Published:Updated:

மிஸ்டர் கழுகு: 1,000 கோடி ஜெகத்ரட்சகன்!

மிஸ்டர் கழுகு: 1,000 கோடி ஜெகத்ரட்சகன்!
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு: 1,000 கோடி ஜெகத்ரட்சகன்!

ரெய்டு ஷாக் பின்னணி!

ழுகார் வரும்போதே சிறகு​களுக்குள் ‘முரசொலி’யை மடித்து வைத்து எடுத்து​வந்தார்.

‘‘ஜெகத்ரட்சகன் வீட்டில் ரெய்டு என்றதும் துடித்துப்போய் அறிக்கை வெளியிட்டுவிட்டார் கருணாநிதி. அந்த அறிக்கையின் சாராம்சம் பற்றி மட்டும் சொல்கிறேன்’’ என்று ஆரம்பித்தார்.

‘‘ ‘ஜெகத்ரட்சகன் வீட்டில் சோதனை நடத்துவதாகச் சொல்லி அவரை மூன்று நாட்களாகச் சிறைக்​கைதிபோல வீட்டிலேயே அடைத்து வைத்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. சோதனை நடத்துவதைத் தவறு என்று சொல்லவில்லை. ஆனால், வருமானவரித் துறையினரின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு அரசியல் காரணங்கள் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. கைதிபோல அவரை நடத்தும் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது’ என்று அந்த அறிக்கையில் கருணாநிதி பொங்கி உள்ளார்.”

‘‘ஜெகத்ரட்சகன் என்றால் சும்மாவா? தி.மு.க தலைமையின் கஜானாவாச்சே?”

‘‘ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அலுவலகம் என 40 இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற வரு​மானவரித் துறைச் சோதனையைச் சாதாரண நடை​முறையாகத்தான் ஆரம்பத்தில் கருணா​நிதியும் பார்த்துள்ளார். ஆனால், மூன்று நாட்கள் இடைவிடாது சோதனை, கைகலப்பு என்று அடுத்தடுத்து வந்த தகவல்களால், கொதிப்படைந்தார் கருணாநிதி. அதன்பிறகே காட்டமான அறிக்கை ஒன்றை வருமானவரித் துறைக்கு எதிராக வெளியிட்டார்.”

மிஸ்டர் கழுகு: 1,000 கோடி ஜெகத்ரட்சகன்!

‘‘எதற்காக இந்தச் சோதனையாம்?”

‘‘புதுச்சேரியில் கடந்த மாதம் தனியார் மருத்துவக் கல்லூரியில் வருமானவரித் துறையின் சோதனை நடைபெற்றது. அங்கு கைப்பற்றபட்ட ஆவணம் ஒன்றில் ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரி குறித்த விவரங்களும் இருந்துள்ளன. அவற்றைக் குறித்துக்கொண்ட அதிகாரிகள் அப்போதே இவரைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்கள்.

முதற்கட்டத் தகவல்களை டெல்லிக்கு அனுப்பி அங்கு ஓ.கே வாங்கினார்கள். அதன்பின், கடந்த 15-ம் தேதி அதிகாலை வருமானவரித் துறை கூடுதல் இயக்குநர் தலைமையில் 300 அதிகாரிகள் ஒரே நேரத்தில் 40 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். ஜெகத்ரட்சகனின் சென்னை அடையாறு வீடு, தியாகராயர் நகர் வீடு, அவருக்குச் சொந்தமான அக்கார்டு ஹோட்டல், பாரத் பல்கலைக்கழகம், பாலாஜி மருத்துவக் கல்லூரி, புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரி, எலைட் மதுபான ஆலை என 40 இடங்களிலும் அதிகாரிகள் சல்லடைபோட்டு அலசத் தொடங்கினார்கள்.  வருமானவரித் துறை அதிகாரிகள் வீட்டுக்கு வந்தபோது ஜெகத்ரட்சகன், எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. வாக்கிங் போய்விட்டு ரிலாக்ஸாக சோபாவில் உட்கார்ந்து இருந்தவர், அதிகாரிகள் வந்தபின்பு எந்தப் பதற்றமும் இல்லாமல் அதே இடத்தில்தான் உட்கார்ந்து இருந்தார். ஆனால், அதிகாரிகள் நுழைந்தபோது ஜெகத்ரட்சகனின் உறவினர் தேவா என்பவர் அதிகாரிகளைத் தடுத்து, அவர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளார்.”

‘‘அப்படியா?’’

‘‘ம்! தேவாவை அதிகாரிகள் அடித்ததாகவும் சொல்லப்படுகிறது. அந்தக் கைகலப்பில் தேவாவின் கை எலும்பு முறிந்துவிட்டதாம். முதல் நாளில் கல்லூரி தொடர்பான ஆவணங்களைப் பற்றியும் அதற்கான வருமானவரித் துறைக் கணக்குகளையும் கேட்டு உள்ளார்கள். மூன்று நாட்கள் சோதனை நடந்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஆறு மணி நேரம் அதிகாரிகள் ஜெகத்ரட்சகனிடம் கேள்விகள் கேட்டுள்ளனர். ஜெகத்ரட்சகனின் குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர் அதிகாரிகள்.”

‘‘ம்!”

‘‘சில கேள்விகளுக்கு தனது ஆடிட்டரிடம் கேட்க வேண்டும் என்று பதில் சொல்லியுள்ளார் ஜெகத். இவரது அலுவலகத்தில் இருந்து ஆவணங்களை ஆய்வு செய்தபோது, இவருக்கும் நான்கு தொழில் அதிபர்களுக்கும் நடந்துள்ள பணப் பரிமாற்றம் குறித்தத் தகவல்களைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த விவரங்களை அதிகாரிகள் ஜெகத்ரட்சகனிடம் கேட்டதும், சற்றுப் பதற்றம் அடைந்துள்ளார். நால்வருக்கும், இவருடைய கல்வி நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்பு, அவர்களின் சொத்து விவரங்கள் என அனைத்தைப் பற்றியும்  கேள்விகளால் துளைத்து எடுத்துவிட்டார்கள் அதிகாரிகள். அதோடு, மருத்துவக் கல்லூரியின் அட்மிஷன் குறித்த விவரங்கள் அடங்கிய ஃபைலை எடுத்த அதிகாரிகள், அதுகுறித்தும் விரிவாக விசாரணை செய்துள்ளார்கள். ‘சோதனையின் முடிவில் 40 கிலோ தங்கம், 18 கோடி ரூபாய் ரொக்கம் ஆகியவற்றைக் கைப்பற்றி இருக்கிறோம். 450 கோடி ரூபாய்க்கான ஆவணங்களும் சிக்கியுள்ளன. இதற்கு எல்லாம் 60 நாட்களுக்குள் கணக்குத் தாக்கல் செய்யச் சொல்லி உள்ளோம். அப்படித் தாக்கல் செய்யாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று வருமானவரித் துறை அதிகாரிகள் தரப்பில் சொல்கிறார்கள். அதாவது, சொத்தின் மதிப்பு ஆயிரம் கோடியைத் தாண்டுகிறதாம். ஜெகத்ரட்சகனின் இரண்டாவது மனைவி மற்றும் மருமகள், மகள் வீடுகளில்தான் கிலோ கணக்கில் தங்க நகைகள் சிக்கியுள்ளன. லட்ச ரூபாய்க்கும் மேலான மதிப்புள்ள பட்டுச்சேலைகள் மட்டுமே 100-க்கும் மேற்பட்டவை. அதைக் கண்டு அதிகாரிகளே அதிர்ச்சி அடைந்து​விட்டார்களாம்.”

‘‘இந்த விவகாரத்தில் சிக்கிய அந்த நாலு பேரின் விவரம் என்ன?”

‘‘நான்கு தொழில் அதிபர்கள் பற்றி விவரங்களை இப்போது வெளியிட முடியாது என்று வருமானவரித் துறை உயர் அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால், அதில் ஒருவர் தி.மு.க-வின் முக்கியப் புள்ளி என்று மட்டும் சொல்கிறார்கள். அதனால்தான், ஜெகத்ரட்சகன் விவகாரத்தில் தி.மு.க மேலிடமும் கொஞ்சம் ஆடிபோய் உள்ளது என்கிறார்கள். கருணாநிதியிடம் இருந்தும் அறிக்கை வந்ததுள்ளது. மேலும், ஜெகத்ரட்சகனின் பல்வேறு தொழில்களில் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கும் பங்கு உண்டாம். எனவே, ஜெகத்ரட்சகன் வீட்டில் சோதனை செய்தால் அதை வைத்தே தி.மு.க-வுக்கு செக் வைக்கலாம் என்று பி.ஜே.பி கணக்குப் போடுகிறதாம். மருத்துவக் கல்லூரி நுழைவுத்தேர்வு விவகாரத்தில் இவர் காட்டிவரும் எதிர்ப்பும் ஒரு காரணம். இதற்கும் மேலாக தி.மு.க தலைவரின் அறிக்கைப் போரை மத்திய அரசு ரசிக்கவில்லையாம்!”

‘‘என்ன சொல்கிறாராம் ஜெகத்?”

‘‘வழக்கம்போல அவர் பஞ்சப்பாட்டு பாடுகிறார். ‘எனக்கு எதுவும் தெரியாது’ என்பதையே சொல்லி வருகிறாராம் ஜெகத்ரட்சகன். வருமானவரிச் சோதனை முடிந்த அன்றே கருணாநிதியை அவர் சந்தித்துள்ளார். தனக்காக அறிக்கை கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார். சோதனையால், இறுக்கத்தில் இருந்த ஜெகத்தை கருணாநிதி தேற்றியுள்ளார். ‘வருமானவரித் துறையினர் நான்காவது முறையாக எனது வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். 1981-ம் ஆண்டு முதன்முறையாக வருமானவரித் துறை சோதனை நடைபெற்றது. இப்போது, நான்காவது முறையாக நடைபெற்றுள்ளது. ஆனால், மூன்று நாட்கள் சோதனை என்பது இந்த முறைதான். அதுதான் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. எதற்காக இந்தச் சோதனை என்பதே தெரியவில்லை. மத்திய அரசின் தலையீடு இதில் இருக்கிறதா என்றும் தெரியவில்லை. ஆனால், மருத்துவக் கல்லுாரி நடத்துபவர்களிடம் வரிசையாகச் சோதனை நடக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. வருமானவரித் துறை செப்டம்பர் இறுதிவரை வருமானவரிக் கணக்குகளை நேர் செய்துகொள்ளலாம் என்று சொல்லியுள்ளார்கள். ஆனால், அதற்கு முன்பே என் வீட்டில் சோதனை நடத்தியதின் காரணம் தெரியவில்லை. இதைச் சட்டரீதியாகச் சந்திப்பேன். முறையாக வரி செலுத்துபவன் நான்’ என்று சொல்லி வருகிறாராம் ஜெகத்ரட்சகன்!”

‘‘ஓஹோ!”

மிஸ்டர் கழுகு: 1,000 கோடி ஜெகத்ரட்சகன்!

‘‘மருத்துவக் கல்லூரி விவகாரத்​துக்காக மட்டுமே ஜெகத்ரட்சகனுக்கு சிக்கல் வந்ததா அல்லது தி.மு.க முக்கியப் பிரமுகர்களிடம் தொடர்ச்சியாகச் சோதனை நடத்த மத்திய வருமானவரித் துறை முடிவெடுத்து​விட்டதா என்பது போகப்போகத் தெரியும்!”

‘‘டெல்லியில் நடந்த மாநிலங்களுக்கான கவுன்சில் கூட்டத்தில் என்ன நடந்ததாம்?”

‘‘இந்தக் கூட்டத்துக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. முதல்வர் ஜெயலலிதா இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார் என்று பிரதமர் மோடி எதிர்பார்த்தாராம். ஆனால், முதல்வரின் சார்பில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்துகொண்டு முதல்வரின் பேச்சை மட்டும் அங்கே வாசித்துவிட்டு அமர்ந்துவிட்டார். ஓ.பி.எஸ் அருகே மோடி வந்து ஜெயலலிதாவின் உடல்நிலையை விசாரித்துவிட்டு, தமிழகத்ததுக்கு வேண்டிய திட்டங்கள் குறித்து தனிப்பட்ட முறையில் பேசியுள்ளார். ஜெயலலிதா நேரடியாக டெல்லி போய் அந்தக் கூட்டத்தில் பேசியதுபோல செய்தி போட்டு உள்ளார்கள் தமிழ்நாட்டு நாளிதழ்கள்!”

‘‘நல்லவேளை போட்டோவை ஒட்டவைத்துப் போடவில்லையே!”

‘‘கவர்னர் ரோசய்யாவின் பதவிக்காலம் ஆகஸ்ட் மாத இறுதியோடு முடிவடைகிறது. புதிய கவர்னர் தேர்வில் மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது. வட மாநிலத்தைச் சேர்ந்த பி.ஜே.பி மூத்த நிர்வாகியை நியமிக்க டெல்லி தலைமையினர் ஈடுபட்டுள்ளனராம். அதேநேரம், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூலமும் சில பெயர்கள் அனுப்பப்பட்டுள்ளனவாம். விரைவில் யார் என்பது தெரிந்துவிடும் என்கிறார்கள்.”

‘‘தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பெயரை எப்போது அறிவிப்பார்கள்?”

‘‘ஒரு மாதமாக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவி காலியாக உள்ளது. இப்போதையச் சூழ்நிலையில் திருநாவுக்கரசரா அல்லது சுதர்சன நாச்சியப்பனா என்ற போட்டி நிலவுவதாகச் சொல்கிறார்கள்!” என்று சொல்லிவிட்டு ‘கபாலி’ மேட்டருக்கு வந்தார் கழுகார்.

“ ‘கபாலி’யின் இரண்டு லேட்டஸ்ட் படங்களை அமெரிக்காவில் உள்ள ரஜினி மகள் ஐஸ்வர்யா அவரது ட்விட்டரில் பதிந்துள்ளார். மருத்துவச் சிகிச்சை முடிந்து தற்போது அமெரிக்காவில் சச்சிதானந்த சுவாமியின் லோட்டஸ் ஆசிரமத்தில் ரஜினி தங்கியிருக்கிறார். ‘பாபா’ படம் ரிலீஸ் ஆனபோது, அதைப் பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்து சுவாமி சென்னை வந்திருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் காலமானார். அவரது உடலை விமானத்தில் அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்று இறுதிச்சடங்குகளில் கலந்துகொண்டார் ரஜினி. தற்போது, அந்த ஆசிரமத்தில் தியானப் பயிற்சிகளை ரஜினி செய்து வருகிறார். ஐஸ்வர்யாவின் மகன்கள் யாத்ரா, லிங்கா இருவரும் பாட்டி லதா ரஜினியின் பராமரிப்பில் இருந்து வருகிறார்கள். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, இளைய மகள் சௌந்தர்யா, அப்பாவைப் பார்க்க அமெரிக்கா சென்றபோது, ‘கபாலி’ படத்தின் ஃபைனல் பிரதியை எடுத்துச் சென்றாராம். அதைப் பார்த்து சந்தோஷமான ரஜினி, அங்கிருந்து போனில் சம்மந்தப்பட்ட டெக்னீஷியன்களை அழைத்துப் பாராட்டி​னாராம்.”

“ ‘கபாலி’ ரிலீஸுக்கு ரஜினி சென்னை வருவாரா?”

“இல்லை. அமெரிக்காவில் ‘கபாலி’ ரிலீஸ் ஆக உள்ள தியேட்டரில் ரஜினி படம் பார்க்க ஏற்பாடு நடந்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள ரசிகர்களின் ரியாக்‌ஷனை நேரில் பார்க்க விரும்புகிறாராம். இதேநேரத்தில், சென்னையில் உள்ள ரஜினியின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கொதிப்பில் இருக்கிறார்கள். பொதுவாக, ரஜினி படம் ரிலீஸ் ஆவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கான சினிமா டிக்கெட் ராகவேந்திரா மண்டபத்தில் விநியோகிக்கப்படுவது வழக்கம். சென்னையில் மட்டும் 5,000 மன்றங்கள் இயங்குகின்றன. ஒரு மன்றத்துக்கு அதிகபட்சம் 20 டிக்கெட் தருவார்கள். இதற்காக மன்றத்தினர் முன்கூட்டியே பணம் செலுத்தி டிக்கெட்டைப் பெற்றுச் செல்வார்கள். இந்த முறையும் அதே பாணியில் மன்றத்தினர் டிக்கெட்டுகளை எதிர்​பார்த்தனர். ஆனால், ராகவேந்திரா மண்டபத்தில் டிக்கெட் விநியோகம் மந்தமாகவே நடக்கிறது. மிகக்​குறைவான டிக்கெட்டுகளையே தியேட்டர்காரர்கள் தருகிறார்களாம்.”

“அந்த டிக்கெட்கள் எல்லாம் எங்கே போகின்றன?”

“தாம்பரம் அருகில் உள்ள தனியார் இன்ஜினீயரிங் கல்லூரி நிர்வாகம் தரப்பில் எழும்பூரில் உள்ள ஒரு தியேட்டரில் ஸ்பெஷல் காட்சி என்கிற பெயரில் டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கிவிட்டார்களாம். ஒரு டிக்கெட்டின் விலை ரூ.300 என்று சொல்லி ஐ.டி கம்பெனிகளிடம் பேரம் பேசி விற்கிறார்கள். டிக்கெட்டுடன் ஏதோ ஸ்நாக்ஸ் தருவார்களாம். நாங்கள் கேள்விப்பட்ட வரையில், ஆளும் கட்சி மேலிடத்துக்கு வேண்டப்பட்ட ஓர் இளைஞர் புதிதாக சினிமா பிஸினஸில் குதித்திருக்கிறார். அவரது பெயர் வெளியே வராமல் வேறு ஒரு பிரபல நிறுவனம் சார்பில் ‘கபாலி’ படத்தைச் சென்னையில் திரையிடப் போகிறாராம். அதன் ஒரு கட்டமாக,  ‘சினிமா டிக்கெட்டுகளை முதலில் ஐ.டி கம்பெனி​களுக்கு மொத்தமாகக் கொடுத்துவிட்டு, பிறகு ரசிகர்​களுக்குக் கொடுங்கள் என்று அந்த நபர் சொல்லிவிட்டாராம். அதனால், நாங்கள் டிக்கெட் கிடைக்காமல் அல்லாடுகிறோம்’ என்று ரசிகர் மன்ற நிர்வாகிகள் புலம்புகிறார்கள்” என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்.

 படம்: சு.குமரேசன்

மிஸ்டர் கழுகு: 1,000 கோடி ஜெகத்ரட்சகன்!

வெள்ளி... விறுவிறு!

ஜெயலலிதாவிடம் திடீர் சுறுசுறுப்பு. கடந்த வெள்ளிக்கிழமை பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். போயஸ் கார்டனில் த.மா.கா., தே.மு.தி.க-வினர் அ.தி.மு.க-வில் ஐக்கியமான நிகழ்ச்சியில் பங்கேற்றார். கோட்டையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தார். மாலையில் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவர் மனோஜ்குமார் சொந்தாலியாவின் மகன் சித்தார்த் திருமண வரவேற்பில் பங்கேற்றார். நீண்டகாலம் கழித்து ஒரே நாளில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.