
கழுகார் பதில்கள்
எஸ்.ஐ.சத்தியமூர்த்தி, கரூர்.
அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அரசியல் சலிப்பு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் கருணாநிதி மட்டும் ஆவி பறக்க அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறாரே. அவரால் மட்டும் இது எப்படி முடிகிறது?
ரஜினி, கட்சி ஆரம்பிக்கலாமா என்ற யோசனையில் இருந்தபோது பலரையும் அழைத்துப் பேசினார். அப்போது எம்.ஜி.ஆர் அ.தி.மு.க நடத்தி வந்த திருநாவுக்கரசரையும் அழைத்து ரஜினி பேசினார். ‘‘கருணாநிதி என்ன அறிக்கை வெளியிடுகிறார் என்பதை வைத்துத்தான் நாங்கள் அதை ஆதரித்தோ, எதிர்த்தோ அறிக்கை விடுவோம். நாட்டில் எந்தப் பிரச்னையுமே இல்லாமல் அமைதியாக இருந்தாலும் புதிதாக எதையோ தோண்டி எடுத்து கருணாநிதி அறிக்கைவிடுவார்” என்று திருநாவுக்கரசர் சொன்னாராம். தினந்தோறும் ஏதாவது ஒரு எதிர்வினை செய்துகொண்டே இருப்பது கருணாநிதியின் இயல்பு.

எஸ்.பூவேந்தரசு, சின்னதாராபுரம்.
முழுநேர அரசியல்வாதிகளைவிட சினிமாக்காரர்களும் பெரும் பணக்காரர்களும் சுலபத்தில் அரசியல் பதவிக்கு அதாவது, எம்.எல்.ஏ மற்றும் எம்.பி என்று சீட் பிடித்துவிடுகிறார்களே?
சினிமாக்காரர்களுக்கு பாப்புலாரிட்டி இருக்கிறது. பணக்காரர்களிடம் பணம் இருக்கிறது. இந்த இரண்டும்தான் சீட் வாங்குவதற்குத் தேவை. முன்பெல்லாம், மக்கள் செல்வாக்குப் படைத்தவர்களுக்கு சீட் தருவார்கள். இப்போது இந்தச் செல்வாக்குத்தான் அடிப்படையாக ஆகிவிட்டது.
மக்கள் செல்வாக்குப் படைத்த ஒருவருக்கு சீட் கிடைக்கவில்லை. அவர் கோபப்பட்டுத் தனது கட்சித் தலைவரைப் பார்க்கப் போனார். ‘‘எனக்கு ஏன் சீட் தரப்படவில்லை’’ என்று கேட்கவும் செய்தார். ‘‘உங்க நன்மைக்காகத்தான் சீட் தரலை. குறைந்தது 10 கோடியாவது செலவு செய்தாக வேண்டும். நீங்க கடன் வாங்கிச் செலவு செய்து மாட்டிக்கக் கூடாது. அதனால உங்களைச் சிரமப்படுத்த வேண்டாம்னுதான் சீட் தரலை’’ என்றாராம் தலைவர். ‘‘தலைவர் நம்ம மேல அக்கறையா இருக்கார்’’ என்று நினைத்துக்கொண்டு இவர் வெளியேறினாராம்.
ஆனால், அந்தச் சீட்டை இன்னொருவருக்கு 2 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டார்கள் என்பது இவருக்குத் தெரியாது. பாவம்!
தாமரை நிலவன், கீழ்க்கட்டளை.
பி.ஜே.பி-யின் கிரண்பேடி கவர்னராகவும், காங்கிரஸின் நாராயணசாமி முதல்வராகவும் இருக்கும் புதுச்சேரி அரசின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும்?
துணை நிலை ஆளுநர் பதவியில் இருக்கும் கிரண்பேடி தன்னுடைய பொறுப்பின் அதிகாரத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கும் தனக்குமான அதிகார வரம்பைப் புரிந்துகொள்ள வேண்டும். கிரண்பேடி துணை நிலை ஆளுநராக இருந்தாலும் அதையும் தாண்டிய பல்வேறு திறமைகள் அவருக்கு உண்டு. அதனை மாநிலத்தின் வளர்ச்சிக்கு நாராயணசாமி பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கிரண்பேடியை நியமித்தது பி.ஜே.பி அரசு. முதல்வராக இருக்கும் நாராயணசாமி காங்கிரஸைச் சேர்ந்தவர். கட்சி மாறுபாடு இன்றி அவர்கள் செயல்பட வேண்டும்.
த.சத்தியநாராயணன், அயன்புரம்.
மேயர் பதவி தேவையா?
சைதை துரைசாமி மறைந்து மறைந்து வாழ்வதைப் பார்த்தால் மேயர், கவுன்சிலர் இல்லாமலேயே மக்களால் நிம்மதியாக வாழ முடியும்போல.
செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.
அமைச்சர்களின் துதி... தொண்டர்களின் துதி என்ன வித்தியாசம்?
அமைச்சர்களின் துதி, பதவியைத் தக்க வைத்துக்கொள்ள. தொண்டனின் துதி, ஏதாவது பதவியைக் கைப்பற்ற. எல்லாத் துதிகளும் உள்நோக்கம் கொண்டவை.
என்.முருகேஷ், மங்கைநல்லூர்.
‘‘தற்போதையக் கவிஞர்களுக்குத் தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த புரிதல் இல்லாமல் போனதற்கு கவிஞர்கள் காரணம் இல்லை. இது சமூகத்தின் குறைபாடு’’ என்று கவிஞர் வைரமுத்து கூறுவது சரியா?
தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த புரிதல் இருக்கிறதா, இல்லையா என்பதைவிட வாழும் காலச் சமூகச் சூழ்நிலை மீது இன்றைய கவிஞர்கள் பலருக்குப் புரிதல் இருக்கிறதா எனத் தெரியவில்லை. சமூகம் சீழ்பிடித்து நாற்றம் அடித்துக்கொண்டு இருக்கும்போது பல கவிஞர்கள் புரியாத இலக்கிய யுக்திகளை பாடிக்கொண்டு இருப்பதுதான் வேதனைக்குரியது.
எஸ்.எம்.சுல்தான், மதுரை.
அன்றும் இன்றும் அரசியல் உலகில் மாறாமல் இருக்கும் விஷயம் எது?
கவியரசு கண்ணதாசன் சொன்னார்:
பேசிப் பழகிய பொய்...
வாங்கிப் பழகிய கை...
போட்டுப் பழகிய பை!
சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்.
குஷ்புவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி கிடைத்தால் தி.மு.க - காங்கிரஸ் உறவு மேலும் வலுப்படும் என்று எதிர்பார்க்கலாமா?
தி.மு.க - காங்கிரஸ் உறவு மோசமடையவும் வாய்ப்பு உள்ளது.
என்.முருகேஷ், மங்கைநல்லூர்.
‘‘தனிநபர் விரோதம், குடும்பப் பிரச்னை காரணமாக நடக்கும் கொலைகளைவைத்து சட்டம் - ஒழுங்கு சீரழிந்து வருவதாகச் சொல்வது தவறு’’ என்கிறாரே சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன்?
நோக்கம், தனிநபர் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். ஆனால், சென்னையில் சமீபத்தில் நடந்த கொலைகளில் பெரும்பாலானவை பொது இடத்தில், பட்டப்பகலில், அதுவும் கூலிப்படைகளைவைத்து நடத்தப்பட்டு உள்ளன. ராயப்பேட்டையில் நடந்த கொலையும் சுவாதி கொலையும் மட்டுமே தனி நபர்களால் செய்யப்பட்ட கொலைகள். மற்ற கொலைகள் அனைத்தும் மிகக் கொடூரமாக கூலிப்படைகளால் நடத்தப்பட்டு உள்ளன. இது சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதன் அடையாளம் அல்லவா?
பொன்விழி, அன்னூர்.
தமிழகத்தின் பொருளாதாரம் எப்படி உள்ளது?
கடனாபதி ஆகிக்கொண்டு இருக்கிறது தமிழ்நாடு.
கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!