Published:Updated:

மிஸ்டர் கழுகு : டிராஃபிக்!

மிஸ்டர் கழுகு : டிராஃபிக்!
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு : டிராஃபிக்!

மிஸ்டர் கழுகு : டிராஃபிக்!

மிஸ்டர் கழுகு : டிராஃபிக்!

மிஸ்டர் கழுகு : டிராஃபிக்!

Published:Updated:
மிஸ்டர் கழுகு : டிராஃபிக்!
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு : டிராஃபிக்!
மிஸ்டர் கழுகு : டிராஃபிக்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து பறந்து வந்தார் கழுகார். ‘‘கன்டெய்னர் மேட்டரா?” என்றோம். ஆமாம் என்று தலையாட்டியபடி கழுகார் சொல்ல ஆரம்பித்தார்.

‘‘மூன்று கன்டெய்னர்களில் சென்ற 570 கோடி ரூபாய் பற்றி சில இதழ்களுக்கு முன் உமது நிருபர் பல சந்தேகங்களை எழுப்பி இருந்தார் அல்லவா? தற்போது அந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கறாரான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

மிஸ்டர் கழுகு : டிராஃபிக்!

‘தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நேரத்தில், 570 கோடி ரூபாய் 3 கன்டெய்னர்களில் சர்வ சாதாரணமாக எடுத்துச் செல்லப்பட்டது. அந்த நேரத்தில் சில லட்ச ரூபாய்களை எடுத்துச் சென்ற வணிகர்கள், தொழிலதிபர்கள், பொது மக்கள் துரத்தித்துரத்திப் பிடிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவ்வளவு கறாராகச் செயல்பட்ட தேர்தல் ஆணையம், 570 கோடி ரூபாய் விவகாரத்தில் கள்ள மௌனம் சாதித்தது. பெரமனல்லூர் - குன்னத்தூர் சாலையில் பிடிபட்ட அந்த கன்டெய்னர்கள், மூன்று நாட்களாக திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தபோது, அதில் இருந்த பணத்துக்கு யாரும் உரிமை கொண்டாடவில்லை. 18 மணி நேரத்துக்குப் பிறகு, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, தன்னுடைய பணம் என்றது. ஆனால், உரிமை கொண்டாடிய அந்த வங்கியின் சார்பில், எந்த அதிகாரியும் பணத்தைக் கொண்டு செல்ல வரவில்லை. லாரியிலும் காரிலும் இருந்தவர்கள் நாங்கள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் சார்பில் வருகிறோம் என்று இப்போதுவரை சொல்லவில்லை. மாறாக, இன்னோவா காரில் வந்தவர்கள், நாங்கள் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் என்று பதில் சொல்லியுள்ளனர். ஆனால், அவர்களிடம் அடையாள அட்டைகள் இல்லை. மேலும், அவர்கள் சீருடையிலும் இல்லை.’ இப்படி பல சந்தேகங்கள் வரிசையாக எழுப்பப்பட்டது!”

‘‘ம்.’’

‘‘மூன்று கன்டெய்னர் லாரிகளின் பதிவு எண்கள், AP 13X 8650; AP 13X 5203 மற்றும் AP 13X 5204. இவற்றில் AP 13X 5204 என்ற பதிவு எண், லாரிக்கான பதிவு எண்ணே கிடையாது. இந்த எண் ஆந்திராவைச் சேர்ந்த, ஜாபர் அஹ்மத் கான் என்பவருடைய காரின் பதிவு எண். கன்டெய்னர் லாரிகளின் ஆர்.சி புத்தகங்களில் உரிமையாளர் பெயர் வேறுவேறாக இருந்தது. ஆனால், மூன்று புகைப்படங்களிலும் ஒரே நபர்தான் இருந்தார். இப்படி ஏகப்பட்ட ஓட்டைகள் கொண்ட மர்ம விவகாரம் இது. இதை வசமாக தி.மு.க பிடித்துக்கொண்டது. இந்த மர்மங்கள் பற்றி சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.  இளங்கோவன் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்பையா, உடனடியாக இதில் வழக்குப்பதிவு செய்ய சி.பி.ஐ-க்கு உத்தரவிட்டார். அதன்பிறகு, உடனடியாக முதற்கட்ட விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அந்த வழக்குத் தொடர்பாகக் கிடைக்கும் ஆவணங்களைவைத்துத் தொடர்ந்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இதில் உண்மை வெளிவருகிறதோ இல்லையோ, அடுத்த தேர்தல் வரும்வரை 570 கோடி ரூபாய் விவகாரம் உயிர்ப்புடன் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எந்தத் தலையிடும் இல்லாதவகையில் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்தால், இதில் பல பெரிய அரசியல்வாதிகள், தேர்தல் ஆணைய அதிகாரிகள், வங்கி உயர் அதிகாரிகள் உள்பட பலருக்குக் கடுமையான சிக்கல் ஏற்படப்போவது உறுதி” என்ற கழுகார் அடுத்து இப்தார் மேட்டருக்கு வந்தார்.

‘‘கடந்த ஆண்டு, அ.தி.மு.க சார்பில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இப்தார் நோன்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஜெயலலிதா தலைமையில்தான் விழா என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கடைசி நேரத்தில் அவர் வராமல் ஓ.பி.எஸ் கலந்துகொண்டார். ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று அப்போதுதான் காரணம் சொல்லப்பட்டது. இந்த ஆண்டும் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ஜெயலலிதா கலந்துகொள்வாரா... மாட்டாரா? என்ற சந்தேகம் கடைசிவரை இருந்தது. ஆனால், கடந்த சனிக்கிழமை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பில் ஜெயலலிதா கலந்துகொண்டார்.”

‘‘அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகப் பொதுமக்கள் மத்தியில் இருந்து புகார்கள் வந்ததே?”

‘‘இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, போயஸ் கார்டன் வீட்டில் இருந்து மாலை 5.40 மணிக்குக் கிளம்பினார் ஜெயலலிதா. அந்த நேரத்தில், மணப்பாக்கம் சிக்னலில் இருந்தே போக்குவரத்து இரண்டு பக்கமும் நிறுத்தப்பட்டது. முதல்வர், வீட்டில் இருந்து கிளம்பி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்துக்கு உள்ளே சென்றபிறகும், போக்குவரத்தை அனுமதிக்கவில்லை. 5.40 மணிக்கு நிறுத்தப்பட்ட போக்குவரத்து இரவு 7 மணிவரை அப்படியே நிறுத்தப்பட்டு இருந்தது. இரவு 6.50-க்கு இப்தார் விருந்தை முடித்துவிட்டு, ஜெயலலிதா வீட்டுக்குக் கிளம்பிச் சென்ற பிறகே, வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. இது வழக்கமான நடைமுறை அல்ல. முதல்வர் கிளம்புவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு போக்குவரத்தை நிறுத்துவார்கள். அவர் போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்ததும், மீண்டும் போக்குவரத்துக்கான தடையை நீக்கிவிடுவார்கள். ஆனால், இந்த முறை, அவர் வீட்டில் இருந்து கிளம்பியபோது நிறுத்தப்பட்ட போக்குவரத்தை, அவர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்பிய, 2 மணி நேரமும் நிறுத்திவைத்திருந்தனர். அதனால், மணப்பாக்கம் சிக்னலில் இருந்து, தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் ரோடு முழுவதும் வாகனங்கள் திணறிப்போய் நின்றன. இந்த வழியாகத்தான் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்குச் செல்ல வேண்டும். இரண்டு மணிநேரமும் பொதுமக்கள் போலீஸ் அதிகாரிகளையும், முதல்வரையும் கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த டிராஃபிக்கில் இப்தார் நோன்பில் கலந்துகொள்ளச் சென்ற பல கட்சிக்காரர்களும் மாட்டிக்கொண்டனர். அவர்களும் நிகழ்ச்சிக்குச் செல்ல முடியாமல் ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனர்.”

‘‘ஒரு காலத்தில் இப்படித்தான் தினமும் செயல்பட்டார்கள். இடையில் நின்றது இந்தப் பழக்கம். மீண்டும் தொடங்கிவிட்டதா?”

மிஸ்டர் கழுகு : டிராஃபிக்!

‘‘சமீபகாலமாக உட்கார்ந்த நிலையில் மைக்கில் பேசி வருகிறார் ஜெயலலிதா. ஆனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு நின்றுகொண்டு மைக்கில் பேசியது இப்தார் விருந்தில்தான். அவர் பேச்சில் ‘ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதன் மூலம் அகமும், புறமும் துாய்மையடைகிறது. இறைபற்றும் அன்பும் மேலோங்கிறது. தர்ம சிந்தனை தழைத்தோங்குகிறது. இதன்மூலம் இறைவன் அருளை நாம் பெற முடிகிறது. எங்கு அன்பு இருக்கிறதோ, அங்கு மனிதநேயம் இருக்கும். அங்கு ஒற்றுமை நிலவும்... அறம் தழைக்கும்... ஏழ்மை விலகும்’ என்று தத்துவ மழைகள் பொழிந்தார். கூட்டணிக்  கட்சியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு அழைப்புவிடப்பட்டிருந்தது. சரத்குமார், தமீமுன் அன்சாரி, மதுரை ஆதீனம் ஆகியோர் மேடையில் அமர்ந்திருக்க கருணாஸ், தனியரசு ஆகியோர் விருந்தினர் வரிசையில் இருந்தனர்.”

‘‘ஓஹோ!”

“அ.தி.மு.க-வின் கூட்டணியில் உள்ள மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் சனிக்கிழமை அன்று  முதல்வரைச் சந்தித்தனர். தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல்வரைச் சந்திக்க தேதி கேட்டுக் கடிதம் கொடுத்தனர். அவர்களுக்கு சனிக்கிழமை அன்று நேரம் ஒதுக்கப்பட்டது. தமீமுன் அன்சாரி தலைமையில் கட்சி நிர்வாகிகள் முதல்வரைச் சந்திக்கச் சென்றபோது முதல்வர் தனது இருக்கையில் இருந்து எழுந்துவந்து அனைவரையும் வரவேற்று உள்ளார். நாகப்பட்டினத்தில், தான் வெற்றி பெற்றதுக்கு நன்றி தெரிவித்த தமீமுன் அன்சாரியிடம், ‘கடந்த ஐந்து ஆண்டுகளில் நாகப்பட்டினத்துக்கு நாங்கள் அவ்வளவு திட்டங்கள் செய்துள்ளோம். அதனால்தான் நீங்கள் வெற்றிபெற்றீர்கள்’ என்று புன்னகையுடன் கூறியுள்ளார். அதற்கு அன்சாரி தரப்பில், ‘இந்த முறையும் அதேபோல் எனது தொகுதிக்குச் செய்ய வேண்டும்’ என்று கூற, அதை ஆமோதித்தார் முதல்வர். மேலும் கோவை சிறையில் உடல்நிலை மோசமாக இருக்கும் கைதி அபுதாஹிர் விடுதலை குறித்து ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ‘பார்க்கலாம்’ என்று சொல்லியுள்ளார் ஜெ.”

‘‘ராகுல், இந்தியா திரும்பிவிட்டாரே. தமிழக காங்கிரஸ்  தலைவர் நியமனம் எப்போது?”

‘‘சுதர்சன நாச்சியப்பன், திருநாவுக்கரசர், செல்லக்குமார், பீட்டர் அல்போன்ஸ், மாணிக் தாகூர், வசந்தகுமார், ‘கராத்தே’ தியாகராஜன் என்று பட்டியல் நீள்கிறது. இவர்களில் பலர் டெல்லியில் முகாமிட்டு சோனியாவைச் சந்தித்துள்ளனர். பீட்டர் அல்போன்ஸ், டெல்லியில் சிதம்பரத்தையும் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளார். அப்போது, ‘பேச்சாற்றலும், எழுத்தாற்றாலும் உள்ளவர் தலைவர் பதவியேற்றால்தான் தமிழகக் காங்கிரஸ் வலுவடையும்’ என சிதம்பரம் ஏற்கெனவே பேசிய பேச்சை இவர் நினைவுபடுத்தினாராம். இளங்கோவன் ஆதரவும், பெரும்பாலான மாவட்டத் தலைவர்கள் ஆதரவும் இருப்பதால் தனக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பீட்டர் இருக்கிறார்.”

‘‘தி.மு.க-வில் களைஎடுப்பு எந்த அளவில் இருக்கிறது?”

‘‘தேர்தலில் ஏற்பட்ட சரிவுக்குப் பிறகு அதிரடிகளைத் தொடர்நது அரங்கேற்றி வருகிறது தி.மு.க. இதுவரை ஆறு மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். இந்தப் பட்டியல் இன்னும் நீளும் நிலை உள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையில் வழக்கம்போல் கருணாநிதிக்கு உடன்பாடு இல்லையாம். ஆனால் ஸ்டாலின், ‘உள்ளடி வேலை பார்த்தவர்களை ‘உண்டு... இல்லை என்று பண்ணாமல் விடமாட்டேன்’ என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டாராம். அவருடைய இந்தப் பிடிவாதத்துக்கு கருணாநிதியால்  ஒன்றும் சொல்ல முடியவில்லையாம்.”

‘‘மாவட்டச் செயலாளர்கள் மீதான புகார்களை யார் கொடுக்கிறார்களாம்?”

‘‘அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் கண்ணதாசன், சூர்யா வெற்றிகொண்டான், பூச்சிமுருகன், முன்னாள் எம்.பி மஸ்தான், பரந்தாமன், முத்துக்குமார் ஆகியோர் கொண்ட குழுதான் மாவட்ட வாரியாக விசாரணை செய்து ஸ்டாலினிடம் ரிப்போர்ட் கொடுக்கிறது. இந்த டீம், ஈரோடு மாவட்டத்தில் விசாரணை நடத்தி இரண்டு தொகுதிகளில் செலவு செய்யாமல் பதுக்கிய எட்டரை லட்சம் ரூபாயைப் பறிமுதல் செய்து தலைமையிடம் ஒப்படைத்தது.

‘தி.மு.க வேட்பாளர்களைத் தேர்வு செய்த குழுவுக்குள் எ.வ.வேலு தனியாக அதிகாரம் செய்து சீட் விஷயத்தில் விளையாடி விட்டார். துரைமுருகன், பொன்முடி,

ஆ.ராசா ஆகியோரும் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை வேட்பாளர் லிஸ்ட்டில் சேர்த்துவிட்டார்கள்’ என்று இந்தக் குழு கூறியுள்ளதாம். தி.மு.க-வினர் கொடுத்த புகார் போதாது என்று விழுப்புரம் முஸ்லிம் லீக் வேட்பாளர் அமீர் அப்பாஸ், முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது நீண்ட புகார் பட்டியலை ஸ்டாலினை நேரில் பார்த்து கொடுத்துள்ளாராம். இதைக் கவனமாகக் கேட்ட ஸ்டாலின், அந்தக் கடிதத்தை ஆர்.எஸ்.பாரதியிடம் கொடுத்து விசாரணை நடத்தச் சொல்லி இருக்கிறாராம். என்ன நடக்குமோ?” என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார்,

‘‘இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக இருந்த, வீரசண்முகமணி, எரிசக்தி துறை கூடுதல் தலைமைச் செயலாளர்

என்.எஸ்.பழனியப்பன் ஆகியோர் கடந்த மாதம் ஓய்வுபெற்றார்கள். இதில் வீரசண்முகமணிக்கு, ஒப்பந்த அடிப்படையில் இரண்டாண்டு பணிநீட்டிப்புக் கொடுத்துள்ளார் ஜெயலலிதா. அதனால் சிலர், ‘நாங்களும் பதவி நீட்டிப்பு வாங்கிவிடுவோம்’ என்று சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள்” என்றபடி பறந்தார்.

படங்கள்: ஆ.முத்துக்குமார்

அழைப்பிதழ் கொண்டுவராத எம்.பி.!

வி
ருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். விழா அரங்குக்கு உள்ளே செல்லும் முக்கியப் பிரமுகர்கள் வாயிலில் மடக்கப்பட்ட அவரிடம், அழைப்பிதழ் இருக்கிறதா என்று  அங்கிருந்த அ.தி.மு.க தலைமைக் கழக உதவியாளர்கள் கேட்டுள்ளனர். ‘‘மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டேன்’’ என்று பதில் அளித்துள்ளார். அதற்கு அந்த உதவியாளர்கள், ‘‘யாராக இருந்தாலும் அழைப்பிதழ் இருந்தால்தான் உள்ளே செல்லமுடியும்’’ என்று, அவரை நுழைவுவாயிலின் ஓரமாக உட்காரவைத்துள்ளனர். ஆனால், அதேபோல அழைப்பிதழ் இல்லாமல் இன்னொருவர் வந்துள்ளார். அவர் கார்டன் தரப்புக்கு நெருக்கமான கட்சித்தலைவர். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தில் இருந்து பிரிந்துவந்து தனிக்கட்சித் தொடங்கியவர். அவரிடமும் அழைப்பிதழ் இல்லை. ஆனால் அவரை அ.தி.மு.க தலைமைக் கழக உதவியாளர்கள் உள்ளே செல்ல அனுமதித்தனர். 15 நிமிடங்களுக்குப் பிறகு வந்த மேலிட உத்தரவால், நுழைவுவாயிலில் காத்திருந்த  எம்.பி ராதாகிருஷ்ணனை உள்ளே அனுமதித்தனர்.

தொடரும் போதை பலிகள்!

போ
தையில் வாகனங்களை ஓட்டி ஆளைக் காலி செய்யும் சம்பவங்கள் தலைநகரில் அதிகம் நடக்க ஆரம்பித்து உள்ளன

மிஸ்டர் கழுகு : டிராஃபிக்!

சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த ஐஸ்வர்யா, நந்தம்பாக்கத்தில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வார இறுதியைக் கொண்டாடிவிட்டு, தோழிகளுடன் காரில்வைத்தே மது அருந்தி இருக்கிறார். தரமணி சாலையில் அதிகாலை 4.30 மணிக்கு காரில் அதிவேகத்தில் செல்ல... அப்போது ரோட்டைக் கடந்து வேலைக்குச் சென்றுகொண்டிருந்த கூலித்தொழிலாளி முனுசாமி மீது கார் வேகமாக மோத, சம்பவ இடத்திலேயே முனுசாமி உயிரிழந்துவிட்டார். என்னதான் போலீஸ் செக்கிங் நடக்கிறதோ?