
மனம் திறக்கும் பழ.கருப்பையா!சந்திப்பு

‘ரோமாபுரி பாண்டியன்’ நாடக நிறைவு விழாவில், “நான் மனதார தி.மு.க-வில் ஏற்கெனவே இணைந்து விட்டேன்” என்று பேசிய அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ பழ.கருப்பையா, அறிவாலயத்தில் தான் எழுதிய ‘மகாபாரதம்’ புத்தகத்தை கலைஞருக்கு வழங்கி, “மனதாலும் உடலாலும் வாக்காலும் நான் தி.மு.க-வில் இணைந்து விட்டேன்” என்று அறிவித்தார். தி.மு.க-வில் இரண்டாவது முறையாக இணைந்தது குறித்து கருப்பையாவைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.
‘‘மீண்டும் தி.மு.க-வில் இணைந்ததற்குக் காரணம் என்ன?’’
‘‘ஜெயலலிதா திராவிட இயக்கத்துக்குள் ஊடுருவியது, திராவிட இயக்கத்தின் வலிமையைக் கூட்டியது என்று நான் நினைத்தேன். ஆனால், திராவிட இயக்கத்தில் ஊடுருவிய ஜெயலலிதா அதைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தாரே தவிர, அதற்குப் பயன்பட்டவர் இல்லை. திராவிட இயக்கத்தை நீர்த்துப்போகும்படி செய்வதுதான் ஜெயலலிதாவின் கொள்கையாக இருந்தது. இதுவும் திராவிட இயக்கம் என்று கருதிதான் அ.திமு.க-வில் நுழைந்தேனே தவிர, அது பெயருக்குத்தான் திராவிட இயக்கம் என்பதை உணர்ந்திருக்கவில்லை. உள்ளே நுழைந்த பிறகுதான் படிப்படியாக ஜெயலலிதாவின் உண்மை நிறம் தெரியவந்தது. ஜெயலலிதாவுக்கும் என்னைப் பற்றி தெரியவில்லை என்பதுதான் என்னை அவர் உள்ளேவிட்டதன் காரணம். அது தெரியவந்ததும் என்னை ஒதுக்கிவைத்தார். இப்போது நாங்கள் இருவருமே விடுதலை பெற்றுவிட்டோம். அ.தி.மு.க-வில் இருந்தபோதே கலைஞரைப் பற்றிய என்னுடைய எண்ணங்கள் மென்மைப் பட்டுவிட்டன. நிழலின் அருமை வெயிலிலேதான் தெரியும். கலைஞர் மீது எனக்கு மதிப்பு உயர்வதற்கு ஜெயலலிதா காரணமாக இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.’’

‘‘அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற அடிப்படைக் காரணம் என்ன?’’
‘‘ஜெயலலிதாவின் சாதனை என்பது அந்தக் கட்சியின் அத்தனை மனிதர்களையும் ஊழலைக் கற்றுக்கொள்ளச் செய்வது. அதைச் செய்வதற்கு ஜெயலலிதா ஒரு கருவியாகச் செயல்படுகிறார். அவர் ஒரு வேட்டுவ பெண்போல இருந்து, மந்திரிகளை வேட்டை விலங்குகளைப்போல பழக்கி வைத்திருக்கிறார். அவை முயலை அடித்துத் தாமே தின்றுவிடாமல், தனது எசமானி யான வேட்டுவ பெண்ணின் காலடியில் கொண்டு வந்து போட வேண்டும். அவர் பார்த்து சந்துகறி, பொந்துகறியை அவற்றுக்கு வழங்குவார். புரிவதற்காக இதை உவமையாகச் சொல்கிறேன். மையப்படுத்தப் பட்ட ஊழல், ஜெயலலிதாவால்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கொள்ளையடித்ததைத் தேர்தலில் வாரி, விசிறி அடித்து மீண்டும் ஆட்சிக்கு வருவதில் கைதேர்ந்தவர் ஜெயலலிதா.’’
‘‘பெருந்தலைவர் காமராஜரை தலைவராக ஏற்றுக்கொண்ட உங்களுக்கு, இப்போது ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளும் மனநிலை எப்படி வந்தது?’’
‘‘ஜெயலலிதாவையே தலைவராக ஏற்றுக்கொண்டு 10 ஆண்டுகள் அரசியல் நடத்திய பிறகு ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்வது குறைவானது அல்ல... கூடுதலானதுதான். காமராஜரை தலைவராக ஏற்றுக்கொண்ட நீங்கள், ஜெயலலிதாவை எப்படித் தலைவராக ஏற்றுக்கொண்டீர்கள் என்று 10 ஆண்டுகளுக்கு முன்பு கேட்டிருக்கவேண்டும். காமராஜர் நாட்டு விடுதலைக்காகப் பேசியவர். கலைஞர் இனவிடுதலைக்காகப் பேசியவர். கலைஞரின் வழித்தடத்தில் மாறாமல் செயல்படும் ஸ்டாலினுடன் பழகும்போதே நாம் சேர்ந்து செயல்படுகிறோம் என்கிற எண்ணம் எனக்கு ஏற்படுகிறது.’’

‘‘ ‘கருணாநிதி என்ன கடவுளா?’ என்று புத்தகம் எழுதிய நீங்கள் கருணாநிதியை எப்படிப் பின்பற்றப் போகிறீர்கள்?’’
‘‘நான் ஏற்கெனவே கலைஞரைப் பின்பற்றியவன் தான். கலைஞரும், கழகமும் எனக்குப் புதிதல்ல. அவரிடம் நான் மனங்கலந்து பழகி உருகிஉருகிப் பின்பற்றியவன். தகுதி வாய்ந்த மனிதர்களிடம்தான் நமக்கு கோபம் ஏற்படும். இவரால்தான் செய்ய முடியும் என்று நாம் நம்புகிற ஒருவரிடம் சிறிது தளர்ச்சி காணப்பட்டாலும், அது பெரும் கோபமாக வடிவுபெறும். கலைஞரின் காலத்தில் ஈழவிடுதலை தவறிப்போய்விட்டது. அதற்கான பழி முழுவதையும் கலைஞர் சுமக்க நேரிட்டது. அவர் மீது கல்லெறிந்தவர் களில் நானும் ஒருவனாகிவிட்டேன். இன்று, இந்துத்துவா தலைதூக்கும் நிலையில் அதனை எதிர்கொள்ள கலைஞரை விட்டால் வேறு தலைமை இல்லை!”
- அ.சையது அபுதாஹிர்
படங்கள்: மீ.நிவேதன், தே.அசோக்குமார்