Published:Updated:

''கைதிகள் விடுதலை... காவிரி பிரச்னை..!'' - அவசர ஆலோசனை நடத்தினாரா கவர்னர்?

''கைதிகள் விடுதலை... காவிரி பிரச்னை..!'' - அவசர ஆலோசனை நடத்தினாரா கவர்னர்?
''கைதிகள் விடுதலை... காவிரி பிரச்னை..!'' - அவசர ஆலோசனை நடத்தினாரா கவர்னர்?

''கைதிகள் விடுதலை... காவிரி பிரச்னை..!'' - அவசர ஆலோசனை நடத்தினாரா கவர்னர்?


விடுமுறைநாளான ஞாயிற்றுக்கிழமை தலைமைச்செயலாளர், உள்துறைச் செயலாளர், அட்வகேட் ஜெனரல், சிறைத்துறை ஏ.டி.ஜி.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அழைத்துப் பேசியது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சந்திப்புக்கு, சிறைக்கைதிகளின் முன் விடுதலை என்று சொல்லப்பட்டாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்னையில் மத்திய அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தின் வெளிப்பாடே என்று தகவல் கசிந்துள்ளது.

காவிரி, ஸ்டெர்லைட், நியூட்ரினோ... என்று பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., ம.தி.மு..க, விடுதலைச் சிறுத்தைகள், த.மா.கா., தமிழக வாழ்வுரிமை கட்சி, விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள் உள்பட பல்வேறு பொதுநல அமைப்புகளும் போராட்டக் களத்தில் குதித்துள்ளன. இந்தப் போராட்டங்கள் எல்லாம் மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், வரும் 11-ம் தேதி, தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி காட்டுவோம் என்று தி.மு.க அறிவித்துவிட்டது. அதுவும், ஆளும்கட்சி சார்பில் ஏப்ரல் 3 -ம் தேதி, மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைத் தவிர்த்து, அ.தி.மு.க அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கலந்துகொள்வார்கள் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை ஒன்று சென்றுள்ளது. அதில், 'மத்திய அரசுக்கு எதிராக நடக்கும் தமிழக போராட்டங்கள் மிகவும் தீவிரமடைந்து வருவதாக குறிப்பிடப்படுள்ளது என்கிறார்கள். வைகோ நடைப்பயணத்தில் தீக்குளித்த சிவகாசி ரவி உயிரிழப்பு, டோல்கேட்டுகளை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அடித்து நொறுக்கியது எல்லாம் பிரச்னையின் தீவிரத்தைக் காட்டுவதாகவே சொல்கிறார்கள். இந்நிலையில், சென்னை அருகே மாமல்லபுரத்தில் ஏப்ரல் 11-ம் தேதி, 60 நாடுகள் பங்கேற்கும் ராணுவ கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கிவைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ அமைச்சர் நிர்மலா சிதாராமன் உள்பட, பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள். பிரதமரின் வருகையை முன்னிட்டு 24 மணி நேரமும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். தமிழகத்தில் வெடித்துள்ள போராட்டத்தால், பிரதமரின் வருகையும் கேள்விக்குறியாகி இருப்பதாகச் சொல்கிறார்கள். 

இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று, கிண்டி கவர்னர் மாளிகைக்கு தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, சிறைத்துறை ஏ.டி.ஜி.பி அசுகோஷ் சுக்லா, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் ஆகியோரை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அழைத்துப் பேசியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த ஆயுள் தண்டனை கைதிகள் முன்விடுதலை குறித்து என்று சொல்கிறார்கள். இதுபற்றி கவர்னர் மாளிகை வட்டாரத்தில் விசாரித்தபோது, 'திண்டுக்கல்லில் கடந்த டிசம்பர் 31-ம் தேதி நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி  பழனிசாமி, 'ஆயுள் தண்டனை பெற்று தமிழகச் சிறைகளில் 10 ஆண்டுகள் வரை சிறைவாசம் அனுபவித்துள்ள சிறைக் கைதிகளை முன்விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று அறிவித்தார்.  இதையடுத்து, கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் நிபந்தனைகள்குறித்த அரசாணையை பிப்ரவரி 1-ம் தேதி வெளியிட்டது. அதன்படி, மொத்தம் 1,800 கைதிகளை விடுதலை செய்ய, தமிழக சிறைத்துறை பட்டியல் தயாரித்துள்ளது. அந்தப் பட்டியல் இப்போது, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் மேஜையில் அவரது கையெழுத்துக்காகக் காத்திருக்கிறது. இதுகுறித்து ஆய்வு நடத்தியுள்ளார்.  ஒவ்வொரு ஃபைலையும் தனித்தனியாகப் பார்த்த பிறகே விடுதலைகுறித்து கையெழுத்திட முடியும்' என்று கவர்னர் சொன்னதாகச் சொல்கிறார்கள்.

ஆனால், இந்தச் சந்திப்புக்கு சிறைக்கைதிகள் விடுதலை என்று காரணம் சொல்லப்பட்டாலும், பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள காவிரி, ஸ்டெர்லைட், நியூட்ரினோ போராட்டங்கள் காரணமாகவே, சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை அழைத்துப் பேசியிருக்கிறார் கவர்னர் என்கிறார்கள், உள்விபரம் அறிந்தவர்கள். தமிழகத்தில் நாளுக்கு நாள் போராட்டம் வேகமெடுக்கும் நிலையில், பிரதமர் மோடியின் வருகைகூட கேள்விக்குறியாகியிருக்கிறது. மோடியின் வருகைகுறித்து சொல்லி இருந்தாலும், அவரது வருகை இன்னும் அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்படவில்லை என்றே சொல்கிறார்கள். 

அடுத்த கட்டுரைக்கு