Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

இலுப்பைதோப்பு வாத்தியார், நெய்விளக்கு.

‘‘நடந்து முடிந்த தேர்தலால் ம.தி.மு.க-வுக்கு எந்தவிதச் சேதாரமும் இல்லை’’ என்கிறாரே வைகோ?


அவர் சொல்வது உண்மைதானே! முந்தைய சட்டமன்றத்தில் 30 எம்.எல்.ஏ-க்கள் இருந்து இந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெற முடியாமல் போயிருந்தால் அது நிச்சயம் தோல்வி,சேதாரம்,இழப்பு.
கடந்த தேர்தலில் போட்டியிடவே இல்லை.

புறக்கணிப்புச் செய்தாகிவிட்டது. இந்தத் தேர்தலில் யாரும் வெற்றி பெறவில்லை. அதனால் சேதாரம் இல்லை. அவர் சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

த.சத்தியநாராயணன், அயன்புரம்.

‘‘உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடக்காது’’ என்கிறாரே பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்?


மத்தியத் தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே எத்தகைய ஒழுங்கீனங்கள் நடந்தன என்பதைப் பட்டவர்த்தனமாகப் பார்த்தோம். அதன் சாட்சிகள்தான் தஞ்சாவூரும் அரவக்குறிச்சியும். அப்படி இருக்கும்போது மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தல் எப்படி நடக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

கழுகார் பதில்கள்!

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

அரசியல்வாதிகளுக்கு எதில் மோகம் அதிகமாக இருக்கும்?


பணம், பதவி, புகழ்... ஆகிய மூன்றும் அரசியல்வாதிகளுக்கு ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பது நன்றாகத் தெரிந்துதான் அரசியலில் இறங்குகிறார்கள். அதனால் மோகம் எதிலும் குறையாது.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘‘பிரதமர் மோடி தலைமையில் நடந்த மாநில முதல்வர்களுக்கான கவுன்சில் கூட்டத்தில் ஜெயலலிதா பங்கேற்காதது வேதனை தருகிறது’’ என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறி உள்ளாரே?


கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ளும் அளவுக்கு உடல்நிலை இடம் தரவில்லை. அதனால்தான் முதல்வர் செல்லவில்லை. கடந்த வாரம் மட்டும் இரண்டு நாட்கள் தலைமைச் செயலகத்துக்குச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்துவிட்டு, போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்ட பிறகும் திடீரென ரத்து செய்து விட்டார்கள். இந்தக் காரணங்கள் வெங்கய்யா நாயுடுவுக்குத் தெரியுமா?

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

தொடர்ந்து அதிகரித்துவரும் குற்றச்செயல்களை ஓர் அரசால் மட்டுமே தடுத்துவிட முடியுமா?


அதிகாரம், போலீஸ், சட்டம் ஆகிய மூன்றையும் கையில் வைத்துள்ளது அரசுதான். அதனால்தான் குற்றச்செயல்களைத் தடுக்கமுடியும்... தடுக்கவேண்டும். அரசுக்குத்தான் அதற்கான கடமையும் இருக்கிறது... பொறுப்பும் இருக்கிறது.

அதிகாரம், போலீஸ், சட்டம் ஆகிய மூன்றுமே எதற்கும் அடிபணியாது என்ற நம்பிக்கை விதைக்கப்பட்டால்தான் குற்றங்கள் குறையும். இந்த மூன்றின் மூலமாகவும் எளிதில் தப்பி வந்துவிடலாம் என்ற சூழ்நிலை உருவானதுதான் குற்றங்கள் அதிகமானதற்கான அடிப்படைக் காரணம்.

ஜி.மைதிலி கோகுலகிருஷ்ணன், திருவாரூர்.


‘‘இளைஞர்கள் கருணாநிதியை ரோல்மாடலாக ஏற்கவேண்டும்’’ என்று திருமாவளவன் சொல்லி இருக்கிறாரே?


புதிய அணிச்சேர்க்கைக்கான சமிக்ஞை என்பது இதில் இருந்து தெரிகிறது.

சம்பத்குமாரி, திருச்சி.


‘நான்கு பிரதமர்களை உருவாக்கியவர் கருணாநிதி’ என்று தி.மு.க-காரர்கள் புகழ்கிறார்களே. உண்மையில், பிரதமர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர் காமராஜர்தானே?

பிரதமர்களை உருவாக்குவது என்பது வேறு. பிரதமர்கள் ஆக ஆதரவு தெரிவிப்பது என்பது வேறு.

நேரு இறந்தபோது சாஸ்திரியும், சாஸ்திரி மறைவுக்குப் பின்னால் இந்திராவும் பிரதமர் ஆக, அனைவர் சம்மதம் மூலம் பிரதமர்களை உருவாக்கியவர் காமராஜர். அப்போது நினைத்திருந்தால் அவரேகூடப் பிரதமர் ஆகி இருக்கலாம்.

கருணாநிதி காலத்துச் சூழ்நிலை வேறு. வி.பி.சிங், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால், மன்மோகன் சிங் ஆகியோர் பிரதமர் ஆவதற்கு, தன்னுடைய கட்சி எம்.பி-க்களின் ஆதரவைக் கொடுத்தவர் கருணாநிதி. அதன்மூலமாக அவர்கள் பிரதமர் ஆனார்கள். இந்த இரண்டுக்குமான வித்தியாசத்தை உணர வேண்டும்.

எஸ்.ஐ.சத்தியமூர்த்தி, கரூர்.

சுவாதி கொலையில் சூடு ஆறுவதற்குள் கண்டுபிடித்த காவல் துறையால், ராமஜெயம் கொலையாளியை மட்டும் கண்டுபிடிக்க முடியாமல் போனது ஏன்?

நமது காவல் துறையின் இன்டெலிஜன்ஸ் மீது ஒரு குறையும் இல்லை. யாரை, திருப்திப்படுத்த உண்மையை வெளிக்கொணராமல் உள்ளனர் என்பதுதான் கேள்வி?

அரசி சண்முகசுந்தரம், சென்னை-81.

ஜெகத்ரட்சகனுக்கு கருணாநிதி வக்காலத்து வாங்குவது சரியா?


கருணாநிதிக்கு பாராட்டு விழாக்களுக்குமேல் பாராட்டு விழாக்கள் நடத்திக் குளிர்வித்தவர் ஜெகத்ரட்சகன். அவருக்காக ஓர் அறிக்கைகூட வெளியிடாமல் இருப்பாரா கருணாநிதி?

மிகச் சாமர்த்தியமாக, ‘‘நீங்கள் விசாரணை நடத்துங்கள், அதற்காக மூன்று நாட்கள் வெளியில்கூட விடாமல் கைதிபோல நடத்த வேண்டுமா?’’ என்றுதான் கருணாநிதி கேட்டுள்ளார்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

 கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!