Published:Updated:

என்னுடைய வேதனைகள் யாருக்கும் தெரியாது...! கலங்கும் சத்தியபாமா எம்.பி #VikatanExclusive

என்னுடைய வேதனைகள் யாருக்கும் தெரியாது...! கலங்கும் சத்தியபாமா எம்.பி #VikatanExclusive
என்னுடைய வேதனைகள் யாருக்கும் தெரியாது...! கலங்கும் சத்தியபாமா எம்.பி #VikatanExclusive

திருப்பூர் அ.தி.மு.க எம்.பி., சத்தியபாமாவைக் கொலை செய்ய முயன்றதாக, அவரது கணவர் வாசு கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த எம்.பி., சத்தியபாமாவுக்கு கடந்த 1990-ம் ஆண்டு, வாசு என்பவருடன் திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு ஒரு மகன் உள்ள நிலையில், தம்பதியருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு, கடந்த 2016 -ம் ஆண்டு விவாகரத்தும் ஆனது. இந்நிலையில் இன்று கோபிசெட்டிபாளையத்தில் அவர்களது மகனின் திருமண நிச்சயதார்த்த நிகழ்வு நடைபெறவிருந்த சூழலில், நேற்றைய தினம் இரவு சத்தியபாமாவின் வீட்டுக்கு வந்து தகராறு செய்திருக்கிறார் வாசு. அதனைத்தொடர்ந்து வாசு தன்னைக் கொலை செய்ய முயன்றதாக சத்தியபாமாவின் தரப்பில் கோபி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் அதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தற்போது வாசுவைக் கைது செய்திருக்கிறார்கள்.

பிரச்னை குறித்தும், வாசுவுடன் என்ன தகராறு என்பது பற்றியும் விளக்கம் கேட்பதற்காக எம்.பி., சத்தியபாமாவைத் தொடர்புகொண்டோம். ``பெத்த பையனோட வாழ்க்கையைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் ஒருத்தர் செய்யும்போது அதைப்பற்றி நான் என்ன சார் பேசறது...! அவரைப் பற்றி பேசுவதற்கே எனக்கு விருப்பமில்லை" என்று முதலில் மறுத்தவர், பிறகு குழப்பமான மனநிலையுடன் மீண்டும் பேசத் தொடங்கினார். 

``மகனின் திருமண நிச்சயதார்த்தத்துக்கு அழைப்பு கொடுக்கல, அதனாலதான் அவர் வந்து பிரச்னை பண்ணினார்னு சொல்றாங்க. மகனோட விஷேசத்துக்கு ஒரு அப்பாவா வந்து கலந்துக்கிறத யாரும் தடுக்கல. அவருக்கு அந்த உரிமையும் இருக்கு. என் மாமனார்கூட விஷேசத்துக்கு வந்துட்டுதான் போனார். எனவே, பிரச்னை அதுகிடையாது. இந்த ஒரு சம்பவத்தை மட்டும் பார்த்துட்டு எல்லாரும் வந்து கேட்கறீங்க. ஆனால், நான் பல வருடங்களா எவ்வளவு கொடுமைகளை அனுபவிச்சிட்டு இருக்கேன், தனிப்பட்ட முறையில் நான் எவ்வளவு போராடிட்டு இருக்கேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். எந்தவொரு பெண்ணும் அனுபவிக்க முடியாத அளவு கஷ்டங்களையும், போராட்டங்களையும் நான் சந்திச்சிட்டு இருக்கேன். அதைப் பத்தி எல்லாம் சொல்ல என்கிட்ட வார்த்தைகளே இல்லை. என்னை இவ்வளவு காலம் அசிங்கப்படுத்தியும்கூட, நான் பொறுமையாதான் இருந்திருக்கேன். நாமும் திருப்பி அசிங்கப்படுத்தணும்னு நினைச்சதுகூட இல்லை. அவங்க பண்ற மாதிரியே நானும் செஞ்சா, அவங்களுக்கும் எனக்கும் வித்தியாசமில்லாம போயிரும். ஆனா இப்போ அது எல்லையை மீறி நடந்துருச்சு. 

இந்த நிலைமை மாறணும், திருந்தணும்னு எத்தனையோ தடவை நான் வாய்ப்புக் கொடுத்தும் பார்த்துட்டேன். ஆனால், இப்போ என் மகனோட விஷேசம் நடக்குற நேரத்துல இப்படியொரு சம்பவம் நடந்ததுக்கு அப்புறம், நான் இவ்வளவு காலம் பொறுமையா இருந்ததுக்கு அர்த்தமே இல்லாத மாதிரி தோணுது. நான் பட்ட வேதனைகளும், கொடுமைகளும் என் எதிரிக்குக்கூட வரக் கூடாது. என்னுடைய வலிகளும், வேதனையும் யாருக்கும் தெரியாது. தெரியவும் வேண்டாம். இது என் குடும்பப் பிரச்னை. நான் நல்லவள்னு அந்தக் கடவுளுக்கும், என் மனசாட்சிக்கும், நான் பெத்த மகனுக்கும் தெரிஞ்சா போதும். கடவுள் எனக்குத் துணையா இருப்பார். நான் தப்பு பண்ணினா அவர் என்னைத் தண்டிப்பார். இதுக்கு மேல என்னால எதுவும் பேச முடியல" என்றார்.