Published:Updated:

சமூக ஊடகங்கள் - ஒரு குறுக்குவெட்டுப் பார்வை - கார்ல் மார்க்ஸ்

சமூக ஊடகங்கள் - ஒரு குறுக்குவெட்டுப் பார்வை - கார்ல் மார்க்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
சமூக ஊடகங்கள் - ஒரு குறுக்குவெட்டுப் பார்வை - கார்ல் மார்க்ஸ்

ஓவியம் : ஹாசிப்கான்

சமூக ஊடகங்கள் - ஒரு குறுக்குவெட்டுப் பார்வை - கார்ல் மார்க்ஸ்

மூக ஊடகங்களில் தொடர்ந்து புழங்குவதால், எனக்கு இப்போதெல்லாம் மிகப் பெரிய சந்தேகமே வந்துவிடுகிறது. அவை உண்மையிலேயே சமூக ஊடகங்கள்தானா, சமூகத்துக்கும் அவற்றிற்கும் நிஜமான தொடர்பு எதுவும் உண்டா என்று. ஏனெனில், அவை ஒரு குறிப்பிட்ட மக்கள் திரளை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துவதுபோல் தோன்றுகிறது. அதில் வெளிப்படும் கருத்துகள்கூட வெகுஜன மனநிலையுடன் பெரும்பாலும் ஒத்துப்போவதில்லை. ஆனால், சமூகத்தின் சில அதிர்வுகளை உடனடியாக அவை பிரதிபலிப்பதால், அவற்றை முழுக்கவும் நிராகரிக்கவும் முடிவதில்லை. சமூகத்தின் சிதிலமடைந்த சன்னலைப்போல தோற்றம் கொள்கின்றன சமூக ஊடகங்கள். நேரடியான ஓர் உதாரணத்தின் மூலம் இதைச் சொல்ல வேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம்... `சமூக ஊடகங்கள் நிஜமாகவே சமூகத்தை அப்பட்டமாகப் பிரதிபலிக்கின்றன என்றால், இந்நேரம் மக்கள் நலக் கூட்டணிதான் ஆட்சியமைத்திருக்க வேண்டும்.’

அரசியல் தவிர்த்த பெரும் சலனம் ஏற்படுத்தக்கூடிய ஒரு நிகழ்வின்போது, சமூக ஊடகங்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன என்று கவனித்தால், நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. உதாரணமாக, சமீபத்தில் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு பெண் மென்பொறியாளரின் கொலை. இந்தச் செய்தியை, சமூக ஊடகங்களில் தொடரும்போது ஒரு மனநோய் விடுதிக்குள் நுழைந்துவிட்டதைப்போல இருந்தது. நமது சமூகம் உண்மையிலேயே இந்த அளவுக்கு சிதறுண்ட சமூகமா என ஆச்சர்யமாக இருந்தது. முக்கியமாக இரண்டு விஷயங்கள் அதில் கவனத்தை ஈர்த்தன.

ஒன்று, சாதிய சமூகமாக நாம் எவ்வளவு தூரம் பிளவுபட்டிருக்கிறோம் என்பது. இரண்டாவது, பெண்கள்

சமூக ஊடகங்கள் - ஒரு குறுக்குவெட்டுப் பார்வை - கார்ல் மார்க்ஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

குறித்த பார்வைகளில் பொதுச் சமூகம் எவ்வளவு பின்தங்கியிருக்கிறது என்பது. இவை வெறும் போதாமையாக மட்டும் அல்லாமல் சீரழிவாகவும் இருக்கின்றன என்பதுதான் கவலைக்குரியது. எவ்வளவு படித்தவர்களாக இருந்தாலும், நல்ல வேலையில் இருப்பவர்களாக இருந்தாலும் சாதியைக் கைவிட முடியாமல் தவிப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இதில் டாக்டர்கள், இன்ஜினீயர்கள்கூட விதிவிலக்குகள் அல்ல. இன்னொரு புறம் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கும் மொன்னையான சாதி மறுப்பு வாதம். சாதியை மறுப்பது என்பது, சாதியே இல்லை என்று சாதிப்பது அல்ல; சாதியின் இருப்பை நேர்மையாக ஒப்புக்கொண்டு அதைக் களைவதற்கான செயல்களை முன்னெடுப்பது. இந்த இடத்தில்தான் நாம் நம்புகிற இளைஞர் திரள் எவ்வளவு பாழடைந்திருக்கிறது என்பது தெரிகிறது. இளைஞர் திரள் என்று சொல்கிறபோது பெண்களையும் சேர்த்தேதான் சொல்கிறேன்.

பெயருக்குப் பின்னால் சாதியை பின்னொட்டாகச் சேர்த்துக்கொள்ளும் பழக்கம் வழக்கொழிந்து போயிருக்கும் தமிழகச் சூழலில், சாதியைப் போட்டுக்கொள்வது என்பது ஏதோ நாகரிகம்போல முன்வைக்கப்படுகிறது. அதில் என்ன தவறு இருக்கிறது என்று இளைஞர்கள் கேட்பதையும் பார்க்க முடிகிறது. இந்தக் கேள்வி ஏதோ ஒரு கலகம் போல முன்வைக்கப்படுகிறது. உற்றுப்பார்த்தால், அந்தக் குரலின் பின்னுள்ளது அரசியல் தெளிவின்மைதான். சாதி என்று வருகிறபோது அங்கு ஓர் அதிகாரப் படிநிலை வந்துவிடுகிறது. குறிப்பிட்ட சாதிகளுக்கான ‘புனிதம்’ வந்துவிடுகிறது. இறுதியாக பிறப்பின் மூலம் வரும் தகுதி உறுதிசெய்யப்படுகிறது. அவ்வாறு செய்யப்படும்போது ஒரு பகுதி மக்கள் திரளின் போதாமையும் சுட்டப்படுகிறது. இங்கு போதாமை என்பது பிறப்பால் வரும் போதாமை. எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத வெறுமை அது. ஆக, இது வெறும் ஃபேஷன் மாத்திரம் அல்ல; அதன் பின்னுள்ளது ஆழமான அரசியல். ஆக இங்கு தேவைப்படுவது நுண்ணுணர்வுடன் கூடிய புரிதல்.

எந்த அச்சமும் அற்ற மூர்க்கமான சாதியவாதம் சமூக ஊடகங்களில் தயக்கமில்லாமல் முன்வைக்கப்படுகிறது. யாராவது அரைவேக்காட்டுத்தனமாக உருவாக்கி உலவவிடும் ஒற்றை வரிகூட எல்லாரையும் பதற்றப்படுத்துகிறது. பொருட்படுத்தத்தக்க ஆட்கள்கூட அந்தச் செய்தியைக் குறித்து தங்களது கருத்தைத் தெரிவிக்கிறார்கள். சமூக ஊடகங்களில் எதை நிராகரிக்க வேண்டும் என்கிற தெளிவு இல்லையென்றால், நமக்குப் பைத்தியம் பிடிக்கும். அதில்தான் பிரபலங்களும்கூட கோட்டைவிடுகிறார்கள்.  இத்தகைய வன்முறைகளில் அடையாளமற்ற ‘போலிக் கணக்குகளின்’ பங்களிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள் உள்ளிட்ட எளிய இலக்குகளைக் குறிவைத்து அவர்கள் பரப்பும் வதந்தியும் வன்மமும் பாதிக்கப்பட்டவர்களைத் தற்கொலையை நோக்கித் தள்ளுவதையும் காண முடிகிறது. சமீபத்திய உதாரணம் வினுப்ரியா. மார்ஃபிங் செய்யப்பட்டு ஆபாசமாக உலவவிடப்பட்ட அவரது புகைப்படம் அவரை சாவை நோக்கித் தள்ளியது.

அதேபோல பீதியூட்டக்கூடிய இன்னொன்று, சமூக ஊடகங்களில் வெளிப்படும் ‘தண்டனை மனநிலை.’ ஒரு குற்றம் நடந்தவுடன், அதை நிகழ்த்தியவருக்கு உடனே தண்டனை தரத் துடிப்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது அல்லது அப்படிப் பொங்குவதன் மூலம் தன்னை நியாயவானாக முன்னிறுத்திக் கொள்ளும் அவசரம் அதிகரித்திருக்கிறது. பல நேரங்களில் ‘சமூகத்தின் கூட்டு மனசாட்சி’ என்பது நிஜத்தைவிட, சமூக ஊடகங்களில் கொடூரமானதாக இருக்கிறது. இங்கு ‘தார்மீகக் கோபம்’ என்கிற போலியான முகத்திற்குப் பின்னால் வெளிப்படுவது அப்பட்டமான பழிவாங்கும் உணர்வு மட்டுமே. இத்தகைய மனநிலையைத் தீவிரமாக இயக்குவது அவர்களிடம் இருக்கும் உள்ளீடற்ற தன்முனைப்பும் அரசியல் மொன்னைத்தனமும்தான்.

கும்பலாகக் குரல் எழுப்பப்படுகிறபோது அதற்கு ஒரு பெருமதி வந்துவிடுகிறது. நிதானமான குரல்கள் பின்னுக்குப் போய்விடுகின்றன. ஜங்க் உணவுகளைத் தின்று, சுவை நரம்புகளை இழக்கும் குழந்தைகளைப்போல, சமூக ஊடகங்களில் கொட்டப்படும் குப்பைகளுக்குள் புழங்கும் ஒரு பகுதி சமூகம் தனது நுண்ணுணர்வுகளை இழக்கிறதோ என்றும்கூடத் தோன்றுகிறது. எப்போதும் அதற்குத் தேவை உடனடிக் கிளுகிளுப்பு. அவர்களைப் பொறுத்த வரையில் எல்லாமே வெறும் செய்திதான். கொலைகூட இப்போது யாருடைய மனதையும் எளிதாகத் தொடுவதில்லை. அது கொடூரக் கொலையாக இருக்க வேண்டும். கற்பழிப்பிலும் அப்படித்தான். ஒரு குற்றம் வெளிப்படும்போது வெளிப்படும் அற ஆவேசம், பாதிக்கப்பட்டவர்கள் மீதான அறிவுரையாகக் கனிந்து, பின்பு  மெல்ல சலிப்புற்று கிண்டலாக மாறிவிடும். இதை நெஞ்சை உலுக்கும் எல்லா நிகழ்வுகளிலும் கவனிக்கலாம்.

சமூக ஊடகங்கள் - ஒரு குறுக்குவெட்டுப் பார்வை - கார்ல் மார்க்ஸ்

எல்லாவற்றையும் கிண்டலடிப்பது என்பது கொண்டாட்ட மனநிலை அல்ல; அது உண்மைக்கு முகம் கொடுக்காமல் தப்பித்துக்கொள்ளும் கோழைத்தனம். அதற்காக கண்ணீரில் மிதந்துகொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது சாத்தியமும் இல்லை. ஆனால், நகைப்புக்கும் வக்கிரத்துக்குமான வேறுபாடு தெரிந்திருக்க வேண்டும். சமூக ஊடகங்களில் இந்தக் கருத்தாக்கத்தின் எல்லைக்கோடுகள் அழிந்துகொண்டே வருகின்றன. கொண்டாட்டத்துக்கும் லும்பன்தனத்துக்குமான மதிப்பீடுகள் மாற்றி எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

நாம் மிகவும் வெளிப்படையானவர்களாக, எல்லாவற்றையும் பொதுத்தளத்தில் வைத்து விவாதிப்பவர்களாக நாகரிகம் அடைந்திருப்பது போன்ற தோற்றத்தை, இந்தக் கிண்டலடிக்கும் உத்்தி மூலம் சமூக ஊடகங்கள் உருவாக்கிவைத்திருக்கின்றன. உண்மையாகப் பார்த்தால், நாம் மோசமான தொட்டாற்சிணுங்கி சமூகமாக மாறியிருக்கிறோம் என்பது தெரியும். கருத்துரிமை என்பது மிகவும் சுருங்கியிருக்கிறது. உங்களுக்குப் பிடிக்காத திரைப்படம் பற்றி, நீங்கள் கிண்டலாக ஒரு கருத்தைப் பதிந்தால், இரண்டு மூன்று பின்னூட்டங்களுக்குப் பிறகு அது உங்களது சகோதரி அல்லது அம்மாவின் அந்தரங்க உறுப்பில் வந்து நிலைகொண்டுவிடும். நீங்கள் சற்றே பிரபலமானவர்களாக இருந்தால், அது உங்கள் உடல் மீதான வன்முறையாக மாறுவதற்கும் அல்லது நீங்கள் நீதிமன்றப் படியேறுவதற்கும் காரணமாக அமையும்.

இன்னொன்று சாதி. தொட்டால் தீப்பற்றும் சங்கதி அது. இங்கு இருக்கும் ஒவ்வொரு சாதித் தலைவரும் ஒரு மனித வெடிகுண்டுக்கு சமம். அவர்களைச் சமூக ஊடகங்களில் விமர்சிக்கவே முடியாது. விசித்திரமாக ஒரு சாதித் தலைவர் அந்த சாதிக்குக் கடவுள்; மற்ற சாதிகளுக்கு அவரோ ஒழிக்கப்படவேண்டிய சத்ரு. இது எதிரெதிரான எல்லா சாதிகளுக்கும் பொருந்தும். இத்தகையை இணையச் சண்டைகளில் வெளிப்படையான மிரட்டல்களைவிடும் பொறுக்கிகளை நீங்கள் பார்க்கலாம். அதே சமயம் நாசூக்கான வார்த்தைகளில் அமைதிகாக்கச் சொல்லும் சாதி அபிமானிகளையும் பார்க்கலாம். குறிப்பிட்ட சில தலைவர்களைத் தவிர இங்கு எல்லாருமே திருவுருப் பிம்பங்கள்தான். சிறுகளங்கமும் அற்ற தேவதூதர்கள் அவர்கள். முன்பெல்லாம் சிலையின் மீது போடப்படும் செருப்பு மாலை ஓர் ஊரை பற்றியெரியச் செய்யும். இப்போது அத்தகைய புகைப்படம் ஒன்று மட்டுமே போதுமானதாக இருக்கிறது. இதுவே இங்கு அடைந்திருக்கும் வளர்ச்சி. மதத்திலும் அதுதான்.

பெரும்பான்மையான மத அடிப்படைவாதிகள் தங்களது சீரழிவுகளை நியாயப்படுத்த, மதநல்லிணக்கம் குறித்து பாடம் நடத்துவதை நீங்கள் பார்க்க முடியும். பிறகு, எல்லாவற்றுக்கும் காயப்படும் பெரும் மக்கள் திரள் ஒன்று உருவாகியிருக்கிறது. காற்று வேகமாக அடித்தால்கூட அவர்கள் காயப்பட்டுவிடுவார்கள். அவர்களது பழக்க வழக்கங்களையோ, அவர்களது கடவுளையோ, அவர்களது நம்பிக்கைகளையோ மறுபரிசீலனைக்கு உட்படுத்தும் ஒரு வாசகத்தைக்கூட அவர்களால் செவிமடுக்க முடியாது. அந்தக் காயத்திலிருந்து வெளியேறும் ரத்தம் இந்தச் சமூகத்தையே எரிக்காமல் ஓயாது. அவ்வளவு காத்திரமானது அவர்கள் அடையும் காயம்.

இந்தக் கருத்து மூர்க்கத்தனம், ஒருவித சுய தணிக்கையை சமூக ஊடகங்களில் புழங்கும் பலரிடம் உருவாக்கிவைத்திருக்கிறது. ஆனால், ‘ஆமாம்... இதுவோர் அழுத்தம்தான்’ என்று ஏற்றுக்கொள்வதற்கு அறியப்பட்ட பல ஆளுமைகள் தயங்குவார்கள். இதில் முற்போக்காளர்களும் உண்டு. ஏனெனில், அவர்கள் தரித்திருக்கிற போராளி வேஷத்தை அது கலைத்துப்போடும் என்கிற அச்சம். இந்தத் தணிக்கை மனநிலை அறிவுப்பரவலைத் தடுக்கும் முக்கியமான காரணியான நிலைபெற்றிருப்பதை, கூர்ந்து கவனிப்பவர்களால் உணர முடியும். மேலும், அடர்த்தியான விவாதங்களோ, உரையாடல்களோ சமூக ஊடகங்களில் சாத்தியமே இல்லை என்கிற நிலையை நோக்கி நம்மை நகர்த்தியிருப்பதையும் புரிந்துகொள்ள முடியும்.

இத்தனைக்கும் சமூக ஊடகங்கள் நாம் இதுவரை கைக்கொள்ளாத ஒரு திறப்பை பொதுச் சமூகத்துக்கு வழங்கியிருக்கின்றன. நெருங்க முடியாத பல ஆளுமைகளை உரையாடலில் நெருங்க முடிகிற அவர்களுடன் விவாதிக்க முடிகிற வாய்ப்பை அவை வழங்குகின்றன. ஆனால், அதில் பங்குபெறும் சாதாரண ஆட்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டுவதாக மட்டுமே அத்தகைய விவாதங்கள் இருக்கின்றன. எளிய அல்லது மூர்க்கமான கிண்டலின் மூலம் ஒரு பிரபலத்தை நிலைகுலைய வைக்கும்போது அங்கு பறக்கும் விசில் சத்தம் என்பது, ஒரு நாயக பிம்பத்தை சிலருக்கு ஏற்படுத்தித் தருகிறது. மேலும், பொறுப்பு கூறும் மனநிலையை கைவிட்டுக் கொள்கிறபோது நிறைய கொலைக் கருவிகள் அவர்களது கைக்குக் கிடைக்கின்றன. அது அடையாளமற்ற உதிரிகளுக்கு சமூக ஊடகங்களில் பெரும் வெளியை உருவாக்கித் தருகிறது. நாகரிகம் பேணுபவர்கள் விலகிக்கொள்கிறார்கள். வெறும் பார்வையாளர்களாக மட்டுமே தங்களை ஆக்கிக்கொள்கிறார்கள்.

சமூக ஊடகங்கள் - ஒரு குறுக்குவெட்டுப் பார்வை - கார்ல் மார்க்ஸ்

ஆக, இறங்கி அடிப்பவர்களுக்கு பரந்துபட்ட களமாக இருக்கும் சமூக ஊடகங்கள், அதில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு கட்டத்தில் போதையாக மாறுகின்றன. அவர்களும் அதைத் தங்களது சுபாவமாக வரித்துக்கொள்கிறார்கள். தங்களது சுயத்தைப் பறிகொடுக்கிறார்கள். அதுவொரு பிளவுபட்ட மனநிலையை உருவாக்குகிறது. தனக்குள்ளேயே தன்னை ஆராதிக்கும் பிம்பத்தையும், அதே சமயம் சண்டையிடும் பிம்பத்தையும் கட்டியமைத்துக்கொள்ள நேர்கிறது. அது அமைதியிழப்பை நோக்கி அவர்களைத் தள்ளுகிறது. அதைக் கையாள முடியாமல் போகிறபோது மேலும் மேலும் மூர்க்கமடைகிறார்கள். அப்போதுதான் சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் இருந்து விலகி, சீரழிவின் பக்கம் சரணடைகிறார்கள். ஆனால், அது பற்றிய புரிதலே அவர்களுக்கு இருக்காது என்பதுதான் இதில் முரண்.

இத்தகைய நாயகர்கள் ஒருபுறம் அறம் குறித்து சீறுபவர்களாக இருப்பார்கள்; மறுபுறம் பெண்களை அவமதிப்பார்கள். ஒருபுறம் ஊழல் குறித்து அறச்சீற்றம் கொள்வார்கள்; மறுபுறம் சுயசாதி அபிமானத்தை பண்பட்ட கலாசாரமாக முன்வைப்பார்கள். நிஜத்தில் பூஞ்சையாக, கருத்தியல் உள்ளீட்டற்றவர்களாக இருப்பார்கள்; ஆனால், அவர்கள் உருவாக்கி நிலைநிறுத்தும் கருத்துகள் மட்டும் சாசுவதமாக அங்கே கனலுடன்  உலவிக்கொண்டே இருக்கும். இத்தகைய குளிர்ந்த தீப்பொறிதான் புதிதாக சமூக ஊடகங்களுக்கு வருபவர்களைக் கவரும். அவர்கள் முதலில் தயக்கத்துடன் கவனிப்பார்கள், பின்பு மெல்ல மெல்ல பங்கெடுப்பார்கள். கிட்டத்தட்ட டிராகுலாவிடம் கடி வாங்குவது போன்ற செயல் அது. முதலில் வலிக்கும். பிறகு அவர்களும் டிராகுலாவாக மாறிவிடுவார்கள். 

இதைக் கடந்து அங்கு பொருட்படுத்தத்கூடிய எதுவும் நடப்பதில்லையா என்றால், நடக்கிறதுதான். பிளாஸ்டிக் குப்பைகளுக்கு மத்தியில் முளைவிடும் சிறிய செடியைப்போல அது மிகவும் குறைவானதாக இருக்கிறது. சில முக்கியமான செய்திகள் சமூக ஊடகங்களில்தான் வெடித்துப் பரவுகின்றன. அந்தச் செய்தி மீதான குறைந்தபட்ச விவாதத்திற்குக்கூட அவையே காரணமாக இருக்கின்றன. அதையும் மறுக்க முடியாதுதான். அதனால்தான் எவ்வளவு விமர்சனம் வந்தாலும் சில அரசியல் கட்சிகள் சமூக ஊடகங்களில் வளைய வந்துகொண்டே இருக்கின்றன. எவ்வளவு பொய்க்கலப்பு இருந்தாலும், பெரும் ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்படும் பல செய்திகள் சமூக ஊடகங்களின் மூலம்தான்  பொதுவெளிக்கு வருகின்றன. மேலும், அது  ஊடகங்களை மக்களுக்கு நெருக்கமாக இருக்கவேண்டிய அழுத்தத்தையும் உண்டு பண்ணுகிறது. கிட்டத்தட்ட பிற எல்லா ஊடகங்களுமே சமூக ஊடகங்களுக்கு நெருக்கமாக தங்களை வைத்துக்கொள்ளவேண்டிய அவசியத்தை உணர்ந்திருக்கின்றன. இது ஒரு வகையில் சமூக ஊடகங்களின் சாதனை. சாமான்யர்களின் கருத்து எல்லாத் தளங்களிலும் கவனிக்கப்படுவதை இந்த நெருக்கம் உறுதி செய்திருக்கிறது. சாமான்யர்களின் கருத்து என்கிறபோது, தணிக்கை செய்யப்படாத உளறல்களும், வன்மம் நிறைந்த வதந்திகளும் பொதுவெளியை எட்டுவதும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

இயல்பாகவே, தமக்கு நடக்கிற வரை எல்லாமே வெறும் செய்திதான் என்று நம்புகிற சமூகம் நாம். மேலும் மௌடீகத்தில் திளைப்பதில் நமக்கு ஒரு சுகம் உண்டு. ஒரு பள்ளிச் சிறுவனுக்கும் ஆசிரியைக்கும் காதல் என்று செய்தி வருகிறபோது முதலில் நமது மனது அலைவது கிளுகிளுப்புக்குத்தான். தீர்ப்பு சொல்லத்தான் முயல்வோம். ஆனால், அங்கு நிகழவேண்டியது பொறுப்புடன் கூடிய உரையாடல். அதன் காரணங்களைத் தேடுவதும் சீரழிவின் வேர்களைக் கண்டடைவதுமே முக்கியம். பொறுப்புள்ள சிவில் சமூகம் அதைத்தான் செய்ய முயலும்.

பிறழ் உறவின் மூலம் நிகழும் கொலைகள் குறித்த செய்திகளிலும் அப்படித்தான். ஆரோக்கியமான விவாதம் என்பதை நோக்கி நகராமல், சமூகத்தை மேலும் பின்னுக்கு இழுக்கிற ‘கலாசாரக் காவலர்கள்’ களத்தில் குதித்து பாதிக்கப்பட்டவர்களின் மீதே எல்லாக் குற்றங்களையும் சுமத்தி சான்றிதழ் வழங்க முயல்வார்கள். உடனே சுற்றி இருக்கும் எல்லாரும் ஒரு தற்காப்பு மனநிலைக்குப் போய்விடுவார்கள். ஒரு முள்ளம்பன்றியை ஒத்த தற்காப்பு அது. யாரும் அவர்களை நெருங்கவே முடியாது.

நாம் விரும்புகிறோமோ இல்லையோ, சமூக ஊடகங்களின் தாக்கம் தொட்டில் குழந்தை வரை இன்று எட்டியிருக்கிறது. பெரு நகரங்களைவிட இரண்டாம் நிலை நகரங்களில்தான் அது சார்ந்த அத்துமீறல்கள் நிறைய நடக்கின்றன. ஏழாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் பாலியல் படங்கள் பார்க்கும் நிலையை நோக்கி நாம் வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறோம். குழந்தைகளுக்கு எல்லா வசதிகளையும் செய்து தர வேண்டும் என்று விரும்பும் இரண்டாம் தலைமுறைப் பெற்றோர்கள் வந்துவிட்டார்கள். இணையாக, குழந்தைகளைக் கண்காணிக்கும் பொறுப்பை அதே அளவுக்கு அவர்கள் புரிந்துகொள்வதில்லை. இதன் பொருள் குழந்தைகளை இருட்டறையில் போட்டுப் பூட்ட வேண்டும் என்பதல்ல. அவர்களுடன் உரையாடுவது, அவர்களின் எல்லைகள் குறித்த வீரியத்தைப் புரியவைப்பது.

சமூக ஊடகங்கள் - ஒரு குறுக்குவெட்டுப் பார்வை - கார்ல் மார்க்ஸ்

பல சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் பொதுச் சமூகம் குறித்த அடிப்படைப் புரிதலே இல்லை. ஏன், பல பெற்றோர்களுக்கே அது இருப்பதில்லை.தனது குழந்தைகள் பெரிய குற்றத்தில் ஈடுபட்டுவிடுகிறபோது, அவர்களால் அதை நம்பமுடிவதில்லை. இதன் பொருள் அந்தப் பெற்றோர்கள் அன்பானவர்கள் என்பதல்ல; வெகுளிகள் என்பதல்ல; பொறுப்பற்றவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று பொருள். இணைய இணைப்புள்ள கணினிகளில் தனித்துவிடப்படும் குழந்தைகளின் வெளி என்பது கற்பனைக்கு எட்டாதது. எதையும் வேகமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் எனும் குழந்தையின் இயல்பான உந்துதல், வயது வந்தவர்கள் செல்ல முடியாத இடங்களுக்குக்கூட அவர்களைக் கொண்டுசெல்லும். தொடுதிரையை லாகவமாக இயக்குவதில் குழந்தைகள் சமர்த்தர்கள். அதைச் சொல்லி மற்றவர்களிடம் பெருமிதத்தில் விம்மும் அதே நேரத்தில் அவர்கள் அதையும் தாண்டி செல்லக்கூடியவர்கள் என்பதையும் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இங்கும்கூட ஆபத்தான தற்காப்பு மனநிலை பலரிடம் செயல்படுவதைப் பார்க்கலாம். `என் குழந்தை அவ்வாறு செய்ய மாட்டான் அல்லது செய்ய மாட்டாள்’ என்று பிடிவாதமாக நிற்பார்கள். குழந்தைகள் மீதான நம்பிக்கையை  வெளிப்படுத்தும்போது அது அவர்களின் தன்னம்பிக்கையைத்  தூண்டும் என்பது உண்மைதான். ஆனால், தவறிழைக்கும் குழந்தையிடம் காட்டப்படும் இத்தகைய அரவணைப்பு, மேலும் பொய் சொல்லும் மனநிலையை, தனது தவறுகளை மறைத்துக்கொள்ளும் தன்மையை அவர்களிடம் தூண்டும். தனித்த உரையாடலில் ‘எனக்கு நீ செய்தது தெரியும், அதைத் திருத்திக்கொள்’ என்று சொல்லும் புரிதல் பெற்றோருக்கு இருக்க வேண்டும். சற்றே வளர்ந்த குழந்தைகள், மிகத் தெளிவாகப் பொய் சொல்வார்கள். தன் மீது அன்பு வைத்திருப்பவர்களை, தங்களது எல்லைக்கு உட்பட்டு சுரண்ட முயல்வார்கள். வாஞ்சைக்கும் கண்டிப்பிற்குமான விளிம்பில் நின்று பெற்றோருடன் மல்லுக்கட்டுவார்கள். இதெல்லாம் பெரிய தவறு ஒன்றும் இல்லை. குழந்தைமையின் கூறுதான். அத்தகைய நேரங்களில் மிக நேரடியாக அவர்களிடம் எதார்த்தத்தைப் புரியவைப்பதும், இதன் மூலம் தங்களை ஏமாற்ற முடியாது என்பதை அவர்களது மனதில் பதியவைப்பதும் முக்கியம்.

இன்னொன்று, சமூக ஊடகங்களின் குடும்பமாக இருந்துகொண்டு கும்மியடிப்பது. ஒரே கணக்கில் கணவன், மனைவி, வளர்ந்த மகன், மகள் எல்லோரும் வளைய வருவது. இதில் பல பெற்றோர்கள் தங்களது மகனையோ மகளையோ வளராத குழந்தையாகக் கருதிக்கொண்டு பொது இடத்தில் பல்லிளித்துக்கொண்டிருப்பார்கள். அது குழந்தைகளின் ஆளுமையைப் பாதிக்கும். மேலும், குழந்தைகள் அதைத் தவறாக  பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பாகவும் அமையும். தனிமனித சுதந்திரத்தின் எல்லைகளைப் புரிந்துகொள்வதும் புரியவைப்பதும் மிக முக்கியமான ஒன்று. தனது குழந்தைகளை முன்னிட்டு எல்லாவற்றையும் தியாகம் செய்வதோ, பின்பு அதைச் சொல்லிச் சொல்லியே குழந்தைகளிடம் மனஅழுத்தத்தை உண்டு பண்ணுவதோ தவறானது. முதிர்ந்த ஒருவராக தமது எல்லைகள், குழந்தையான உனக்குப் பொருந்தாது என்பதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.  அதில் காட்டப்படும் கண்டிப்பு தவறே இல்லை. அன்பென்ற திரைக்குள் சங்கடங்களை மறைத்துக்கொள்ளாமல் இருப்பது உரையாடலில் நல்ல தொடக்கம். சமூக ஊடகங்கள் என்றில்லை, ஒரு பண்பட்ட சமூகத்திற்கும்கூட அது அவசியமானது.

மெய்நிகர் உலகம்!

சமூக ஊடகங்கள் - ஒரு குறுக்குவெட்டுப் பார்வை - கார்ல் மார்க்ஸ்

வர்க்கம், மதம், அரசு, காதல், வணிகம், சாதி, காமம், சினிமா, இலக்கியம், புரட்சி என சகலவிதமான பண்புகளோடும் அதற்கான இயக்கத்தோடும் மிதந்துகொண்டிருக்கிறது சமூக ஊடகம் எனும் மெய்நிகர் உலகம். அது நமது எதார்த்த உலகின் முக்கியமான பல அம்சங்களின் சாயலிலிருக்கிறது.  வரலாற்றில் இதுவரை மனித சமூகம் உருவாக்கியிராத அளவில் தகவல்களும், செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் சதா உற்பத்திசெய்யப்படுகின்றன. தேவை, தேவையற்றவை என்கிற விழிப்புஉணர்வற்று அவை பகிர்வுக்கும் உள்ளாகின்றன. உபரித் தகவல்களால் மனிதர்கள் மூச்சுத்திணறுகிறார்கள். குடும்ப, சமூக உறவாடலுக்கான நேரத்தை பெரிதும் இழக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக ஒவ்வொரு தனி மனிதரும் தன்னைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் தானாக முன்வந்து பொதுவில் வெளிப்படுத்துகிறார். இதில் ஏராளமான சாதகபாதகங்கள் உள்ளன. ஒரு தனிமனிதரைக் குறித்து ஒரு தனியார் நிறுவனமோ, அரசோ பல மாதங்கள் உளவுசெய்து அறியவேண்டிய தகவல்களை இப்போது ஒருவரின் சமூக ஊடகப் பக்கங்களின் வாயிலாக ஒரு மணி நேரத்தில் அறிந்துகொள்ள முடியும் என்பதில் எவ்வளவு `நன்மைகள்’ இருக்கின்றன? பயணம், சினிமா, சாப்பிடும் இடம் என நிமிடத்துக்கு நிமிடம் தன்னைக் குறித்து ஒரு மனிதன் இந்தச் சமூகத்திடம் பகிர்ந்துகொள்ளவேண்டிய அவசியமென்ன? நிறுவனங்களுக்கு ஒருவகையில் இது பெரிய வசதி, தன்னுடைய ஊழியர் தனது ஒவ்வொரு நாளையும் நேரத்தையும் எவ்வளவு தூரம் பயன்படுத்துகிறார், அவரது பொழுதுபோக்கு, பலவீனம் என்னென்ன? என்பது போன்ற எல்லா தகவல்களையும் இலகுவாக அறிந்துகொள்ள முடியும். விடுப்புநாளில்கூட ஒரு ஊழியர், தன்னை அறியாமல் அவரது அலுவலக மேலாளருக்கு அன்றைய நாளை ரிப்போர்ட் செய்கிறார் என்பதுதான் வேடிக்கை. இன்றைய பெரும்பான்மையான இளைஞர்களுக்கு எது மெய்யான உலகம், எது மெய்நிகர் உலகம் என்பதேகூட தெளிவாகப் பிடிபடவில்லை. மனிதர்கள் இணைந்திருக்க வேண்டியதும் பகிர்ந்துகொள்ள வேண்டியதும் அவசியமான ஒன்றுதான். ஆனால், நாம் அதில் எவ்வளவு கவனமாகவும் பக்குவத்தோடும் ஈடுபடுகிறோம் என்பதற்கான பதில் பிக்சல் குறைவான புகைப்படத்தைப்போல தெளிவற்றதாக இருக்கிறது.

- வெய்யில்