Published:Updated:

கட்கரி திடீர் விலகல்: பா.ஜ. புதிய தலைவராகிறார் ராஜ்நாத் சிங்!

கட்கரி திடீர் விலகல்: பா.ஜ. புதிய தலைவராகிறார் ராஜ்நாத் சிங்!
கட்கரி திடீர் விலகல்: பா.ஜ. புதிய தலைவராகிறார் ராஜ்நாத் சிங்!
கட்கரி திடீர் விலகல்: பா.ஜ. புதிய தலைவராகிறார் ராஜ்நாத் சிங்!

புதுடெல்லி: பா.ஜனதா தலைவர் தேர்தலுக்கான போட்டியிலிருந்து நிதின் கட்கரி விலகியுள்ள நிலையில், புதிய தலைவராக ராஜ்நாத் சிங் தேர்ந்தெடுக்கப்படலாம் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பா. ஜனதா கட்சியின் தலைவராக நிதின் கட்கரி உள்ளார்.கட்சித் தலைவருக்கான தேர்தல் இன்று நடக்கவுள்ள நிலையில்,தாம் தேர்தலிலிருந்து விலகிக் கொள்வதாக கட்கரி நேற்று இரவு அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங் பா.ஜனதாவின் அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படக் கூடும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர் ஏற்கெனவே 2005-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரை பா.ஜனதா கட்சியின் தலைவராகப் பதவி வகித்துள்ளார்.

இன்று நடக்கவுள்ள தலைவர் தேர்தலில் ராஜ்நாத் சிங் பெயரை நிதின் கட்கரியே முன்மொழிவார் எனத் தெரிகிறது.

முன்னதாக, மூத்த தலைவர் ராம் ஜெத்மலானியின் மகன் மகேஷ் ஜெத்மலானி தலைவர் பதவிக்குப் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தார். இது கட்சியில் பரபரப்பை

##~~##
ஏற்படுத்தியது. ஆனால் குறைந்தபட்சம் 12 ஆண்டு காலம் கட்சி உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்பதால் தலைவர் பதவிக்குப் போட்டியிட அவருக்குத் தகுதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
அதே வேளையில், மற்றொரு மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா தலைவர் போட்டிக்கான விண்ணப்ப மனுவை நேற்று மாலை பெற்றார்.இது தலைவர் தேர்தலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில்,நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்ட கட்கரி,தனக்கு எதிராக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளினால் கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படக் கூடாது என்றும், மீண்டும் தலைவர் பதவிக்கான தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்றும் அதில் கூறியிருந்தார். 
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான கட்கரி மீண்டும் தலைவராவதை அத்வானி உள்ளிட்ட சில பா.ஜனதா தலைவர்கள் விரும்பவில்லை எனக்கூறப்பட்ட நிலையில், நேற்று இரவு அவசரமாக நடைபெற்ற பா.ஜனதா உயர்மட்ட தலைவர்கள் கூட்டத்தில் கட்கரியை மீண்டும் பா.ஜனதா தலைவராக்குவதில்லை என முடிவெடுக்கப்பட்டதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.