Published:Updated:

மிஸ்டர் கழுகு: கபாலி பிசினஸ்!

மிஸ்டர் கழுகு: கபாலி பிசினஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு: கபாலி பிசினஸ்!

மிஸ்டர் கழுகு: கபாலி பிசினஸ்!

மிஸ்டர் கழுகு: கபாலி பிசினஸ்!

ழுகார் நுழைந்ததும், ‘‘ ‘கபாலி’ பார்த்தாச்சா?” என்ற கேள்வியைப் போட்டோம்.

‘‘ ‘கபாலி’ படத்தைவைத்து கிளம்பும் வசூல் சர்ச்சை தகவல்களுடன் நான் வந்திருப்பது தெரிந்து இந்தக் கேள்வியைப் போடுகிறீரா?” என்றபடி செய்திகளைக் கொட்டினார் கழுகார்.

‘‘ ‘கபாலி’ ஜுரம் தணிய இன்னும் சில நாட்கள்கூட பிடிக்கும். அந்தப் படத்தில் பேசப்பட்டு இருக்கும் அரசியலும், படத்தைத் தயாரித்தவர்கள் செய்யும் அரசியலும் ‘கபாலி’ ஜுரத்தைத் தணியாமல் வைத்திருக்கிறது. அதனால், அதன் வசூலும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டேதான் போகிறது. இதன் வர்த்தகத்தைப் பற்றி மட்டும் நான் சொல்கிறேன்.  ‘கபாலி’ திரைப்படம், வெளிநாடுகளில் மட்டும் 4 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. வெளிமாநிலங்களைப் பொறுத்தவரை, 2 ஆயிரத்து 870 தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மட்டும் 640 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.”

‘‘படத்தின் வசூல் எப்படியாம்?”

‘‘தயாரிப்பாளர் தரப்பில் கேட்டபோது, தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை வசூல், 60 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையில் மூன்று நாள் வசூல் என்று தயாரிப்புத் தரப்பு சொல்லும் தொகையைக் காட்டிலும் கூடுதலான வசூலை, படம் வெளியான முதல்நாளே பார்த்துவிட்டதாம். அதாவது, படம் வெளியான வெள்ளிக்கிழமையன்றே, 80 கோடி ரூபாய் வசூல் செய்துவிட்டதாம்.”

‘‘அது என்ன கணக்கு?”

மிஸ்டர் கழுகு: கபாலி பிசினஸ்!

‘‘தமிழகத்தில் 640 தியேட்டர்களில் படம் வெளியாகி உள்ளது. சாதாரணமாக, ஒரு தியேட்டருக்கு 250 சீட்கள் என்று வைத்துக் கொண்டால், ஒரு லட்சத்து 60 ஆயிரம் சீட்கள். படம் வெளியான முதல் நாள், அனைத்தும் ‘ஹவுஸ் புல்’ காட்சிகள். 5 காட்சிகளுக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் சீட்கள் என்று வைத்துக்கொண்டால், 8 லட்சம் டிக்கெட்டுகள் முதல் நாள் விற்பனையாகி இருக்கின்றன. இதில் ஒப்புக்கு 10 முதல் 20 டிக்கெட்களை ஒவ்வொரு தியேட்டரும் அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு விற்றுவிட்டு, மற்ற டிக்கெட்களை பிளாக்கில் 1,000 முதல் 1,500 ரூபாய் வரை விற்றனர். சில இடங்களில் 2,000 ரூபாய்கூட விற்றனர். ஆனால், சராசரியாக 1,000 ரூபாய் என்று கணக்குப்போட்டாலே முதல் நாள் டிக்கெட் விற்பனை மட்டும் ரூ.80 கோடி. சனி, ஞாயிறுக் கிழமைகளில் 6 காட்சிகள் திரையிடப்பட்டன. அதற்குக் கணக்கிட்டால், ஒரு நாளைக்கு 96 கோடி ரூபாய் என்று இரண்டு நாட்களில் 192 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ஆக மொத்தமாக மூன்று நாள் வசூலைக் கணக்கிட்டாலே, 200 கோடி ரூபாயை ‘கபாலி’ தாண்டிவிட்டது. இந்தக் கணக்கு தமிழகத்துக்கு மட்டும்தான். இதுபோக, ரஜினி படத்துக்கு நல்ல கிராக்கி உள்ள ஆந்திராவில் 520 தியேட்டர்களிலும், கர்நாடகாவில் 500 தியேட்டர்​களிலும், கேரளாவில் 480 தியேட்டர்களிலும் வட மாநிலங்களில் 1,370 தியேட்டர்களிலும் ‘கபாலி’ திரையிடப்பட்டுள்ளது. வசூல் எவ்வளவு ஆகியிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.”

‘‘தியேட்டர்களில் கூடுதல் விலைக்கு விற்க முடியாது அல்லவா?”

‘‘தியேட்டர் கவுன்டரிலேயே டிக்கெட்கள் கூடுதல் விலைக்குச் சர்வ சாதாரணமாக விற்கப்பட்டன. டிக்கெட்டில் 60 ரூபாய், 90 ரூபாய், 110 ரூபாய் என்று அச்சிடப்பட்டு இருந்தது. ஆனால், கவுன்டரில் 600 ரூபாய், 1,000 ரூபாய் என்று வசூல் செய்துள்ளனர். அதுபோக, சில இடங்களில் கவுன்டரில் ஒப்புக்கு 20 டிக்கெட்களை கொடுத்துவிட்டு மற்றவற்றை பிளாக்கில் விற்றுவிட்டனர். ஆன்லைன் புக்கிங்கிலும் இதே தில்லுமுல்லுகள் நடந்துள்ளன. 10 ரூபாய் டிக்கெட்களை ஆன்லைனில் விற்கக் கூடாது. ஆனால், இந்த முறை 10 ரூபாய் டிக்கெட்டையே ஆன்லைனில் விற்றனர். அதையும் ஆன்லைனில், 100 ரூபாய் என்று 10 மடங்கு அதிக விலைவைத்து விற்றனர். அதை மட்டும் விற்றுவிட்டு மற்ற சீட்களை தியேட்டர்காரர்களே பிளாக் செய்து வைத்துவிட்டு, அதை ஐ.டி நிறுவனங்களிடம் விற்றுவிட்டனர். இப்படிப் பல தில்லுமுல்லுகள் சர்வசாதாரணமாக நடந்தன. ஆனால், காவல் துறை, வருமானவரித் துறை உட்பட அனைத்துத் துறைகளும் இதை வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருந்தன. படம் நடித்தவர், படம் எடுத்தவர், விநியோகஸ்தர் என எல்லாமே படா டீம் என்பதால், எல்லோரும் வேடிக்கைதான் பார்த்தனர்” என்றபடி அரசியல் மேட்டருக்கு வந்தார் கழுகார்.

‘‘தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கடந்த 4 மற்றும் 5-ம் தேதிகளில் டெல்லி ராகுல் காந்தி வீட்டில் அதற்கான பணிகள் நடந்தன. இரண்டு நாட்களாக ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் பிரமுகர்களான திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன், மாணிக்தாகூர், நாமக்கல் ஜெயக்குமார், கோபிநாத், பீட்டர் அல்போன்ஸ், செல்லக்குமார், வசந்தகுமார், விஜயதரணி போன்ற ஒன்பது பேரைச் சந்தித்துள்ளார். ராகுலிடம் மாறி மாறி ஒருத்தருக்கொருத்தர் புகார்களை அள்ளி வீசியுள்ளனர். இப்போதே திருநாவுக்கரசரின் ஆதரவாளர்களுக்கும் சுதர்சன நாச்சியப்பனின் ஆதரவாளர்களுக்கும் கடுமையான மோதல் தொடங்கிவிட்டது. பி.ஜே.பி-யைப்போல பெண் தலைவரை தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு நியமிக்கும் திட்டமும் ராகுலிடம் இருக்கிறதாம்.”

‘‘ம்!”

‘‘ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பிடித்து, நால்வர் அணியில் கால்பதித்து அமைச்சராக வலம்வந்து, மக்கள் மனதில் இடம்பிடிக்காமல் போனதால் தோல்வியைத் தழுவினார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். மீண்டும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அங்கம் வகிக்க எதிர்வரும் தஞ்சாவூர் இடைத்தேர்தலைக் குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார் என்பதுதான் அ.தி.மு.க-வினரின் கரன்ட் டாக். வைத்திலிங்கம் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வைத்திலிங்கம் எனது நம்பிக்கைக்குரியவர் எனும் விதமாக ராஜ்யசபா எம்.பி பதவியை கொடுத்தார் ஜெயலலிதா. ஆனால், வைத்திலிங்கத்துக்கு அதில் திருப்தியில்லை. எப்போதும் பார்க்கும் சிரிப்பு முகம் இல்லை, தொண்டர்களைப் பார்த்து கை அசைவு இல்லை, கடுகடு பேச்சுதான் இருக்கிறது.”

‘‘ஓஹோ!”

‘‘உள்ளாட்சித் தேர்தலுக்காகச் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்திவரும் வைத்திலிங்கம், ‘துரோகிகளால்தான் நான் தோற்றுப் போனேன்’ என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். தஞ்சையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில், ‘துரோகிகள் எல்லாம் தி.மு.க-வுக்கு ஓடிவிடுங்கள்’ என்றும் பேசினார். அமைச்சராக இருக்கும்போது யாரும் அவரை எளிதில் சந்திக்க முடியாது. அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். அந்தக் கூட்டத்தைத் தாண்டி எந்தக் கூட்டமும் போய் சந்திக்க முடியாது. ஆனால், இப்போது தஞ்சை தொகுதி நிர்வாகிகளை மட்டும் எளிதில் சந்தித்து வருகிறார். மேயர், நகரச் செயலாளர், பகுதிச் செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் என கோலோச்சி வந்தவர்களை மாற்றுவதற்கு ஆலோசனையும் நடைபெற்று வருவதாகவும் சொல்கிறார்கள். ‘தஞ்சை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு செலவு செய்து தனக்கு மீண்டும் சீட் கிடைக்குமா என்ற கேள்வியோடு இருக்கிறார் தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் ரெங்கசாமி. தஞ்சை தொகுதியில் வைத்திலிங்கம் நிறுத்தப்பட்டால் ரெங்கசாமிக்கு ராஜ்யசபா எம்.பி சீட்டை மன்னார்குடி வகையறாக்கள் பெற்றுத் தரலாம்’ என்கிறார்கள்.”

‘‘எல்லாமே மன்னார்குடிதானா?”

‘‘மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த எஸ்.காமராஜுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படலாம். கூடவே, மாவட்டச் செயலாளர் பதவியையும் மன்னார்குடி தரப்பினர் அவருக்குப் பெற்றுத்தர வாய்ப்பு இருக்கிறது.”

‘‘மத்திய அரசை தாஜா செய்யத் தொடங்கிவிட்டாரே ஜெயலலிதா?”

மிஸ்டர் கழுகு: கபாலி பிசினஸ்!

‘‘சென்னையில் இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தொடக்க விழாவில் மத்திய அரசையும், மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவையும் புகழ்ந்து தள்ளிவிட்டார் ஜெயலலிதா. யாரையும் அவ்வளவு சீக்கிரம் புகழ் பாடாதவர் முதல்வர். அவரின் இந்தத் திடீர் மாற்றத்துக்குக் காரணம் தமிழக அரசின் கஜானா காலியாகிவிட்டதுதான்” என்கிறார்கள்.”

‘‘அப்படியா?”

‘‘மத்தியில் பி.ஜே.பி அரசு அமைந்தவுடன், என்னைச் சந்திக்க வந்த மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவிடம், ‘சென்னை மெட்ரோவுக்கு வண்ணாரப்பேட்டை முதல் திருவெற்றியூர் வரை இரண்டாவது கட்டப்  பணிகளுக்கு ஒப்புதல் வழங்க வேண்டினேன். அதன் தொடர்ச்சியாக மத்திய அரசு அதிகாரிகளோடு, தமிழக அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு ஒத்துழைப்பால் இந்தத் திட்டம் தொடங்குகிறது’ என்றார். ‘சென்னை மெட்ரோ திட்டத்துக்கான ஆய்வு 2003-ம் ஆண்டு அ.தி.மு.க-வின் ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கான ஒப்புதலை மத்திய அரசு 2009-ம் ஆண்டு வழங்கியது. ஆனால், அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க இந்தத் திட்டத்துக்கு ஐந்து ஆண்டுகளில் 1,143 கோடி ரூபாய் மட்டுமே செலவிட்டது” என்று தொடர்ந்து பேசியவர் மத்திய அரசின் ஒத்துழைப்பால் இந்தத் திட்டம் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது என்று புகழ்பாடினார்.”

‘‘தி.மு.க-வில் மா.செ-க்கள் களையெடுப்பு தொடர்கிறதே?”

‘‘ ‘சட்டமன்றத் தேர்தலில் விட்டதை உள்ளாட்சித் தேர்தலில் பிடிக்க வேண்டும்’ என்ற முனைப்பில் தி.மு.க உள்ளது. அதற்கு உட்கட்சிக் கோஷ்டிப் பூசலை சரிகட்ட வேண்டும் என்று ஸ்டாலின் முனைப்புக் காட்ட, ஏற்கெனவே சில மாவட்டச் செயலாளர்களை காலி செய்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து கட்சித் தலைமைக்கு வந்த புகார் மழையால், இப்போது தேனி மாவட்டச் செயலாளர் மூக்கையாவின் பதவி பறிக்கப்பட்டு, புதிய பொறுப்பாளரை நியமித்து உள்ளார்கள். கட்சியின் இந்த அதிரடிப் போக்கை கீழ்மட்ட நிர்வாகிகள் வரவேற்கின்றனர். மாவட்டச் செயலாளர்கள் பதவிக்கு  மட்டும் ஆபத்து என்று கிடையாதாம். ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் என அனைத்து நிலைகளிலும் புகாரில் சிக்கியவர்கள் பதவியைக் காலிசெய்யப் பட்டியல் தயாராகிவருகிறதாம். அ.தி.மு.க பாணியை கையில் எடுக்கும் முடிவில் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாகச் சொல்கிறார்கள்’’ என்றபடி எழுந்த கழுகார், ‘‘ம.தி.மு.க-வில் இருந்து விலகிய முக்கியப் பிரமுகர் ரெட்சன் அம்பிகாபதியை, அ.தி.மு.க-வுக்கு இழுக்கும் வேலைகள் நடந்துகொண்டு இருக்கின்றன’’ என்று சொல்லிவிட்டு பறந்தார். 

படங்கள்: ஆ.முத்துக்குமார்

மணல் லாரி மல்லுக்கட்டு!

சென்னைக்குத் தேவையான கட்டுமான மணல், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வருகிறது. மணல் லாரிகளில் அரசு ஒப்பந்ததாரர்கள்தான் மணலை ஏற்றிவிடுகிறார்கள். 17 டன் மட்டுமே மணல் ஏற்ற வேண்டிய லாரிகளில், 21 டன் வரை மணலை மல்லுக்கட்டி ஏற்றிவிடுகின்றனர்.
இதனால், விக்கிரவாண்டி டோல்கேட்டில் ஓவர் லோடு என்று ஒரு லாரிக்கு, 4,500 ரூபாய் அபராதம் விதிக்கிறார்கள். மணல் ஏற்றிவிட்டவர்களை விட்டுவிட்டு எங்களிடம் வசூல் செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று புலம்புகிறார்கள் மணல் லாரி உரிமையாளர்கள்.  இந்தப் பிரச்னை காரணமாக மணல் விலையும் உயர்ந்துகொண்டிருக்கிறது.

மிஸ்டர் கழுகு: கபாலி பிசினஸ்!

எம்.எல்.ஏ-னா சும்மாவா?

சென்னையில் மெட்ரோ ரயில் 2-வது கட்ட பணிகளின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்ள பெரம்பூர் சட்டமன்ற அ.தி.மு.க உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான வெற்றிவேல், விழா நடைபெற்ற இடத்துக்கு தனது டூவீலரில் வந்தார்.

வி.ஐ.பி-க்கள் பார்க்கிங் பகுதிக்கு வந்த அவரை, காவல் துறையினர் உள்ளேவிட மறுத்தனர். அதனால், வெற்றிவேல் காவல் துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட... அதைப் பார்த்த உளவுத்துறை அதிகாரிகள் வேகமாக ஓடிவந்து, ‘‘அவர் எம்.எல்.ஏ அவரை உள்ளே விடுங்கள்’’ என்று சொன்னபிறகே அனுமதித்தனர்.

சபீதா செல்வாக்கு!

மெட்ரோ ரயில் அடிக்கல் நாட்டு விழாவில் ஜெயலலிதா வருகையின்போது,  அவரை வரவேற்க ஒலிக்கப்படும் பாடலை பல முறை போட்டு செக் செய்துகொண்டே இருந்தனர். முதல்வர் மேடைக்கு வந்து விழா தொடங்கியதும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் சி.டி-யைப் போட்டனர். அனைவரும் எழுந்து நின்ற சில விநாடிகளில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் நின்று, திரும்பத்திரும்ப அதே வரியே ஒலித்துக்கொண்டிருந்தது. சி.டி-யை நிறுத்திவிட்டு மீண்டும் போட்டனர். அப்போதும் பாதியிலேயே பாட்டு நிற்க, பதறிய அதிகாரிகள், விழா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பெண்களைவைத்தே பாடலைப் பாடவைத்துவிட்டனர்.

மிஸ்டர் கழுகு: கபாலி பிசினஸ்!

மெட்ரோ விழாவாக இது அறிவிக்கப் பட்டாலும், நிகழ்ச்சியை முன்னின்று நடத்தியது பள்ளிக்கல்வித் துறை செயலாளர் சபீதாதான். சபீதாவின் செல்வாக்கை மேடையில் பார்த்து மிரண்டுவிட்டனர் அதிகாரிகள்.