Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

மு.மதிவாணன், அரூர்.

‘‘தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை தந்தால் அதை ஏற்கத் தயார்’’ என்கிறாரே குஷ்பு?


காங்கிரஸ் கட்சிக்கு யாரைத் தலைவராகப் போடலாம் என்ற பெரும் குழப்பத்தில் தாய் சோனியாவும் மகன் ராகுலும் இருக்கிறார்கள். கூடுதலாகக் கொஞ்சம் குழப்புவதற்காக ராகுலை குஷ்பு சந்தித்து உள்ளார்.

ப.சிதம்பரமா, திருநாவுக்கரசரா, சுதர்சன நாச்சியப்பனா, பீட்டர் அல்போன்ஸா, மாணிக் தாகூரா, ‘கராத்தே’ தியாகராஜனா என்ற குழப்பத்தில் கலங்கிக் கிடக்கிறது காங்கிரஸ் கட்சி. இதில், இன்னொரு பெயரும் சேர்ந்துவிட்டது... குஷ்பு. இவர் இளங்கோவன் ஆதரவாளர் என்று அறியப்பட்டு உள்ளதால், குஷ்பு பெயரைப் பரிசீலிப்பார்களா எனத் தெரியவில்லை. யாரை நியமித்தாலும் கட்சித் தளிர்க்குமா எனத் தெரியவில்லை.

பல மாதங்களுக்கு முன் இளங்கோவன் நீங்கலாக அனைத்துத் தலைவர்களும் சோனியாவைப் போய் பார்த்தபோது அவர் சொன்னார். ‘‘உங்களில் ஒருவரை நியமித்தாலும் மற்றவர்கள் எல்லோரும் கூட்டமாக வருவீர்கள். எனவே, தலைமையை மாற்றுவதால் என்ன பயன்? யார் தலைவர் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் கட்சியை வளர்க்கப் பாருங்கள்” என்றார். எனவே, காங்கிரஸில் தலைவரை மாற்றுவதால் எந்தப் பயனும் இல்லை. தலைவர்கள் மாறவேண்டும்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘‘கூட்டணியை இனியும் நம்பத் தயாராக இல்லை. அடுத்தவர்களுக்காக உழைத்ததுபோதும். சொந்தக் காலிலேயே நிற்கப் போகிறேன், உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி’’ என்று டி.ராஜேந்தர் அறிவித்துள்ளாரே?


இவர் இதுவரை எந்தக் கூட்டணியில் இருந்தார் என்பது தெரியவில்லையே. அவரைக் கருணாநிதியும் சேர்க்கவில்லை. ஜெயலலிதாவும் சேர்க்கவில்லை. அப்படி இருக்கும்போது அடுத்தவர்களுக்காக என்றால், இதுவரை அவர் யாருக்காக உழைத்தார்?

கழுகார் பதில்கள்

லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்).

உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து ஜெயலலிதா பல அதிரடி வேலைகளில் குதிப்பார்போலத் தெரிகிறதே?


உள்ளாட்சித் தேர்தலே நடக்கப்போவதாகத் தெரியவில்லையே.

எஸ்.ராமதாஸ், சேலம்-30.

கொலை வழக்கில் கைதான ஒருவருக்குச் சாதி அடையாளம் கொடுத்து வக்காலத்து வாங்குவது எந்தவிதத்தில் நியாயம்?


கொலையைக் கொலையாகப் பார்க்கவேண்டும். கொள்கையைக் கொள்கையாகப் பார்க்க வேண்டும். நாகரிக சமூகத்தின் அடிப்படைகள் இவை. கொலை செய்பவனும், கொள்ளை அடிப்பவனும், லஞ்சம் வாங்குபவனும் ஏதாவது ஒரு சாதியாகத்தான் இருப்பான். அதற்காக அந்தச் சாதிக்காரர்கள் திரள ஆரம்பித்தால் என்ன ஆவது? சட்டத்துக்கும் நீதிக்கும் அங்கு வேலை இல்லாமல் போகும். எனவே, சமூகக் குற்றங்களில் சாதி அடையாளங்களைத் தவிர்ப்பதே சரியானது.

எஸ்.பி.விவேக், தாதம்பட்டி.

விஜயகாந்த்தால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் இன்று அவரையே விமர்சித்துப் பேசி வருகிறார்களே?


வளர்த்துவிடுவதும் காலைவாருவதும் அரசியலில் சகஜம்தான்.

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

சுவாதி படுகொலை பற்றி முதல்வர் ஜெயலலிதா கருத்துச் சொல்லவில்லையே?


தினமும் 10 கொலைகள் நடக்கின்றன. இதற்கெல்லாம் ஜெயலலிதா கருத்துச் சொல்ல ஆரம்பித்தால் என்ன ஆவது? வேறு வேலையே பார்க்க முடியாது.

கு.நீலமேகன், விழுப்புரம்.

சுவாதி கொலைச் சம்பவத்தை வைத்துப் பார்த்தால் சென்னை மக்களுக்கு மனிதநேயம் இல்லையா?


மனிதநேயத்துக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. மனதில் இருக்கும் பயம்தான் இதற்குக் காரணம். நீங்கள் இருக்கும் அதே விழுப்புரத்தில் நகராட்சிப் பூங்காவில் ஷட்டில் காக் ஆடிக்கொண்டு இருந்த பத்தர் செல்வம் என்பவரை அதிகாலையில் வெட்டியது ஒரு கும்பல். யாரும் தடுக்கவில்லை. செல்வத்தின் தலையை எடுத்துவந்து அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் காந்தி சிலையில் வைத்துவிட்டு அந்தக் கும்பல் போனது. அங்கும் யாராலும் தடுக்க முடியவில்லை. பெருந்தலைகள் சிலர் சேர்ந்து நடத்திய கொலை இது.

இப்படிப் பல கொலைகள் பட்டப்பகலில், பலரும் பார்க்கும் இடத்தில் நடக்கின்றன. தடுக்கவோ, சாட்சிகள் சொல்லவோ மக்களுக்கு தைரியம் வரவில்லை. இதற்கெல்லாம் யார் காரணம்... இத்தனை ஆண்டு காலங்களாக நம்மை ஆண்ட, ஆண்டுகொண்டிருக்கும் ஆட்சியாளர்கள்தான். நெஞ்சில் உரமும்... நேர்மைத் திறமும்... பெருக வைப்பதற்கு பதிலாக, பயத்தையும் பதைபதைப்பையும்தான் பெருக வைத்துள்ளனர். கொலையாளிகளை எனக்குத் தெரியும் என்று ஒருவர் போன் செய்தால், அவரின் போன் நம்பர் மற்றும் முகவரியையே உடனடியாக காவல் துறையிலிருந்தே கொடுக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தால், மக்களுக்கு எப்படித் தைரியம் வரும்?

சங்கமித்ரா நாகராஜன், கோவை-6.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாம் சிலை திறக்கப்பட்டு இருப்பது பற்றி?


தமிழகம் செய்யத் தவறியதை ஈழம் செய்து காட்டி உள்ளது.

பொன்விழி, அன்னூர்.

தமிழ் சினிமா தற்போது யார் கையில்?


எப்போதும் ரசிகர்கள் கையில்தான். அவர்கள் நினைத்தால் யாரும் ஹீரோ ஆகலாம். அவர்கள் யாரையும் ஜீரோ ஆக்கலாம்.

நீங்கள் யாரை நினைத்துக் கேட்கிறீர்களோ, அவர்கள் கையில் எல்லாம் தமிழ் சினிமா இல்லை. சினிமா தியேட்டர்கள் இருக்கின்றன. அவ்வளவுதான்.


கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!