Published:Updated:

பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 50: 8.6.88

பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 50: 8.6.88

Published:Updated:
பழசு இன்றும் புதுசு

தலையெடுக்கும் ஸ்டாலின்!

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிழகத்தின் முக்கியக் கட்சிகள் அண்மையில்பிளந்தன! அ.தி.மு.க. இரண்டு அணிகளாகப் பிளந்து சவால்விட்டுக்கொண்டு நிற்கின்றன. இ.காங்கிரஸில் இருந்து சிவாஜி கோஷ்டி வெளியேறியது. வலது கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து கல்யாணசுந்தரம் கோஷ்டியினர் வெளியேறிப் புதுக் கட்சி கண்டனர்!

 தி.மு.கழகத்திலும் 'கசமுசா’ என்று செய்திகள் கிளம்பி இருக்கின்றன. ('தி.மு.க. கோட்டைக்குள் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியும்’ - மூப்பனார்.)

கழகத்திலும் தன் வாரிசாகத் தன் மகன் மு.க.ஸ்டாலினை கருணாநிதி உருவாக்குகிறார் என்றும், அதை அன்பழகன் போன்ற மூத்த தலைவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள் என்றும் செய்தி. தி.மு.க-வில் வாரிசுப் போர் நடப்பது போல ஒரு வார இதழ் சென்ற வாரத்தில் எழுதியது.

பிரச்னைக்கு உரியவராகிவிட்ட மு.க.ஸ்டாலினைச் சந்திக்க கோபாலபுரம் சென்றோம். அப்போது வீட்டில் இருந்து கலைஞர் வெளிப்பட்டு காரை நோக்கி வந்தார். அவர் நம்மை வரவேற்க, வந்த வேலையைக் கூறியபோது, ''எதற்கு பாவம், ஸ்டாலின் தலையை உருட்டுகிறீர்கள்?!'' என்றார்.

''நாங்கள் உருட்டவில்லை...'' என்றதும்...

''எல்லோரும் ஸ்டாலினை நான் உருவாக்குவதாகச் சொல்கிறார்கள். அது தவறு. நான் உருவாக்கவில்லை. அவனை உருவாக்கிவிட்டதே இந்திரா காந்தி தானே! பேசாமல்கிடந்த அவனை மிசா கைதி ஆக்கிச் சிறையில் போட்டு, அரசியலில் அவனை உருவாக்கியதே இந்திரா காந்திதானே!'' என்றார் கலைஞர்.

கலைஞர் கார் புறப்பட்டது. தந்தை கொடுத்த அந்தச் சிறிய முன்னுரையுடன் மகனின் பேட்டி துவங்கியது.

''அப்பா அரசியல்வாதியாக இருந்திராவிட்டால், நீங்கள் அரசியலுக்கு வந்திருப்பீர்களா?''

''உங்கள் கேள்வியை என்னால் யோசித்துக்கூட பார்க்க முடியவில்லை. சின்ன வயதில் இருந்தே வீட்டைச் சுற்றி அரசியல் பிரமுகர்கள், பேச்சுகள், விவாதங்களைத்தான் கண்டுகொண்டு இருக்கிறேன். அதனால், கவனம் முழுவதும் அரசியலிலேயே இருந்தது. வீட்டில் தந்தை இருந்து கண்டிக்கிற வாய்ப்பு இல்லாமல்போனதால், நான் படிப்பில்கூட அதிகக் கவனம் செலுத்தவில்லை. அரசியலின் முதல் படியாக பிரசார நாடகம் போட ஆரம்பித்தோம். அப்போது மட்டும் தலைவர் (அப்பாவை அப்படித் தான் கூப்பிடுவது வழக்கம்) என்னைக் கூப்பிட்டு, 'நான் செய்த தவறை நீயும் செய்யாதே, ஒழுங்காகப் படி’ என்றார். ஆனால், என் கவனம் அரசியலில்தான் இருந்தது.''

பழசு இன்றும் புதுசு

''தந்தையே கட்சித் தலைவராக இருப்பதால், மற்றவர்களைவிட உங்களுக்குச் சௌகரியம்தானே?''

''அதுதான் இல்லை. இன்னாருடைய மகன் என்கிற பெருமை மட்டுமே மிச்சம். நம் புத்திசாலித்தனம், உழைப்பு எதுவுமே அவ்வளவு சுலபத்தில் எடுபடாது. நம் சுதந்திரமான எண்ணங்களைச் செயல்படுத்த முடியாது. கட்சியில் உள்ள மற்றவர்களைப் போல சுதந்திரமாகக் கருத்துகளைச் சொல்ல முடியாது. அதை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும். மற்றவர்களைவிட, தலைவரின் பிள்ளைகளுக்கு... குறிப்பாக, எனக்குக் கட்டுப்பாடுகள் அதிகம்.''

''நீங்கள் தீவிர அரசியலில் ஈடுபட ஆரம்பித்து எத்தனை காலமாகிறது? இதுவரை தனிப் பட்ட முறையில் சாதித்தது?''

''நான் தீவிர அரசியலில் ஈடுபட்டு 20 ஆண்டுகளாகின்றன. அப்போது தி.மு.க-வில் இளைஞர் அணி என்பது கிடையாது. நானும் நண்பர்களும் சேர்ந்து கோபால புரம் பகுதியில்தான் முதலில் 'கோபாலபுரம் தி.மு.க. இளைஞர் அணி’யைத் துவக்கினோம். அண்ணாவின் மணி விழாவைக் கோபாலபுரத்தில் நடத்தத் திட்டமிட்டு ம.பொ.சி-யை அண்ணாவுக்குப் பொன்னாடை போர்த்த அழைத்தோம். ஆனால்,

பழசு இன்றும் புதுசு

அதற்குள் அண்ணா சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். பிறகு நம்மைவிட்டே பிரிந்தார். அந்த விழா நடத்த முடியாமல்போனது. ம.பொ.சி.கூடப் பல முறை மேடையிலேயே, 'ஸ்டாலின் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பைக் கொடுத்தார். ஆனால், எனக்குத் தான் அதிர்ஷ்டம் இல்லை!'' என்று சொல்வார். 1971 பொதுத் தேர்தலின்போது, பிரசார நாடகம் போட்டோம். பிறகு, 1981-ம் வருஷம் இளைஞர் அணியை உத்வேகப்படுத்த முடிவெடுத்தார்கள். முதலில் இரண்டு லட்சம் பேர் உறுப்பினர்களாக இருந்தார்கள். இளைஞர் அணிக்கும் சரியான வழிமுறைகள் இல்லாமல் இருந்தன. இப்போது இளைஞர் அணியில் சேர, ஒரு ரூபாய் கட்டணம் வசூலித்து உறுப்பினர் கார்டு கொடுக்கிறோம். மூன்று லட்சம் பேர் இளைஞர் அணியில் இருக்கிறார்கள். இந்த அணி கடுமையாக உழைக்கிறது. கிராமங்களில்தான் அதிகக் கவனம் செலுத் துகிறோம். வாக்காளர்களை சந்திப்பதைவிட, கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்தும் பணியைத்தான் செய்கிறோம். காலையில் 8 மணிக்குக் கிளம்பினால், ஒரு நாளுக்கு சுமார் 40 கிராமங்களுக்குச் செல்கிறோம். இதனால் கிராமங்களில் உள்ள கட்சிக்காரர்களுக்குப் புதுத் தெம்பு வருகிறது. என்னுடைய சாதனை என்று பட்டியல் போட முடியா விட்டாலும்கூட, கட்சிக்காகக் கடுமையாக உழைக்கிறோம். ஒரு நாள் முழுக்க என்னைக் கவனித்தால், அதை நீங்களே புரிந்து கொள்வீர்கள்.''

''உங்கள் அரசியல் முன்னேற்றத்துக்கு, அணுகுமுறைக்கு, தந்தையின் 'அட்வைஸ்’ என்ன?''

'' 'என்னைப் போல இருக்காதே. படிப் பில் கவனம் செலுத்து’ என்று சொன்ன என் தந்தை எனக்கு வழிகாட்டவா போகிறார்? அவருடைய மேடையில்கூட நான் ஒரு பேச்சாளராகப் பேசியதே இல்லை. சமீபத்தில் இந்தி எதிர்ப்பு மாநாடு கோவையில் நடந்தபோது முதல் முறையாக தலைவர் எனது பேச்சை முழுவதுமாகக் கேட்டார். 'இப்படித்தான் அடக்கத்தோடு பேச வேண்டும்’ என்று சொன்னார். வழிகாட்டல் என்பது அவ்வளவுதான். தலைவரின் பிள்ளையாக இருப்பதால், கட்சியில் மற்றவர்களுக்குக் கிடைக்கும் பாராட்டுகூட எனக்குக் கிடைக்காது!''

''தி.மு.க. இளைஞர் அணி என்பது கட்சியில் உள்ள சில மூத்த தலைவர் களின் பிள்ளைகளாகச் சேர்ந்து நடத்தப் படுவதுதானே? இதனால் இயற்கையாக கட்சியில் புதிய தலைமுறை ஒன்று உருவாவது தடைப்படுகிறதே?''

''மூத்த தலைவர்களின் பிள்ளைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? நீங்களே கணக்கு எடுங்கள். நான், சி.வி.எம்.அண்ணா மலையின் புதல்வர், அன்பில் தர்மலிங்கத்தின் புதல்வர் அவ்வளவுதானே! - நாங்கள் மூத்த தலைவர்களின் பிள்ளைகளாக இருப்பதால் கட்சியில் இருக்கக் கூடாதா? தி.மு.க. ஒரு பெரும் மக்கள் இயக்கம். அதில் நாங்கள் ஏன் சேரக் கூடாது? தலைவர்களின் பிள்ளைகள் கட்சியில் சேரக் கூடாத அளவுக்குத் தேசத் துரோகிகளா என்ன?''

''அன்பழகன் போன்ற கட்சியினர் மூத்த தலைவர்கள்கூட உங்களை எதிர்ப்பதாகச் சொல்லப்படுகிறதே..?''

''என் உழைப்பில் நான் வளர்வதைப் பொறுக்க முடியாமல், இப்படிப் பிரசாரம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து செய்பவர் பண்ருட்டியார்தான். தி.மு.க-வில் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம்... அதற்கு என்னைப் பயன்படுத்துகிறார், அவ்வளவுதான்! இவ்வளவு ஏன்? பண்ருட்டியார் தி.மு.க-வில் இருந்தபோது, பல இளைஞர் அணிக் கூட்டங்களுக்கு எங்கள் அழைப்பின் பேரில் வந்து இருக்கிறாரே! 'கலைஞரின் வாரிசாக ஸ்டாலின் முளைத்துவிடுவார். அதனால், நான் இளைஞர் அணி கூட்டத்துக்கு வரமாட்டேன்’ என்று அப்போது சொல்லி இருக்கலாமே!

பேராசிரியருடன் (அன்பழகன்) கருத்து பேதம் என்பது கட்டுக்கதை. இளைஞர் அணி முழுக்க முழுக்கப் பேராசிரியரின் கட்டுப்பாட்டில்தான் இருக் கிறது. கட்சியில் மகளிர் அணி, தொழிலாளர் அணி, இலக்கிய அணி என்று பல அணிகள் உள்ளன. ஒவ்வொரு அணிக்கும் செயலாளர்கள் உண்டு. முடிவெடுத்து, சுதந்திரமாகச் செயல்படக்கூடிய அதிகாரம் அந்தச் செயலாளர்களுக்கு உண்டு. அதைக் கட்சியின் சட்ட, திட்டங்கள் அனுமதிக்கின்றன. ஆனால், இளைஞர் அணிச் செயலாளரான நான் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. தி.மு.கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியரின் அனுமதி பெற்ற பிறகே செயல்பட முடியும். இளைஞர் அணி சார்பில் நிதி திரட்டி, அதைக் கட்சிக்கே கொடுக்கிறோம். பிறகு, இளைஞர் அணி செலவுகளுக்குப் பணம் வேண்டும் என்றால், பேராசிரியர் அனுமதி இல்லாமல் ஒரு பைசாகூட வாங்க முடியாது. என்னுடைய ஒவ்வொரு செயலும் அவர் அனுமதியுடன்தான். இளைஞர் அணி குறித்துக் கடிதங்கள் வந்தால், எனக்கு அனுப்புவார். உடனே பதில் எழுதி அனுப்புவேன். உண்மையில் தலைவரின் அட்வைஸைவிட, எனக்குப் பேராசிரியரின் வழிகாட்டல்தான் அதிகம்.''

''ஒரு காலத்தில் தி.மு.க. என்றாலே 'இளைஞர் பட்டாளம்’ என்ற பெயர் இருந்தது. இப்போது கட்சிக்கு 'இளைஞர் அணி’ என்று தனியாகத் தேவைப்படுகிறது. உங்கள் வயதில் அன்று கட்சித் தலைவ ர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் உங்கள் தந்தை. கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள், அடுத்த தலைமுறைக்கு வழிவிடாமல் தாங்களே கட்சியை ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்?''

''அப்போது இருந்த காலகட்டம் வேறு. தமிழகத்தில் புது மலர்ச்சியை உண்டாக்கப் பல இளம் சிங்கங்கள் களத்தில் குதித்தார்கள். தி.மு.க. என்ற கட்சிக்கே எதிர்ப்பு அதிகம். எதிர் நீச்சல் போட வேண்டிய கட்டாயம் இருந்தது. அதனால் அவர்கள் பேச்சுக்கு, செயலுக்கு ஒரு வேகம் தேவைப்பட்டது. ஆவேச அணுகுமுறை தேவையாக இருந்தது. பிறகு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அதன் கவனம் முழுவதும் மக்கள் நலத் திட்டங்களில் சென்றது. செழுமையான ஆட்சி தரவேண்டிய பொறுப்பு இருந்தது. அதனால், தி.மு.க. கட்சி வேலைகளை ஒத்திப்போட்டது. கடந்த பத்து ஆண்டுகளாகத் தமிழகத்தில் இருள் சூழ்ந்தது. இருளை அகற்ற வேண்டிய கட்டாயம் வந்து இருக்கிறது. கட்சியின் பல்வேறு அமைப்புகளையும் முடுக்கிவிட வேண்டிய அவசியம் வந்து இருக்கிறது. இளைஞர் அணியும் வேகமாகச் செயல்படுகிறது. பலரின் கவனத்தையும் இப்போது கவர்ந்து இருக்கிறது.''

''கட்சியில் பல அணிகள் இருந்தும் தி.மு.க-வுக்கு சொந்தமான 'அன்பகம்’ கட்டடம் இளைஞர் அணிக்குத்தானே கொடுக்கப்பட்டு இருக்கிறது? அது தலைவரின் பிள்ளைக்குக் கட்சி அளித்த சலுகைதானே?''

''தலைவரின் பிள்ளைக்கு ஏற்பட்ட நெருக்கடி என்று சொல்லுங்கள். அந்தக் கட்டடத்தின் மதிப்பு

பழசு இன்றும் புதுசு

10 லட்சம். எந்த அணி அந்தப் பணத்தை முதலில் கட்டுகிறதோ அவர்களுக்கு அந்தக் கட்டடம் என்று சொல்லப்பட்டது. அவ்வளவு பணம் கிடைக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ராஜ்யசபா உறுப்பினர் வை.கோபால்சாமிதான் என்னை நான்கு நாட்கள் நெல்லை மாவட்டச் சுற்றுப்பயணத்துக்கு அழைத்து

பழசு இன்றும் புதுசு

46,000-த்தை வசூலித்துக் கொடுத்தார். அதன் பிறகு கலந்துகொள்ளும் கூட்டம், கொடியேற்று விழாவுக்கு எல்லாம் இவ்வளவு தொகை என்று நிர்ணயித்து, கிராமம் கிராமமாகச் சென்றேன். இப்போது

பழசு இன்றும் புதுசு

6 லட்சத்தை திரட்டிக் கொடுத்துவிட்டோம். மீதம் உள்ள பணத்துக்கு ஆறு மாத

பழசு இன்றும் புதுசு

காலம் அவகாசம் கேட்டு இருக்கிறோம். ஊர் ஊராக அலைந்து, திரிந்து, உழைத்துக் கட்டடம் வாங்கி இருக்கிறது இளைஞர் அணி. இது சலுகை அல்ல...''

பதில் அளித்துவிட்டுக் கடிகாரத்தைப் பார்த்தார். கூட்டத்துக்குக் கிளம்பத் தயாரானார். கிளம்பும்போது,

''உங்கள் மனைவி, குழந்தைகள்பற்றி..?'' என்று கேட்டோம்.

''என் மனைவி தமிழ் ஆசிரியர் ஒருவரின் மகள். எங்களுக்கு இரண்டு குழந்தைகள். ஒரு மகன், ஒரு மகள். ஊர் ஊராகச் சுற்றுவதால், மகளுக்குத்தான் வருத்தம். அரசியல் என்ற வார்த்தையே அவளுக்கு அலர்ஜியாக இருக்கிறது.''

''மனைவிக்கு உங்கள் அரசியல் வாழ்க்கை பிடித்து இருக்கிறதா?''

''அவளுக்குப் பழகிவிட்டது. திருமணமான மூன்றாவது மாதமே 'மிசா’வில் உள்ளே போனவன். ஒரு வருடம் சிறையில் இருந்தேன்.'' என்று சிரித்தபடி சொல்லிவிட்டு வெளியே கிளம்பினார்.

- சுதாங்கன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism