Published:Updated:

அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத சமூக ஆர்வலர்!

அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத சமூக ஆர்வலர்!
அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத சமூக ஆர்வலர்!
அரசின் கெடுபிடி: சர்வதேச விருதை பெற முடியாத சமூக ஆர்வலர்!

 மத்திய அரசின் கெடுபிடி காரணமாக நெல்லை சமூக ஆர்வலருக்கு  நெதர்லாந்து அரசின் சர்வதேச விருது விழாவில் பங்கேற்க முடியாத சோகம்  ஏற்பட்டுள்ளது.

நெல்லையை அடுத்த சேதுராயன்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து பரதன். மனித  உரிமை ஆர்வலரான இவர், கடந்த முப்பது ஆண்டுகளாக விளிம்பு நிலை மக்களின்  உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

நெல்லையில் 'மனித உரிமைக் களம்' என்கிற அமைப்பை நடத்தி அதன் மூலம்  சமூகத்தில் அடித்தட்டில் இருக்கும் மக்களின் மேம்பாட்டுக்காகவும், அவர்கள்  எதிர்கொள்ளும் சமூக அவலங்களுக்கு எதிராகவும் போராடி வருகிறார்.

இதனால் இவர் மீது கொலை வழக்கு உட்பட 23 வழக்குகள் போடபட்டு உள்ளன.  இருப்பினும் தொடர்ந்து சமூகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நெதர்லாந்து நாட்டு  அரசு, உலகம் முழுவதும் மனித உரிமையை பாதுகாக்கும் பணியில் நெஞ்சுரத்துடன்  செயல்படுபவர்களை ஒவ்வொரு வருடமும் கெளரவப்படுத்தி வருகிறது.

அந்நாட்டின் தேசிய மலரான துலிப் பூவின் பெயரால் வழங்கப்படும் 'மனித உரிமை  பாதுகாப்பு துலிப் 2013' விருது இந்த ஆண்டு மாரிமுத்து பரதனுக்கு கிடைத்து  இருக்கிறது.

##~~##
உலகம் முழுவதிலும் இருந்து 66 பேர் தேர்வு செய்யப்பட்டதில் இவருக்கு இந்த விருதை  வழங்க தேர்வுக் குழு முடிவு செய்தது. இந்த விருது, கேடயமும் 1 லட்சம் யூரோவும்  (இந்திய மதிப்பில் சுமார் 72 லட்சம்) கொண்டது.
இந்த விருதுக்கான விழா கடந்த 9 ஆம் தேதி நெதர்லாந்து நாட்டின்  ஹேக் நகரில்  நடைபெற்றது.இதில் கலந்துகொள்வதற்காக, இவர் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க  கடந்த நவம்பர் மாதமே விண்ணப்பத்திருந்தும்,மத்திய அரசு அதற்கான அனுமதியை  மறுத்து விட்டது. இதனால் அவரால் விருது பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க  இயலவில்லை.
இது குறித்து நம்மிடம் பேசிய மாரிமுத்து பரதன், ''கடந்த முப்பது வருடமாக சமூக  மேம்பாட்டுக்கும் ஒற்றுமைக்கும் பாடுபட்ட என் மீது தமிழக அரசு 23 பொய் வழக்குகளை  போட்டு இருக்கிறது. அதனை சட்டப்படி எதிர் கொண்டு வருகிறேன். எனது பணிகள் பற்றி  அறிந்த நெதர்லந்து நாட்டு அரசு எனக்கு அந்த நாட்டின் உயரிய விருதான துலிப்  விருதை கொடுத்து இருக்கிறது. நமது நாட்டில் அசோகா விருது உயரிய விருதாக  கருதப்படுவது போல இது அந்த நாட்டின் கெளரவமான விருது.
இது எனக்கு மட்டும் அல்லாமல் நமது நாட்டுக்கு கிடைத்திருக்கும் பெரிய அங்கீகாரம்.  அந்த நாட்டு அரசும் அந்நாட்டின் வெளியுறவுத் துறையும் எனது போக்குவரத்துக்கும்  ஏற்பாடு செய்து இருந்தார்கள். நான் எனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க நவம்பர்  மாதத்திலேயே விண்னப்பித்து விட்டேன். ஆனாலும் கடைசி வரையிலும் மத்திய அரசு  எனது விண்ணப்பத்தை பரிசீலித்து அனுமதி கொடுக்கவே இல்லை. அதனால் விருதை  நேரில் பெறும் வாய்ப்பை இழந்து விட்டேன்.
இப்போது அந்நாட்டு வெளியுறவுத் துறையில் இருந்து எனக்கு வந்திருக்கும் தகவலில்,  இந்திய அரசிடம் விருதை வழங்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.  இது பற்றி அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் இது வரையிலும் அரசிடம் இருந்து எந்த  பதிலும் வரவில்லை. அதனால் நான் தலித் என்பதால், அரசு இந்த விசயத்தில் அக்கறை  காட்டவில்லையோ என சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. இதனை ஒட்டு மொத்த தலித்  சமூகத்தையும் அவமானப்படுத்திய செயலாகவே பார்க்கிறேன்.
ஆஸ்கர் விருதுக்கு நமது நாட்டை சேர்ந்தவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டாலே பெருமிதம்  கொள்ளும் அரசு, உலகின் உயரிய விருதான ஐ.நா விருதுக்கு அடுத்த நிலையில் உள்ள  இந்த விருதை பெற்ற என்னை கெளரவிக்காவிட்டாலும் அதனை நேரில் சென்று  வாங்கவாவது அனுமதித்து இருக்கலாமே?'' என்றார் ஆதங்கத்துடன்.
உள்ளூரில் வழங்கப்படும் விருதுக்கு சிலரை தேர்வு செய்வதில், சர்ச்சைகள் எழுந்து  இருக்கலாம். ஆனால் விருதுக்கு வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பிலும் சர்ச்சையா?
 
-ஆண்டனிராஜ்

படம்:
எல்.ராஜேந்திரன்
.