Published:Updated:

உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிரடி ஆக்‌ஷன் பிளான்கள்...

உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிரடி ஆக்‌ஷன் பிளான்கள்...
பிரீமியம் ஸ்டோரி
News
உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிரடி ஆக்‌ஷன் பிளான்கள்...

அ.தி.மு.க. - தி.மு.க. முகாம்களில் தீவிரம்!அலசல்

மிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் ஜுரம் அரசியல் கட்சிகளைத் தொற்றிக்கொள்ள ஆரம்பித்துள்ளது. இதில், பெரிய கட்சிகளான அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வின் முகாம்களில்தான், தேர்தலுக்கான அதிரடி ஆக்‌ஷன் பிளான்களுக்கான விவாதங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.

‘சாதாரணமாக கட்சிக்குவந்த யார் யாரையோ எல்லாம் எம்.எல்.ஏ ஆக்கினேன். மாவட்டச் செயலாளர் ஆக்கினேன். அவர்களில் சிலரை அமைச்சர்களாகவும் ஆக்கினேன். ஆனால், அவங்க யாருக்கும் நன்றி விசுவாசமே இல்லை. இங்கே சம்பாதிச்சுட்டு தி.மு.க-வுக்கு வேலை பார்த்திருக்காங்க. என் உடல் நிலை இருக்கும் சூழலில் சட்டசபைத் தேர்தலுக்காக எவ்வளவு பாடுபட்டேன். நான்பட்ட கஷ்டம் உங்க யாருக்கும் தெரியலை. எனக்கு இது எல்லாம் தேவையா? சட்டமன்றத்துல அவங்க 89 பேர் எதிர்ல உட்கார்ந்துட்டுச் சிரிக்கிறாங்க. இதெல்லாம் ஒரு வெற்றியா... இதை வெற்றி என்று சொல்லி என்னால் சந்தோஷப்பட முடியலை’ – இது கடந்த ஜூன் 18-ம் தேதி நடந்த அ.தி.மு.க-வின் செயற்குழு கூட்டத்தில் வருத்தம், கோபம் எல்லாம் கலந்து ஜெயலலிதா கொட்டிய வார்த்தைகள்.

உள்ளாட்சித் தேர்தலிலும் இதே நிலை வந்துவிடக் கூடாது என்று ஜெயலலிதா நினைக்கிறார். அதனால்தான் தற்போது, உள்ளாட்சித் தேர்தல் விஷயத்தில் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு அக்கறையும் ஆர்வமும் காட்ட ஆரம்பித்துவிட்டார். போயஸ் கார்டன் வட்டாரத்தில் நெருக்கமாக உள்ள சிலரிடம் பேசினோம். “உள்ளாட்சித் தேர்தலை அம்மா கௌரவப் பிரச்னையாக நினைக்கிறாங்க. சமீபத்தில், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியை அழைத்துப் பேசினாங்க. அப்போது, ‘தமிழ்நாடு முழுக்க செயல்படுத்தப்படாமல், பாதியில் நிற்கும் திட்டங்களை எல்லாம் விரைந்து முடிக்க வேண்டும். அதற்கான வேலைகளில் உடனடியாக இறங்குங்க. நகராட்சி, பேரூராட்சி ஆணையாளர் களிடம் பேசி அந்த ஊர்களுக்கான உடனடித் தேவை என்ன என்பதைக் கேட்டு, அதைச் செய்து கொடுங்க.

உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிரடி ஆக்‌ஷன் பிளான்கள்...

அதேபோல, கடந்த ஐந்து வருடங்களில் நம்ம கட்சியில் தலைவர்களாகவும், கவுன்சிலர் களாகவும் இருந்து மக்களிடம் அதிருப்தியை மட்டுமே சம்பாதித்து வைத்திருப்பவர்கள் நிறைய பேர் இருப்பாங்க. அவர்கள் லிஸ்ட் எனக்கு வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்புக் கொடுத்துவிடக் கூடாது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றின் தலைவர்களாக யாரை நிறுத்துவது என்று மாவட்டச்செயலாளர்களிடம் ஒரு லிஸ்ட் வாங்கணும். தேவைப்பட்டால், அவர்கள் கொடுக்கும் லிஸ்டை வைத்து நானே நேர்காணல் நடத்துறேன். 12 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள் இருக்குது. அதிகபட்சமாக 10 நாட்களில் நேர்காணல் முடிச்சிடலாம். இது சம்பந்தமாக எப்போது வேண்டுமானாலும் நீங்கள் என்னிடம் பேசலாம்’ என்று சொல்லி இருக்கிறார். அதேபோல இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் இருக்கும் உறுப்பினர்களைக் களமிறக்கி ஒவ்வோர் ஊரின் தேவைகள் என்ன… அங்கே யாருக்குச் செல்வாக்கு இருக்கிறது… யாரை நிறுத்தினால் ஜெயிக்க முடியும் எனவும் விசாரிக்கச் சொல்லியிருக்கிறார். தமிழகம் முழுக்க உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களையும் உள்ளாட்சித் தேர்தலுக்குப் பயன்படுத்தத் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. எந்த இடத்திலும் சறுக்கிவிடக் கூடாது என்பதில் அம்மா ரொம்பவும் தெளிவாக இருக்காங்க…’’ என்றனர்.

தி.மு.க வட்டாரத்திலும் உள்ளாட்சித் தேர்தல் ஜுரம் அடிக்க ஆரம்பித்திருக்கிறது. சில மாவட்டச் செயலாளர்களை மட்டும் அழைத்து கோபாலபுரத்தில் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறார் தி.மு.க தலைவர் கருணாநிதி. திண்டுக்கல் ஐ.பெரியசாமி, பொன்முடி, துரைமுருகன் உள்ளிட்ட சிலர் அப்போது உடன் இருந்துள்ளனர். ‘‘சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்கள் ஒதுக்கியதுதான் நம் தோல்விக்குக் காரணம் என்று எல்லோரும் சொல்கிறார்கள். அது ஓரளவுக்கு உண்மைதான். உள்ளாட்சியிலும் அதே தவறுகளைச் செய்துவிடக்கூடாது. உள்ளாட்சியில் கூட்டணிக் கட்சிகளுக்கு எப்படி இடம் ஒதுக்கலாம்… தலைவர் பதவி என்றால், அது கவுன்சிலர்கள் சேர்ந்து தேர்தெடுக்கும் பதவியாகிவிட்டது. அங்கே ஒரு கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கினால் மற்ற கவுன்சிலர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிப்பார்களா? இப்படிப் பல கேள்விகள் உள்ளன. எல்லாவற்றையும் நாம் பேசி முடிவு செய்ய வேண்டும்’’ என்று ஸ்டாலின் சொன்னதாகச் சொல்கிறார்கள்.

அதற்கு துரைமுருகன், பொன்முடி ஆகியோர் சில கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டாராம். விரைவில் மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் நடத்தத் திட்ட  மிட்டுள்ளனர். அந்தக் கூட்டத்தில் இதுபற்றிய முடிவுகளை அறிவிப்பார்களாம்.

மக்கள் நலக் கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா என்பது விஜயகாந்த்துக்குத் தெரியவில்லை. ஆனால், ‘கூட்டணியில் இருக்கிறோம்’ என்கிறார் பிரேமலதா. குழப்பத்தில் இருந்து விஜயகாந்த் இன்னும் வெளியே வரவில்லை. தனித்துப் போட்டியிட்டால், சில இடங்களில் கவுன்சிலர்கள் மட்டும் ஜெயிப்பார்கள். மற்றபடி எங்கேயும் நகராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்ற முடியது என்பதை விஜயகாந்த் உணராமல் இல்லை. அதனால்தான் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகுவது தொடர்பாக கட்சியின் பொருளாளர் இளங்கோவன் அறிவிப்பு வெளியிட்டபோது, ‘‘தேவைப்பட்டால் எங்கள் தலைமையில் கூட்டணி அமையும்’’ என்று சொன்னார். தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளைக் கூட்டணியில் இணைத்துக்கொண்டு தேர்தலைச் சந்திக்க விஜயகாந்த் நினைப்பதாகச் சொல்கிறார்கள். அதே நேரத்தில், தே.மு.தி.க நிர்வாகிகளோ, ‘போன தேர்தலுக்குச் செலவு செஞ்ச பணத்துக்கே இன்னும் வழியைக் காணோம். இதுல எங்கே மறுபடியும் நிற்கிறது. கட்சியில இருந்து பணத்தை முதல்ல கொடுக்கட்டும். அப்புறம்தான் நிற்கிறதைப் பத்தி யோசிக்கவே முடியும். செலவு பண்ணுங்க பார்த்துக்கலாம்னு சொல்லிட்டு கடைசியில காலை வாரிடுறாங்க…’ என்று எச்சரிக்கையோடு பேசிக்கொள்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில், ‘‘பி.ஜே.பி-யைக் கூட்டணிக்கு அழைக்கலாமா’’ என விஜயகாந்த் திடம் சுதீஷ் பேசியதாகச் சொல்கிறார்கள். அதற்கு விஜயகாந்த், ‘‘சட்டமன்றத் தேர்தலில் நம்மோடு கூட்டணி வைக்க அவங்க ரொம்பவும் முயற்சி செஞ்சாங்க. ஆனா நாம்தான் பிடி கொடுக்கலை. இப்போ போய் அவங்ககிட்ட நின்னா சரியா வருமா?’’ என்று கேட்டாராம். ‘‘தி.மு.க-வினர் நம் மீது கடுமையான கோபத்தில் இருக்காங்க. அதனால, இப்போ நமக்கு இருக்கும் ஒரே சாய்ஸ் பி.ஜே.பி-தான். நான் பேசிப்பார்க்கிறேன்’’ என சுதீஷ் சொல்ல... விஜயகாந்த்தும் தலையாட்டி இருப்பதாகச் சொல்கிறார்கள் தே.மு.தி.க-வைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள். முடிவு செய்ய வேண்டிய இடத்தில் இருக்கிறது பி.ஜே.பி.

உள்ளாட்சித் தேர்தலிலும் தி.மு.க-வுடன் கூட்டணியைத் தொடர்கிறது காங்கிரஸ். ஆனாலும், சட்டமன்றத் தேர்தலில் ஒதுக்கிய அளவுக்கு சீட்களை தி.மு.க இப்போது காங்கிரஸ் கட்சிக்குத் தரப்போவது இல்லை. காங்கிரஸும் அதற்குக் கவலைப்படப் போவதில்லை என்றே தெரிகிறது. கோவை அல்லது திருச்சி மேயர் வேட்பாளர் பதவிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் காங்கிரஸ் தரப்பில் இருந்து தி.மு.க-வுக்கு வைக்கப்பட்டு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

மக்கள் நலக் கூட்டணியைப் பொறுத்தவரை அதில் உள்ள நான்கு கட்சிகள் மட்டும் ஒன்று சேர்ந்துத் தேர்தலைச் சந்திப்பார்கள். அதற்கான பேச்சுவார்த்தையைக் கடந்த 19-ம் தேதி தொடங்கிவிட்டார்கள். தங்கள் அணிக்கு விஜயகாந்த்தையும் ஜி.கே.வாசனையும் அழைத்து வரும் திட்டம் இவர்களுக்கு இருக்கிறது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான உள்ஜுரம் ரொம்பவே சூடாகத்தான் இருக்கிறது. ஆனால், மக்கள் இன்னும் அதைப் பற்றி எல்லாம் தீவிரமாகச் சிந்திப்பதாகத் தெரியவில்லை!

- வித்யாகுமார்