Published:Updated:

மிஸ்டர் கழுகு: அரசு நிலம் அபகரிப்பு! - பின்னணியில் அமைச்சர்?

மிஸ்டர் கழுகு: அரசு நிலம் அபகரிப்பு! - பின்னணியில் அமைச்சர்?
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: அரசு நிலம் அபகரிப்பு! - பின்னணியில் அமைச்சர்?

மிஸ்டர் கழுகு: அரசு நிலம் அபகரிப்பு! - பின்னணியில் அமைச்சர்?

மிஸ்டர் கழுகு: அரசு நிலம் அபகரிப்பு! - பின்னணியில் அமைச்சர்?

மிஸ்டர் கழுகு: அரசு நிலம் அபகரிப்பு! - பின்னணியில் அமைச்சர்?

Published:Updated:
மிஸ்டர் கழுகு: அரசு நிலம் அபகரிப்பு! - பின்னணியில் அமைச்சர்?
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: அரசு நிலம் அபகரிப்பு! - பின்னணியில் அமைச்சர்?

ழுகார் உள்ளே வரும்போதே ஏகப்பட்ட ஆவணங்களுடன் வந்தார். ‘‘மேட்டர் பெரிய விஷயமாக இருக்கும்போல் தெரிகிறதே... தஸ்தாவேஜுகள் பலமாக இருக்கின்றனவே?” என்றோம்.

‘‘ஆமாம்’’ என்று தலையை ஆட்டியபடி கழுகார் சொல்ல ஆரம்பித்த மேட்டர் தலைமைச் செயலகத்தை ஆட்டுவிப்பதாக இருந்தது.

‘‘தமிழக வீட்டுவசதி வாரியத்தில் மிகப் பெரிய முறைகேடுகள் நடப்பதாகத் தகவல் வந்தது. விசாரித்தால் மலையளவு மேட்டராக அது வெடிக்கும் எனத் தெரிகிறது. வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான நிலங்கள், கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன.
டிவிஷன் கிளார்க், சர்வேயர், மனைப் பொறியாளர், விற்பனை மேலாளர் எனக் கீழ்மட்டத்தில் இருந்து தொடங்கும் இந்த ‘நெட்வொர்க்’ ஆளும் கட்சி முக்கியப் புள்ளிகள், அமைச்சர்கள் வரை நீள்கிறது.”

‘‘அப்படியா... விவரமாகச் சொல்லும்.”

‘‘தமிழகத்தில் முக்கிய நகரங்களை மேம்படுத்தி, வடிவமைத்தது தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்தான். இதன்மூலம்தான் சென்னையில் பெசன்ட் நகர், அண்ணா நகர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகள் இன்று விலை மதிப்புள்ள பகுதிகளாக மாறி இருக்கின்றன. ஏழைகள் அனைவருக்கும் வீடு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அந்தக் காலத்திலேயே ‘இன்ஸ்டால்மென்ட்’ எனப்படும் தவணைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி பல பேர் இன்று சொந்த வீட்டுக்காரர்களாக இருப்பதற்கு அடித்தளம் அமைத்ததும் இந்த வாரியம்தான். அதன்பிறகு, அந்தத் திட்டங்கள் பலமுறை மாற்றப்பட்டு, இன்று ‘செல்ப் ஃபைனான்ஸ்’ என்ற அடிப்படையில் வீடு மற்றும் மனைகளை விற்பனை செய்து வருகிறது. இது அந்த வாரியம் தொடங்கப்பட்டதற்கான நோக்கத்துக்கு நேர் எதிரான செயல் என்ற குற்றச்சாட்டும் வாரியத்தின் மீது உள்ளது. இப்போது பிரச்னை அது அல்ல.”

மிஸ்டர் கழுகு: அரசு நிலம் அபகரிப்பு! - பின்னணியில் அமைச்சர்?

‘‘புரிகிறது.”

‘‘தமிழகம் முழுவதும் வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமாக ஏராளமான நிலங்கள் உள்ளன. அவை அந்தந்த கோட்டங்களில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் பராமரிக்கப் படுகின்றன. அவர்களிடம்தான், அந்த நிலங்கள் பற்றிய ஆவணங்கள், கோப்புகள் இருக்கும். அதனால், அவர்களைத் தங்கள் கைவசம் கொண்டுவரும் பெரிய கட்டுமான நிறுவனங்கள், பெரும்புள்ளிகள் ஆவணங்களை மாற்றித் திருத்தி அல்லது அழித்து, வீட்டுவசதி வாரியத்துக்கான நிலங்களைத் தங்கள் உடைமைகளாக மாற்றிக் கொள்கின்றனர். அவர்களின் உதவியுடன் பட்டாவும் பெறுகின்றனர். ஆவணங்கள் அழிக்கப்படுவதால், இப்படி மோசம்போகும் இடங்கள் தங்களுடையது என்று வீட்டுவசதி வாரியத்தால் பல நேரங்களில் நிரூபிக்க முடியாமல் போகிறது.”

‘‘அதிர்ச்சியாக இருக்கிறதே..!”

‘‘இதற்கு அதிகாரிகள் துணைபோகும் கதைகளைக் கேட்டால் இன்னும் அதிர்ச்சியாக இருக்கும். உதாரணமாக, தாம்பரம் முடிச்சூர் பகுதியில் வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமாக இரண்டரை ஏக்கர் நிலம் இருந்தது. அதன்மதிப்பு பல கோடிகள். அந்த இடத்தைத் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று ஆக்கிரமித்து பட்டா பெற்றதுடன், அதில் அடுக்குமாடிக் கட்டடத்தையும் கட்டத் தொடங்கியது. விவரமறிந்த அந்தப் பகுதி பொதுமக்கள் இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் செய்தனர். ஆனால், அதிகாரிகள் அதைக் கண்டுகொள்ளவில்லை. உடனடியாக தி.மு.க வீட்டுவசதித் தொழிற்சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், கட்டுமான நிறுவனத்துக்கு எதிராகத் தீர்ப்பு வந்தது. உடனே, அந்த நிறுவனம் உச்ச நீதிமன்றம் சென்றது. ஆனால், உச்ச நீதிமன்றம் வழக்கைக் கறாராக நடத்தியதில், பல உண்மைகள் வெளிவந்தன. இறுதித் தீர்ப்பில் ‘தனியார் கட்டுமான நிறுவனம், வீட்டுவசதி வாரியத் துறை அதிகாரிகளின் உதவியுடன், குறிப்பிட்ட இடத்துக்குச் சொந்தமான ஆவணங்களைப் பெற்றுள்ளது. அவற்றைப் பயன்படுத்தி, கட்டுமானத்துக்கு வரைபடத்தைக் கொடுத்து ஒப்புதல் பெற்றுள்ளது. இது புகாராக வந்தபிறகும்கூட, அதிகாரிகள் தனியார் நிறுவனத்தின் முறைகேட்டைத் தடுக்கவோ, கட்டுமானத்தை நிறுத்தவோ, அரசுக்குச் சொந்தமான நிலத்தை மீட்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, தனியார் நிறுவனத்துக்கு மறைமுகமாக ஆதரவளித்துள்ளனர். பொது சொத்துக்களின் பாதுகாவலர்களாக இருக்கும் அதிகாரிகள் துணையுடன், எந்தப் பொதுச் சொத்தையும் ஒருவர் அபகரிக்க முடியும் என்ற தவறான முன்னுதாரணத்தை இந்த வழக்கு எடுத்துக்காட்டி உள்ளது. இது நீதிமன்றத்தை மிகவும் வருத்தத்துக்கு உள்ளாக்கி உள்ளது. ஒரு மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்தும் மிக மோசமான அதிகாரிகளின் செயலை இது பிரதிபலிக்கிறது. எனவே, இந்த முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் கட்டுமான நிறுவனம், கட்டுமானப் பணியை நிறுத்த வேண்டும். அத்துடன், இடத்தை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு 25 லட்ச ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும்’ என்று தெரிவித்தது.”

‘‘ஓஹோ!”

‘‘உச்ச நீதிமன்றத்தின் சாட்டையடிக்குப் பிறகும் அதிகாரிகள் திருந்தவில்லை. அதற்கு உதாரணம்தான் தற்போது, அரும்பாக்கத்தில் நடைபெற்றுள்ள மற்றொரு முறைகேடு. சென்னை - அரும்பாக்கத்தில், 3 கோடியே 22 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலம் வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமாக இருந்தது. திடீரென்று அங்கு சிலர் கொட்டகை போட வந்துள்ளனர். அதுபற்றி அக்கம்பக்கத்தினர் கேட்டபோது, இந்த இடத்தை நாங்கள் வாங்கிவிட்டோம் என்று சொல்லி உள்ளனர். உடனே, அதுபற்றி விசாரித்தபோது, அப்படி எந்த விற்பனையும் நடக்கவில்லை என்பது தெரியவந்தது. ஆனால், நிலத்துக்குச் சொந்தம் கொண்டாடி வந்தவர்கள், நிலத்துக்கான பத்திரப்பதிவு, வீட்டுவசதி வாரியப் பதிவு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் காட்டி உள்ளனர். இது சந்தேகத்தைக் கிளப்பவே, தி.மு.க வீட்டுவசதி தொழிற்சங்கப் பொதுச் செயலாளர் பூச்சிமுருகன், வீட்டுவசதி வாரிய இயக்குநரிடம் புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, அந்த நிலத்துக்கான கோப்புகள் தேடப்பட்டன. ஆனால், கோப்புகளே அரசாங்கத்தின் வசம் இல்லை. காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. இதில் மிகப் பெரிய தில்லுமுல்லுகள் நடந்திருப்பதை அறிந்து, தனி அதிகாரியை நியமித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், நிலத்தைச் சொந்தம் கொண்டாடும் ஆனந்த முருகன், முருகன் என்ற இருவர் வைத்திருந்த அனைத்து ஆவணங்களும் போலியானவை என்பது தெரியவந்தது. அந்த ஆவணங்களைத் தயாரிக்க, கே.கே.நகர் கோட்டம் சார்பில் விற்பனை மற்றும் சேவைப் பிரிவு மேலாளர் நிறைமதி, சர்வேயர் செந்தில் ஆகியோர் உதவி செய்துள்ளனர். இதில் சர்வேயர் செந்தில், விற்பனைப் பத்திரத்தில் கையெழுத்திட்டு உள்ளார். இந்த உண்மைகள் தெரியவந்ததும், விற்பனை, சேவைப் பிரிவு மேலாளர் நிறைமதி, சர்வேயர் செந்தில், கிளார்க் சுகுமார் உள்ளிட்டவர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். இதில் சர்வேயர் செந்தில் 8 முறை துறைரீதியான நடவடிக்கைக்கு உள்ளானவராம். ஆளும் கட்சியின் அண்ணா வீட்டுவசதி தொழிற்சங்கத்தின் செயலாளராக இருந்தும், தொடர்ந்து புகாருக்கு உள்ளானதால், அதில் இருந்தும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக நீக்கம் செய்யப்பட்டவராம்.”

மிஸ்டர் கழுகு: அரசு நிலம் அபகரிப்பு! - பின்னணியில் அமைச்சர்?

‘‘பரவாயில்லையே. நடவடிக்கை எடுத்து உள்ளார்களே?”

‘‘பிரச்னை அதற்குப் பிறகுதான் ஆரம்பம் ஆனது. ‘இதுபோன்ற முறைகேடுகளில், வழக்கமாக துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதும், போலீஸில் புகாரும் கொடுக்கப்படும். ஆனால், இந்த விவகாரத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை. வீட்டுவசதி வாரியத் துறை அமைச்சர் உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன் மற்றும் அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன் ஆகியோர் தலையிட்டு போலீஸ் புகாரை நிறுத்திவைக்கச் சொன்னார்கள்’ என்று சொல்கிறார்கள்.”

‘‘அமைச்சர் எதற்காக இதில் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறாராம்?”

‘‘அவரது பின்னணியைச் சிலர் விசாரிக்கத் தொடங்கி உள்ளார்கள். இதுபற்றி பேசும் வீட்டுவசதி வாரிய ஊழியர்கள், ‘வெளியில் வந்துள்ளது இந்த ஒரு நிலம்தான். ஆனால், தமிழகம் முழுவதும் இதுபோல் காணாமல்போன நிலங்கள் பல ஆயிரம் ஏக்கர். அதன் மதிப்பு பல நூறு கோடிகளைத் தாண்டும்’ என்கின்றனர். இதனை முழுமையாக விசாரித்து மோசடிகளை முழுமையாக வெளியில் கொண்டுவர தி.மு.க-வும் களத்தில் குதித்து உள்ளதாம்” என்றபடி அடுத்த மேட்டருக்குத் தாவினார் கழுகார்.

‘‘ஜெயலலிதா பேரவைக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சியைத் தமிழகம் முழுக்க கடந்த 10-ம் தேதி ஒரே நேரத்தில் அ.தி.மு.க-வினர் நடத்தினார்கள். இதில் மதுரையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி மிகப் பிரமாண்டமாக இருந்தது. மதுரை புறநகர் மாவட்டம் சார்பாக இந்த நிகழ்ச்சியை திருப்பரங்குன்றத்தில் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா அதிக ஆட்களைத் திரட்டி நடத்தினார். அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் தங்களுடைய ஆதரவாளர்களை அழைத்துவந்து பலத்தைக் காட்டினார்கள். அவர்கள் மட்டுமல்ல, தற்போதைய எம்.எல்.ஏ-க்களான சோழவந்தான் மாணிக்கம், உசிலம்பட்டி நீதிபதி, மதுரை தெற்கு சரவணன், மேலூர் பெரிய புல்லான் ஆகியோரும், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், முத்துராமலிங்கம், ஏ.கே.போஸ், தமிழரசன், கருப்பையா, ராஜாங்கம், தவசி ஆகியோரும் ஆட்களை அழைத்து வந்திருந்தார்கள்.”

‘‘ஏனாம் இந்தத் திடீர் சுறுசுறுப்பு?”

‘‘பொதுவாகக் கட்சி நிகழ்ச்சி என்றால் பொறுப்பில் இருப்பவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று ஒதுங்கிப்போகும் அ.தி.மு.க நிர்வாகிகள், இந்த நிகழ்ச்சியில் நான்... நீ என்று தங்கள் பலத்தைக் காட்டும் வகையில் நடந்துகொண்டதற்கு ஒரே காரணம் விரைவில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு வரவிருக்கும் இடைத்தேர்தல்தான். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற சீனிவேலு, தேர்தல் முடிவு அறிவிக்கும் முன்னரே உடல்நலமில்லாமல் கோமா நிலைக்குச் சென்று, சில நாட்களில் மரணமடைந்தார்.

அ.தி.மு.க கட்சி நிர்வாகிகள் சிலர், இறுதிச்சடங்கு நடக்கும் இடத்திலேயே அடுத்து யாருக்கு சீட் என்று பேச ஆரம்பித்தார்கள்.”

‘‘ம்!”
‘‘கடந்த சட்டமன்றத் தேர்தலில் சீட் கிடைக்காதவர்களும், கிடைத்த சீட்டை கடைசி நேரத்தில் பறிகொடுத்தவர்களும், ஏற்கெனவே எம்.எல்.ஏ-வாக இருந்தவர்களும், நீண்டகாலமாகக் கட்சி நிர்வாகியாக மட்டும் இருப்பவர்களும் திருப்பரங்குன்றம் தொகுதியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். அதற்கு முன்னோட்டமாகத் தங்கள் பலத்தைக் காட்ட இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டார்கள். மதுரை மாவட்டத்தில் யார் ஒஸ்தி என்பதில் சமீபகாலமாக அமைச்சர்கள் செல்லூர் ராஜுவுக்கும் ஆர்.பி.உதயகுமாருக்கும் கடுமையான போட்டி நடந்து வருகிறது. அமைச்சர் ஆக முடியாத வெறுப்பில் ராஜன் செல்லப்பாவும், செல்லூர் ராஜு மீது செம கடுப்பில் உள்ளார். தங்களை டம்மியாக்க நினைக்கும் அமைச்சர் செல்லூர் ராஜுவின் கொட்டத்தை அடக்க உதயகுமாரும், ராஜன் செல்லப்பாவும் தொகுதியைத் தங்களுடைய ஆதரவாளர்களுக்கு வாங்கிக்கொடுக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். செல்லூர் ராஜுவோ, தன் இளைய மகள் ரம்யாவைக் களமிறக்கக் காய் நகர்த்தி வருகிறார்.”

‘‘அப்படியா?”

‘‘இவர்களின் சுயநல பாலிடிக்ஸால் கடந்தமுறை சீட் வழங்கப்பட்டு கடைசி நேரத்தில் பறிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் மன்ற மாநில நிர்வாகி எம்.எஸ். பாண்டியனும், எஸ்.எஸ்.காலனி கவுன்சிலர் லெட்சுமியும், சீனியர் கட்சிக்காரர் மண்டலத் தலைவர் சாலைமுத்துவும், மறைந்த சீனிவேலு குடும்பத்தினரும், திருப்பரங்குன்றம் நிர்வாகி நிலையூர் முருகனும் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள்.’’

‘‘ஓஹோ! அன்வர் ராஜா மேட்டர் என்னவாம்?”

‘‘ராமநாதபுரம் எம்.பி-யாக உள்ளவர் அன்வர் ராஜா. அ.தி.மு.க-வின் மாநில சிறுபான்மை அணியின் செயலாளராகவும் இருந்து வருகிறார். இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்து, தாஜிதா என்பவரை 2-வதாகத் திருமணம் செய்துகொண்டார். 5 பிள்ளைகள் உள்ள நிலையில் தாஜிதா கடந்த ஆண்டு இறந்துவிட்டார்.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சமீரா சுல்தான் என்ற பெண் ஒருவர் அன்வர் ராஜா நடத்தி வரும் கல்வி நிறுவனத்தில் வேலை கேட்டு வந்துள்ளார். அன்வர் ராஜாவுக்கும் அந்த விதவைப் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு வயது 50. இப்போது உறவினர்கள் முன்னிலையில் அவரைத் திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக முதல்வரிடம் உரிய அனுமதியையும் அன்வர் ராஜா பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.”

மிஸ்டர் கழுகு: அரசு நிலம் அபகரிப்பு! - பின்னணியில் அமைச்சர்?

‘‘முதல்வர் அனுமதிக்குப் பின் என்ன வேண்டும்?”

‘‘தேர்தலுக்கு முன்பு ஜெயலலிதாவின் அக்னிபார்வையில் சிக்கியிருந்த ஓ.பி.எஸ்., தேர்தலுக்குப் பிறகு தனது பணிவால், ஜெ-வின் நம்பிக்கையைப் பெற்று மீண்டும் தனது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்ட கையோடு, தனது செலவில் கட்டப்பட்டுள்ள கோயிலுக்கும் கும்பாபிஷேகத்தை முடித்துவிட்டார். விருதுநகர் மாவட்டம் செண்பகத் தோப்பில் அமைந்துள்ள தனது குலதெய்வமான பேச்சியம்மன் ஆலயத் திருப்பணிகளைக் கடந்த ஆண்டே தொடங்கி தேர்தல் நேரத்தில் குடமுழுக்கு செய்ய முயன்றார்கள். அந்த நேரத்தில் ஓ.பி.எஸ்ஸுக்கும் கார்டனுக்கும் இருந்த சிக்கலால், பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று குடமுழுக்கைத் தள்ளிவைத்துவிட்டார்.

மீண்டும் தனது செல்வாக்கு ஓங்கியதும், கடந்த 11-ம் தேதி குடமுழுக்குத் தேதி குறிக்கப்பட்டது. அதற்கு முன்தினமே வில்லிபுத்துார் வந்த ஓ.பி.எஸ் குடும்பத்தினர், ஆண்டாள் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, ராஜபாளையத்தில் தங்கினார்கள். குடமுழுக்கு தினத்தன்று காலை 10 மணிக்கு ஓ.பி.எஸ்., அவருடைய மகன்கள், தம்பி ராஜா, சகோதரிகள் சகிதமாக கோயிலுக்கு வந்தார்கள். கால் வலியால், கோயில் கோபுரத்துக்கு ஏற மறுத்துவிட்டார் ஓ.பி.எஸ். அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது. ஆனால், ஓ.பி.எஸ் குடும்பத்தினருக்கு மட்டும், ராஜபாளையத்தில் இருந்து ஸ்பெஷல் சாப்பாடு வரவழைக்கப்பட்டது. கட்சியினர் யாரும் வரவேண்டாம் என்று கூறியிருந்தாலும் லோக்கல் கட்சியினர் அனைவரும் ஆஜர் ஆகிவிட்டார்கள். அவர்களோடு பவ்யமாக அரசு அதிகாரிகளும் ஆஜர் ஆனார்கள்” என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார்,

‘‘உள்ளாட்சித் துறையில் வசூல் கொடி கட்டிப் பறக்கிறதாம். பேரூராட்சித் துறை செயல் அலுவலர்களில் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு புரமோஷன் வரவேண்டும். ஃபைல் தயார் ஆகி ஐந்து மாதங்கள் ஆகிவிட்டன. கையெழுத்துப் போட ஐந்து என்று கையைக் காட்டுகிறார்களாம். விழிபிதுங்கி நிற்கிறார்கள் அரசு ஊழியர்கள்” என்றபடி பறந்தார்.

அட்டை மற்றும் படங்கள்: ரமேஷ் கந்தசாமி, ஆர்.எம்.முத்துராஜ்