Published:Updated:

மிஸ்டர் கழுகு: ‘கபாலி’ சந்தோஷமும்... கல்யாண சிக்கலும்!

மிஸ்டர் கழுகு: ‘கபாலி’ சந்தோஷமும்... கல்யாண சிக்கலும்!
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு: ‘கபாலி’ சந்தோஷமும்... கல்யாண சிக்கலும்!

மிஸ்டர் கழுகு: ‘கபாலி’ சந்தோஷமும்... கல்யாண சிக்கலும்!

மிஸ்டர் கழுகு: ‘கபாலி’ சந்தோஷமும்... கல்யாண சிக்கலும்!

கார்டன் வட்டாரத்தில் இருந்து வந்து இறங்கிய கழுகார், ‘‘கல்யாணச் செய்தியில் ஆரம்பித்துக் ‘கபாலி’யில் முடிக்கிறேன்... இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறது’’ என்று கொக்கிப்போட்டு ஆரம்பித்தார்.

‘‘சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் -  இளவரசி தம்பதியரின் மகன் விவேக்கின் திருமணம், ஆகஸ்ட் 29-ம் தேதி வானகரத்தில் உள்ள ஒரு பிரமாண்டமான கல்யாண மண்டபத்தில் நடக்க இருக்கிறது. ‘ஆகஸ்ட் இறுதிக்குள் திருமணம் செய்துவிட வேண்டும்’ என ஜோதிடர்கள் கணித்துவிட்டதால், பெண் பார்க்கும் படலத்தில் தீவிரமாக இறங்கினார் சசிகலாவின் தம்பி திவாகரன். பெண்ணின் பெயர் கீர்த்தனா. குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி. மணமகளுக்குப் பூர்வீகம் தஞ்சாவூர் மாவட்டம். தந்தை பாஸ்கர், அண்ணா நகரில் ‘ஜெயம்’ என்ற பெயரில் பர்னிச்சர் ஷோரூம் நடத்தி வருகிறார். ‘தன் மகனின் திருமணத்தில் முதல்வர் பங்கேற்பார்’ என நம்பிக்கொண்டிருந்தார் இளவரசி. இந்த நிலையில், ‘இந்தத் திருமணத்தில் முதல்வர் பங்கேற்பதற்கு வாய்ப்பில்லை’ என்பது உறுதியாகிவிட்டதால், மிகுந்த மனக்கஷ்டத்தில் இருக்கிறார் இளவரசி என்கின்றனர் உள்விவகாரங்களை அறிந்தவர்கள்.’’

‘‘ஏனாம்?”

‘‘சம்பந்தம் செய்துகொள்ளும் இடத்தைப் பற்றிக் கிடைத்தத் தகவல்களால் அதிர்ந்துபோய் இருக்கிறார் இளவரசி. சம்பந்தி வீட்டில் உள்ள முக்கியப் பிரமுகர், ஆந்திர மாநில போலீஸாரின் வாண்டட் லிஸ்ட்டில் உள்ளவர். ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னையில் பிடிபட்ட 48 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டை கடத்தல் விவகாரத்தில் முக்கியப் பங்கு வகித்தவர். மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் இருக்கிறார். இவருடன் சேர்ந்து கே.வெங்கடேஷ், பாலா மற்றும் ராமநாதன் ஆகியோரும் மரக் கடத்தலில் தொடர்பு உடையவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. எனவே, திருமணத்தைத் தள்ளிப் போடலாம் என்ற பேச்சு வந்தபோது, ‘நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டது. எனக்குத் திருமணம் என்று ஒன்று நடந்தால், அந்தப் பெண்ணோடு மட்டும்தான்’ என உறுதியாகக் கூறிவிட்டார் விவேக். மகனின் வார்த்தையை மீறாமல் இளவரசியும் சம்மதித்துவிட்டார். திருமணத்தில் பங்கேற்றாலே தேவையற்ற சர்ச்சைகள் கிளம்பும் என்பதால், முதல்வர் மறுப்புத் தெரிவித்து விட்டாராம். அவரைச் சமாதானப்படுத்தும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்கின்றனர்.’’

மிஸ்டர் கழுகு: ‘கபாலி’ சந்தோஷமும்... கல்யாண சிக்கலும்!

‘‘ஓஹோ.’’

‘‘விவேக்கை, ‘கார்டனின் செல்லப்பிள்ளை’ என்றுதான் அழைக்கிறார்கள்.  இதுவரை சசிகலா, இளவரசி இருவரும் கார்டனைவிட்டுப் பலமுறை வெளியேறி இருக்கிறார்கள். மீண்டும் சேர்ந்து இருக்கிறார்கள். ஆனால், எப்போதும்போல் கார்டனில் வலம்வருபவர் விவேக். தன்னுடைய காரை தனது டிரைவர்களைத் தவிர, வேறொருவர் ஓட்ட அனுமதியளித்திருக்கிறார் என்றால் அது விவேக் மட்டுமே. அப்படிப்பட்ட விவேக், திருமணம் சர்ச்சைக்குரியதாக மாறி இருப்பது இளவரசிக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. செப்டம்பர் 2-ம் தேதி தஞ்சாவூர் மஹாராஜா திருமண மஹாலில் வரவேற்புக்கு ஏற்பாடும் நடக்கிறது. முதல்வர் வருகை குறித்து சந்தேகம் கிளப்புபவர்கள், ‘சசிகலா குடும்பத் திருமணத்தில் கலந்துகொண்டு, அந்தக் குடும்பத்தோடு மீண்டும் ஐக்கியம் காட்ட வேண்டாம் என்று முதல்வர் விரும்புகிறார்’ என்றும் சொல்கிறார்கள்!’’

‘‘ ‘கபாலி’ பரபரப்பிலும் விவேக் பெயர் அடிபடுகிறதே?”

‘‘ஆமாம். அதையும் சொல்கிறேன். ஒரு திரைப்படத்தை ரிலீஸ் செய்யும் போது, தயாரிப்பாளருக்கும் தியேட்டர் அதிபர்களுக்கும் இடையில் போடப்படும் ஒப்பந்தப்படி முதல் வாரத்தில் வரும் கலெக்‌ஷனில், பாதிக்குப் பாதி. அதாவது, தயாரிப்பாளர் பாதித்தொகையையும், தியேட்டர் அதிபர் பாதித்தொகையையும் எடுத்துக் கொள்வார்கள். அதன்பிறகு, தியேட்டர் அதிபர்கள் 60 சதவிகிதத் தொகையையும், தயாரிப்பாளர் தரப்பு 40 சதவிகிதத் தொகையையும் பிரித்துக்கொள்வார்கள்.

ஆனால், ‘கபாலி’ திரைப்படத்தைப் பொறுத்தவரை, 80 சதவிகித வசூலை தனக்குக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள 20 சதவிகிதத்தைத் தியேட்டர் அதிபர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லிவிடுகிறார்களாம். தனக்கு தியேட்டர் நிர்ணயக் கட்டண விலையில், 500 டிக்கெட்களும் தரவேண்டும் என்றும் நிர்பந்தம் செய்ததாகத் தெரிகிறது. இதற்கு சென்னையில் உள்ள பல தியேட்டர் அதிபர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டால், கரன்ட் பில்கூட கட்ட முடியாது என்பது தியேட்டர் அதிபர்களின் வாதம்.

ஆனால், படத்தின் விளம்பர வருமானம், தியேட்டரில் நடக்கும் உணவுப்பொருள் வியாபாரம், படம் வெளியாகும் அன்று அதிகமாக இருக்கும். அதில், தியேட்டர் அதிபர்கள் அதிக லாபம் எடுப்பார்கள். அதனால், இது பாதிப்பை ஏற்படுத்தாது என்பது தயாரிப்பு தரப்பு வாதம். இது தொடர்பான பேச்சுவார்த்தை 21-ம் தேதிவரை இழுத்துக்கொண்டிருந்தது. அதனால், கடந்த முறை ‘தெறி’ திரைப்படம் செங்கல்பட்டு ஏரியாவில் வெளியாகாமல் போனதைப்போல், ‘கபாலி’ திரைப்படத்துக்கும் சிக்கல் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.’’

மிஸ்டர் கழுகு: ‘கபாலி’ சந்தோஷமும்... கல்யாண சிக்கலும்!

‘‘ம்?’’

‘‘ ‘கபாலி’ திரைப்படத்தை திரையிடுவதில், வெற்றி பெற வைப்பதில் மும்முரமாக இருப்பவர்  ஜாஸ் சினிமாஸ் உரிமையாளரான விவேக்.  இந்த முறை டிக்கெட் விற்பனை எல்லாம் ரசிகர்களுக்கு இல்லை. மாறாக விவேக்  கைகாட்டிய ஐ.டி நிறுவனங்களுக்குப் போகின்றன. மேலும், விவேக் சொன்னபடிதான் இப்படித் தியேட்டர் அதிபர்களிடம் விடாப்பிடியாகப் பேரம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.’’

‘‘ஆனால், டிக்கெட் புக்கிங், படம் வெளியாவதற்கு 4 நாட்களுக்கு முன்பே தொடங்கி விட்டதே?’’

‘‘எந்தத் தியேட்டரிலும் ரசிகர்கள், பொதுமக்களுக்கு புக்கிங் நடக்கவில்லை. பொதுமக்கள் ஆன்-லைனில் புக் செய்தனர். ஆனால், வெறும் 5 நிமிடங்களில் புக்கிங் முடிந்து விட்டதாக, ஆன்-லைன் காட்டியது. ஒப்புக்கு ஆன்-லைனில், 10 முதல் 20 டிக்கெட்களை திறந்துவிட்டுவிட்டு, மற்ற டிக்கெட்களை தியேட்டர் அதிபர்களே பிளாக் செய்துவிட்டனர். அரசு நிர்ணயித்த 100 ரூபாய், 120 ரூபாய் என்பதெல்லாம் காற்றில் பறந்தன. குறைந்தபட்ச டிக்கெட் விலையே 500 ரூபாய். அதிகபட்சமாக 1,500 ரூபாய் வரை விற்கப்பட்டது. அதுபோக, தியேட்டர்காரர்களே, பிளாக்கில் 5 ஆயிரம் ரூபாய்வரை டிக்கெட் விற்கத் திட்டம் போட்டு வைத்திருந்தனர்’’ என்ற கழுகார் வேறு மேட்டருக்குத் தாவினார்.

‘‘ஒரத்தநாடு தொகுதியில் தோல்வியைத் தழுவினார் வைத்திலிங்கம். அதைத்தொடர்ந்து வேளாண்மைத் துறை அமைச்சராக துரைக்கண்ணு நியமிக்கப்பட்டார். வைத்திலிங்கத்துக்கு எம்.பி பதவி கிடைக்கும் வரை அமைதியாக இருந்த அவரது ஆதரவாளர்கள், இப்போது மீண்டும் விளம்பர யுத்தம் நடத்தத் தொடங்கியிருக்கிறார்கள். பெயருக்குத்தான் துரைக்கண்ணு அமைச்சர். ஆனால், அவரால் தஞ்சாவூரில் இருக்கும் பயணியர் விடுதிக்குக்கூட வரமுடியாமல் பாபநாசம் பயணியர் விடுதியிலேயே இருக்கிறார். விவசாயக் கடன்களை ரத்து செய்தார் முதல்வர். அதற்கான நன்றி அறிவிப்புக் கூட்டத்தைக்கூட அவரால் நடத்த முடியவில்லை. காரணம், வைத்திலிங்கம்தான் என்கிறார்கள். கட்சி நிகழ்ச்சிகளுக்குச் செய்யப்படும் விளம்பரங்களில் வைத்திலிங்கம் பெயரை முதலில் போட்டு, அடுத்துத்தான் அமைச்சர் பெயரைப் போடுகிறார்கள். தேர்தல் முடிவு வரை சசி தரப்போடு முட்டிக்கொண்டிருந்த வைத்திலிங்கம் தேர்தல் தோல்விக்குப்பிறகு திவாகரனிடம் சரண்டராகியிருக்கிறார். அதன்பிறகுதான் துரைக்கண்ணுவை இவர் ஓரங்கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறார் என்கிறார்கள். கல்யாணம் முதல் ‘கபாலி’ வரை மன்னார்குடி ஆட்சிதான் நடக்கிறது’’ என்றபடி பறந்தார்.

‘கபாலி’... கட்டளை!

சென்னையில் உள்ள முக்கிய ஐ.டி கம்பெனிகளுக்கு கடந்த வாரம் ஒரு போன் கால். அதில், ஓர் அன்புக்கட்டளை. “ ‘கபாலி’ படம் ரிலீஸாகும் அன்று உங்கள் கம்பெனிக்கு விடுமுறை விட்டுவிடுங்கள். உங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் ‘கபாலி’ படம் டிக்கெட்டை வழங்கிவிடுங்கள்” என்று மொத்தமாக டிக்கெட்டைத் திணித்து, பெரும் பணத்தை வசூலித்துள்ளார்கள். அதேபோல் வேளச்சேரியில் ஒரு தியேட்டரில் போலீஸ் அதிகாரி ஒருவர், ‘கபாலி’ டிக்கெட்டைப் பணத்துக்குக் கேட்டுள்ளார். ‘டிக்கெட் இல்லை’ என்று கூற, போலீஸுக்கே டிக்கெட் இல்லையா என்று அவர் மிரட்ட, அவருக்கும் அந்த மேலிடத்தில் இருந்தே போன் கால் வர, ஆடிப்போய்விட்டாராம் அந்த அதிகாரி. 

நானே வாதி... நானே நீதிபதி!

தமிழக அரசின் சி.எம்.டி.ஏ செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், உறுப்பினர் - செயலர் பதவியிலும் இருக்கிறார். கூடுதலாக, சி.எம்.டி.ஏ-வின் துணைத் தலைவர் பதவியும் வகிக்கிறார். இந்த மூன்று பொறுப்புகளிலும் இவரே அதிகாரியாக இருக்கிறார். சென்னையில் விதிமுறையை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு அதிகாரம் செய்து வருகிறாராம். ‘நானே வாதி... நானே நீதிபதி’ என்ற கணக்கில் இவருடைய செயல்பாடு இருக்கிறதாம்.

சூரிய சக்தி நிலமோசடி!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சூரிய மின்சக்தி தயாரிக்கும் யூனிட்களை அமைக்க உள்ளூரில் இருக்கும் புரோக்கர்கள் போலி ஆவணங்களைத் தயார் செய்து ஒரே நிலத்தைப் பலருக்கு விற்பனை செய்து வருகிறார்களாம். சேரன்மாதேவியில் ஆதிதிராவிடர்களுக்கான அரசு நிலத்தையும் போலியாக ஆவணங்கள் தயார் செய்து விற்றுவிட்டனர். சமீபத்தில், இந்தக் கும்பலை காவல் துறை கைதுசெய்துள்ளது. அப்படிச் சிக்கியவர்கள் அடுத்த சில நாட்களில் வெளியே வந்து மீண்டும் நிலமோசடியில் இறங்கிவிடுவதும் வாடிக்கையாக இருக்கிறது. கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறது காவல் துறை.