Published:Updated:

திமுகவை வீழ்த்தவே அதிமுகவுடன் கூட்டணி: தேமுதிக

சென்னை, பிப்.25,2011

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடவுள்ளதாக தேமுதிக அறிவித்துள்ளது. இரு கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு குறித்து முதல்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது. ##~~##

தேமுதிக அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி மாநில செயலாளர் சுதீஷ், பொருளாளர் சுந்தரராஜன் ஆகியோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வியாழக்கிழமை மாலை வந்தனர்.

அவர்களை அதிமுக தேர்தல் குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு 7 மணி வரை நீடித்தது.

பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி...

இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு தேமுதிக அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியது:

இருதரப்பிலும் வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் எவ்வாறு தொகுதிகளை பங்கிட்டு போட்டியிடுவது என்பது குறித்து ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. மீண்டும் சந்தித்து பேச இருக்கிறோம்.

வருகிற தேர்தலில் தமிழ்நாடு அரசியலில் ஒரு மாற்றத்தை தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றுகிற வகையில் அரசியலில் உள்ள எதிர்க்கட்சியினர் ஓர் அணியாக திரண்டு மக்களின் உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்கிற வகையில் இந்த கூட்டணி உருவாக வேண்டும்.

அதனால்தான் இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகம், அதிமுக தலைமையில் இயங்குகிற கூட்டணியில் பங்கு பெறுவதற்கு பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்கிறது. இந்த கூட்டணி மக்கள் விரும்புகிற கூட்டணி. ஆகவே, வெற்றி கூட்டணியாக மலரும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது," என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.

அ.தி.மு.க. கூட்டணியில் எத்தனை தொகுதிகளை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, "இவைகளெல்லாம் ஆரம்பக்கட்டத்தில் இருக்கின்றன. எத்தனை தொகுதி என்பதை பேசி விரைவில் முடிவு எடுப்போம். எத்தனை தொகுதி என்பது முக்கியமல்ல. இப்போது உள்ள ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் முக்கியம்," என்றார்.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், அந்த ஆட்சியில் இடம் பெறுவீர்களா? என்றதற்கு, " நாங்கள் இதுபற்றி ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கிறோம். அமைச்சரவையில் இடம் பெறவேண்டும் என்ற ஆசை எங்களுக்கு கிடையாது," என்றார் அவர்.

ஜெயலலிதாவிடம் விளக்கம்...

இந்தப் பேச்சுவார்த்தை முடிவடைந்ததும், தொகுதி பங்கீட்டு குழுவில் இடம்பெற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் ஜெயலலிதாவை போயஸ்கார்டனில் சந்தித்து பேசினார்கள். அப்போது பேச்சுவார்த்தையில் நடைபெற்ற விவரங்களை ஜெயலலிதாவிடம் விரிவாக எடுத்து கூறினார்கள்.

பின்னர் இதுதொடர்பாக அ.தி.மு.க தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "அ.தி.மு.க. - தே.மு.தி.க. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.