Published:Updated:

100 லிட்டர் கடல்நீரிலிருந்து 30 லிட்டர் மட்டுமே குடிநீர்...செலவு செய்யத் தயாரா சுப்பிரமணியன் சுவாமி? #WeWantCMB

100 லிட்டர் கடல்நீரிலிருந்து 30 லிட்டர் மட்டுமே குடிநீர்...செலவு செய்யத் தயாரா சுப்பிரமணியன் சுவாமி? #WeWantCMB
100 லிட்டர் கடல்நீரிலிருந்து 30 லிட்டர் மட்டுமே குடிநீர்...செலவு செய்யத் தயாரா சுப்பிரமணியன் சுவாமி? #WeWantCMB

100 லிட்டர் கடல்நீரிலிருந்து 30 லிட்டர் மட்டுமே குடிநீர்...செலவு செய்யத் தயாரா சுப்பிரமணியன் சுவாமி? #WeWantCMB

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை அடுத்து, தமிழகம் முழுவதும் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க-வும் மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது. தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னைக்கு வருகைதரவுள்ள  பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தை அறிவித்துள்ளார். 

ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள், கல்லூரி மாணவர்கள், ஐ.டி.ஊழியர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் மத்திய அரசுக்கு எதிராகக் குரல்கொடுத்து வருகிறார்கள். போராட்டம் நடத்தத் தடை அமலில் இருக்கும் சென்னை மெரினாவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அண்மையில் போராடிய பொதுமக்கள் சிலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும், மெரினாவில் மக்கள் கூட்டம் கூடக்கூடாது என்பதற்காக அதன் அணுகுசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் ஜல்லிக்கட்டுப் போராட்டம் போன்ற எழுச்சி, தமிழகமெங்கும் பரவலாகவே காணப்படுகிறது. 

இந்தநிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சுப்பிரமணியன் சுவாமி, காவிரி மேலாண்மை வாரியம் கேட்டுப் போராடும் மக்களுக்கு எதிராக ட்விட்டர் தளத்தில் தன் கருத்தைப் பதிவு செய்திருந்தார். 

``காவிரி நீர் வேண்டுமென்றால் அலறிக்கொண்டு இருங்கள்”

``தமிழ் மக்களுக்கு தேவையான குடிநீரும், நிலத்துக்கான நீரும் வேண்டும் என்றால் கடல்நீரைக் குடிநீராக்கித் தருவதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் நான் செய்து தருகிறேன். ஆனால், காவிரி நீர்தான் வேண்டுமென்றால் இப்படியே அலறிக்கொண்டும் அழுதுகொண்டும் இருங்கள்" என்று அவர் ஆங்கிலத்தில் பதிவிட்டிருக்கிறார். ஏற்கெனவே தமிழர்களைப் 'பொறுக்கிகள்' என்று குறிப்பிட்ட சுப்பிரமணிய சுவாமி, தற்போது தமிழக மக்களின் உரிமை தொடர்பான போராட்டத்தை இழிவு செய்யும் வகையில் கருத்து தெரிவித்திருப்பதாக, தமிழக அரசியல் கட்சித் தலைவர்களிடையேயும் மக்களிடையேயும் கடும் கொதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்னொருபுறம் அறிவியல் ஆர்வலர்கள், `கடல்நீரைக் குடிநீராக்கித் தர நான் ஏற்பாடுகள் செய்துதருகிறேன்' என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியிருப்பது ‘வன்மமானது’ என்று பகிரங்கமாகவே விமர்சித்து வருகின்றார்கள்.

100 லிட்டரிலிருந்து 30 லிட்டர்..

'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பின் சுந்தரராஜன் இதுகுறித்துக் கூறுகையில், “மத்தியக் கிழக்கு நாடுகளில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை வெற்றிகரமாகவே செய்துவருகிறார்கள். அங்கே இருக்கும் மக்கள் தொகை எண்ணிக்கையும் குறைவு. மேலும், இந்தத் திட்டத்துக்காக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் அவர்கள் செலவு செய்யும் நிலையில் இருக்கிறார்கள் என்பதால் இந்தத் திட்டம் அங்கே சாத்தியமானது. மேலும், அங்கு தற்போது குளங்கள், ஏரிகள் போன்ற நீராதாரங்களை வடிவமைக்கத் தொடங்கி விட்டார்கள். ஆனால், ஒரே சட்டை எல்லோருக்கும் பொருத்தமாக இருக்காது. இங்கே இருக்கும் ஏழரை கோடி பேருக்கு கடல்நீரைக் குடிநீராக்கித் தருவது எப்படிச் சாத்தியமாகும்? சுமார் 100 லிட்டர் தண்ணீர் கடலில் இருந்து சுத்திகரிப்பதற்காக எடுக்கப்படுகிறது என்றால் அதில் 70 லிட்டர் சுத்திகரிப்பதற்காக செலுத்தப்படும் பிரையன் நீர்மத்துடன் சேர்ந்து மீண்டும் கடலிலேயே கலந்துவிடும். அது உண்மையில் ஒருவகையில் சுற்றுச்சூழலை பாதிக்கும். மீதம் கிடைப்பது வெறும் 30 லிட்டர்தான். 100 லிட்டர் நீரிலிருந்து வெறும் 30 லிட்டர் மட்டுமே குடிநீராகக் கிடைப்பது, பொருளாதார ரீதியாகவும் பெருத்த அடி. குடிநீராக்கப்பட்ட கடல்நீர், சென்னை மாநகரின் மொத்தக் குடிநீர் தேவையில் வெறும் 10 சதவிகிதத்தை மட்டும்தான் பூர்த்தி செய்ய முடியும். குடிநீர் தேவைக்காக 50% வரை காவிரி நீரை நம்பியிருக்கும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் மொத்தக் குடிநீர் தேவையை இந்தத் திட்டத்தால் எப்படி வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும்? மேலும், சுத்திகரிக்கப்படும் நீரில் போரான் இருப்பதற்கான தடயம் இருக்கும் நிலையில், அதனுடன் 1:4 என்கிற கணக்கீட்டளவில் சாதாரண நீரையும் சேர்த்தால் மட்டுமே அதை மக்கள் உபயோகப்படுத்த முடியும். 'இதுவே வெற்றியடையாது' என்னும் நிலையில் தமிழக விவசாயத்துக்கான நீரை எப்படி அதிலிருந்து பெற முடியும்?”  என்று தர்க்க ரீதியான கேள்விகளை முன்வைக்கிறார்.

தமிழக மக்களுக்காக தானே முன்வந்து பொறுப்பேற்றுக்கொண்டு, கடல்நீரைக் குடிநீராக்கித் தருவதாகக் கூறியிருக்கும் சுப்பிரமணிய சுவாமி இதையெல்லாம் யோசித்தாரா?

அடுத்த கட்டுரைக்கு