Published:Updated:

மனுஷ்ய புத்திரனின் பைத்திய நிலவுகள் - சாரு நிவேதிதா

மனுஷ்ய புத்திரனின் பைத்திய நிலவுகள் - சாரு நிவேதிதா
பிரீமியம் ஸ்டோரி
மனுஷ்ய புத்திரனின் பைத்திய நிலவுகள் - சாரு நிவேதிதா

படங்கள் : பிரபு காளிதாஸ்

மனுஷ்ய புத்திரனின் பைத்திய நிலவுகள் - சாரு நிவேதிதா

படங்கள் : பிரபு காளிதாஸ்

Published:Updated:
மனுஷ்ய புத்திரனின் பைத்திய நிலவுகள் - சாரு நிவேதிதா
பிரீமியம் ஸ்டோரி
மனுஷ்ய புத்திரனின் பைத்திய நிலவுகள் - சாரு நிவேதிதா
மனுஷ்ய புத்திரனின் பைத்திய நிலவுகள் - சாரு நிவேதிதா

ருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம்... குற்றாலம் கவிதைப் பட்டறையில் நானும் நண்பர்களும் அருவியில் குளித்துவிட்டு காட்டு பங்களாவை நோக்கி வந்தோம்.  அடர்த்தியான காடு.  பங்களாவில் அமர்ந்து கொஞ்சம் குடித்துவிட்டு எங்கள் அறைகளுக்குத் திரும்பலாம் என்பது திட்டம். காட்டில் கும்மிருட்டு. தூரத்தில் பங்களா வெளிச்சம்.  கிட்டத்தில் போனால் தன்னந்தனியனாக சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் மனுஷ்ய புத்திரன்.  மாலை ஆறு மணியிலிருந்து அப்படி உட்கார்ந்திருக்கிறாராம். நாங்கள் போனபோது மணி பத்து. `இதோ வந்து அழைத்துப்போகிறோம்’ என்று சொல்லிச் சென்ற நண்பர்கள் மட்டையாகிவிட்டார்கள்போல. பிறகு நாங்கள்தான் அவர் தங்கியிருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றோம். அதுதான் மனுஷுடனான என் முதல் சந்திப்பு. 

அவர் கவிதைகள் எனக்குப் பிடிக்குமே தவிர, அவர் சுந்தர ராமசாமி பள்ளி என்பதால் அதிகம் நெருங்கியது இல்லை. 

பிறகு சில ஆண்டுகள் சென்று அவர் சென்னைக்கு வந்தபோது, அவரை ரயில் நிலையத்துக்குப் போய் சந்தித்த ஒரே எழுத்தாளன் நான்தான்.  (என் வாழ்வில் யாரையுமே நான் ரயில் நிலையம் சென்று வரவேற்றது இல்லை.) பிறகு, `உயிர்மை’  தொடங்கினார். `உயிர்மை’யின் முதல் இதழிலிருந்து ஒவ்வொரு மாதமும் பத்து ஆண்டுகள் எழுதினேன். அந்தப் பத்து ஆண்டுகளும் அவரை நான் சந்திக்காத நாள்... அவரோ, நானோ வெளியூர் சென்றிருக்கும் நாளாகத்தான் இருக்கும். பேச்சு... பேச்சு... பேச்சு. மாதத்தில் ஒருநாள் குடிப்போம்.  ஆனால், மனுஷுடன் குடிப்பது மிகவும் சலிப்பூட்டுகின்ற காரியம். உடல்நலம் பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் கண்ட இடங்களில் இருந்தும் சிக்கன், பஜ்ஜிகளை வாங்கிவரச் சொல்வார். எண்ணெய் சொட்டும் அந்த பஜ்ஜிகளைக் கொஞ்சமாக எடுத்துச் சாப்பிடுவேன். அதைவிடக் கொடுமையான சமாசாரம், ஒரு பெக்கை ஒன்றரை மணி நேரம் குடிப்பார். செஷன் நான்கு மணி நேரம் போனால், அவர் குடித்தது ஒன்றரை பெக்காக இருக்கும்.  அவர் போதையாகி நான் பார்த்ததே கிடையாது; ஒரே ஒருமுறை பார்க் ஷெரட்டனில் வைத்து ஆறு பெக் ஆகிவிட்டது. அன்று அவர் சொன்ன விஷயங்களை வெளியே சொன்னால், என் தலை உடம்பில் இருக்காது. 

மனுஷ்யபுத்திரன் படுகெட்டி, தந்திரசாலி என்றெல்லாம் பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதெல்லாம் தப்பு. ஒரு குழந்தையை ஏமாற்றுவதுபோல் அவரை ஏமாற்றிவிடலாம்.  ஒருநாள் அவரும் நானும் நண்பர் மனோஜும் அவருடைய அறையில் பேசிக்கொண்டிருந்தோம். `குடிக்கலாமா... என்னிடம் ஒரு அப்ஸலூட் வோட்கா இருக்கிறது’ என்றார் மனுஷ். சற்றும் யோசிக்காமல், `சரி’ என்றேன்.  (அப்போதெல்லாம் அப்படித்தான்!) ஒரு பெக் ஆயிற்று.  எறும்பு கடித்த மாதிரிகூட இல்லை.  இரண்டாவது பெக்கும் ஆயிற்று.  ஒன்றுமே இல்லை. `ஓ, மொடாக்குடியனாகி விட்டோம் போலிருக்கிறதே, ஒன்றுமே தெரியவில்லையே’ என்று லேசாக மனோஜிடம் கேட்டேன். `ஆமாம்’ என்றார் அவரும்.  மனுஷும் அதையே சொன்னார்.  உடனே தண்ணீர் கலக்காமல் குடித்தோம்.  பிறகுதான் தெரிந்தது, அவருடைய உதவியாளர் யாரோ (ஒருவரோ இருவரோ) போத்தலில் இருந்த வோட்காவைக் காலி செய்துவிட்டு அதில் தண்ணீரை நிரப்பி, மூடிவைத்துவிட்டார்கள் என்பது. பிறகு சில தினங்கள் சென்று, `அந்த நபர்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டீர்களா?’ என்று கோபத்துடன் கேட்டதற்கு, `அட நீங்க வேற, பாவம், அவங்கதான் என்னா பண்ணுவாய்ங்க?’ என்றார் சிரித்துக்கொண்டே.

இடையில் மனுஷின் கவிதைகள் பற்றி ஏராளமாக எழுதினேன். என் அளவுக்கு அவர் கவிதைகளைக் கொண்டாடியவர் யாரும் கிடையாது. அதைவிட முக்கியம், என்னுடைய `காமரூப கதைகள்’ நாவலில் அவர் இரண்டு மூன்று பெயர்களில் நாவல் முழுவதுமே வருகிறார். 

இப்படியாக எங்கள் நட்பு இனிமையாகப் போய்க்கொண்டிருந்த வேளையில் ஒருநாள், `இனிமேல் இவர் முகத்திலேயே முழிக்கக் கூடாது’ என்ற சபதத்துடன் பிரிந்தேன்.  இதுவரை அதன் காரணத்தை யாரிடமும் சொன்னது இல்லை, அவரிடமும்கூட. ஒரு மலையாள சினிமா நண்பர் (இலக்கிய வாசகர்) மனுஷிடம், `சமீபத்தில் குறிப்பிடத்தக்க தமிழ் நாவல் என்ன வந்திருக்கிறது?’ என்று கேட்டபோது அவர் எஸ்.ராமகிருஷ்ணனின் ஒரு நாவலைச் சொன்னதாக அவரே சொன்னார்.  என்னிடம் ஒரு கெட்ட குணம் உண்டு.  என் எழுத்தை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், திட்டலாம். ஆனால், என் எழுத்தின் மீது மரியாதை கொண்டவர் களோடு மட்டுமே நட்பு பாராட்டுவேன். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது.  கடந்த முப்பது ஆண்டுகளாக, ஒவ்வொரு செஷனிலும் நாலு ரவுண்டு ஆன பிறகு அங்கிருப்போர் என் எழுத்தைக் கண்டபடி தூற்றுவதையே இதுவரை பார்த்து வந்திருக்கிறேன். அதனாலேயே பல மதுபான இரவுகள் வெட்டிச் சண்டையில் முடிந்தது உண்டு.  அதனால்தான் மேற்கண்ட முடிவை எடுத்திருந்தேன். பிறகு, மனுஷோடு மூன்று நான்கு ஆண்டுகள் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், அவந்திகா மட்டும், `நீ செய்வது சரியல்ல... சரியல்ல’ என்று புலம்பிக்கொண்டே இருப்பாள்.  காரணம், பத்து ஆண்டுகளுக்கு முன்பு சின்மயா நகரிலிருந்து மனுஷ் வசிக்கும் ராஜா அண்ணாமலைபுரம் வருவதற்கு தினமும் ஆட்டோவுக்குப் பெரும் தொகை செலவாகிறதென்று அவர் வீட்டுக்கு அருகிலேயே குடி வந்துவிடுவது என்று முடிவுசெய்து மூட்டையைக் கட்டியபோது மயிலாப்பூரில் வீடு கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. பிராமணர் பகுதி என்பதால், அசைவ உணவுக்காரர்களுக்கு வீடு கிடைக்கவில்லை. அப்போது மனுஷ்தான் தன் வண்டியில் - அப்போது அவரிடம் கார் இல்லை - தெருத்தெருவாக அலைந்து எங்களுக்கு வீடு பார்த்துக் கொடுத்தார். `அந்த நன்றி விசுவாசம் இல்லையே உனக்கு’ என்பது அவந்திகாவின் பிராது. `உண்மைதான் அம்மு, எனக்கு மனித உறவுகளைவிட, என் எழுத்துதான் முக்கியம்; ஏனென்றால், என் உயிர் மூச்சே என் எழுத்துதானே? அதை மதிக்காத ஒருவரோடு நான் எப்படிப் பழகுவேன்?’ என்பேன். `ஆனால், சுந்தர ராமசாமி பள்ளியைச் சேர்ந்த மனுஷுக்கு என் நாவல் பிடித்திருந்தால்தானே ஆச்சர்யம்’ என்ற எண்ணமும் அவ்வப்போது தோன்றும்.  

என்னிடம் இன்னொரு கெட்ட குணம் உண்டு. ஒருவரோடு பழகினால் அவர்களுக்காக உயிரையும் கொடுப்பேன். எந்த எல்லை வரையும் செல்வேன். ஆனால், பிரிந்துவிட்டால் ப்ளாட்டிங் பேப்பரிலிருந்து எழுத்து மறைவதுபோல் எல்லா நினைவுகளும் மறைந்துவிடும்.  பின்னாளில் ஒருமுறை அவந்திகா, `நீ திடுதிப்பென்று மனுஷ்யபுத்திரனைவிட்டு விலகியதால் அவர் மூன்று மாத காலம் உளவியல் சிகிச்சை எடுத்துக்கொண்டதாகச் சொன்னார்’ என்றாள்.  `நன்றாகப் படட்டும், அந்த சினிமா நண்பரிடம் என் நாவலைச் சொல்லாதவனோடு எனக்கு என்ன சிநேகிதம்?’ என்றே எண்ணினேன். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனுஷ்ய புத்திரனின் பைத்திய நிலவுகள் - சாரு நிவேதிதா

இடையில் முகநூலில் வாரம் ஒருமுறையாவது மனுஷ் என்னைத் திட்டி எழுதுகிறார் என்று நண்பர்கள் சொல்வார்கள். எனக்குத் தெரியாது; ஏனென்றால், நான் அவரைப் பிரிந்தபோதே அவரை முகநூலில் block செய்துவிட்டேன்.  பிறகு நண்பர்களிடம், `இனிமேல் மனுஷ் எழுதுவது பற்றி என்னிடம் கொண்டு வந்தால், உங்களோடும் பழக மாட்டேன்’ என்று சொன்ன பிறகுதான் அவர் எழுதுவதை என்னிடம் காண்பிப்பதை நிறுத்தினார்கள்.

ஆனால், இடையில் நாகேஸ்வர ராவ் பூங்காவில் சில சமயம் சந்திக்க நேரும்போது ஏதோ நேற்று மாலைதான் பேசிப் பிரிந்தது போல் பேசிக்கொண்டிருப்போம்.  இன்னொரு முக்கிய விஷயம். எனக்கு ஏதாவது ஓர் இக்கட்டான சூழலில் யோசனை கேட்கவேண்டியிருந்தால், காலையில் ஏழு மணிக்கு அவருக்கு போன் செய்வேன். அப்போதும் ஏதோ முந்தின மாலை சந்தித்ததுபோல்தான் பேசுவார். 

இப்படியே மூன்று நான்கு ஆண்டுகள் சென்ற பிறகு ஒருநாள் மனுஷிடமிருந்து போன். `உங்களுக்கும் எனக்கும் என்ன பிரச்னை?’

`ஒன்றும் பிரச்னை இல்லையே’ என்று பொய் சொன்னேன்.  வீட்டுக்கு அழைத்தார்.  போனேன்; பேசினேன்; பழசை மறந்துவிட்டு மீண்டும் நண்பனானேன். 

கோவையில் ஒரு புத்தக வெளியீடு.  பேச அழைத்தார்.  படு நெருக்கடியான வேலைகள்.  ஆனாலும் மனுஷ்தான் ஆக முக்கியம்.  போனேன்.  என் பேச்சில் என்னைப் பற்றி அதிகம் பீற்றிக்கொண்டுவிட்டேன்போல.  கடுப்பாகிவிட்டார். மறுநாள் இரவு ஊட்டியில் - ஒரு காட்டுப் பகுதியில் - தங்கினோம். எங்கள் நட்பின் இந்த இரண்டாம் காலகட்டத்தில் நான் குடிப்பதை விட்டிருந்தேன். காரணம், வாரத்தில் ஒருமுறை குடித்தாலும் அது என் நேரத்தை அதிகம் எடுத்துக்கொள்கிறது என்பதை உணர்ந்தேன். முக்கியமாக, வெளிநாட்டுப் பயணங்களின்போது நண்பர்களோடு குடியைத் தவிர்க்க முடிவது இல்லை.  தினமும் குடி என்று ஆகிவிடுகிறது. சுத்தமாக நிறுத்தினேன்.  ஒயின்கூட அருந்துவது இல்லை.  குடிப்பவர்களோடு சேர்ந்து பேசுவதும் இல்லை.  என்ன இது, இப்படி உளறுகிறார்கள் என்றெல்லாம் தோன்ற ஆரம்பித்துவிட்டது.

ஊட்டியில் காட்டு பங்களாவில் அதிகக் கூட்டம். இலக்கியவாதிகள். பலர் குடித்தார்கள்.  சிலர் குடிக்கவில்லை.  ஒருவர் சினிமாப் பாட்டை ஆரம்பித்தார். ஐயோ தலைவலி ஆயிற்றே என்று இலக்கியத்தின் பக்கம் பேச்சைத் திருப்பினேன். அதுதான் நான் செய்த தவறு. ஒரே ரகளை, அடிதடிப் பிரளயம் ஆரம்பம்.  முப்பது ஆண்டுகளாகப் பார்த்து வந்த கொடுமை. அப்போது குறுக்கே புகுந்த மனுஷ், `எல்லாம் உங்களுடைய சொந்தக் கதையைத்தானே எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?’ என்று என் புனைவெழுத்தை நிராகரிக்கும் தொனியில் சொன்னார்.  பதில் பேசாமல் எழுந்து போய் விட்டேன். `இனி செத்தாலும் அவர் முகத்தில் முழிப்பது இல்லை’ என்று சபதம். குற்றாலத்தில் சந்தித்தோம், ஊட்டியில் பிரிந்தோம் என்று தமிழ் சினிமா பாணியில் நினைத்துக்கொண்டேன்.  அது பற்றி எதுவும் எழுதவும் இல்லை. என்னிடமிருந்த மனுஷின் புத்தகங்களையெல்லாம் மூட்டை கட்டி நண்பரிடம் கொடுத்துவிட்டேன்.  (கொடுக்கும்போது கொஞ்சம் தயங்கத்தான் செய்தேன்.) அந்த நண்பரிடம் மனுஷை இனிமேல் வாழ்நாளில் சந்திப்பது இல்லை என்று முடிவு செய்துவிட்டதாகக் கூறினேன்.  `அடப் போங்க சாரு, நீங்களும் மனுஷும் சேர்ந்து எங்களையெல்லாம் முட்டாளாக்கிக் (வேறொரு வார்த்தை சொன்னார்; இங்கே எழுத முடியாது) கொண்டிருக்கிறீர்கள்; இதோ அடுத்த மாதமே ரெண்டு பேரும் சேர்ந்து புத்தக வெளியீடு நடத்துவீர்கள்’ என்றார். கடுமையாகத் திட்டி அனுப்பிவிட்டேன். 

ஊட்டி சம்பவம் நடந்து இரண்டு மாதம் ஆகியிருக்கும். மனுஷிடமிருந்து குறுஞ்செய்தி.  எதுவுமே நடக்காததுபோல, நேற்று மாலைதான் பேசிப் பிரிந்ததுபோல. `சாரு, என் கவிதை வெளியீட்டுக் கூட்டத்திற்கு நீங்கள் வந்தால் மிகவும் சந்தோஷப்படுவேன்.’ அந்தக் கணம் முடிவெடுத்தேன்.  இவரோடு இனி எந்தக் காலத்திலும் சண்டை போடுவது இல்லை. ஏனென்றால், எனக்குத்தான் `வெக்கம் மானம் சூடு சொரணை’ எதுவும் இல்லை என்றால், இவர் நமக்கு மேல் இருக்கிறாரே என்றுதான் அந்த முடிவுக்கு வந்தேன்.
 
நாகூரில் அறுபதுகளில் சண்முகம், குட்லி என்று இரண்டு ரவுடிகள் இருந்தார்கள். அதில் சண்முகம் என் தாய் மாமா. அப்போது அவருக்குத் திருமணம் ஆகவில்லை.  எங்கள் வீட்டில்தான் இருந்தார்.  வீட்டில் அவரைப் பார்த்ததைவிட கள்ளுக்கடையில்தான் அதிகம் பார்த்திருக்கிறேன். எப்படியென்றால், அவ்வப்போது அம்மா எவர்சில்வர் தூக்கில் கொடுத்தனுப்பும் கோழிக் குழம்பை நான்தான் கொண்டுபோய்க் கொடுப்பது வழக்கம். கள்ளுக்குத் தொட்டுக்கொள்ள என்பதால், குழம்பாக இல்லாமல் கெட்டியாக இருக்கும். ஆனால் வறுவல் அல்ல.  ’பெரட்டுனது’ என்பார்கள். ஒருநாள் சண்முகம் மாமா உடம்பில் பலத்த வெட்டுக் காயங்களோடு வீட்டுக்கு வந்தார்.  குட்லிதான் வெட்டிவிட்டார். அம்மா உடனே அவரை வண்டியில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டுசென்றார்.  28 இடங்களில் தையல்.  வீடு பூராவும் ரத்தம் கொட்டியிருந்தது. ஒரு மாதம் கழித்து கள்ளுக்கடைக்குக் கோழி பெரட்டல் எடுத்துக்கொண்டு போனபோது சண்முகம் மாமா குட்லியோடு சிரித்துப் பேசியபடி இருந்ததை அம்மாவிடம் வந்து சொன்னேன்.  ஒரு கெட்ட வார்த்தையால் தன் அண்ணனைத் திட்டினார்கள் அம்மா.  அப்படியாக அந்த `வெக்கம் மானம் சூடு சொரணை’ இல்லாத மனோபாவம் எனக்குப் பிதுரார்ஜிதமாகவே வருகிறதென்று தோன்றுகிறது. 

இடையில் மனுஷ், தி.மு.க-வில் சேர்ந்து மேடைப் பேச்சாளனாக ஆனபோது அதை வேடிக்கை பார்த்தேன்.  தீப்பொறி ஆறுமுகம் மாதிரி ஆக்கிவிடுவார்களே என்று தோன்றியது.  என் நண்பர்கள் எல்லோரும் அவரை விமர்சித்தார்கள். நான்தான் அதிகம் திட்டியவன்.  ஆனால், யோசித்துப் பார்த்தபோது எனக்குக் காரணம் புரிந்தது.     `ஃப்ரெஞ்ச் கவிதையின் கடவுள்’ என்று போற்றப்படுகிற ஆர்தர் ரேம்போவையும் (Arthur Rimbaud) பால் வெர்லேனையும் பற்றித் தெரிந்துகொண்டால், மனுஷின் தி.மு.க அரசியல் பற்றியும் புரிந்து
கொள்ளலாம். 

ரேம்போவின் காலம் 1854-ம் ஆண்டிலிருந்து 1891 வரை. ரேம்போ அளவுக்கு உலகில் உள்ள பாடகர்களை, கவிஞர்களை, தத்துவவாதிகளை பாதித்த ஆளுமை யாரும் இல்லை. இவ்வளவுக்கும் அவர் கவிதை எழுதிய காலம் 1870-லிருந்து 1875 வரை வெறும் ஆறே ஆண்டுகள். அதாவது அவருடைய 16 வயதிலிருந்து 21 வயது வரை. அதற்கு மேல் அவர் வாழ்ந்த 37 வயது வரை அவர் கடிதங்களைத் தவிர கவிதைகள் எழுதவில்லை. 

`கவிஞன் என்பவன் ஒரு தீர்க்கதரிசி.  அதற்கு அவனுடைய உணர்வுகள் பிறழ்வுண்டிருக்க வேண்டும். அதன் விளைவாக ஏற்படும் வேதனைகளைத் தாங்கும் சக்தி அவனுக்கு இருக்க வேண்டும்.  ஒரு கவிஞன் உருவாவது இல்லை; பிறக்கிறான்.  அதற்காக அவன் எல்லா நஞ்சையும் உட்கொள்கிறான்; எல்லா சித்ரவதைகளையும் ஏற்றுக்கொள்கிறான்.  விதவிதமான காதலில், வேதனையில், பித்தத்தில் தன்னைத்தானே ஈடுபடுத்திக்கொள்கிறான். அதனால் ஏற்படும் துயரங்களை, வேதனைகளை விழுங்கி அதன் சாரத்தை மட்டும் தன்னில் தேக்கிக்கொள்கிறான். கடுமையான நம்பிக்கையும், மனித சக்திக்கு அப்பாற்பட்ட வலிமையும்வேண்டியிருக்கும் இந்தச் சித்ரவதைகளால் அவன் நோயாளியாகிறான், கிரிமினலாகிறான், சபிக்கப்பட்டவனாகிறான். அதேசமயம், மனிதகுலத்தில் எல்லாம் அறிந்தவனுமாகிறான்.’ 

தன் பதினேழாவது வயதில் ரேம்போ பாரிஸில் வெர்லேனைச் சந்திக்கிறார்.    உலகம் பூராவிலும் எழுத்தாளர்களுக்குப் பிரியமான அப்ஸிந்த் என்ற மதுவிலும் ஹஷீஷிலும்தான் இருவரும் வாழ்ந்தார்கள்.  லண்டனுக்கு வந்தார்கள். தினந்தோறும் சண்டைதான். ஒருநாள் வெர்லேன், தன் கைத்துப்பாக்கியால் ரேம்போவைச் சுடுகிறார்.  ரேம்போ சாகவில்லை; ஆனால் குண்டு உடலுக்குள் போய்விட, அறுவைசிகிச்சை நடந்து பிழைத்துக்கொள்கிறார்.  இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கிறது வெர்லேனுக்கு. அதற்குப் பிறகு இந்தோனேஷியக் காடுகளுக்கும் பிறகு அங்கிருந்து ஆப்பிரிக்காவுக்கும் போகிறார் ரேம்போ. வாழ்நாள் முழுவதும் நாடோடியாகவே அலைகிறார்.  கால்நடையாகவே ஐரோப்பா முழுக்கச் சுற்றுகிறார். வெர்லேனைப் பிரிந்த பிறகு அவர் கவிதை எழுதவில்லை.  

ரேம்போவைப் புரிந்துகொள்ளாமல், ஒரு வேசிக்காகத் தன் காதுகளை அறுத்துக் கொடுத்த வான்கோவின் மனப்பிறழ்வைப் புரிந்துகொள்ளாமல், ஒருவர் மனுஷ்ய புத்திரனின் மனப்பிறழ்வையும் புரிந்துகொள்ள முடியாது.  மேலே ரேம்போ தீர்க்கதரிசி என்று சொன்ன அர்த்தத்தில் ஒருமுறை மனுஷை, `தீர்க்கதரிசி’ என்று எழுதினேன்.  உடனே முகநூலில் `என்னைப் போய் தீர்க்கதரிசி என்கிறார் சாரு; நான் ஒரு சைத்தான் ஆயிற்றே?’ என்று எழுதினார் மனுஷ். கவிஞனைப் பொறுத்தவரை தீர்க்கதரிசியும் அவன்தான்; சைத்தானும் அவன்தான். ரேம்போவின் விளக்கமே அதைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறது.  

மனுஷ்ய புத்திரனின் பைத்திய நிலவுகள் - சாரு நிவேதிதா

12 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் ஒரு தேவதை என்னிடம் `நான் உனக்கு சொர்க்கத்தைக் காண்பிக்கிறேன்; அந்த சைத்தானின் நட்பை விட்டுவிடு’ என்று சொன்னபோது எனக்கு சைத்தானே போதும் என்று அவன் வாழும் நரகத்தைத் தேர்ந்தெடுத்தேன். ஏனென்றால், இந்த மனிதகுலத்தின் எல்லா துயரத்தையும், எல்லா காதலையும் அந்த சைத்தான் இரவு பகலாக எழுதிக்கொண்டேயிருந்தான்.  மனுஷ் அளவுக்கு கவிதை எழுதிக்குவித்த வேறு யாரொரு கவியும் தமிழில் இல்லை.  ஒரே ஆண்டில் அவர் எழுதிய மாபெரும் கவிதைத் தொகுதி ’புலரியின் முத்தங்கள்’. ஒரு கவிதை அரங்கில் அவர் சொன்னார்: `என் மனப்பிறழ்வையே கவிதையாக எழுதுகிறேன்.  கொஞ்சமாவது மனப்பிறழ்வு கொண்டவர்களால்தான் அதைப் புரிந்துகொள்ள முடியும்.’ அவர் சொல்லும் மனப்பிறழ்வு என்பது மனோவியாதி அல்ல; சராசரி மனிதர்களின் லௌகீக வாழ்வின் ஓட்டங்களுக்கு எதிரான ஒரு கலகக்காரனின் குரல். 

***
2008-ம் ஆண்டில் மனுஷ்ய புத்திரனின் கவிதை பற்றி இப்படி எழுதியிருந்தேன்:

`பாப்லோ நெரூதா, Nicanor Parra போன்ற உலகின் எந்த மகத்தான கவிஞர்களுக்கும் நிகரானவர் மனுஷ்யபுத்திரன். தமிழ்நாடே கொண்டாடவேண்டிய நம்முடைய தேசியக் கவிஞன் மனுஷ்யபுத்திரன்தான் என்று சந்தேகமின்றிச் சொல்லுவேன்.’

நமக்கு பாப்லோ நெரூதாவைத் தெரியும். ஆனால், நெரூதா வாழ்ந்த அதே காலகட்டத்தில், அதே தேசத்தில் வாழ்ந்த நிகனோர் பார்ராவைத் தெரியாது. அவருடைய கவிதை ஒன்றை இங்கே மொழிபெயர்த்துத் தருகிறேன்.

கடைசிக் கோப்பை
நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ
நம்மிடம் இருப்பது மூன்று தெரிவுகள்தான்
நேற்று இன்று நாளை.
மூன்றுகூட இல்லை
ஏனென்றால்
தத்துவவாதிகள் சொல்வதுபோல்
நேற்று என்பது நேற்றுதான்
அது நமது நினைவுகளில் மட்டுமே
தங்கியிருக்கிறது
ஏற்கெனவே பறிக்கப்பட்ட ரோஜாவிலிருந்து
மேலும் இதழ்கள் வளர வாய்ப்பில்லை.
விளையாடுவதற்கான சீட்டுக்கட்டுகள்
இரண்டு மட்டுமே உள்ளன:
நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்.
இல்லை
இரண்டுகூட இல்லை
ஏனென்றால்
நிகழ்காலமென்பது
கடந்த காலத்தின் விளிம்பைத்
தொட்டுக்கொண்டிருக்கிறதே தவிர
அது ஒன்றும்
நிகழ்காலத்தில் இல்லை
இளமையைப்போல்
அதுவும்
செலவாகிவிட்ட ஒன்று.
கடைசியில் நம்மிடம் இருப்பது
எதிர்காலம் மட்டுமே.
நான்
எனது மதுக்கோப்பையை
அந்த
வரவே வராத நாளுக்காக
உயர்த்துகிறேன்.
ஆனால்
நம்மிடம் இருப்பது
அது மட்டும்தானே?


***

`கடவுளுடன் பிரார்த்தித்தல்’ என்ற
மனுஷ்யபுத்திரனின் தொகுதியிலிருந்து
ஒரு கவிதை:

மனுஷ்ய புத்திரனின் பைத்திய நிலவுகள் - சாரு நிவேதிதா

துயருற்றிருந்த என் கடவுளுக்கு
 
துயருற்றிருந்த என் கடவுளுக்கு
நான் முதலில்
என் சக்கர நாற்காலியைக் கொடுத்தேன்
தான் படைத்த உலகம் வரை
அதில் போக முடியுமா என்றார்
அவரது மதுக்கோப்பைகளை
நிரப்பினேன்
தான் படைத்த உலகத்தை
மறந்துவிட முடியுமா என்றார்
என்னுடைய காதல்களில் மிகச் சிறந்த ஒன்றை
எடுத்துக்கொள்ளும்படி கூறினேன்
தான் படைத்த உலகத்தின் நஞ்சு
அதில் படிந்திருக்கிறது என்றார்
என் படைப்பின்
மிக ரகசியமான சூட்சுமமொன்றை அவருக்குக்
கற்றுக்கொடுத்தேன்
தான் படைத்த உலகத்தை
அழிக்கும் ரகசியத்தைச் சொல்லிக்கொடு என்றார்
நான் கொஞ்சம் கொஞ்சமாக
கடவுளாகிக்கொண்டிருந்தேன்.


(கட்டுரைக்காகவே `மனுஷ்’ என்று குறிப்பிடுகிறேனே ஒழிய, அவரை நான் `ஹமீத்’ என்றே அழைப்பது வழக்கம். ஆர்தர் ரேம்போவின் `Illuminations’ தொகுப்பிலிருந்து பல கவிதைகளை மொழிபெயர்த்துக் கொடுத்து அவரை இன்னும் அதிகமாகப் புரிந்துகொள்ள உதவிய காயத்ரிக்கு என் நன்றி.)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism