஊதிப் பெரிதாக்கப்பட்டு அதிகக் கவனத்துக்கு உட்படுத்தப்படுகிறது. 

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தகவல்தொழில்நுட்ப உலகத்தில் ஒரு புரட்சி நடந்துகொண்டே இருக்கும். உதாரணமாக Y2K. 2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் எங்கும் அந்தப் பிரச்னையைச் சரிசெய்யும் ஆட்கள் தேவைப்பட்டார்கள். கோபால், மெயின்ஃபிரேம் போன்ற தொழில்நுட்பங்கள் படித்திருந்தால், அடுத்த நாளே அமெரிக்காவுக்குச் சென்றுவிடலாம். அப்படிச் சென்றவர்கள் லட்சக்கணக்கில் மாதச் சம்பளம் வாங்கினார்கள். 2000-ம் ஆண்டில் ஜாவா வந்தது. 2005-ம் ஆண்டில் இ-காமர்ஸ் எனப்படும் மின்னணு வணிகம் கொடிகட்டிப் பறந்தது. பிறகு 2010-ம் ஆண்டில் மொபைல் தொழில்நுட்பம். இப்போது கிளவுட் டெக்னாலஜி. மற்ற தொழில்துறைகளைவிட ஐடி துறை தனித்து நிற்கவும் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் பணியாற்றவும் காரணமே,  மாறிக்கொண்டிருக்கும் இந்தத் தொழில்நுட்பம்தான். எல்லாத் துறைகளுக்கும் ஓர் ஆரம்பக்கால கட்டம் இருக்கும். பிறகு பொற்காலம் என்று ஒன்று இருக்கும். பிறகு, பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் சுமாராக ஓடிக்கொண்டிருக்கும். இறுதியாக அந்தத் துறை வீழ்ச்சி அடைந்து வேறு ஓர் அலை வீசும். கணிப்பொறித் துறையின் ஆரம்ப காலம் என்பது, 80-களின் இறுதியில் இருந்து 90-களின் ஆரம்பம் வரை. பொற்காலம் என்பது 90-களின் மத்தியில் இருந்து 2010-ம் ஆண்டு வரை.  ஆனால், இன்றைய நிலைமை அப்படி இல்லை.

ஐடி உலகம்: நிஜமும் கற்பிதங்களும் - விநாயக முருகன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐடி துறை என்றாலே கைநிறையச் சம்பளம் வாங்குபவர்கள் என்பதும் பொதுப்புத்திதான். அதெல்லாம் ஐடி-யின் ‘பொற்கால’த்தில் சிலருக்குக் கிடைத்திருக்கலாம். ஆன்சைட் எனப்படும் வெளிநாட்டு வேலையில் கிடைக்கும். அதுவும் அமெரிக்காவில் வாங்கும் டாலரை இந்திய ரூபாய் மதிப்புக்கு மாற்றினால் கிடைக்கும். `அமெரிக்காவில் இருக்கும் பிச்சைக்காரன் கூட ஆங்கிலம் பேசுகிறான்’ என்று நம்மவர்கள் அதிசயமாகச் சொல்வார்கள். அமெரிக்காவில் ஒரு டாலர் பிச்சை எடுத்தால்கூட, இந்திய மதிப்பில் அது 60 ரூபாய்க்கும் மேல் வரும். அங்கு ஐந்து டாலர் இருந்தால், ஒரு வேளை சாப்பிடலாம். இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாகவே ஐடி துறையில் ஒருவிதச் சுணக்கம் ஏற்பட்டு, மற்ற துறைகளைப் போலவே அதீத சம்பளம் தருவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று எனது நண்பரோடு பேசிக்கொண்டிருக்கும்போது அவர் சொன்னது... `ஐடி துறையைவிட, ஐடி துறையை நம்பி தொழில்செய்பவர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள். ஷேர் ஆட்டோ ஓட்டுபவர்கள், டாக்ஸி டிரைவர்கள், உணவகங்கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், குறிப்பாக ஐடி துறை ஊழியர்களுக்கு வாகன, வீட்டுக் கடன் கொடுக்கும் தனியார் வங்கிகள் என்று, எண்ணற்ற மக்கள் இந்தத் துறையை நம்பி இருக்கிறார்கள்.’ இந்தத் துறை வந்த புதிதில் அதன் பணியாளர்களின் சராசரி வயது 25 என இருந்தது. இப்போது 30  என உயர்ந்திருந்தாலும் பெரும்பாலானோர் 40 வயதுக்குப் பிறகு இந்த வேலை போதும் என்ற சலிப்பான மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள். சொந்தத் தொழில், ஏதாவது உணவகம் வைப்பது, ஆயத்த ஆடை விற்பனை செய்வது என்று யோசிக்க ஆரம்பிக்கிறார்கள். இப்போது ஆர்கானிக் சந்தைக்கு அதிகக் கிராக்கி இருப்பதால், சிலர் அதை நோக்கி நகர ஆரம்பித்துள்ளார்கள். ஐடி-யில் வேலை பார்த்தபடியே சில நண்பர்கள் கூட்டாகச் சேர்ந்து எங்கேயாவது விவசாய நிலம் வாங்கி, ஆர்கானிக் பொருட்கள் விளைவிக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். இந்த மாற்றுத் தொழில் முயற்சிகளுக்குப் பின்னால் வெறும் பொருளாதாரக் காரணங்கள் மட்டும் அல்ல, ஐடி துறை தரும் அதீத அழுத்தமும் காரணியாக மாறிவருகிறது.

ஐடி நிறுவனங்கள் வந்த பிறகுதான் கார்ப்பரேட் சாமியார்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. சென்னையின் ராஜீவ் காந்தி சாலையில் எண்ணற்ற யோகா மையங்களைப் பார்க்க முடியும். காரணம், அதீத மனஅழுத்தம். அதில் இருந்து விடுபட சிலர் மதுவிடுதிகளுக்குச் சென்றால், சிலர் ஆன்மிகம் பக்கம் செல்கிறார்கள். ஆனால், ஐடி துறையில் இருந்து சென்ற எவரும் சொந்தமாக ஆசிரமம் அமைத்த கதையை

ஐடி உலகம்: நிஜமும் கற்பிதங்களும் - விநாயக முருகன்

எங்கும் கேள்விப்படவில்லை.

ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை இருந்த பணிச்சுமை இப்போது ஓரளவு குறைந்துள்ளது. காரணம் முன்பைவிட இன்று அதிகமான ஊழியர்கள் கிடைத்துள்ளார்கள். அதிக நிறுவனங்கள் வந்துவிட்டன. அதனாலேயே ஐடி துறையில் முன்பைவிட இப்போது ஊதியம் ஓரளவு குறைந்துள்ளது. தேவை அதிகமாக இருந்து, உற்பத்தி குறைவாக இருக்கும் போது, அங்கு தகுதியானவர்களுக்கு கிராக்கி இருக்கும். ஊதியமும் அதிகமாகக் கிடைக்கும். இப்போது தெருவுக்கு நாலு மென் பொருள் வல்லுநர்கள் இருக்கிறார்கள்.

அதே நேரம் முன்பைவிட இப்போது ஐடி ஊழியர்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் அதிகரித்துள்ளன.  மண முறிவுகள் அதிகரித் துள்ளன. இதற்கு முக்கியக் காரணங்களாக விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, சகிப்புத்தன்மை இல்லாததை இவர்களுக்கு கவுன்சலிங் செய்பவர்கள் சொல்கிறார்கள். ஆனால், அதைத் தாண்டி வேறு சில காரணங்களும் உள்ளன. நிரந்தரமற்ற பணியும், எப்போது வேலையைவிட்டுத் தூக்குவார்களோ என்ற அச்சமுமே மனரீதியிலான அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. வேலையில் இருந்து ஓய்வுபெற்றால் ஓய்வூதியம் இல்லை. இப்படிப்பட்ட பணிசார்ந்த கவலைகள் குடும்ப வாழ்க்கையிலும் எதிரொலிக்கின்றன. தவிர நாள் முழுவதும் உட்கார்ந்தே இருப்பது, போதுமான உடற்பயிற்சி இல்லாமை, குப்பை உணவுகளை எடுத்துக்கொள்வது, அளவற்ற மது போன்ற பழக்கங்களாலும் உடல்நலம் பாதிக்கப்படுவது, 30 வயதிலேயே தொப்பையுடன், தலையில் வழுக்கைவிழுவது போன்றவை சாதாரணம். இந்த விஷயத்தில் ஐடி துறையில் பணியாற்றும் வடநாட்டு இளைஞர்கள்தான் இன்னும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறார்கள். இப்போது பல நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களிடம் உடல்நலம் பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்திவருகின்றன. இலவச மருத்துவ முகாம் நடத்துகிறார்கள். தேவைப்படும் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து இணையம் வழியாக வேலைபார்க்கும் வசதியையும் தருகிறார்கள்.  

ஐடி துறை ஊழியர்களுக்கு சமூகம், கலை, இலக்கியம் பற்றிய எந்த அக்கறையும் இருப்பது இல்லை... இந்த இளைஞர்கள் எல்லோருமே மிகவும் மேலோட்டமான மொண்ணைகள் என்பது பொதுப்புத்தி சார்ந்த இன்னொரு பார்வை. இன்று, இணையத்தில் சங்க காலம் முதல் சமீபத்தில் எழுதிக்கொண்டிருப்பவரின் படைப்புகள் வரை கிடைக் கின்றன. இதற்குப் பின்னால் இருப்பது அளவிடமுடியாத மென்பொருள் வல்லுநர்களின் பங்களிப்பு. அவர்கள் இல்லாமல் இவை நிகழ்ந் திருக்கவே முடியாது. எங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அவரவர்களுக்கான சொந்த வலைத்தளத்தை உருவாக்கிக்கொள்ளலாம். அவரவர் தாய்மொழியில் சிறுகதைகள், கவிதைகள் என்று எதை வேண்டுமானாலும் எழுதலாம். அவ்வப்போது சிறுகதைகள், கவிதைப் போட்டிகளும் நடக்கும். கடந்த 10 ஆண்டுகளில் ஐடி துறையில் இருந்து வெளிவந்த இளம் எழுத்தாளர்களின் எண்ணிக்கையும் கணிசமானது. அதுபோல ஐடி துறை வேலையை விட்டுவிட்டு தமிழ் சினிமாத் துறைக்குள் வந்து வெற்றிபெற்ற இளம் இயக்குநர்கள், நடிகர்களும் இருக்கிறார்கள். 

ஐடி உலகம்: நிஜமும் கற்பிதங்களும் - விநாயக முருகன்

என்னதான் படித்த, முன்னேறிய, ஆழமாக சிந்திக்கவல்ல சமூகம்தான் ஐடி துறை என்றாலும், இன்னமும் இங்கே தொழிற்சங்கம் என்பது சாத்தியமற்றதாகவே இருக்கிறது.சமீபத்தில் நீதிமன்றம்கூட ஐடி நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்க அனுமதி வழங்கியது. ஆனால், யூனியன் அமைப்பது இந்தத் துறையின் செயல்பாடுகளைப் பாதிக்குமா என்பதுபோன்ற விவாதங்களும் எழுந்துள்ளன. ஐடி நிறுவன சி.இ.ஓ-க்கள் அவர்களுக்குள் தொழில் கூட்டமைப்பு உருவாக்கி ஒற்றுமையாக இயங்கும்போது, தொழிலாளர்களுக்கு சங்கம் அமைப்பதில் என்ன தவறு? தொழிற்சங்கம் பற்றிய மாற்றுக்கருத்துக் கொண்டவர்கள்கூட இந்தத் துறையில் சில விஷயங்களை முறைப்படுத்த வேண்டும் என்பதில் ஒரே கருத்தைத்தான் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, எட்டு மணி நேர வேலை. அதற்கு மேல் போனால் ஓவர்டைம். ஒரே பணியைச் செய்யும் ஊழியர்களுக்கு சம்பளத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வைத் தரப்படுத்துதல், பதவி உயர்வு, ஊதிய உயர்வில் வெளிப்படைத் தன்மை  போன்ற விஷயங்கள் பற்றி எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.

யூனியன் இல்லாமலேயே இதைச் சாதிக்க முடிந்தால் மகிழ்ச்சியே. ஏனெனில் யூனியன் இல்லாமலும் சில நல்ல விஷயங்கள் இந்தத் துறையில் நடந்துள்ளன. உதாரணம் ஐடி துறை இந்தியாவுக்கு வந்த புதிதில் ஆண்களால் சக பெண் ஊழியர்கள் அடையும் பாலியல் தாக்குதல்கள் கணிசமாக இருந்தன. தொழிலாளர் நலவாரியம் மற்றும் பெண்கள் அமைப்புகள் எடுத்த மிகக் கடுமையான நடவடிக்கைகளால், அது இன்று காணாமல்போய்விட்டது. இப்போது எல்லா ஐடி நிறுவனங் களிலும் பெண்களைச் சீண்டினால், உடனே கடும்நடவடிக்கை எடுக்கிறார்கள். அதுபோல தொழிலாளர்களின் உடல்நலம், மனநலம் குறித்த விழிப்புஉணர்வை அதிகரித்துள்ளார்கள்.     

ஐடி துறை பற்றிய எத்தனையோ விமர்சனங்களை முன்வைத்தாலும், இந்த நூற்றாண்டில் அரசியல் மாற்றங்களிலும் குறிப்பாக இந்தியப் பொருளாதாரத்திலும் அந்தத் துறை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏற்படுத்திய தாக்கங்களை நாம் மறந்துவிட முடியாது. அதுபோலவே பண்பாட்டு ரீதியாகவும் அதன் வேர்கள் மிக ஆழமாக இறங்கியுள்ளன என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism