Published:Updated:

காவிரி: ஜெயலலிதாவுக்கே போக்கு காட்டிய மத்தியஅரசு, எடுபடுமா அ.தி.மு.க. உண்ணாவிரதம்? #WeWantCMB

காவிரி: ஜெயலலிதாவுக்கே போக்கு காட்டிய மத்தியஅரசு, எடுபடுமா அ.தி.மு.க. உண்ணாவிரதம்? #WeWantCMB
காவிரி: ஜெயலலிதாவுக்கே போக்கு காட்டிய மத்தியஅரசு, எடுபடுமா அ.தி.மு.க. உண்ணாவிரதம்? #WeWantCMB

வாரியத்தை அவரது அரசியல் வாரிசுகளாக சொல்லிக்கொள்ளும் இன்றைய ஆளும் கட்சியினர் உண்ணாவிரதம் இருப்பதால் வந்து விடுமா என்ற கேள்வி எல்லோரும் மனதிலும் எழுந்துள்ளது

 ”ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தும் அமைக்க முடியாத காவிரி மேலாண்மை வாரியத்தை அவரது அரசியல் வாரிசுகளாக சொல்லிக்கொள்ளும் இன்றைய ஆளும்கட்சியினர் உண்ணாவிரதம் இருப்பதால் வந்துவிடுமா?” என்ற கேள்வி மக்கள் எல்லோரும் மனதிலும் எழுந்துள்ளது.


காவிரி நடுவர் மன்றம் 1991 ஜூன் 25-ஆம் தேதி தமிழகத்திற்கு ஆண்டு தோறும் 205 டி.எம்.சி.  தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என  இடைக்கால உத்தரவினை  பிறப்பித்தது. உச்ச நீதிமன்றமும் இந்த இடைக்கால தீர்ப்பினை உறுதிபடுத்தியது. ஆனாலும் இந்த தீர்ப்பு வந்து 2 ஆண்டுகள் ஆன நிலையிலும் கர்நாடக அரசு உரிய தண்ணீரை திறந்து விடவில்லை. இதனை நிறைவேற்ற அப்போதைய பிரதமர் நரசிம்மராவ்  உடனடியாக தலையிட வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் வலியுறுத்தினர். 

இதனை மீண்டும் வலியுறுத்தும் வகையில் 1993  ஜூலை  முதல்வர் ஜெயலலிதா திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். சென்னை கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு அதற்கு முன்பாக கொளுத்தும் வெயிலில் உண்ணாவிரதம் தொடங்கினார். இது குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள் என யாருக்கும் முன்னதாக தெரியவில்லை. உண்ணாவிரத செய்தி அறிந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் அங்கு அவசர அவசரமாக வந்து சேர்ந்தனர். உடனடியாக அங்கு பந்தலுடன் கூடிய மேடை அமைக்கப்பட்டது. அந்த மேடையில் அமர்ந்து ஜெயலலிதா தனது உண்ணாவிரதத்தை துவக்கினார். 
 பாண்டிச்சேரி சென்றிருந்த கவர்னர் சென்னாரெட்டி உடனடியாக சென்னை திரும்பி உண்ணாவிரதம் இருந்த ஜெயலலிதாவை சந்தித்தார். உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார். நடுவர் மன்ற தீர்ப்பை அமுல்படுத்தும்படி பிரதமர் உத்தரவிடும் வரை நான் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட மாட்டேன் என ஜெயலலிதா  கூறினார். உண்ணாவிரதம் இருந்த ஜெயலலிதாவிற்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் தங்கள் ஆதரவினை தெரிவித்தனர். உண்ணாவிரதம் தொடர்ந்ததால் பல இடங்களில் சாலைமறியல் மற்றும் ரயில் மறியல் நடந்தது.

நடிகர் ரஜினிகாந்த் நேரில் வந்து தனது ஆதரவை தெரிவித்தார். நடிகர் கமலஹாசன் தனது மனைவி சரிகாவுடன் உண்ணாவிரதத்தில் பங்கேற்பதாக சொன்னார். இதற்கு ஜெயலலிதா சம்மதிக்கவில்லை. ஒட்டு மொத்த திரை உலகத்தை சேர்ந்தவர்களும் ஜெயலலிதாவை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

இந்நிலையில் சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த வயலெட், பராசக்தி என்ற இரு பெண்கள் தீக்குளித்து உயிரிழந்தனர். மாநிலம் முழுவதும் ஒருநாள் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் 3-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்ததால் ஜெயலலிதா சோர்வுடன் காணப்பட்டார். மேலும் சோர்வு ஏற்பட்டதால் மேடையிலேயே படுத்த படுக்கையாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். இதனால் அவரது உடலில் சர்க்கரை சத்து குறைந்து  உடல் நிலை பாதிக்கப்படும் நிலை உருவானது.
 உண்ணாவிரதத்தின் 4-ஆம் நாள் காலை பிரதமர் நரசிம்மராவ், அமைச்சர் வி.சி.சுக்லாவை கர்நாடகாவுக்கு அனுப்பி வைத்தார். அங்கிருந்து சென்னை வந்த அவர் ஜெயலலிதாவை சந்தித்து பேச்சு நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது காவிரி நீர் தொடர்பாக இரு கமிட்டிகள் அமைத்து கண்காணிக்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதியளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா அன்று மாலை 5.30 மணிக்கு தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார். இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு பின்னரும் கூட காவிரி பிரச்சனையின் மூலம் தமிழகத்திற்கு உரிய நீதி கிடைக்கவில்லை. மத்தியில் பா.ஜ.க, காங்கிரஸ் தலைமையிலான அரசுகளும், மாநிலத்தில் தி.மு.க, அ.தி.மு.க என மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் காவிரி பிரச்சனைக்கு மட்டும் நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில்தான் கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி  வழங்க வேண்டும் எனவும், இதனை கண்காணிக்க செயல்திட்டம் ஒன்றை 6 வார காலத்திற்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும் என  கூறியிருந்தது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்று ஆணையம் அமைக்குமாறு தமிழக விவசாயிகள், எதிர்கட்சிகள், தமிழக அரசு என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் உச்ச நீதிமன்றம் அளித்த 6 வார காலக்கெடு வியாழக்கிழமையோடு முடிவடைந்த நிலையில் மத்திய அரசு இது குறித்து எந்த முடிவினையும் அறிவிக்கவில்லை. இதனால் கொதிப்படைந்த தமிழக விவசாயிகள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர். எதிர்க்கட்சிகளும் அடுத்தகட்ட போராட்டத்தினை துவக்க ஆலோசித்து வருகின்றன. 

இந்நிலையில் மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க-வும் தனது பங்கிற்கு ஏப்ரல் 3-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஒட்டுமொத்த மாநிலமும் ஒன்றிணைந்து சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய நிலையில் அது குறித்து விவாதிக்க தமிழக தலைவர்கள் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டனர். ஆனால் முதல்வர் உள்ளிட்ட எந்த தலைவரையும் சந்திக்க பிரதமர் மோடி நேரம் கொடுக்கவில்லை. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் கொடுத்த கெடு தேதியும் முடிந்து விட்டது. இந்த சூழலில் தமிழகத்தின் இரும்பு பெண்மணியாக விளங்கிய ஜெயலலிதாவிற்கே போக்கு காட்டிய மத்திய அரசு தற்போது அ.தி.மு.க-வினர் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்திற்கு பணிந்து மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த அறிவிப்பினை வெளியிடும் என எதிர்பார்ப்பது ஒட்டு மொத்த தமிழகத்தையும் முட்டாள்களாக நினைக்கும் நிலையையே உருவாக்கும்.

அடுத்த கட்டுரைக்கு